விதுரர் மைத்ரேயரை அணுகுதல்

Must read

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

 

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரப்பூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.

 

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: மூன்றாம் காண்டம், நான்காம் அத்தியாயம்

 

சென்ற இதழில் யதுக்கள் பிரபாஸ க்ஷேத்திரத்தில் தங்கி யிருந்தது தொடர்பான விஷயங்களை உத்தவர் விதுரரிடம் விவரித்ததைக் கண்டோம். இந்த இதழில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உத்தவருக்கு அளித்த இறுதி உபதேசம் பற்றி அறிந்துகொள்வோம்.

யதுக்களின் மறைவு

விதுரரிடம் உத்தவர் கூறினார்: “விருஷ்ணி மற்றும் போஜ வம்சத்தினர் பிராமணர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் அறுசுவை உணவளித்தபின், அவர்களிடம் அனுமதி பெற்று தாமும் விருந்துண்டனர். அதன் பின் தமது பூவுலக லீலைகளை முடித்துக்கொள்ள விரும்பிய பகவானின் விருப்பப்படி, யதுக்கள் மது மயக்கத்தில் தங்கள் வசமிழந்தனர். தங்கள் அன்பான உறவுமுறைகளை மறந்து ஒருவருக்கொருவர் வசைபாடினர். மூங்கில்களின் உராய்வினால் காட்டுத்தீ உருவாகி, அம்மூங்கில் களையே அழிப்பதுபோல, யது வம்சத்தினுள் உண்டான சண்டையானது யது வம்சம் முழுவதையும் அழித்தது.” (பண்பாடு நிறைந்த குடும்பத்தினரைக்கூட மதுபோதையானது தன்னிலை மறக்கச் செய்து அழித்து விடுகிறது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.)

 

இவ்வாறாக, தமது அந்தரங்க சக்தியினால் தம் குடும்பத்தினரின் முடிவை முன்னறிந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சரஸ்வதி நதிக்கரைக்குச் சென்று ஒரு மரத்தடியில் அமர்ந்தார்.

உத்தவர் கிருஷ்ணரைப் பின்தொடர்தல்

உத்தவர் தொடர்ந்தார்: “தம்மிடம் சரணடைந்தவர்களின் துன்பங்களை பகவான் அழித்து விடுகிறார். யது வம்சத்தின் அழிவைத் தொடர்ந்து வரப்போகும் துன்பங்களை அறிந்து நான் கவலைப்படக் கூடாது என்பதற்காக, பத்ரிகாஷ்ரமத்திற்கு சென்று விடும்படி துவாரகையிலிருக்கும்போதே அவர் என்னிடம் கூறினார். பகவானின் விருப்பத்தை நான் அறிந்திருந்தபோதிலும், அவருடைய தாமரை பாதங்களின் பிரிவைத் தாங்கிக்கொள்வது சாத்தியமல்ல என்பதால், நான் அவரைப் பின்தொடர்ந்து சென்றேன்.

 

“அச்சமயத்தில், எனது இரட்சகரும் தலைவரும் மஹாலக்ஷ்மியின் புகலிடமுமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சரஸ்வதி நதிக்கரையைப் புகலிடமாகக் கொண்டு ஆழ்ந்த சிந்தனையுடன் தனியாக அமர்ந்திருப்பதைக் கண்டேன். பகவானின் உடல் நித்தியத் தன்மையும் பூரண ஆனந்தமும் அறிவும் நிரம்பியதாக அழகிய கருமை நிறத்துடன் விளங்கியது. அவரது கண்கள் உதயசூரியனைப் போல் சிவந்து காணப்பட்டன. அவர் நான்கு கரங்களுடன் மஞ்சள் பட்டாடை உடுத்தியிருந்தார்.”

 

பகவான் தமது வலது தாமரை பாதத்தை இடது தொடையின் மீது வைத்தவாறு, ஓர் இளம் ஆலமரத்தின் மீது சாய்ந்தபடி, அம்மரத்தடியில் ஓய்வாக அமர்ந்திருந்ததை உத்தவர் கண்டார். அவர் மிகவும் ஆனந்தமாகக் காணப்பட்டார். அப்பொழுது வியாஸதேவரின் நண்பரும் சிறந்த பக்தருமான மைத்ரேயர் அங்கு வந்து சேர்ந்தார்.

கிருஷ்ணரின் இறுதி உபதேசம்

பகவானிடம் மிகவும் பற்றுதல் கொண்டிருந்த மைத்ரேய முனிவர் மிக்க மகிழ்ச்சியுடன் அவரது பேச்சைக் கேட்க தயாரானார். “உத்தவர் இளைப்பாறும் வரை காத்திருந்த பகவான் கருணையுடனும் புன்னகையுடனும் அவரை நோக்கி பின்வருமாறு பேசலானார்: “உத்தவ, உன் மனதின் அந்தரங்க ஆசையை நான் அறிவேன், புராதன காலத்தில் பிரபஞ்ச விவகாரங்களை விரிவடையச் செய்யும் பொறுப்பை ஏற்றிருந்த வசுக்களும் பிற தேவர்களும் யாகங்களை செய்தனர். அச்சமயத்தில் என் சகவாசத்தைப் பெற நீ விரும்பினாய். மற்றவர்களால் இதை அடைவது கடினம் என்றபோதிலும், நான் உனக்கு இதனை வழங்கியுள்ளேன்.

 

“நேர்மையானவனே, உன் பிறவிகளில் இதுவே கடைசியும் மிகச் சிறந்ததுமாகும். ஏனெனில், இப்பிறவியில் நான் உனக்கு பூரண அனுக்கிரகத்தை அளித்திருக்கிறேன். இப்போது பந்தப்பட்ட ஜீவன்களுக்குரிய இப்பிரபஞ்சத்தை விட்டுவிட்டு, நீ எனது ஆன்மீக உலகான வைகுண்டத்திற்குச் செல்லலாம். உனது உறுதியான தூய பக்தித் தொண்டின் காரணத்தால், என்னை இந்த தனிமையான இடத்தில் காண வந்திருப்பது உனக்கு கிடைத்துள்ள பெரும் பாக்கியமாகும்.

 

“உத்தவ, பத்ம கல்பத்தின் ஆரம்பத்தில், படைப்பின் துவக்கத்தில் எனது நாபிக் கமலத்தில் வீற்றிருந்த பிரம்ம தேவருக்கு “ஸ்ரீமத் பாகவதம்” என்று மாமுனிவர்களால் விவரிக்கப்படும் எனது உன்னத பெருமைகளைப் பற்றி நான் உபதேசித்தேன்.”

 

இவ்வாறாக, பெரும் பாசத்துடன் பகவானால் உபதேசிக்கப்பட்ட உத்தவர், ஒவ்வொரு கணமும் பகவானால் ஆட்கொள்ளப்பட்டு, மெய்சிலிர்த்து, கண்ணீரால் பேச்சற்று நின்றார். கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கூப்பிய கரங்களுடன் பின்வருமாறு பேசலானார்:

 

“எம்பெருமானே, தங்கள் தாமரை பாதங்களின் உன்னத அன்புத் தொண்டில் ஈடுபட்டுள்ள பக்தர்களுக்கு தர்மம், பொருளாதார முன்னேற்றம், புலனின்பம், முக்தி எனும் நான்கு கொள்கைகளுக்கு உட்பட்ட எதையும் அடைவதில் எந்த கஷ்டமும் இல்லை. ஆனால் பெரும் புகழுக்குரியவரே, என்னைப் பொறுத்தவரையில் தங்கள் தாமரைப் பாதங்களில் பணிசெய்து கிடக்கவே நான் விரும்புகிறேன்.

 

“பகவானே, தங்களது பிறப்பு, செயல்கள், இல்லற வாழ்வு போன்றவை கற்றறிந்த முனிவர்களுக்கும் புரியாத புதிராகவே உள்ளன. தாங்கள் எல்லாம் அறிந்தவராக இருந்தும், சில சமயங்களில் என்னுடன் கலந்தாலோசிப்பது என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.

 

“எம்பெருமானே, தங்களைப் பற்றிய ஞானத்தை அளிக்கக்கூடியதும், முன்பு பிரம்மதேவருக்கு தாங்கள் விளக்கியதுமான அந்த உன்னத ஞானத்தை நாங்கள் பெறத் தகுதியுடையவர்கள் என்று தாங்கள் நினைத்தால், எங்களுக்கு விளக்கியருள வேண்டுகிறேன்.”

 

இதைக் கேட்டதும் தாமரைக் கண்களையுடைய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையிலும் விருந்தாவனத்திலும் உன்னத அன்புத் தொண்டில் ஈடுபட்டுள்ள பக்தர்களுடனான தமது லீலைகளைப் பற்றி (ஸ்ரீமத் பாகவதம்) உத்தவருக்கு விளக்கமாக உபதேசித்தார்.

உத்தவர்-விதுரர் உரையாடல்

அதன் பின்னர், அவரை வலம் வந்து வணங்கிய உத்தவர், அவரை விட்டு பிரிய மனமின்றி மிகுந்த துயரத்துடன் விதுரர் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். அவர் விதுரரிடம் கூறினார்: “அன்பிற்குரிய விதுரரே, அவரது தரிசனத்தால் கிடைக்கும் ஆனந்தத்தைப் பெற முடியாமல் இப்பொழுது நான் பித்தனைப் போல் ஆகியிருக்கிறேன். அவரது உபதேசத்தின்படி நான் பத்ரிகாஷ்ரமத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். அங்கே அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காக நர-நாராயண ரிஷிக்கள் புராதன காலத்திலிருந்து கடும் தவங்களை மேற்கொண்டு வருகின்றனர்.”

 

உத்தவர் தம்மைவிட வயதில் சிறியவராக இருந்தாலும், தூய பக்தரான அவரிடம் விதுரர் பணிவுடனும் அன்புடனும் கேள்விகள் கேட்டார். மேலும், உத்தவர் பகவானிடம் நேரடியாகக் கேட்டறிந்த ஆத்ம ஞானத்தை தமக்கு விளக்கும்படி வேண்டினார். உத்தவரோ அந்த ஞானத்தினை மைத்ரேயரிடமிருந்து கேட்டறியும்படி விதுரரை வேண்டி விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

உத்தவரின் பத்ரிகாஷ்ரம பயணம்

உத்தவரைப் பற்றிய இத்தகவல்களை சுகதேவரிடமிருந்து கேட்டறிந்த பரீக்ஷித் மஹாராஜன் அவரிடம் வினவினார்: “மூவுலகங்களுக்கும் இறைவனான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் லீலைகள் முடிவடைந்த பின்னரும், சேனாதிபதிகளிலேயே சிறந்தவர்களான விருஷ்ணி மற்றும் போஜ வம்சத்தினரின் மறைவுக்குப் பின்னரும் உத்தவர் மட்டும் ஏன் எஞ்சியிருந்தார்?”

 

சுகதேவர் பதிலளித்தார்: “அன்புள்ள அரசே, பிராமணர்களின் சாபம் ஒரு சாக்கு போக்கு மட்டுமே. ஆனால் பகவானின் உன்னதமான விருப்பமே உண்மையான காரணமாகும். பகவான் தமது குடும்ப அங்கத்தினர்களை ஆன்மீக உலகிற்கு அனுப்பிய பிறகு, தாமும் இந்த மண்ணுலகிலிருந்து மறைந்து விட விரும்பினார். இருப்பினும், தமது முக்கிய பக்தரும் ஜட இயற்கை குணங்களால் பாதிக்கப்படாதவரும் தமக்கு நிகரானவருமான உத்தவரைக் கொண்டு, தம்மைப் பற்றிய அறிவை இவ்வுலகில் பரப்புவதற்கு முடிவு செய்தார்.”

விதுரர் மைத்ரேயரை அணுகுதல்

பகவான் கிருஷ்ணரைப் பற்றிய விஷயங்களை விதுரரிடம் பேசிய பின்னர், உத்தவர் பத்ரிகாஷ்ரமத்திற்கு புறப்பட்டு சென்றார். கிருஷ்ணரின் நினைவில் யமுனைக் கரையில் சில காலம் கழித்த விதுரர், பின் மைத்ரேய முனிவர் இருந்த கங்கைக் கரையை அடைந்தார்.

 

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives