வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.
தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த இதழில்: ஆறாம் ஸ்கந்தம், அத்தியாயம் 11–12
சென்ற இதழில் விருத்ராசுரன் தோற்றத்தைப் பற்றியும் ததீசி முனிவரின் தியாகத்தைப் பற்றியும் பார்த்தோம். விருத்ராசுரனின் குணநலன்கள் மற்றும் புகழ் மிக்க வீரமரணம் பற்றி இவ்விதழில் காணலாம்.
தேவர்களை நடுங்க வைத்தல்
விருத்ராசுரன் தமது உபசேனாதிபதிகளுக்கு யுத்த தர்மத்தை உபதேசித்தாலும் அவர்கள் அதை ஏற்க மறுத்து மிகுந்த அச்சத்திற்குள்ளாயினர். இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி தேவர்கள் அசுர சேனைகளைப் பின்புறமாகத் தாக்கி அவர்களை இங்குமங்கும் சிதறியோடச் செய்தனர். அசுரர்களின் பரிதாபமான நிலையைக் கண்ட விருத்ராசுரன் சினம் கொண்டு, தேவர்களைப் பார்த்து பின்வருமாறு பேசினார்:
“தேவர்களே! பயந்து ஓடும் கோழை எதிரிகளைப் பின்புறமிருந்து தாக்குவதால் என்ன பயன்? இகழ்ச்சிக்குரியதும் ஸ்வர்கத்திற்கு ஏற்றம் தராததுமான இதுபோன்ற கீழ்செயல்களை நல்ல வீரர்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.
அற்ப தேவர்களே! உங்கள் நெஞ்சில் துணிவிருந்தால், உங்கள் பலத்தில் நம்பிக்கையிருந்தால், நொடிப் பொழுதேனும் என் முன் வந்து நில்லுங்கள்.”
இவ்வாறு, பேசிய விருத்ராசுரன் கோபத்துடன் சிங்கம்போல் கர்ஜித்தார். அதைக் கேட்ட தேவர்கள் பயத்தில் மூர்ச்சையுற்று விழுந்தனர். விருத்ராசுரன் தமது திரிசூலத்தைக் கையிலேந்தி, மத யானையைப் போல நடந்தபோது, அவர் காலில் மிதிபட்ட தேவர்கள் மூங்கில் கழிகளைப் போல நசுங்கினர்.
ஐராவதத்தைக் காயப்படுத்துதல்
விருத்ராசுரனின் போக்கைக் கண்ட இந்திரன் தமது சக்தி வாய்ந்த கதையை அவர்மீது வீசினார். அதை அலட்சியமாக இடது கையால் பிடித்த விருத்ராசுரன் அக்கதையால் இந்திரனின் யானையான ஐராவதத்தின் தலையில் தாக்கினார். இதனால் இடிவிழுந்த மலைபோல் மிகுந்த வேதனையுடன் இரத்தம் கக்கியபடி, 14 கஜ தூரம் பின்னோக்கி தள்ளப்பட்ட ஐராவதம் இந்திரனோடு தரையில் விழுந்தது. தர்மத்தை அனுஷ்டித்த விருத்ராசுரன் இந்திரனை மீண்டும் தாக்காமல் விட்டார்.
இந்திரனை ஊக்குவித்தல்
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட இந்திரன் அமிர்தத்தை உண்டாக்கும் தன் கையால் ஐராவதத்தின் காயத்தை ஆற்றி வேதனையைப் போக்கினார். பின் செய்வதறியாது நின்ற இந்திரனின் முன்பு தமது சகோதரரான விஸ்வரூபரைக் கொடூரமாகக் கொன்றதை நினைவுகூர்ந்த விருத்ராசுரன் ஏளனமாகச் சிரித்தபடி சினத்துடன் பேசத் தொடங்கினார்.
“தன்னுணர்வு பெற்ற, பாவமற்ற தகுதிவாய்ந்த பிராமணரான தங்களின் குரு விஸ்வரூபரை ஸ்வர்கத்தை ஆளும் உன் ஆசையால் தலையைத் துண்டித்து கொடூரமாகக் கொன்றுவிட்டாய் இந்திரனே! இதனால், வெட்கம், புகழ், கருணை, நல்லதிர்ஷ்டம் ஆகிய அனைத்தையும் இழந்துவிட்டாய். எனது சூலாயுதத்தால் உனது உடலைப் பிளக்கப் போகிறேன். பெரும் வேதனையுடன் நீ மடிந்த பிறகு நெருப்புகூட உனது உடலைத் தீண்டாது, கழுகுகள் மட்டுமே அதை உண்ணும்.
“உன்னைப் பின்பற்றி தேவர்கள் என்னைத் தாக்கினால், என் திரிசூலத்தால் அவர்களின் தலைகளைக் கொய்து பைரவருக்கும் பூதகணங்களுக்கும் பலி கொடுத்து விடுவேன். சிறந்த வீரனான இந்திரனே! நீ வைத்துள்ள வஜ்ராயுதம் பகவான் விஷ்ணுவாலும் ததீசி முனிவரின் தவ வலிமையாலும் சக்தியளிக்கப்பட்டுள்ளது. உனது கதையைப் போல வஜ்ராயுதம் பயனற்றுப் போகாது. ஏனெனில், பகவான் விஷ்ணு உனக்குச் சாதகமாக இருக்கிறார்.
“உன் வஜ்ராயுதத்தின் வேகத்தினால், நான் பௌதிக பந்தத்திலிருந்தும் பௌதிக ஆசைகள் கொண்ட இந்த உலகத்திலிருந்தும் விடுபட்டு, பகவான் சங்கர்ஷணர் கூறியதுபோல் நாரத முனிவரைப் போன்ற சிறந்த பக்தர்களின் கதியை அடைவேன்.
“எம்பெருமானாகிய பரம புருஷ பகவான், தமது பக்தர்கள் அறம், பொருள், இன்பம் ஆகிய ஜட முயற்சிகளில் ஈடுபடும்போது இடையூறு விளைவிப்பார். இஃது அவரது அளப்பரிய கருணையும் ஆசிர்வாதமும் ஆகும். இதை பக்தர்கள் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். பௌதிக இலாபங்களை விரும்புபவர்களால் புரிந்துக்கொள்ள இயலாது.
“ஆகவே தைரியமாக என்னுடன் போர் புரியுங்கள்!”
விருத்ராசுரனின் பிரார்த்தனை
இவ்வாறு இந்திரனை ஊக்குவித்த விருத்ராசுரன் பகவானிடம் பின்வருமாறு பிரார்த்தித்தார்:
“பரம புருஷ பகவானே! நான் உங்கள் நித்தியத் தொண்டர்களின் தொண்டனாக ஆகும்படி ஆசீர்வதிக்க வேண்டுகிறேன். எனது மனம் எப்போதும் உங்களுடைய உன்னத குணங்களையே நினைக்கட்டும்; எனது வாக்கு எப்போதும் உங்களின் உன்னத குணங்களையே துதிக்கட்டும்; எனது உடல் எப்போதும் உங்களின் அன்புத் தொண்டிலேயே ஈடுபடட்டும்.
“எல்லாச் செல்வங்களுக்கும் அதிபதியான பகவானே! நான் துருவ லோகம், பிரம்ம லோகம், ஸ்வர்க லோகம் போன்றவற்றில் வாழ்வதையோ, மண்ணுலகம், பாதாள லோகம் போன்றவற்றை ஆள்வதையோ, யோக சித்திகளையோ பக்தியற்ற முக்தியையோ விரும்பவில்லை.
“கமலக் கண்ணனே! சிறகு முளைக்காத குஞ்சு தாய் பறவைக்காகவும், பசியால் வாடும் இளங்கன்று தாய் பசுவிற்காகவும், மனைவி கணவனுக்காக காத்திருப்பதுபோலவும், நான் உங்களுக்கு நேரடித் தொண்டு செய்யும் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்.
“எனது கர்ம வினைகளின் பயனாக, மாயா சக்தியின் வசியத்தினால் மனை, மனைவி, குழந்தைகள், செல்வம் போன்றவற்றில் பற்றுதல் கொண்டு, நான் இந்த ஜடவுலகம் முழுவதிலும் பற்பல பிறவிகளில் சுற்றிக் கொண்டிருக்கிறேன். ஆகவே, பக்தி மிக்க உங்கள் தூய பக்தர்களின் நட்பை நான் பெற்று. இந்த ஜடவுலகப் பற்றைத் துண்டித்து உங்களின் மீது மாறாத பற்றுடையவனாக ஆக வேண்டும்.”
இந்திரனைத் தோற்கடித்தல்
விருத்ராசுரன் இவ்வாறு பகவானிடம் பிரார்த்தித்த பின்னர், அந்த யுத்தத்தைப் பயன்படுத்தி உடலைக் கைவிட விரும்பி, இந்திரனை சூலத்தால் பலமாகத் தாக்கினார். ஆகாயத்தில் பறந்து சென்ற அந்த சூலாயுதம் எரி நட்சத்திரத்தைப் போன்று பிரகாசித்தது. பயங்கரமான ஆயுதம் தன்னை நோக்கி வருவதைக் கண்ட இந்திரன் சற்றும் அஞ்சாமல் தன் வஜ்ராயுதத்தால் அதைத் துண்டுதுண்டாக வெட்டித் தள்ளிவிட்டு, விருத்ராசுரனின் ஒரு கையையும் வெட்டினார்.
இருந்தாலும், தன் மற்றொரு கரத்தால் இரும்பு கதை கொண்டு இந்திரனின் தாடையையும் ஐராவதத்தையும் விருத்ராசுரன் பலமாகத் தாக்கினார். அச்சமயம் இந்திரனின் கையிலிருந்த வஜ்ராயுதம் நழுவி கீழே விழுந்தது. அதைக் கண்ட தேவர்கள், அசுரர்கள், சாரணர்கள், சித்தர்கள் மற்றும் பல வேற்று கிரகவாசிகளும் விருத்ராசுரனின் வீரத்தைப் போற்றினர்.
இந்திரன் தான் தோல்வியடைந்ததாகக் கருதி கீழே விழுந்த வஜ்ராயுதத்தை மீண்டும் எடுக்கத் துணியவில்லை. எனவே, அவரை மீண்டும் ஊக்குவிக்கும் பொருட்டு விருத்ராசுரன் பின்வருமாறு பேசினார்.
விருத்ராசுரனின் உபதேசம்
“இந்திரனே! ஆதி அனுபவிப்பாளரும் பரம புருஷருமான பகவானைத் தவிர வேறு யாராலும் எப்போதும் வெற்றி பெற இயலாது, சில சமயம் வெற்றியையும் சில சமயம் தோல்வியையும் தழுவுவது இயற்கை. இப்பிரபஞ்சத்தின் அனைத்து ஜீவராசிகளும் பகவானின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளனர். நமது அனைத்து சக்திகளுக்கும் காரணம் பகவானே. இதை அறியாத மூடர்கள் ஜடவுடலே அனைத்திற்கும் காரணம் என எண்ணுகின்றனர். நாம் அனைவரும் பகவானால் ஆட்டிவிக்கப்படுகிறோம், யாருமே சுதந்திரமானவர் அல்லர். பரம புருஷரின் உத்தரவின்றி யாராலும் பௌதிக இயற்கையைப் படைக்க முடியாது. அறிவற்ற மூடனால் பரம புருஷரைப் புரிந்துகொள்ள முடியாது. இருப்பினும் சில அயோக்கியர்கள் “நானே பரமன்” என்று முட்டாள்தனமாக எண்ணுகின்றனர்.
“நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்ப துன்பங்களையும் பிறப்பு, இறப்பு, மூப்பு, வியாதி போன்றவற்றையும் தவிர்க்க முடியாது. புகழ்ச்சி, இகழ்ச்சி, வெற்றி, தோல்வி, வாழ்வு, சாவு என்ற எல்லா நிலைகளிலும் சமநிலை உடையவனாக இருத்தல் வேண்டும். ஸத்வ, ரஜஸ், தமஸ் எனும் குணங்கள் ஆத்மாவின் குணங்களல்ல, ஜட இயற்கையின் குணங்களே. இக்குணங்களின் செயல்களுக்கும் விளைவுகளுக்கும் ஆத்மாக்களாகிய நாம் சாட்சிகளாக மட்டுமே இருக்கிறோம். இதையறிந்தவன் முக்குணங்களையும் தாண்டி முக்திபெற்ற நிலையிலேயே இருக்கிறான்.
“எதிரியே! என்னைப் பார்! நான் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டு விட்டேன். என் ஆயுதமும் கையும் துண்டுதுண்டாக வெட்டப்பட்டு விட்டன. ஆயினும், நான் அச்சமும் வருத்தமுமின்றி போரிட முயற்சிக்கிறேன். யுத்தம் ஒரு சூதாட்டம், அதன் வெற்றி, தோல்வியை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. அனைத்தும் விதியையே சார்ந்துள்ளன. ஆகையால் வெற்றி, தோல்வி பற்றி பயமோ கவலையோ இன்றி போரிடுவாயாக!”
விருத்ராசுரனின் புகழ்
விருத்ராசுரனின் ஒளிவுமறைவற்ற உபதேச மொழிகளைக் கேட்ட இந்திரன் தன் வஜ்ராயுதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பின்வருமாறு பேசினார்: “சிறந்த அசுரனே, இந்த ஆபத்தான நிலையிலும் உனது சகிப்புத் தன்மையும் பக்தித் தொண்டைப் பற்றிய உனது அறிவும், நீ பகவானின் சிறந்த பக்தன் என்பதைக் காட்டுகிறது. பகவானின் மாயா சக்தியை நீ தாண்டி விட்டாய். எனவே, அசுர மனோபாவத்திலிருந்து பக்தரின் நிலைக்கு உயர்ந்துவிட்டாய்.
“பொதுவாக அசுரர்கள் தமோ, ரஜோ குணங்களால் வழிநடத்தப்படுகின்றனர். ஆனால், நீயோ ஒரு பக்தனாக, சுத்த ஸத்வத்திலுள்ள பகவானின் தாமரை பாதங்களில் உன் மனதைப் பதித்திருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது! பகவான் ஸ்ரீ ஹரியின் பக்தித் தொண்டில் நிலைபெற்றவர்கள் அமிர்தக் கடலில் எப்போதும் நீந்தித் திளைத்துக் கொண்டுள்ளனர்.”
இந்திரனை விழுங்குதல்
இவ்வாறு பக்தித் தொண்டைப் பற்றி உரையாடிய பின் இருவரும் கடமை உணர்ச்சியுடன் போரிடத் தொடங்கினர். உடனே விருத்ராசுரன் தமது இடது கையினால் ஓர் இரும்பு கதையை இந்திரனைக் குறிபார்த்து வீசியெறிந்தார். உடனே இந்திரன் வஜ்ராயுதம் கொண்டு அந்த கதையையும் விருத்ராசுரனின் எஞ்சியிருந்த இடது கையையும் கண்டந்துண்டமாக வெட்டினார். இரு கைகளும் வெட்டப்பட்ட விருத்ராசுரன், சிறகுகள் வெட்டப்பட்ட பறக்கும் மலையைப் போல அழகாகத் தோற்றமளித்தார்.
அந்நிலையில் அவர் தன் வாயைப் பெரிதாக்கி இந்திரனையும் ஐராவதத்தையும் விழுங்கி விட்டார்.
புகழ் வாய்ந்த வீர மரணம்
இந்திரன், அசுரனால் விழுங்கப்பட்டதைக் கண்ட பிரம்மதேவரும் பிரஜாபதிகளும் முனிவர்களும் மிகவும் வருத்தமடைந்தனர். ஆனால், பகவான் நாராயணரின் சக்திபெற்ற நாராயண கவசத்தால் பாதுகாக்கப்பட்டிருந்த இந்திரன் அசுரனின் வயிற்றுக்குள் சென்றபோதிலும் மரணமடையவில்லை. அவர் வஜ்ராயுதத்தால் அசுரனின் வயிற்றைப் பிளந்தபடி வேகமாக வெளியே வந்து, அசுரனின் கழுத்தை வெட்டித் தள்ளினார்.
அதற்கு முன்பே விருத்ராசுரன் இவ்வுலகையும் உடலையும் கைவிட்டு, அனைத்து தேவர்களும் பார்த்துக் கொண்டிருந்தபோதே பகவான் ஸங்கர்ஷணரின் லோகத்திற்குள் பிரவேசித்து அவரது நித்ய சகாவாக ஆனார்.
குறிப்பு: இந்திரனை விழுங்கிய விருத்ராசுரன் தன் கடமையை முடித்துவிட்ட திருப்தியுடன் உடல் இயக்கங்களை நிறுத்தி யோக நிஷ்டையில் அமர்ந்தார். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்திரன் அசுரனின் வயிற்றிலிருந்து வெளிவந்தார், விருத்ராசுரனும் உடலைவிட்டு வெளியேறி பகவானின் இருப்பிடத்தை அடைந்தார். உடல் ஏற்கனவே விறைத்து விட்டதால், அவரது கழுத்தை வெட்டுவதற்கு ஒரு வருட காலம் ஆகியது.