பேராசை பெரு இலாபம்

Must read

—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)

ஆன்மீகத்திற்குப் பெரும் தடையாக இருப்பது “ஆசை.” அதிலும் “பேராசை” என்பது பெளதிகத்தில் இருப்பவர்களுக்குக் கூட தீமை தருவதாக இருப்பதால், “பேராசை பெரு நஷ்டம்” என்னும் கூற்று வழக்கத்தில் உள்ளது. அவ்வாறு இருக்கையில், பேராசை எவ்வாறு பெரு இலாபமாக இருக்க முடியும்?
இந்த உலகம் நம்முடைய உண்மையான இல்லமாகிய வைகுண்டத்தின் பிரதிபிம்பமாகும். அதாவது இங்கு நாம் காண்பவை அனைத்தும் வைகுண்டத்தில் அதன் உண்மையான உருவில் களங்கமின்றி தூய்மையானதாக இருக்கின்றன. பிரதிபிம்பத்தின் காரணத்தினால்தான், இவ்வுலகில் நாம் பல்வேறு தீய குணங்களைக் காண்கிறோம். ஆன்மீக உலகில் எந்த குணமும் தீய குணம் அன்று.
காமம், கோபம், பேராசை முதலிய தீய குணங்களை அவற்றின் உண்மையான நிலையில் (அதாவது கிருஷ்ணருக்காக) பயன்படுத்தினால், அவை நற்குணங்கள் ஆகின்றன. கிருஷ்ணர் சூரியனைப் போன்றவராக இருப்பதால், அவரை அணுகும்போது, நம்மிடையே இருக்கும் எல்லா களங்கங்களையும் அகற்றிவிட்டு நல்லவற்றை மட்டும் அவர் கிரகித்துக்கொள்கிறார்.
இராமருக்காக கோபத்தை வெளிப்படுத்திய ஹனுமானை இங்கே எடுத்துக்காட்டாகக் கூறலாம். மேலோட்டமாகப் பார்த்தால், கோபத்தினால் இலங்கையை எரித்த ஹனுமானின் செயல் தீய குணமாக தோன்றலாம். ஆயினும், அங்கே “இராமருக்காக” என்ற எண்ணம் மட்டுமே இருந்த காரணத்தினால், ஹனுமானின் கோபம் புகழத்தக்கதாகிறது.
அதுபோலவே, போராசை என்னும் தீய குணத்தை எப்போது நாம் கிருஷ்ணரை நோக்கி முழுமையாகத் திருப்புகிறோமோ, அப்போது அந்த பேராசையும் நற்குணமாகிவிடும். ஸ்ரீல ரூப கோஸ்வாமி அறிவுறுத்துகிறார், “கிருஷ்ணரின் மீதான தூய அன்பு எளிதில் அடையப்படாதது, கோடிக்கணக்கான பிறவிகளில் நிறைய புண்ணியத்தைச் செய்தாலும் அஃது அடைய முடியாதது. ஆகவே, அஃது எங்காவது எப்போதாவது கிடைக்குமெனில், அதனை உடனடியாகப் பற்றிக்கொள்ள வேண்டும்.”
அந்தத் தூய அன்பினை அவ்வாறு பற்றிக்கொள்வதற்கு நாம் ஒரு விலை கொடுத்தாக வேண்டும். என்ன விலை? இலட்சமா? கோடியா? இல்லை, இலட்சமும் இல்லை, கோடியும் இல்லை. அந்த அன்பினை அடைய வேண்டும் என்னும் பேராசை மட்டுமே அதற்கான விலை. அந்தப் பேராசை மட்டும் இருந்தால் போதும்.
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவதை “பேராசை” என்று கூறுகிறோம். அதுபோலவே, நம்மைப் போன்ற மோசமான கீழ்நிலை ஜீவன்கள் கிருஷ்ணருக்கான அன்பிற்கு ஆசைப்படுவது நிச்சயம் ஒரு மிகப்பெரிய பேராசையே. ஆயினும், இது தீய குணமன்று, நம்மிடையே இருக்க வேண்டிய நல்ல குணமாகும். இந்தப் பேராசை எந்த அளவிற்கு அதிகமாக உள்ளதோ, அந்த அளவிற்கு நாம் கிருஷ்ணரை விரைவாக அடைவோம். ஆகவே, “பேராசை பெரு இலாபம்!”

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives