கிருஷ்ணரின் அசுர வதங்களில் சில பாடங்கள்

வழங்கியவர்: ஜீவன கௌர ஹரி தாஸ்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இப்பூமியில் தோன்றும்போது, பல்வேறு அற்புத லீலைகளை அரங்கேற்றுகிறார். அத்தகு லீலைகளின் மூலமாக கட்டுண்ட ஆத்மாக்களை அவர் கவர்ந்திழுக்கிறார். அதிலும் குறிப்பாக, கோகுல, விருந்தா வனத்தில் நடைபெறும் கிருஷ்ணரின் குழந்தைப் பருவ லீலைகள் தன்னிகரற்ற இனிமையைக் கொண்டவை என வேத சாஸ்திரங்கள் பறைசாற்றுகின்றன.

 

கிருஷ்ணரின் அசுர வதங்கள் உலக மக்களுக்கு பல பாடங்களைப் புகட்டு கின்றன, மேலும், அவை பலவிதமான ஆன்மீக உட்சிந்தனைகளையும் கொண்டுள்ளன. விருந்தாவனத்தில் கிருஷ்ணர் அரங்கேற்றிய அசுர வதங்களையும், அவற்றின் பின்னணியில் ஆச்சாரியர்கள் கொடுக்கும் விளக்கங்களையும் காண்போம்.

காளியன்

யமுனை நதியில் கிருஷ்ணர் ஆயிரம் தலைகளைக் கொண்ட காளியன் என்ற பாம்பின் மீது நடனமாடியது அனைவரும் அறிந்ததே. கிருஷ்ணர் காளியனை வதம் செய்யாவிட்டாலும் அந்த லீலையின் மூலம் பல பாடங்களைப் புகட்டுகிறார்.

 

காளியனின் கொட்டத்தை அடக்க, கிருஷ்ணர் கதம்ப மரத்தின் உச்சியில் ஏறி யமுனையில் குதித்தார். அந்த சப்தத்தைக் கேட்ட காளியன் கிருஷ்ணரை தன் வாலால் இரண்டு மணி நேரத்திற்குச் சுருட்டிக் கொண்டான். இதனைக் கண்ட விருந்தாவனவாசிகள் கிருஷ்ணர் மீதான ஆழ்ந்த பற்றுதலால் மயக்கமுற்றனர். பலராமர் அங்கிருந்தவர்களிடம் கிருஷ்ணருக்கு எதுவும் ஆகாது என தெரிவித்து புன்னகைத்தார். பலராமரின் புன்னகைக்கு ஆச்சாரியர்கள் கொடுக்கும் விளக்கம்: முதலாவதாக, கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்பதை பூரணமாக அறிந்தவர் பலராமர்; இரண்டாவதாக, தனது விரிவங்கமான ஆதிசேஷன் மீது கிருஷ்ணர் படுத்து உறங்குகிறாரே தவிர என்றும் விளையாடியதில்லை, ஆனால் இன்று இந்த சாதாரண பாம்பான காளியனிடம் விளையாடப் போகிறார்.

 

சிறிது நேரத்தில் காளியனின் பிடியிலிருந்து தன்னைத் தளர்த்திக் கொண்ட கிருஷ்ணர், காளியனின் தலையில் வேகமாக நடனமாட ஆரம்பித்தார். ஒரு தலையிலிருந்து மற்றொரு தலைக்கு மாறிமாறி நடனமாடினார். அதாவது, அவரின் நடன மேடை கண் இமைக்கும் நேரத்தில் மாறிக் கொண்டே இருந்தது. கிருஷ்ணரின் காளிய நடனத்தை அறியாதவர்கள், திரைப்படங்களில் ஒரே மேடையில் கைகால் வலிப்பு வந்தவர்களைப் போன்று நடனமாடுபவர்களை வெகுவாக புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

 

கிருஷ்ணர் காளியனுக்குத் தன் கருணையைக் கொடுத்த பிறகு, யமுனையை விட்டு சமுத்திரத்திற்குச் செல்லுமாறு கட்டளையிட்டார். காளியன் நம் இதயத்தில் இருக்கும் இரக்கமற்ற குணங்களை வெளிப்படுத்துவதாக பக்திவினோத தாகூர் குறிப்பிடுகிறார்.

பிரலம்பாசுரன்

ஒருநாள் பந்திர வனத்தில் கிருஷ்ணர் தலைமையில் ஓர் அணியாகவும் பலராமர் தலைமையில் மற்றொரு அணியாகவும் இடையர் குலச் சிறுவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். பிரலம்பாசுரன் என்ற அசுரன் தன்னை ஓர் இடையர் குலச் சிறுவனாக மாற்றிக் கொண்டு, கிருஷ்ணரின் அணியில் சேர்ந்து கொண்டான். போட்டியின் விதிப்படி, தோற்றவர்கள் வென்றவர்களை தங்களது முதுகில் சுமந்துச் செல்ல வேண்டும். பலராமரின் அணி போட்டியில் வென்றபோது, பிரலம்பாசுரன் பலராமரை தன் முதுகில் சுமந்து நீண்ட நேரம் காட்டிற்குள் ஓடி, பிறகு தன் சுய ரூபத்தை வெளிப்படுத்தி காற்றில் பறக்க ஆரம்பித்தான். இதனைக் கண்ட பலராமர் அவன் தலையில் ஓங்கி அடித்தபோது அவன் மாண்டு போனான்.

 

பிரலம்பாசுரன் நம் இதயத்தில் இருக்கும் காம இச்சைகளையும், பெயர் மற்றும் புகழுக்காக ஏங்கும் குணங்களையும் வெளிப்படுத்துவதாக பக்திவினோத தாகூர் குறிப்பிடுகிறார். பிரலம்பாசுரன் எப்படி ஆரம்பத்தில் நண்பனாக வேடமணிந்து கொண்டானோ, அதுபோல காம இச்சைகளும் ஆரம்பத்தில் அமிர்தமாகத் தோன்றி, பிறகு இறுதியில் விஷமாக மாறிவிடுகின்றன.

அரிஷ்டாசுரன்

கிருஷ்ணரைக் கொல்வதற்கு அரிஷ்டாசுரன் எடுத்துக் கொண்ட உருவம் காளை. கிருஷ்ணரை அவன் தாக்க முனைந்தபோது, கிருஷ்ணர் அவனது கொம்பைப் பிடித்து வீசி எறிந்து காலால் உதைத்து அவனை வதம் செய்தார். பொதுவாக, அசுரர்கள் கிருஷ்ணரைக் கொல்வதற்கு விலங்கு உருவத்தை எடுத்துக்கொள்ள ஒரு காரணம்: கிருஷ்ணர் விலங்குகளை மிகவும் நேசிக்கிறார்.

 

ஏமாற்றுக்காரர்கள் அறிமுகப்படுத்தும் பொய்யான மதக் கோட்பாடுகளைப் பின்பற்றிக் கொண்டு, பக்தியை நிராகரிக்கக்கூடியவர்களின் மனநிலையை அரிஷ்டாசுரன் வெளிப்படுத்துவதாக பக்திவினோத தாகூர் குறிப்பிடுகிறார். பக்தித் தொண்டு விஷ்ணு தத்துவங்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியது என அறிந்தவர்கள் இம்மாதிரியான ஏமாற்றுக்காரர்களால் பாதிக்கப்படுவதில்லை.

கேசி

கேசி என்னும் அசுரன் குதிரை உருவத்தில் மனதின் வேகத்தில் கிருஷ்ணரைத் தாக்க முன்வந்தான். கிருஷ்ணர் கேசியின் வாயில் தன் கையை நுழைத்து அவனை வதம் செய்தார். நான் பெரிய பக்தன், நான் பெரிய குரு என கூறுபவர்களின் இதயத்தில் கேசி அமர்ந்திருப்பதாக பக்திவினோத தாகூர் குறிப்பிடுகிறார். தங்களை உயர்த்திப் பேசி, மற்றவர்களை மட்டம் தட்டிப் பேசுபவர்கள் முதலில் வாயை மூடிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே கிருஷ்ணர் கேசியின் வாயில் தன் கையை நுழைத்து வதம் புரிந்தார்.

சங்கசூடன்

சங்கசூடன் என்ற அசுரன் கோபியர்கள் சிலரைக் கடத்திச் சென்றான். கிருஷ்ணர் அவனை விரட்டிப் பிடித்து வதம் செய்தார், அவனுடைய தலையிலிருந்த விலையுயர்ந்த சங்கையும் பிடுங்கிக் கொண்டார். ஆன்மீகப் போர்வையில் ஒருவன் காமச் செயல்களில் ஈடுபட்டால், அவனது இதயத்தில் சங்கசூடன் அமர்ந்திருப்பதாக பக்திவினோத தாகூர் குறிப்பிடுகிறார்.

வியோமாசுரன்

கிருஷ்ணர் தன் நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது, வியோமாசுரன் வௌவால் ரூபத்தில் அங்குத் தோன்றி ஒவ்வொரு சிறுவர்களையும் கடத்தி குகையில் பிணைக் கைதிகளாகச் சிறைப்படுத்தினான். தன் நண்பர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கண்ட கிருஷ்ணர், வியோமாசுரனை வதம் செய்து அனைத்து நண்பர்களையும் குகையிலிருந்து காப்பாற்றினார்.

 

தங்களை அவதாரமாகக் கூறிக்கொள்ளும் அயோக்கியர்களின் இதயத்தில் வியோமாசுரன் அமர்ந்திருப்பதாக பக்திவினோத தாகூர் குறிப்பிடுகிறார். அத்தகைய நபர்கள் நாயைப் போன்றவர்கள் என்று ஸ்ரீல பிரபுபாதர் குறிப்பிடுகிறார். கலி யுகத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், திருநாமம், விக்ரஹம், துளசி, கங்கை, ஆச்சாரியர்கள், சாஸ்திரங்கள் (பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம்) போன்ற ரூபத்தில் வெளிப்படுகிறார்.

பலராமரின் அசுர வதம்

தேனுகாசுரன், அவனது தோழர்கள், பிரலம்பாசுரன், த்விவிதன் போன்ற அசுரர்கள் பலராமரால் வதம் செய்யப்பட்டவர்கள். தேனுகாசுரன் அறியாமை குணத்திற்கும், பிரலம்பாசுரன் காம உணர்வுகளுக்கும், கொரில்லா குரங்கு வடிவில் இருந்த த்விவிதன் சாதுக்களை நிந்திக்கும் குணத்திற்கும் ஒப்பிடப்படுகின்றனர். பலராமரின் அசுர வதங்களை தொடர்ந்து கேட்பதோடு அந்த அசுர குணங்களை நீக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என ஸ்ரீல பக்திவினோத தாகூர் குறிப்பிடுகிறார். அதாவது, அறியாமையை நீக்குவதற்காக தினந்தோறும் பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தைப் படிக்க வேண்டும். காம உணர்விலிருந்து விடுபடுவதற்கு சஞ்சலமான மனதை ஒழுங்குபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல சாதுக்களை நிந்திக்காமல் இருப்பதற்கு எப்போதும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

கிருஷ்ணரின் அசுர வதம்

மேகக் கூட்டங்கள் எவ்வாறு சூரியனை தற்காலிகமாக மறைத்துக்கொள்கின்றனவோ, அதைப் போன்று ஜீவன்களின் இயற்கையான கிருஷ்ண உணர்வை அறியாமையும் அனர்த்தங்களும் தற்காலிகமாக மறைத்து விடுகின்றன. இதனால், நம் இதயத்தில் குடி கொண்டிருக்கும் அசுரர்களை முதலில் கண்டறிய வேண்டும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அசுரர்களை வதம் செய்யும்போது, அவர்களின் ஸ்தூல உடலையும் சூட்சும உடலையும் ஒருசேர அழிப்பதால், அவர்களுக்கு உடனடியாக முக்தி கிடைத்து விடுகிறது. இதனால், கிருஷ்ணரின் அசுர வதம் தெய்வீகமானது, அசுரர்களுக்கும் நன்மை பயப்பது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

 

கிருஷ்ணர் விருந்தாவனத்தில் அசுரர்களைக் கொல்வதற்கு எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தவில்லை. உதாரணமாக, பூதனையைக் கொல்வதற்கு உதடுகளையும், கேசியைக் கொல்வதற்கு கரங்களையும், அரிஷ்டாசுரனைக் கொல்வதற்குக் கால்களையும் பயன்படுத்தினார். கிருஷ்ணர் தன்னை சார்ந்து வாழும் விருந்தாவனவாசிகளைக் காப்பதற்காக அசுர வதச் செயல்களில் ஈடுபட்டார். கிருஷ்ணர் தன் நண்பர்களுக்குத் தேவையான பாதுகாப்புகள், வசதிகள், ஆனந்தம் போன்றவற்றை வழங்கி, அவர்களிடத்தில் அன்பு பரிமாற்றத்தில் ஈடுபடுகிறார். அந்த அன்புப் பரிமாற்றத் தினைத்தான் இந்த பௌதிக உலகிலும் ஒவ்வொருவரும் எதிர்பார்க்கின்றனர், ஆனால் அஃது இவ்வுலகில் எங்கும் கிடைப்பதில்லை, கிடைக்கவும் கிடைக்காது.

 

கிருஷ்ண உணர்வே நமது உண்மையான சொத்து என்பதை முழுமையாக உணர்ந்து, கிருஷ்ணரின் நண்பர்களாக மாறுவோம். கலி யுகத்தில் சைதன்ய மஹாபிரபு வழங்கிய எளிமையான பக்தி மார்கத்தைப் பின்பற்றுவோம் (ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரிப்போம்). யாரோ ஒரு போலி கதாநாயகனுக்கு ரசிகனாக இருப்பதற்குப் பதிலாக, உண்மையான நாயகரான கிருஷ்ணரின் ரசிகர் மன்றத்தில் நாம் நிரந்தர உறுப்பினராவோம்.

About the Author:

mm
திரு. ஜீவன கௌர ஹரி தாஸ் அவர்கள், சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வண்ணம் கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்து வருகிறார்.

Leave A Comment