அமரத் தன்மையின் இரகசியம்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

பிரபுபாதருடன் ஓர் உரையாடல்
வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி

ஃப்ராங்க்பர்ட், ஜெர்மனி–1974இல் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் மதம் சார்ந்த மனோவியல் நிபுணரான கார்ல்ப்ரைட் க்ராட் வோன் டர்க்ஹைம் (Karlfried Grad von Durckheim) என்னும் பேராசிரியருக்கும் அவரது நண்பரான பேராசிரியர் தாராவிற்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலின் ஒரு பகுதி.

பேராசிரியர் டர்க்ஹைம்: சாதாரண மனிதன் ஆழ்ந்த உணர்வை அனுபவிப்பதற்கான வழி ஏதேனும் உண்டா?

ஸ்ரீல பிரபுபாதர்: உண்டு. அந்த அனுபவம் பகவத் கீதையில் (2.13) கிருஷ்ணரால் விளக்கப்பட்டுள்ளது: 

தேஹினோ ஸ்மின் யதா தேஹே
 கௌமாரம் யௌவனம் ஜரா
ததா தேஹாந்தர-ப்ராப்திர்
 தீரஸ் தத்ர ந முஹ்யதி 

“ஆத்மா ஓர் உடலினுள் இருக்கும்போது, சிறுவயது, இளமை, முதுமை என்று கடந்துசெல்வதைப் போல, மரணத்தின்போது வேறு உடலுக்கு மாற்றம் பெறுகின்றது. நிதான புத்தியுடையோர் இதுபோன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை.”
“நான் இந்த உடலல்ல” என்னும் அடிப்படை அறிவினை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இந்த அடிப்படை நெறியினைப் புரிந்துகொண்டால், ஆழமான உணர்வை நோக்கி முன்னேற முடியும்.

பேராசிரியர் டர்க்ஹைம்: உடல் மற்றும் ஆத்மா குறித்த பிரச்சனையில், கீழ் நாட்டினருக்கும் மேல் நாட்டினருக்கும் இடையில் பெரும் வேறுபாடு இருப்பதாகத் தோன்றுகிறது. கீழ் நாட்டுப் போதனைகளின்படி நீங்கள் உடலைவிட்டு விடுபட வேண்டும். ஆனால் மேலைநாட்டு மதங்களின்படி உடலிலுள்ள ஆத்மாவை உணர முயற்சி செய்ய வேண்டும்.

ஸ்ரீல பிரபுபாதர்: இதைப் புரிந்துகொள்வது மிகவும் எளிது. நாம் ஆத்மாக்கள் என்பதையும், உடலுக்குள் இருக்கின்றோம் என்பதையும் பகவத் கீதையிலிருந்து கேட்டுள்ளோம். நாம் நம்மை உடலுடன் அடையாளப்படுத்துவதால் மட்டுமே நமக்கு துன்பங்கள் ஏற்படுகின்றன. நான் இந்த உடலினுள் இருப்பதால்தான் துன்பப்படுகிறேன். கீழ்நாடு, மேல்நாடு என எங்கு சென்றாலும், இந்த உடலைவிட்டு எவ்வாறு வெளியேறுவது என்பதே எனது உண்மையான பணியாக இருக்க வேண்டும். இது புரிகின்றதா?
டர்க்ஹைம்: ஆம். 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆன்மீக ஆத்மாவாகிய நான் ஓர் உடலில் பிரவேசித்துள்ளேன், ஆனால் எனது அடுத்த பிறவியில் நான் மற்றொரு உடலில் பிரவேசிப்பேன்—இதுவே மறுபிறவி எனப்படுகிறது. அது நாயின் உடலாக, பூனையின் உடலாக, அல்லது அரசனின் உடலாக இருக்கலாம். அரசனின் உடல், நாயின் உடல் என எந்த உடலாக இருந்தாலும், துன்பம் என்பது இருக்கத்தான் செய்யும். பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவை எல்லா உடலிலும் உள்ள துன்பங்களாகும். இந்த நால்வகைத் துன்பங்களிலிருந்து விடுதலை பெற, நாம் இவ்வுடலிலிருந்து நிரந்தரமாக விடுபட வேண்டும். எவ்வாறு தனது ஜடவுடலிலிருந்து விடுபடுவது என்பதே மனிதனின் உண்மையான பிரச்சனை. 

டர்க்ஹைம்: இதற்குப் பல பிறவிகள் ஆகுமா? 

ஸ்ரீல பிரபுபாதர்: பல பிறவிகள் ஆகலாம், அல்லது ஒரே பிறவியில்கூட முடியலாம். உங்களுடைய துன்பங்கள் உடலால் நிகழ்பவை என்பதை நீங்கள் புரிந்துகொண்டால், உடலிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பதை நீங்கள் வினவ வேண்டும். அதற்கான அறிவைப் பெற்றுவிட்டால், உடலிலிருந்து எவ்வாறு உடனடியாக விடுபடுவது என்னும் உபாயத்தை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.
டர்க்ஹைம்: அதற்காக உடலைக் கொல்ல வேண்டும் என்று பொருளல்ல, அப்படித்தானே? ஆத்மா உடலிலிருந்து வேறுபட்டது என்பதை உணர வேண்டும், சரியா? 

ஸ்ரீல பிரபுபாதர்: உடல் கொல்லப்படத் தேவையில்லை. உங்களது உடல் கொல்லப்படுகிறதோ இல்லையோ, ஒருநாள் நீங்கள் உங்களது தற்போதைய உடலைவிட்டு வெளியேறி வேறு உடலை ஏற்க வேண்டியிருக்கும். இஃது இயற்கையின் சட்டம். இதனை நீங்கள் தவிர்க்க இயலாது. 

டர்க்ஹைம்: கிறிஸ்துவ மதத்திற்கு இணக்கமான சில கருத்துகள் இங்கும் இருப்பதாகத் தெரிகிறது. 

ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் கிறிஸ்துவரா, முஸ்லீமா, இந்துவா என்பது முக்கியமல்ல. அறிவு அனைவருக்கும் பொதுவானது. அஃது எங்கே கிடைத்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வோர் உயிர்வாழியும் ஜடவுடலில் சிறைப்பட்டுள்ளான்—இதுவே அறிவு. இந்த அறிவு, இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள் என அனைவருக்கும் பொருந்தும். உடலில் ஆத்மா சிறைப்பட்டிருப்பதால், பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவற்றால் துன்பப்பட வேண்டும். ஆனால் நாம் எல்லாரும் நித்தியமாக வாழ விரும்புகிறோம், முழு அறிவைப் பெற விரும்புகிறோம், பேரின்பத்தை அடைய விரும்புகிறோம். இக்குறிக்கோளை அடைய நாம் உடலைவிட்டு வெளியேறியாக வேண்டும். இதுவே வழிமுறை.

டர்க்ஹைம்: விலங்குகளுக்கு தன்னுணர்வு இல்லை என்ற உண்மையான விஷயத்தை நான் நம்புகிறேன். அதனுடைய உண்மை தன்மை என்ன என்பதை அதனால் புரிந்துகொள்ள முடியாது. 

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். அதுதான் முக்கியமான விஷயம். தான் யார் என்பதை மனிதனால் புரிந்துகொள்ள முடியும், பறவைகளும் விலங்குகளும் புரிந்துகொள்ள முடியாது. எனவே, மனிதர்களாகிய நாம் பறவைகள் மற்றும் விலங்குகளின் மட்டத்தில் செயல்படாமல் தன்னை அறிவதற்கு தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். அதாதோ ப்ரஹ்ம-ஜிஜ்ஞாஸா, மனித வாழ்க்கை பூரண உண்மையைப் பற்றி சிந்திப்பதற்காகவே உள்ளது. மனித வாழ்வின் நோக்கம் அதுவே; விலங்குகளைப் போன்று உண்பதும் உறங்குவதும் அல்ல.

பூரண உண்மையை அறிவதற்கான கூடுதல் அறிவை நாம் பெற்றுள்ளோம். பாகவதத்தில் (1.2.10) பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

காமஸ்ய நேந்த்ரிய-ப்ரீதிர் லாபோ ஜீவேத யாவதா
ஜீவஸ்ய தத்த்வ ஜிஜ்ஞாஸா­ நார்தோ யஷ் சேஹ கர்மபி: 

“வாழ்வின் விருப்பங்கள் புலனின்பத்தை நோக்கிச் செலுத்தப்படக் கூடாது. மனிதன் பரம்பொருளைப் பற்றிய விசாரணையில் ஈடுபட வேண்டியவன் என்பதால், அவன் ஆரோக்கியமான வாழ்வு அல்லது சுயபராமரிப்பிற்கு மட்டுமே ஆசைப்பட வேண்டும். வேறு எதுவும் அவனது தொழிலின் நோக்கமாக இருக்கக் கூடாது.”

பேராசிரியர் தாரா: ஆனால் மற்றவர்களுக்கு நன்மை செய்ய நமது உடலைப் பயன்படுத்துவது நேரத்தை வீணாக்குவதாகுமா? 

ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் மற்றவர்களுக்கு நன்மை செய்ய முடியாது; ஏனென்றால், நன்மை என்ன என்பது உங்களுக்குத் தெரியாது. உடலை வைத்து நீங்கள் நன்மை என்று நினைக்கிறீர்கள். நீங்கள் இந்த உடலல்ல என்பதால் இந்த உடல் பொய்யானது. உதாரணமாக, நீங்கள் ஓர் அறையில் தங்கியிருக்கலாம், ஆனால் நீங்கள் அந்த அறையல்ல. நீங்கள் அந்த அறையை அலங்கரித்து வைத்துவிட்டு, உண்பதற்கு மறந்துவிட்டால் அது நன்மையாக முடியுமா? 

தாரா: உடலை அறையுடன் ஒப்பிடுவதை நல்ல உதாரணமாக நான் நினைக்கவில்லை. 

ஸ்ரீல பிரபுபாதர்: ‘நான் இந்த உடலல்ல’ என்பதை நீங்கள் அறியாததே அதற்கு காரணம். 

தாரா: நாம் அறையைவிட்டு வெளியே சென்று விட்டாலும் அறை அப்படியே இருக்கும். ஆனால் உடலை விட்டு வெளியேறிவிட்டால் உடல் இருப்பதில்லை. 

ஸ்ரீல பிரபுபாதர்: வீடு அழிந்து போய்விடுவதும் இறுதியாக நேரக்கூடிய ஒன்றே.

தாரா: நான் என்ன சொல்கிறேன் என்றால், உடலுக்கும் ஆத்மாவுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்க வேண்டும், ஒரு வகையான ஒற்றுமைகுறைந்தபட்சம்?, நாம் உயிருடன் இருக்கும் வரை.

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை; அஃது உண்மையான ஒற்றுமை அல்ல. அதில் வேற்றுமை உள்ளது. உதாரணமாக, நாம் தற்போது வசிக்கும் இந்த அறை நான் உயிரோடு இருக்கும்வரைதான் எனக்கு முக்கியமானதாக இருக்கும். உடலைவிட்டு ஆத்மா சென்றுவிட்டால், உடலானது அறையிலிருந்து வெளியே எறியப்படுகிறதுஅவ்வுடல்? அந்த உரிமையாளருக்கு மிகவும் பிரியமானதாக இருந்தபோதிலும்.

தாரா: நீங்கள் உடலிலிருந்து பிரிந்து செல்ல விரும்பாவிடில் என்னவாகும்?

ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பது கேள்வியல்ல. நீங்கள் நிச்சயம் பிரிந்தாக வேண்டும். நீங்கள் மரணமடைந்தவுடன் உங்களது உடலை உங்களது உறவினர்கள் வெளியே எறிந்துவிடுவார்கள்.

டர்க்ஹைம்: “நான் இந்த உடல், நான் ஓர் ஆத்மாவைப் பெற்றுள்ளேன்” என்று நினைப்பதைவிட, “நான் ஓர் ஆத்மா, நான் இந்த உடலைப் பெற்றுள்ளேன்” என்று நினைத்தல் வித்தியாசத்தை ஏற்படுத்தலாம்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். நீங்கள் இந்த உடல் என்றும் நீங்கள் ஓர் ஆத்மாவைப் பெற்றுள்ளதாகவும் நினைத்தால், அது தவறானது. அஃது உண்மையல்ல. நீங்களே ஆத்மா, நீங்கள் ஒரு தற்காலிகமான உடலால் மறைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஆத்மாவே முக்கியமான விஷயம், உடல் முக்கியமானதல்ல. உதாரணமாக, நீங்கள் ஒரு கோட்டை அணிந்திருக்கும்வரை அஃது உங்களுக்கு முக்கியமானது. ஆனால் அது கிழிந்துபோய் விட்டால், நீங்கள் அதனை எறிந்துவிட்டு மற்றொன்றை வாங்கிக்கொள்வீர்கள். உயிர்வாழியும் தொடர்ந்து இதையே அனுபவிக்கிறான். நீங்கள் தற்போதைய உடலைவிட்டுப் பிரிந்து மற்றொரு உடலை ஏற்கிறீர்கள். அதுவே மரணம். நீங்கள் முன்னதாக வசித்துவந்த உடல் முக்கியமற்றதாகி விடுகிறது, நீங்கள் இப்போது வாழும் உடல் விரைவில் முக்கியமற்றதாகி விடும். குறுகிய காலத்தில் மாறிவிடக்கூடிய உடலுக்கு மனிதர்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது பெரிய பிரச்சனையே.

“மனிதர்களாகிய நாம் பறவைகள் மற்றும் விலங்குகளின் மட்டத்தில் செயல்படாமல் தன்னை அறிவதற்கு தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். அதாதோ ப்ரஹ்ம-ஜிஜ்ஞாஸா, மனித வாழ்க்கை பூரண உண்மையைப் பற்றி சிந்திப்பதற்காகவே உள்ளது. மனித வாழ்வின் நோக்கம் அதுவே; விலங்குகளைப் போன்று உண்பதும் உறங்குவதும் அல்ல. பூரண உண்மையை அறிவதற்கான கூடுதல் அறிவை நாம் பெற்றுள்ளோம்.”
[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives