உறவுகள் கசந்ததால் கனவுகள் கலைந்ததா?

Must read

Jivana Gaurahari Dasa
திரு. ஜீவன கௌர ஹரி தாஸ் அவர்கள், சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வண்ணம் கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்து வருகிறார்.

வழங்கியவர்: ஜீவன கெளரஹரி தாஸ்

ஆண்டி முதல் அரசன் வரை அனைவரும் துன்பத்தைத் தவிர்த்து இன்பமாக வாழவே விரும்புகின்றனர். நமது இன்பதுன்பங்களை பிறரிடம் பகிர்ந்துகொள்ளும்போது. இன்பம் இரட்டிப்பாகும் என்றும், துன்பம் பாதியாகக் குறையும் என்றும் மக்கள் கூறுவது வழக்கம். எனவே, மனித சமுதாயத்தில் கணவன், மனைவி, தாய், தந்தை, குழந்தை, சகோதரன், சகோதரி, தாத்தா, பாட்டி, நண்பன், அக்கம்பக்கத்தினர், உடன் பணிபுரிவோர் என உறவுமுறைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. உறவுகளை அடிப்படையாகக் கொண்டே குடும்பமும் சமுதாயமும் இயங்குகின்றன. பலர் குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சியே தமது மகிழ்ச்சி என வாழ்கின்றனர். குடும்ப உறுப்பினர்களிடம் ஒருவர் பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தினாலும், குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக எந்தவொரு தியாகத்தையும் ஏற்கின்றார். இவற்றிலிருந்து உறவுகளில் கிடைக்கும் அன்பு, பாசம், நேசத்திற்கு மனிதன் இயற்கையாகக் கட்டுப்படுகிறான் என்பதை அறிய முடிகிறது.

உடையும் உறவுகள்

இருப்பினும், சில தருணங்களில் இத்தகைய உறவினர்களுக்கிடையே உண்டாகும் தேவையற்ற சந்தேகம், வீண் பிடிவாதம், வஞ்சனை, பொறாமை, சொத்து பிரச்சனை முதலியவற்றால் பல வருடங்களாகத் தொடர்ந்த அன்பான உறவுகளும் அருமையான நட்புகளும்கூட உடைந்து விடுகின்றன. கோபம், மனதைப் புண்படுத்தும் சொற்கள் மற்றும் சரியான புரிந்துணர்வு இல்லாமையும்கூட உறவுகள் உடைவதற்கு காரணமாகின்றன. இவ்வாறு சிதைவுற்ற உறவுகளை சீர்படுத்த முயலும்போது, கவலை, துன்பம், ஏமாற்றம், மற்றும் பயமே மிஞ்சுகிறது. இன்றைய சூழ்நிலையில் இளம் சமூகத்தினர்களுக்கு இடையிலான உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகள் சமூகத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன.

இளமையின் இயலாமை

ஒரு யுவனும் யுவதியும் காதலிக்கும்போது, அவர்களுக்கிடையிலான அன்பு முதலில் பிரமிப்பாகவும் இனிமையாகவும் உணரப்
படுகிறது. ஆனால், காலம் செல்லச்செல்ல அதே உறவை சலிப்பாகவும் தொல்லையாகவும் எண்ணி இறுதியில் பிரிந்து விடுகின்றனர். இதனை ஜீரணிக்க இயலாத சிலர் வலி தாங்க முடியாமல், தங்களுக்குள்ளே அழுது புலம்புகின்றனர். அச்சமயத்தில் தங்களது வாழ்வையே தொலைத்துவிட்டதாகவும் தங்களைப் புரிந்துகொண்டு ஆறுதல் கூற யாரும் இல்லையே என்றும் ஏங்குகின்றனர்.

இவர்களைப் போலவே, சமூகத்திற்கு அஞ்சி வாழும் பலர் தங்களது உறவுகளில் விரிசல் ஏற்படும்போது சமூகம் தம்மை கவனிப்பதில்லை என எண்ணுகின்றனர். வாழ்வின் கசப்பான அனுபவத்தினால் தனிமையை நாடுகின்றனர். ஒருவர் மற்றவரின் மீது கொண்டிருந்த அன்பின் ஆழத்தைப் பொறுத்து அவர்களது துன்பத்தின் அளவு மாறுபடுகிறது. சில நேரங்களில் நெருங்கிய உறவுகளினால் உண்டாகும் ஏமாற்றம் அவர்களை தற்கொலை வரை செல்லத் தூண்டுகிறது. உறவுகள் கசந்ததால் வாழ்வின் எல்லாக் கனவுகளும் கலைந்து விட்டதாக எண்ணுகின்றனர். இப்படியான வாழ்வே வேண்டாமென்று வெறுப்பவர்களுக்கு புத்துணர்ச்சி அளித்திடும் ஒரு நற்செய்தி காத்துக் கொண்டிருக்கிறது.

உண்மையான உறவுமுறைகள் அனைத்தும் ஆன்மீக உலகில் நித்தியமாகக் காணப்படுகின்றன.

தீர்வு இலவசம்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்தார். அவர் எந்தவித பேதமுமின்றி மக்களின் மனப் போராட்டத்திற்கான தீர்வு என்னும் நற்செய்தியை அனைவருக்கும் இலவசமாக வழங்கினார். இலவசம் என்பதால் இதன் மதிப்பை குறைத்து எடை போடக் கூடாது. சைதன்ய மஹாபிரபு தமது காரணமற்ற கருணையினால் உன்னதமான பொக்கிஷத்தை அடைவதற்கான வழியையும் ஆலோசனையையும் கூறியுள்ளார். இதை அனைவரும் தயவுசெய்து கவனமுடன் கேட்பீராக.

உண்மையான உறவுமுறையும் அதன் பிம்பமும்

சைதன்ய மஹாபிரபு கூறுகிறார், “எல்லா ஜீவன்களும் பகவான் கிருஷ்ணருடன் நித்தியமான தெய்வீக உறவைக் கொண்டுள்ளனர். பாசமும் பற்றுதலுமுடைய உறவுமுறைகளைத் தேடும் படலம் நாம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடனான தெய்வீக உறவினைப் புதுப்பிக்கும்போது முடிவடைகின்றது.”

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஸ்வரூபம் ஆனந்தமயமானது. மேலும், இந்த ஆனந்தம் ஒவ்வொரு கணமும் மேன்மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த ஆனந்த ஸ்வரூபமே பல தெய்வீக லீலைகளுக்கு வித்தாக அமைகின்றது. நாம் வாழும் இந்த பெளதிக உலகிலுள்ள உறவுகளோ துன்பம், அறியாமை, மற்றும் மறுபிறவியைக் கொடுக்க வல்லது. இதற்கு நேர்மாறாக, ஆனந்தமே வடிவான கிருஷ்ணருடனான உறவானது உன்னதமான பேரானந்தத்தை வழங்கக் கூடியது.

இவ்வுலகில் நாம் காணும் எல்லா உறவுகளும் கிருஷ்ணருடனான தெய்வீக உறவின் பிம்பமே; இந்த உறவுகளின் உண்மை வடிவம் ஆன்மீக உலகில் காணப்படுகிறது. பெளதிக உலகம் ஆன்மீக உலகின் பிம்பமாகும். ஆன்மீக உலகில் கணவன்-மனைவி உறவு, பெற்றோர்-பிள்ளை உறவு, நட்பு, எஜமானர்-சேவகன் உறவு முதலிய எல்லா உறவுகளும் தூய்மையான நிலையில் காணப்படுகின்றன. ஆன்மீக உலகில் இம்மாதிரியான உறவுகள் உள்ளனவா என சிலர் சந்தேகிக்கலாம். உண்மை என்னவெனில், ஆன்மீக உலகில் காணப்படும் உறவுகளே பெளதிக உலகில் ஒரு பிம்பமாக வெளிப்படுகிறது.

இவ்வுலகில் காணப்படும் உறவுகள் அனைத்தும் ஆன்மீக உலகிலும் கிடைக்கப் பெறும் என்பதைக் கேட்கும்போது, நம்பிக்கையும் உற்சாகமும் புத்துணர்ச்சியும் ஏற்படுகின்றன. சாஸ்திர ஞானம் உடையவர்கள் பெளதிக உலகிலுள்ள உறவுமுறைகள் ஆன்மீக உலகிலுள்ள உறவுமுறைகளின் பிம்பம் என்பதை எளிதாக உணருகின்றனர். பெளதிக உலகிலுள்ள உறவுமுறை ஏமாற்றத்தை வழங்கலாம். ஆன்மீக உலகிலோ கிருஷ்ணர் அனைத்து ஜீவன்களின் விருப்பத்தையும் பூர்த்தி செய்கிறார்.

விருந்தாவனவாசிகள் கிருஷ்ணரிடம் செலுத்தும் உறவு எல்லையற்ற அன்பின் உறவாகும்.

எல்லையற்ற அன்பு

கலப்படமற்ற தூய பக்தியின் மூலம் கிருஷ்ணருடனான இந்த தெய்வீக உறவினை ஒருவர் வளர்த்துக்கொள்கிறார். இத்தகைய தூய பக்தர்களுக்கும் பகவான் கிருஷ்ணருக்கும் இடையில் அன்புப் பரிமாற்றத்திற்கான போட்டி நித்தியமாக நடைபெறுகிறது. இத்தகைய பக்தர்கள் பகவான் கிருஷ்ணரின் எண்ணற்ற ரூபங்களுடன் ஆன்மீக உலகிலுள்ள பல்வேறு கிரகங்களில் வசிக்கும்போதிலும், விருந்தாவனத்தில் வசிக்கும் பக்தர்களே தலைசிறந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். ஏனெனில், கிருஷ்ணர் விருந்தாவனத்தில் தமது அசாதாரண வலிமையை பல தருணங்களில் வெளிப்படுத்தினாலும், அவரை பகவானாக ஏற்க மறுக்கும் அளவிற்கு, விருந்தாவனவாசிகள் அவர்மீது எல்லையற்ற அன்பினைக் கொண்டுள்ளனர். கிருஷ்ணரும் தன்னை பகவான் என நிரூபித்து பக்தர்களுடனான உறவில் இடைவெளியை ஏற்படுத்த விரும்புவதில்லை.

பக்தர்கள் கிருஷ்ணரைத் தங்களுடனான உறவிலேயே அடையாளப்படுத்த விரும்புகின்றனர். ஆன்மீக உலகிலுள்ள திகைப்பு, நகைச்சுவை, போட்டி, வாக்குவாதம் முதலிய பலவித உணர்ச்சிகள் அந்த உறவில் நெருக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. சுருக்கமாகக் கூறினால், கிருஷ்ணரிடம் கிடைக்கக்கூடிய ஆனந்தத்தையே ஜீவன்கள் இவ்வுலகில் மற்ற ஜீவன்களுடனான உறவின் மூலமாகத் தேடி அலைந்து ஏமாற்றம் அடைகின்றனர். கிருஷ்ணரே ஆனந்தத்தின் இருப்பிடம் என்பதை வீழ்ச்சியடைந்த ஜீவன்கள் உணருவதில்லை.

தீர்வு—திருநாம உச்சாடனம்

கிருஷ்ணருடனான உறவில் நாம் அடையக்கூடிய ஆனந்தத்தின் அளவு கடலைப் போன்றது; அதிகரித்துக் கொண்டே செல்லும் தன்மையுடையது. ஒரு ஜீவன் மற்றொரு ஜீவனை முழுமையாக திருப்தி செய்ய முடியாது. பெளதிக உலகில் கிருஷ்ணர் பல அதிசய லீலைகளை அரங்கேற்றி ஜீவன்களுக்கு அழைப்பு விடுக்கிறார். சேவகன், நண்பன், பெற்றோர், தெய்வீகக் காதலி என பல உறவுகளில் ஜீவன் கிருஷ்ணருக்கு சேவை செய்யலாம். எண்ணற்ற ஜீவன்கள் இத்தகைய சேவைகளை விருந்தாவனத்தில் செய்து வருகின்றனர்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடனான உறவினைப் புதுப்பித்துக்கொள்ள சைதன்ய மஹாபிரபு பகவானின் திருநாம உச்சாடனம் என்னும் சுலபமான வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளார். எனவே, நாம் அனைவரும் தினமும் ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹா மந்திரத்தை உச்சரித்து கிருஷ்ணருடனான உறவைப் புதுப்பித்து பேரானந்தக் கடலில் மூழ்குவோமாக!

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives