ஹிரண்யகசிபு உலகை அச்சுறுத்துதல்

Must read

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்திரஸ மூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: ஏழாம் ஸ்கந்தம், அத்தியாயம் 4

சென்ற இதழில், ஹிரண்யகசிபுவின் கடும் தவத்தால் மனமிரங்கிய பிரம்மதேவரிடம் அவன் சாகாவரம் பெற முயன்றதை அறிந்தோம். பிரம்மதேவர் தந்த வரத்தையும், அதன்பின் அவனது நடவடிக்கைகள் மற்றும் அவனது மகன் பிரகலாதரின் அசாதாரண பக்தி ஆகியவற்றைப் பற்றியும் இந்த இதழில் காணலாம்.

பிரம்மாவின் வரம்

ஹிரண்யகசிபுவின் கடும் தவங்களால் மிகவும் திருப்தியடைந்த பிரம்மதேவர், அவன் கேட்ட வரங்களை அடைவது மிகவும் அரிது என்றாலும் யாருக்கும் கிடைக்காத அவ்வரங்களை அவனுக்கு அளிப்பதாகக் கூறி ஆசி வழங்கினார். அதனைத் தொடர்ந்து, ஹிரண்யகசிபு மற்றும் சிறந்த முனிவர்களாலும் சாதுக்களாலும் போற்றப்பட்ட பிரம்மா, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

ஸ்வர்கத்தை வெல்லுதல்

ஹிரண்யகசிபு, பிரம்மதேவரின் ஆசியால் புத்துணர்ச்சிமிக்க வலிமையான உடலைப் பெற்றான், சாத்தியமான எல்லா ஐஸ்வர்யங்களையும் பெற்றான். இருப்பினும், அவன் அசுர குணம் உள்ளவனாதலால், பரம புருஷரிடம் தொடர்ந்து பகைமை கொண்டவனாகவே இருந்தான். அவன் மேல், மத்திய, கீழ் ஆகிய மூவுலகங்களையும் வென்று, எல்லா கிரகங்களின் அதிபதிகளையும் தன் வசமாக்கி அவர்களது சக்திகளையும் செல்வாக்குகளையும் பறித்துக் கொண்டான்.

ஹிரண்யகசிபு தேவர்களால் அனுபவிக்கப்படும் நந்தன தோட்டத்துடன் கூடிய ஸ்வர்கத்தில், இந்திரனின் அரண்மனையில் வாழத் தொடங்கினான். தேவேந்திரனின் அந்த மாளிகை பவளம், மரகதம், பளிங்கு, வைடூரியம், சிவப்பு கற்கள் முதலிய விலைமதிப்பற்ற இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. பால் நுரையைப் போன்ற வெண்மையான பட்டுமஞ்சம் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டு எழிலுடன் விளங்கியது. தேவர்களை கடுமையாக தண்டித்தபடி அனைவரையும் தன் கொடுங்கோல் ஆட்சிக்கு உட்படுத்தி அவன் அந்த அழகிய மாளிகையில் வாழ்ந்து வந்தான்.

மும்மூர்த்திகளான பிரம்மதேவர், பகவான் விஷ்ணு, சிவபெருமான் ஆகியோரைத் தவிர மற்றனைவரும் அவனை திருப்திப்படுத்தும் பொருட்டு பல்வேறு காணிக்கைகளை தாமே கொண்டுவந்து சமர்ப்பித்து நேரடியாக அவனை வழிபட்டனர். இந்திரனின் அரியாசனத்தில் அமர்ந்து மற்றெல்லா கிரகவாசிகளையும் அடக்கி ஆண்ட ஹிரண்யகசிபுவை விஸ்வாவசு, தும்புரு ஆகிய இரு கந்தர்வர்கள், நாரதர், வித்யாதரர், அப்ஸரஸ் மற்றும் பல முனிவர்கள் மீண்டும்மீண்டும் அவனை துதித்துப் போற்றினார்கள்.

கொடுங்கோல் ஆட்சி

வர்ணாஷ்ரம கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றியவர்கள் ஹிரண்யகசிபுவை யாகங்களைக் கொண்டு வழிபட்டனர். ஆனால் அவனோ தேவர்களுக்கு உரிய அவிர்பாகங்களைத் தராமல் தானே அனைத்தையும் ஏற்றுக் கொண்டான்.

பூமி போதுமான தானியங்களை வழங்கியது, பசுக்களோ ஏராளமான பாலை அளித்தன, ஆகாயமோ பலவகை அற்புத விஷயங்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. சமுத்திரங்கள் பலவகை மணிகளையும் இரத்தினங்களையும் முத்துக்களையும் ஹிரண்யகசிபுவின் உபயோகத்திற்காக அளித்தன.

இந்திரன், வாயு, அக்னி ஆகியோரின் கடமைகளான நீரூற்றுதல், உலர்த்துதல், எரித்தல் ஆகியவற்றை அவர்களின் உதவியின்றி ஹிரண்யகசிபு தனியாகவே நடத்தினான்.

இவ்வாறு ஹிரண்யகசிபு எல்லாத் துறைகளையும் ஆளும் சக்தியைப் பெற்றிருந்தபோதிலும் இயன்றளவுக்கு புலனின்பங்களை அனுபவித்த போதிலும், அவன் திருப்தியின்றியே இருந்தான். ஏனெனில், அவனால் தன் புலன்களை அடக்க முடியவில்லை, அவற்றிற்கு அவன் அடிமையாகவே விளங்கினான்.

தன் ஐஸ்வர்யங்களில் மிகவும் செருக்கு கொண்டவனாகவும் அதிகாரபூர்வ சாஸ்திரங்களை மதிக்காதவனாகவும் நீண்ட காலத்தைக் கழித்து வந்த ஹிரண்யகசிபு, பிராமண சிரேஷ்டர்களான நான்கு குமாரர்களின் சாபத்திற்கு ஆளானான். லோக பாலகர்கள் உட்பட அனைவரும் அவனது கொடுங்கோல் ஆட்சிக்கு உள்ளாகி கடும் துன்பத்திற்கும் பயத்திற்கும் ஆளாயினர்.

கலக்கமடைந்த அவர்கள் வேறு புகலிடம் இல்லாமல் பரம புருஷ பகவான் விஷ்ணுவை சரணடைந்தனர். அவர்கள் தங்கள் மனதை முற்றிலும் அடக்கி, காற்றை மட்டுமே சுவாசித்து ரிஷிகேஷரை வழிபடத் துவங்கினர்.

பகவானின் உறுதிமொழி

தேவர்கள் முழு சரணாகதியுடன் பகவானை துதித்தபோது, பௌதிகக் கண்களுக்குப் புலப்படாத உன்னதமான ஓர் அசரீரி அவர்களுக்குக் கேட்டது. மேகத்தின் ஒலி போன்று கம்பீரமான அந்தக் குரல் அவர்களின் பயத்தைப் போக்கி உற்சாகம் தருவதாக இருந்தது. “கல்விமான்களில் சிறந்தவர்களே, அச்சம் வேண்டாம். உங்களுக்கு நலம் உண்டாகட்டும். என்னைப் பற்றிக் கேட்டும் பாடியும் என்னிடம் பிரார்த்தனை செய்தும் என்னுடைய பக்தர்களாகுங்கள். இதுவே எல்லாத் துன்பங்களையும் போக்கவல்லதும், அனைத்து நன்மைகளையும் தரவல்லதுமாகும். விரைவில், நான் ஹிரண்யகசிபுவின் அக்கிரமங்களை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவேன். தயவுசெய்து பொறுமையுடன் காத்திருங்கள்.

“வேதங்கள், பசுக்கள், பிராமணர்கள், வைஷ்ணவர்கள், சமயக் கோட்பாடுகள், இறுதியாக பரம புருஷராகிய என்னிடமும் துவேஷத்தை வளர்த்துக் கொண்டுள்ள அவனும் அவனது நாகரிகமும் விரைவில் நாசமடையும். ஹிரண்யகசிபு தன் சொந்த மகனும் சிறந்த பக்தனுமான பிரகலாதரை பரிகாசம் செய்து துன்புறுத்தும்பொழுது உடனடியாக நான் அவனைக் கொன்று விடுவேன்.”

இவ்வாறு பகவான் உறுதிமொழி அளித்ததும் தேவர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் திரும்பிச் சென்றனர்.

ஹிரண்யகசிபு கேட்ட வரங்களை அளிப்பதாகக் கூறி பிரம்மா ஆசி வழங்குதல்.

பிரகலாதரின் நற்குணங்கள்

ஹிரண்யகசிபுவுக்கு சிறந்த தகுதிகளைக் கொண்ட அற்புத புதல்வர்கள் நால்வர் இருந்தனர். அவர்களுள் பிரகலாதர் பகவானின் தூய பக்தர் என்பதால், உன்னத குணங்களின் இருப்பிடமாக விளங்கினார். அவர் சீரிய ஒழுக்கமும் பண்பாடும் தகுதியும் உடையவராக இருந்தார். புலன்களையும் மனதையும் வென்றவராக, அனைத்து ஜீவராசிகளிடமும் அன்புடையவராகவும் நண்பராகவும் இருந்தார். எளிய தொண்டனாக, ஏழைகளிடம் ஒரு தந்தையாக, சமமானவர்களிடம் சகோதர அன்பு உடையவராக நடந்து கொண்டார். குருமார்களையும் மூத்த ஆன்மீக சகோதரர்களையும் பரம புருஷருக்கு சமமானவர்களாக பாவித்தார்.

அவர் நல்ல கல்வி, செல்வம், அழகு, உயர்பிறப்பு முதலியவற்றைப் பெற்றிருந்தும், அவற்றால் எழக்கூடிய இயற்கைக்கு விரோதமான செருக்கிலிருந்து முற்றிலும் விடுபட்டவராக இருந்தார். ஆபத்தில் கலங்காத சித்தமுடையவராகவும், பௌதிக ஆசைகள் சிறிதும் இல்லாதவராகவும் இருந்தார். அவர் மாறாத புத்தியையும் உறுதியையும் பெற்றிருந்ததால், எல்லா காம இச்சைகளையும் அவரால் அடக்க முடிந்தது.

பிரகலாத மஹாராஜரின் நற்குணங்கள் கற்றறிந்த சாதுக்களாலும் வைஷ்ணவர்
களாலும் இன்றும் புகழப்படுகின்றன. அவர் அசுர குலத்தில் பிறந்திருந்தபோதிலும், பிறப்பு ஒரு பொருட்டல்ல என்பதால், தேவர்களும்கூட பிரகலாத மஹாராஜரை ஒரு சிறந்த பக்தருக்கு உதாரணமாக எடுத்துக் கூறுகின்றனர். அவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மீது தூய பக்தியும் உறுதியான நம்பிக்கையும் இயற்கையான பற்றுதலும் உடையவராக இருந்தார்.

பிரகலாதரின் பரவச நிலை

பிரகலாதர் குழந்தைத்தனமான விளையாட்டுப் பொருட்களில் விருப்பமற்றவராக ஆழ்ந்த மௌனத்தில் லயித்தவராக இருந்தார். அவரது மனம் சதா கிருஷ்ண உணர்வில் ஆழ்ந்திருந்ததால் புலனுகர்வுச் செயல்களில் முழுமையாக ஆழ்ந்துள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதே அவருக்குப் புரியாததாக இருந்தது.

அவர் எப்போதும் கிருஷ்ணரைப் பற்றிய சிந்தனையிலேயே மூழ்கியிருந்தார். எப்பொழுதும் பகவானால் ஆரத்தழுவப்பட்டிருந்த அவர் அமர்தல், நடத்தல், சாப்பிடுதல், படுத்தல், பேசுதல் முதலான உடல்தேவைகளை எல்லாம் எப்படி தானாகவே நிறைவேற்றப்பட்டன என்பதை உணரவில்லை.

கிருஷ்ண உணர்வில் ஏற்பட்டிருந்த முன்னேற்றத்தால், அவர் சில சமயங்களில் அழுவார், சில சமயங்களில் சிரிப்பார், சில சமயம் ஆனந்தத்தை வெளிப்படுத்துவார், மற்றும் சில சமயங்களில் உரக்கப் பாடுவார். சில சமயம் பரம புருஷரைக் கண்டதும் பரவசத்துடன் ஆடத் துவங்குவார். பகவானின் தாமரை கரங்களின் ஸ்பரிசத்தை உணர்ந்தவராய், ஆனந்த பரவசமடைந்து, மெய்சிலிர்க்க, அவரது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோட, அசைவின்றி மெளனமாக இருந்தார்.

பௌதிகமான எதனோடும் தொடர்பின்றி, பக்குவமான தூய பக்தரோடு கொண்டிருந்த சகவாசத்தின் காரணத்தால் இடையறாத பகவத் தொண்டில் ஈடுபட்டிருந்தார். பூரண பரவச நிலையிலிருந்த அவரது அம்சங்களைக் கண்டு ஆன்மீக முன்னேற்றம் அடையாதவர்கள் தூய்மையடைந்தனர்.

ஹிரண்யகசிபுவின் நான்கு புதல்வர்களில் ஒருவரும் பகவானின் தூய பக்தருமாக விளங்கிய பிரகலாதர்.

தந்தையின் கொடுமை

இத்தகைய மஹா பாக்கியசாலியான பிரகலாதர் சொந்த மகனாக இருந்தபோதிலும் அசுரனான ஹிரண்யகசிபு அவரை சித்ரவதை செய்தான்.

நாரத முனிவர் இந்த விவரங்களை எடுத்துரைத்தபோது, யுதிஷ்டிரர் பெரும் வியப்புடன் பின்வருமாறு வினவினார்: “ஒரு தாயும் தந்தையும் தம் குழந்தைகளிடம் எப்போதும் அன்பு கொண்டுள்ளனர். குழந்தைகளின் நன்மைக்காகவே அவர்களைக் கண்டிக்கின்றனர். ஆனால், பிரகலாதர் ஒரு சிறப்புடைய மகனாக இருந்தும், தந்தையான ஹிரண்யகசிபு ஏன் அவரை தண்டித்தான்?

“கீழ்ப்படியும் குணமும், நன்னடத்தையும், தந்தையிடம் மரியாதையும் உள்ள சிறப்புமிக்க மகனிடம் ஒரு தந்தை இவ்வளவு கொடூரமாக நடந்துகொள்வது எவ்வாறு சாத்தியம்? தன் மகனைக் கொல்லவும் துணிந்து சித்ரவதை செய்ததை நான் இதுவரை வேறு எங்கும் கேள்விப்பட்டதே இல்லை. தயவுசெய்து என் சந்தேகத்தைப் போக்கி அருளுங்கள்.”

நாரத முனிவரின் பதிலை அடுத்த இதழில் காண்போம்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives