ஆன்மீக வாழ்வின் விஞ்ஞானம்

Must read

அக்டோபர் 10, 1975இல் தென்னாப்பிரிக்காவின் வெஸ்ட்வில் டர்பன் பல்கலைக்கழக தலைவரான டாக்டர். S.P. ஆலிவரிடம் ஸ்ரீல பிரபுபாதர், உணர்வுள்ள உயிர்வாழிக்கு மரணத்தின்போது என்ன நேரிடுகிறது என்றும், மறுபிறவியின் விஞ்ஞானத்தினைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

 

டாக்டர். ஆலிவர்: இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழும் நம்மிடையே உலகளாவிய அளவில் ஓர் ஆன்மீகத் தேடல் காணப்படுகிறது. மேற்கத்தியர்களான எங்களுக்கு பகவத் கீதையினைப் பற்றிய பரிச்சயம் கிடையாது. நீங்கள் உங்கள் உபன்யாசத்தில் கூறியபடி, ஆன்மீகத்தினை ஓர் விஞ்ஞான உண்மையாக எவ்வாறு அமைப்பது என்பதே நம்முடைய பிரச்சனை என்று கருதுகிறேன். நீங்கள் கூறியது சரியானதென்று நினைக்கிறேன். இஃது ஒரு விஞ்ஞானம் என்று நீங்கள் கூறியதை, குறைந்த மக்களே புரிந்து கொண்டிருப்பர் என தோன்றுகிறது.

ஸ்ரீல பிரபுபாதர்: பகவத் கீதை ஆன்மீக ஞானத்தினை விஞ்ஞானபூர்வமாக வழங்குவதிலிருந்து தொடங்குகிறது. எனவேதான், ஆத்மா ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலிற்குச் செல்வதுகுறித்த வினாவினை எழுப்பினேன். யாராலும் முறையாக விடையளிக்க இயலவில்லை. நாம் உடல்களை மாற்றிக் கொண்டுள்ளோம். எத்தனையோ வகையான உடல்கள் உள்ளன. மரணத்திற்கு பிறகு அதில் ஏதேனும் ஒன்றினுள் நாம் நுழைகிறோம். இதுவே வாழ்வின் உண்மையான பிரச்சனையாகும். ப்ரக்ருதே: க்ரியமாணானி குணை: கர்மாணி ஸர்வஷ:, இந்த உடல் ஓர் இயந்திரம். பகவான் கிருஷ்ணருடைய உத்தரவின் மூலம் ஜட இயற்கை நமக்கு பெளதிக உடலை வழங்குகிறது. இந்த உடல் ஓர் இயந்திரமாகும், ஒரு காரைப் போன்றது. பகவான் கிருஷ்ணரது ஆணைப்படி பெளதிக இயற்கை நமக்கு இந்த இயந்திரம் போன்ற உடலை வழங்கியுள்ளது. இந்த வாழ்வின் உண்மை நோக்கமானது, ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலிற்கும், அதிலிருந்து மற்றோர் உடலிற்கும் என தொடர்ந்து நடைபெறும் இந்த உடல் மாற்றத்தினை நிறுத்தி, நமது உண்மையான, ஆன்மீக நிலையினைப் புதுப்பிப்பதாகும். அதன் மூலம், நாம் நித்தியமான அறிவும் ஆனந்தமும் கொண்ட வாழ்வை வாழலாம். அதுவே வாழ்வின் இலக்காகும்.

டாக்டர். ஆலிவர்: உடல் மாற்றம் என்ற கருத்து கிறிஸ்துவத்தில் இல்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: மதம் என்ற கேள்விக்கே இடமில்லை. மதம் என்பது காலம் மற்றும் சூழ்நிலையினைப் பொறுத்த ஒருவிதமான நம்பிக்கையாகும். நாம் ஆத்மாக்கள் என்பதே உண்மை. ஜட இயற்கையின் விதிகளால் நாம் ஓர் உடலிலிருந்து மற்றொன்றிற்கு மாற்றப்படுகிறோம். சில நேரங்களில் நாம் மகிழ்ச்சியாக உள்ளோம், சில நேரங்களில் துயரங்களை அனுபவிக்கிறோம். சில சமயங்களில் ஸ்வர்கம் போன்ற மேலுலகங்களுக்கு ஏற்றம் பெறுகிறோம். சில நேரங்களில் கீழுலகில் வீழ்கிறோம். இதுபோன்ற உடல் மாற்றங்களை நிறுத்தி, நம் உண்மை உணர்வினைப் புதுப்பிப்பதே இந்த மனித வாழ்வின் நோக்கமாகும். நாம் இறைவனின் திருநாட்டினை மீண்டும் அடைந்து நித்தியமாக வாழ வேண்டும். இதுவே ஒட்டுமொத்த வேத இலக்கியங்களின் திட்டமாகும்.

நாம் இந்த வாழ்வில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று பகவத் கீதை சுருக்கமாகக் கூறுகிறது. எனவே, பகவத் கீதையின் போதனைகளின்படி ஆத்மாவின் உண்மை நிலையினை புரிந்துகொள்ள துவங்கலாம்.

நாம் யார் என்பதை முதலில் அறிய வேண்டும். நான் இந்த உடலா, அல்லது வேறு ஏதேனும் ஒன்றா? இந்த முதல் வினாவிற்கு நான் விடையளிக்க முயன்றபோது, கூட்டத்திலிருந்த சிலர் இதனை இந்து கலாச்சாரம் என நினைத்தனர். இஃது இந்து கலாச்சாரம் கிடையாது. இது விஞ்ஞானபூர்வமான கருத்தாகும். நீங்கள் சில காலம் குழந்தையாக இருக்கிறீர்கள், பின்னர் பாலகனாக மாறுகிறீர்கள், பின்னர் இளைஞனாகிறீர்கள், பின்னர் வயோதிகனாகிறீர்கள். இதுபோன்று நீங்கள் உடல்களை மாற்றிக் கொண்டே உள்ளீர்கள். இதுவே உண்மை. இதனை இந்து மதக் கருத்து என்று கூறக் கூடாது, இஃது அனைவருக்கும் பொருந்துவதாகும்.

தேஹினோ ’ஸ்மின் யதா தேஹே

 கௌமாரம் யௌவனம் ஜரா

ததா தேஹாந்தர-ப்ராப்திர்

 தீரஸ் தத்ர ந முஹ்யதி

[பக்தரிடம்] இந்த ஸ்லோகத்தின் பொருளைப் படியுங்கள்.

பக்தர்: [படிக்கிறார்] “தேகத்தை உடையவனின் உடல், சிறுவயது, இளமை, முதுமை என்று கடந்து செல்வதைப் போல, ஆத்மா, மரணத்தின்போது வேறு உடலுக்கு மாற்றம் பெறுகின்றது. நிதான புத்தியுடையவர் இதுபோன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை.” [பகவத் கீதை 2.13]

ஸ்ரீல பிரபுபாதர்: பகவத் கீதையில் அனைத்தும் தர்க்க ரீதியாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் விளக்கப்
பட்டுள்ளது. இஃது உணர்ச்சிபூர்வமான விளக்கமல்ல.

டாக்டர். ஆலிவர்: நவீன மனிதனை குறிப்பாக இதிலுள்ள தத்துவங்களுக்கு எந்தவோர் அங்கீகாரமும் வழங்காத கல்விமுறைகளால் பீடிக்கப்
பட்டுள்ள ஒருவரை இப்புத்தகத்தினுள் வழங்கப்பட்டுள்ள விவரங்களை ஆழமாகப் படிக்க வைப்பது எப்படி என்பதை பிரச்சனையாகக் காண்கிறேன். அவர்கள் இவற்றை கண்டும்காணாமல் வாழ்கின்றனர், அல்லது முற்றிலும் மறுக்கின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: அவர்கள் ஆத்மாவினை ஒப்புக்கொள்வ
தில்லையா?

டாக்டர். ஆலிவர்: அவர்கள் ஆத்மாவினை ஏற்கின்றனர் என்றுதான் நினைக்கிறேன். ஆனால், ஆத்மா என்றால் என்ன என்பதை ஆராயும் எண்ணமெல்லாம் அவர்களுக்கு இல்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: இதனை ஆய்வு செய்யாவிடில், அவர்களின் நிலை என்ன? முதலில் உயிருள்ள மற்றும் உயிரற்ற உடல்களுக்கான வேறுபாட்டினை அவர்கள் ஆய்ந்தறிய வேண்டும். ஓட்டுநர் இல்லாத காரைப் போன்று இந்த உடல் எப்பொழுதும் உயிரற்றதே. கார் என்பது வெறும் ஜடப் பொருட்களின் கலவையாகும். அதே போன்று, உடலினுள் ஆத்மா இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, இந்த உடல் வெறும் ஜடப் பொருட்களின் கலவையே.

டாக்டர். ஆலிவர்: உடலுக்கென்று பெரிய மதிப்பு ஏதும் கிடையாது, சுமார் 56 சென்ட் என்று நினைக்கிறேன்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஒருவனால் காரையும் அதன் ஓட்டுநரையும் வேறுபடுத்த முடியவில்லை என்றால், அவன் ஒரு குழந்தையே. கார் தானாக ஓடுவதாக குழந்தை நினைக்கிறது. ஆனால், அது முட்டாள்தனமானது. அதனை இயக்குபவர் ஒருவர் இருக்கிறார். அந்தப் பிள்ளை வளர்ந்து கல்வி கற்ற பின்னரும் அதனை அறியவில்லை என்றால், அந்தக் கல்வியின் பயன் என்ன?

டாக்டர். ஆலிவர்: மேற்கத்திய உலகில் கல்வியின் மொத்த வரையறையுமே ஆரம்ப, மேல்நிலை, மூன்றாம் நிலை கல்வி மட்டுமே. ஆத்மாவினைப் பற்றிய ஆழமான கல்விக்கு அங்கு இடமில்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: மாஸ்கோவில் ஒரு பேராசிரியரிடம் உரையாடினேன். உங்களுக்கு அவரைத் தெரிந்திருக்கலாம் என்று நினைக்கிறேன் அவரது பெயர் பேராசிரியர் கோடோவ்ஸ்கி. அவர் சோவியத் விஞ்ஞான அகாடமியில் கற்பிக்கிறார். அவரிடம் சுமார் ஒரு மணி நேரம் பேசினேன். அவர், ”இந்த உடல் அழிவுற்றதும், எல்லாம் முடிந்துவிடுகிறது,” என்று கூறினார். அவர் கூறியதைக் கேட்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் அறிஞர் என்று அறியப்படுபவர், இருப்பினும், அவருக்கு ஆத்மாவைப் பற்றி தெரியவில்லை.

டாக்டர். ஆலிவர்: எங்களுக்கு இந்திய நாட்டினைப் பற்றியும் அதன் மக்களைப் பற்றியும் விளக்கக்கூடிய படிப்பு உள்ளது. வியன்னாவைச் சார்ந்த அறிஞர் ஒருவர் அதனை போதிக்கிறார். ஆனால், என்ன மாதிரியான தத்துவங்களை எடுக்கிறார் என்று எனக்குத் தெரியாது. நாற்பது மாணவர்கள் பயிலுகின்றனர். பகவத் கீதையினை விரிவாகப் படிப்பதன் மூலம் தங்களது தத்துவங்கள் முழுவதையும் அதன் அடிப்படையில் கட்டமைக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில், பகவத் கீதை உண்மையுருவில் நூலை போதிப்பதற்கு ஒருவரை நியமிக்கலாமே? அஃது இன்றியமையாததாகும்.

டாக்டர். ஆலிவர்: எங்களது பல்கலைக்கழகம் இதனை ஆழமாகப் படிப்பதை கடமையாகக் கொண்டுள்ளது.

ஸ்ரீல பிரபுபாதர்: பகவத் கீதையினை விவரமாகப் படிப்பதன் மூலம், ஒருவர் ஆன்மீகக் கல்வியைத் துவங்கலாம்.

டாக்டர். ஆலிவர்: ஒருவருக்கு தேவையானது இதுதான். தென்னாப்பிரிக்காவில் உள்ள எங்களது இந்து சமுதாயத்திற்கு இந்து மதம் எதனால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றிய போதிய விவரம் இல்லை. குறிப்பாக இளைய சமுதாயம் முற்றிலும் வெறுமையில் வாழ்கின்றனர். இதனையே அவர்கள் தங்களைச் சுற்றி காண்பதால், பல்வேறு காரணங்களால் அவர்கள் மதங்களை ஏற்கவில்லை. அவர்கள் தங்களை கிறிஸ்துவ, இஸ்லாமிய அல்லது இந்து மதங்களோடு அடையாளப்படுத்த முடியாமல் வாழ்கின்றனர். பெரும்பாலும் அவர்கள் அறியாமையில் உள்ளனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: அவர்களுக்கு சரியான பாதை காண்பிக்கப்பட வேண்டும். இதுதான் உண்மையான அங்கீகரிப்பட்ட பாதையாகும்.

டாக்டர். ஆலிவர்: தென்னாப்பிரிக்காவிலுள்ள எங்களது இந்திய சமுதாயத்தில் அறிஞர்கள் அதிகமாக இல்லை. இந்திய மக்கள் அதிகளவில் இங்கு வந்தபோது, அவர்களில் பெரும்பான்மையோர் கரும்பு தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களே; சிலர் தையற்காரர்களாகவும் பொற்கொல்லர்களாகவும் இருந்தனர். கடந்த நூறு ஆண்டுகளாக இந்தியாவிற்குச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் போராட்டங்கள் நடைபெற்றன. இந்நாட்டில் வாழ்வதற்கு தனி இடம் வேண்டி போராட்டங்கள் நடைபெற்றன. அவர்களது நம்பிக்கைகளுக்கும் கோட்பாடுகளும் மதிப்பளிக்கப்பட வேண்டும். நான் அவர்களிடம், “நீங்கள் உங்களது பாரம்பரியத்துடன் இந்த நாட்டில் இருப்பதற்கு சலுகை அளிக்கிறோம். எனவே, நீங்கள் அவற்றினை வெட்டி எறிந்துவிட்டு வெற்றிடமாய் இருக்காதீர்கள்,” என்று கூறியுள்ளேன். ஆனால், அதற்கு யாரிடம் செல்வது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. எனவே, அவர்களும் நானும் மற்றவர்களும் எப்படி இந்த உத்வேகத்தினை எங்கள் இதயங்களுக்கு கொடுப்பது குறித்தும், மேலும், இதனை எங்களது தினசரி வாழ்வில் பயன்படுத்துவது குறித்தும் அறிந்துகொள்ள விரும்புகிறோம்.

(ஸ்ரீல பிரபுபாதரின் பதில் அடுத்த இதழில் தொடரும்)

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives