பகவான் கிருஷ்ணர் துவாரகையினுள் நுழைதல்

Must read

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரப்பூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.

 

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: பதினொன்றாம் அத்தியாயம்

சென்ற இதழில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவர்களால் அன்புடன் வழியனுப்பப்பட்டதைக் கண்டோம். இந்த இதழில் அவரை துவாரகாவாசிகள் வரவேற்பதைக் காணலாம்.

கிருஷ்ணர் துவாரகைக்குள் பிரவேசித்தல்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையின் எல்லையை அடைந்ததும் தம் வருகையை அறிவிக்கும் விதமாக பாஞ்சஜன்ய சங்கை முழங்கினார். அவரது திவ்ய உதடுகள் பட்டதும் தூய்மையான அந்த வெண்சங்கின் ஆன்மீகத் தன்மை வெளிப்பட, அது சிவந்து காணப்பட்டது; செந்தாமரை தண்டுக்கு இடையில் புகுந்து விளையாடும் வெண்மையான அன்னப் பறவையைப் போல காட்சியளித்தது.

 

கிருஷ்ணரின் நீண்ட பிரிவினால் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருந்த துவாரகாவாசிகள், பயத்தையே பயமுறுத்தும் பகவானின் சங்கநாதத்தைக் கேட்டதும், அவரது தரிசனத்தைப் பெற விரைந்து வந்தனர். பகவானைக் கண்டதும் பல்வேறு அன்பளிப்புகளை அவருக்கு சமர்ப்பித்து பரவச மொழியில் இனிமையாக அவரை வரவேற்கத் தொடங்கினர்.

பாஞ்சஜன்ய சங்கின் முழக்கத்துடன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகைக்குள் நுழைதல்.

பிரஜைகளின் பிரார்த்தனை

துவாரகாவாசிகள் கிருஷ்ணரிடம் பின்வருமாறு பிரார்த்தனை செய்தனர்: “எம்பெருமானே, தாங்கள் பிரம்ம, ஸனத் குமாரர்கள், இந்திரன் போன்ற எல்லா தேவர்களாலும் வழிபடப்படுகிறீர்கள். மிகவுயர்ந்த நன்மை தங்களிடமிருந்து மட்டுமே அடையப்படுகிறது. அனைவரையும் ஆட்டிப் படைக்கும் காலம் தங்களிடம் அடங்கி நிற்கிறது. பிரபஞ்சத்தைப் படைத்தவர் தாங்களே. எங்களது தாய், தந்தை, குரு, பகவான், மற்றும் அனைத்தும் தாங்களே. எங்களின் வெற்றி என்றுமே தங்களைச் சார்ந்துள்ளது, நாங்கள் என்றும் தங்களின் கருணை மழையை எதிர்பார்த்து நிற்கிறோம்.

 

“ஸ்வர்கலோகவாசிகளுக்கும் அரிதாகவே கிடைக்கும் தங்களின் தரிசனம் எங்களுக்கு எப்போதும் கிடைப்பது எங்களின் பெரும் பாக்கியம். தங்களது நொடி நேரப் பிரிவுகூட எங்களுக்கு கோடிக்கணக்கான ஆண்டுகள் பிரிந்ததுபோல வேதனையைத் தருகிறது. தங்களைக் காணாமல் எங்களால் எவ்வாறு உயிர்வாழ முடியும்?”

அவர்களின் பிரார்த்தனைகளைக் கேட்ட பகவான், தமது திவ்யமான பார்வையை அவர்கள்மீது செலுத்தி வரவேற்பை ஏற்றவாறு துவாரகைக்குள் பிரவேசித்தார்.

 

பாசமிகு துவாரகாவாசிகள்

பூமிக்குக் கீழ் உள்ள நாகலோகம் ஒப்பற்ற நாகங்களால் பாதுகாக்கப்படுவதைப் போலவே, கடலுக்குள் இருந்த துவாரகை நகரம் விருஷ்ணி வம்சத்தினரால் பாதுகாக்கப்பட்டது. துவாரகை முழுவதும் மனதைக் கவரக்கூடிய பழங்கள் நிறைந்த மரங்கள், பழங்கள் நிறைந்த செடிகள், நீர்த்தேக்கங்கள் என மிகவும் ரம்மியமாகக் காணப்பட்டது, எல்லா பருவ காலங்களிலும் துவாரகை செழிப்புடன் திகழ்ந்தது.

பகவானை வரவேற்பதற்காக நகரம் முழுவதும் வாழை மரங்கள், மாவிலைத் தோரணங்கள் என விழாக்கால அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. பொதுமக்கள் கூடுமிடங்கள் அனைத்தும் நன்கு சுத்தம் செய்யப்பட்டு வாசனை திரவியங்கள் தெளித்து நனைக்கப்பட்டிருந்தன. தயிர், முழு தானியங்கள், முழுமையான பழங்கள், கரும்பு, பூரண கும்பங்கள், வழிபாட்டுப் பொருட்கள் போன்றவை ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் வைக்கப்பட்டிருந்தன.

 

தங்களுக்கு மிகவும் பிரியமான கிருஷ்ணர் துவாரகாபுரியை நோக்கி வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டதும் வஸுதேவர், அக்ரூரர், உக்ரசேனர், பலராமர், பிரத்யும்னர், சாருதேஷ்னர், ஸாம்பன் உட்பட அனைவரும் பேரானந்தம் அடைந்து, உணவு, உறக்கம், இருக்கை போன்றவற்றை மறந்தனர். மலர்களை ஏந்திய பிராமணர்களும் யானைகளும் முன்செல்ல, அவர்கள் இரதங்களில் பகவானை நோக்கி விரைந்தனர். சங்குகள், ஊதுகொம்புகள் முழங்க வேதமந்திரங்கள் ஒலிக்க அவர்கள் மிகுந்த பாசத்துடன் பகவானுக்கு தங்களது மரியாதையைச் செலுத்தினர்.

 

எண்ணற்ற நாடக ஆசிரியர்கள், கலைஞர்கள், நாட்டியம் ஆடுபவர்கள், பாடகர்கள், கற்றறிந்த பேச்சாளர்கள் என அனைவரும் தத்தமது திறமைக்கேற்ப பகவானின் திருவிளையாடல்களை போற்றிப் புகழ்ந்த வண்ணம் தொடர்ந்து சென்றனர்.

 

ஸர்வ வல்லமையுள்ள பகவான், தாழ்ந்த அந்தஸ்தில் இருந்தவர்கள் உட்பட அனைவரிடமும் அவரவர் நிலைக்கேற்ப நடந்து கொண்டார்: சிலரிடம் சிரம் தாழ்த்தினார், சிலரைத் தழுவிக் கொண்டார், சிலரிடம் கைகுலுக்கினார், சிலரைப் பார்த்து புன்னகை செய்தார், சிலருக்கு உறுதிமொழிகளை வழங்கினார், மற்றும் சிலரை ஆசிர்வதித்தார்.

பெற்றோருடன் சந்திப்பு

வயது முதிர்ந்த உறவினர்களும் பிராமணர்களும் உடன்வர பகவான் பொதுச் சாலைகளைக் கடந்து சென்றபொழுது, அதனை மிகச்சிறந்த விழாவாகக் கருதிய பெண்கள் தங்களது மாளிகைகளின் மேல்மாடங்களுக்குச் சென்று பகவானை தரிசிக்க முனைந்தனர். அழகு களஞ்சியமான குறையற்ற பகவானை மீண்டும்மீண்டும் தரிசிப்பதில் துவாரகாவாசிகள் ஒருபோதும் சலிப்பதேயில்லை.

 

பகவானின் மார்பு ஸ்ரீதேவியின் இருப்பிடமாகும்; நிலவைப் போன்ற அவரது முகம் அழகுப் பொருட்களை எல்லாம் பருகிவிட விரும்பும் கண்களுக்கு அருந்தும் பாத்திரமாகும்; அவரது கரங்கள் பிரபஞ்சத்தைப் பரிபாலனம் செய்யும் தேவர் களுக்கு இளைப்பாறும் இடங்களாகும்; மேலும், அவரது தாமரைப் பாதங்கள் அவரைத் தவிர வேறு யாரையும் ஒருபோதும் பேசாத, பாடாத, மறக்காத, புறந்தொழாத தூய பக்தர்களின் புகலிடமாகும்.

 

ஸ்ரீ கிருஷ்ணர், துவாரகையின் பொதுச் சாலையில் சென்றபொழுது, வெண்குடை சூரியனிலிருந்து அவரைப் பாதுகாத்தது, மயிலிறகு விசிறிகள் அரைவட்டமாகச் சுழல, சாலை முழுவதும் மலர்மாரி பொழிய பகவான் தொடர்ந்து சென்றார். மஞ்சள்நிற ஆடையில் மலர்மாலைகளைச் சூடிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், இருண்டமேகம் ஒன்றை சூரியன், சந்திரன், மின்னல், வானவில் ஆகியவை ஒரே நேரத்தில் சூழ்ந்து கொண்டிருப்பதைப் போல் காணப்பட்டார்.

 

தம் தந்தையின் அரண்மனைக்குள் புகுந்ததும் தேவகியை தலைமையாகக் கொண்ட தாய்மார்களால் அவர் தழுவிக் கொள்ளப்பட்டார். பகவானும் தமது தலையை அவர்களின் பாதங்களில் வைத்து அவர்களை வணங்கினார். அவரை மடிகளில் அமர்த்திக் கொண்ட தாய்மார்களின் தூய அன்பினால் மார்பிலிருந்து பால் சுரந்தது, ஆனந்த பரவசத்தால் அவர்கள் சிந்திய கண்ணீர் அவரை நனைத்தது.

தம் அரண்மனைகளில் கிருஷ்ணர்

அதன்பிறகு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் முற்றிலும் பூரணமான தமது அரண்மனைக்குள் புகுந்தார். அவரது இராணிகள் நீண்ட நாள் பிரிவிற்குப் பிறகு கணவரைக் கண்ட மகிழ்ச்சியில் தத்தமது ஆசனங்களிலிருந்தும் தியானத்திலிருந்தும் எழுந்து சமூக வழக்கப்படி கூச்சத்துடன் முகங்களை மூடிக்கொண்டு நாணத்துடன் அவரைப் பார்த்தனர்.

 

தீவிர பரவசத்தால் வெட்கப்பட்ட இராணிகள் முதலில் பகவானை அவர்களுடைய இதயங்களால் தழுவிக் கொண்டனர், பிறகு பார்வையால் தழுவினர். அதன் பின் தங்களது மகன்களை அனுப்பி அவரைத் தழுவச் செய்தனர். எனினும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயன்ற அவர்களின் கண்களில் கண்ணீர் பெருகியது.

 

எளிய மனம் கொண்ட இப்பெண்கள் முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை தம் அன்புக் கணவராகவே எண்ணினர். அவர் அவர்களை விட்டு நீங்குவதில்லை என்பதால், தங்களால் ஆட்கொள்ளப்பட்டவராகவே அவரைக் கருதினர். உண்மையில் அவரது புகழின் எல்லையை அவர்கள் அறியாதவர்களாகவே இருந்தனர். அவர்களது அழகிய புன்னகையும் மாசற்ற பார்வைகளும் மன்மதனையும் தீரர்களையும்கூட வெற்றிக் கொள்ளத்தக்கவையாக இருந்தன; ஆயினும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பற்றற்றவர் என்பதால், அவரது திவ்யமான புலன்களை அவை சிறிதும் பாதிக்கவில்லை. இதுவே பகவானின் தெய்வீகத் தன்மையாகும். ஜட இயற்கையின் குணங்களுடன் தொடர்பு கொண்டிருந்தாலும், அவற்றால் அவர் ஒருபோதும் பாதிக்கப்படுவதே இல்லை. அதுபோலவே அவரிடம் அடைக்கலம் கொண்டுள்ள பக்தர்களும் ஜட இயற்கைக் குணங்களால் தூண்டப்படுவதில்லை.

 

திரு. வனமாலி கோபால் தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

 

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives