உலகை வென்ற உத்தமர்

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.
வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
வில்லெடுத்து வாளெடுத்து வானைப் பிளக்கும் கோஷமெடுத்து மன்னர்களை மண்டியிடச் செய்து மண்ணையும் பொன்னையும் வென்ற மன்னர்கள் பலர்; வில்லின்றி வாளின்றி மண்ணின்றி பொன்னின்றி உலகையே வென்ற உத்தமர் ஒருவரே; அவரே தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர். உடல் பலத்தால் உலகை வென்ற வேந்தர்கள் பலர் இருக்க, ஆத்ம பலத்தால் எல்லா தரப்பட்ட மக்களையும் உண்மையாக வென்றவர் பிரபுபாதரே. அரசர்கள் அபகரித்து ஆட்சி செய்த இடங்களில் மக்கள் மனமுவந்து உளமாற அவர்களை ஏற்றார்களா என்று கூற முடியாது; ஆனால், பிரபுபாதரின் பக்தர்களோ உடல், பொருள், ஆவி அனைத்தையும் உளமாற அர்ப்பணித்து சேவை செய்தனர் என்பதால், பிரபுபாதருக்கு நிகரான வேந்தர் வரலாற்றில் யாருமே கிடையாது என்று கூறலாம்.
பன்னிரண்டு வருடத்தில் பாரெங்கும் பயணம் செய்து பக்தியை பிரச்சாரம் செய்து பல்லாயிரக்கணக்கான உண்மையான சீடர்களை உருவாக்கியவர் வரலாற்றில் வேறு யாரும் கிடையாது. ஸ்ரீல பிரபுபாதர் தம்முடைய பூர்வீக ஆச்சாரியர்களின் முழுமையான பிரதிநிதியாக இருந்தார், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் ஸங்கீர்த்தன படைக்கு சேனாதிபதியாக இருந்தார், ஸ்ரீ கிருஷ்ணரின் மிகவுயர்ந்த பக்தராக இருந்தார். அவர்களின் கருணையால் பிரபுபாதரால் தாம் சென்ற எல்லா இடங்களிலும் அதிசயத்தை நிகழ்த்த முடிந்தது.
உண்மையாகப் பார்த்தால், அவர்களின் கருணையால் பிரபுபாதர் அவர்களைக் காட்டிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். ஆயுதம் ஏந்தாத கிருஷ்ணர் எவ்வாறு அர்ஜுனனை வழிகாட்டி வெற்றி பெறச் செய்து நீங்காத பெயரையும் புகழையும் வழங்கினாரோ, அதுபோலவே, ஸ்ரீ சைதன்யரும் குரு பரம்பரையின் எல்லா ஆச்சாரியர்களும் உலகெங்கிலும் கிருஷ்ண பக்தியை பரப்புதல் என்னும் நினைத்துப் பார்க்க இயலாத மிகவுன்னத பணிக்கு ஸ்ரீல பிரபுபாதரைத் தேர்ந்தெடுத்து நீங்காத பெயரையும் புகழையும் அவருக்கு  வழங்கியுள்ளனர். அவரும் பக்தியால் உலகை வென்று அனைவரையும் அந்த பரந்தாமனிடம் அழைத்து வந்தார்.
பிரபுபாதர் நிகழ்த்திய அதிசயம்
சாதுக்கள் என்றவுடன் அவர் ஏதாவது அதிசயம் நிகழ்த்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். கையில் திடீரென்று ஒரு பொருளை அவர் வரவழைத்து விட்டால் போதும், அவரைச் சுற்றி ஒரு பெரிய கூட்டமே வந்து விடும். பல நேரங்களில் அவர் தன்னையே கடவுளாக விளம்பரப்படுத்தி கூட்டம் சேர்க்க முயல்வதைக் காண்கிறோம். பிரபுபாதரோ அதுபோன்ற மலிவான அதிசயத்தை நிகழ்த்தி கூட்டத்தைச் சேர்க்கவில்லை. அவரைச் சுற்றியிருந்த கூட்டம் அனைத்தும் உண்மையான தத்துவத்திலும் உண்மையான பக்தியிலும் ஆர்வம் கொண்டு தானாகச் சேர்ந்த கூட்டம்.
தினமும் குறைந்தது 16 மாலை ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும், நான்கு கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்க வேண்டும், பகவத் கீதை, பாகவதம் முதலிய சாஸ்திரங்களைப் படித்து பக்தியின் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும், அதிகாலை 4:30 மணிக்கு மங்கல ஆரத்தியில் கலந்துகொள்ள வேண்டும், தலையை மழித்து குடுமி வைக்க வேண்டும், கிருஷ்ண பிரசாதம் தவிர வேறெதையும் உண்ணக் கூடாது, ஆண்கள் தோதி குர்தாவும் பெண்கள் சேலையும் அணிய வேண்டும், விளையாட்டு, சினிமா போன்ற எந்த கேளிக்கையிலும் ஈடுபடக் கூடாது என பல்வேறு விதிமுறைகளை ஸ்ரீல பிரபுபாதர் தமது சீடர்களுக்கு வழங்கினார். ஆயினும், பிரபுபாதரின் பிரபாவத்தில் பக்திக்கு வந்த பாமரர்களும் மேற்கூறிய விதிகளை கடினமானதாக உணரவில்லை. பல்வேறு இந்தியர்களும்கூட இந்த விதிகளை சிரமமாக எண்ணலாம்; ஆனால் பிரபுபாதரோ மேற்கத்தியர்களும் இவற்றை எளிதில் பின்பற்றும்படி செய்தார், தன்னிடம் வந்தவர்களின் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி அமைத்தார். மது, மாமிசம், சூது, பெண்கள் என பொறுப்பின்றி திரிந்த ஹிப்பிகளைக்கூட ஹேப்பிகளாக (மகிழ்ச்சியானவர்களாக) மாற்றினார்.
அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள், ஆப்பிரிக்கர்கள், இந்தியர்கள், ஆஸ்திரேலியர்கள் என யாருமே அவரது கருணையிலிருந்தும் அதிசயத்திலிருந்தும் விடுபடவில்லை. எல்லா கண்டத்தைச் சார்ந்தவர்களும் “கிருஷ்ண பக்தி” என்னும் ஒரு குடையின் கீழ் இணைந்தனர். பல்வேறு பண்பாடுகளையும் பின்னணிகளையும் பெற்றிருந்த அனைவரையும் பக்தியால் சரணடையச் செய்து அதிசயம் நிகழ்த்தினார் பிரபுபாதர். இதில் அவருக்கு இணையாக யாரேனும் இப்பூவுலகில் செய்துள்ளனரா? நிச்சயமாக இல்லை. பிரபுபாதரின் அதிசயத்திற்கு ஈடுஇணை இல்லை.
மலிவான வித்தைகள் கிடையாது
முன்னரே கூறியபடி, பிரபுபாதர் எந்தவித மலிவான வித்தைகளிலும் ஈடுபடவில்லை. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களை பிரச்சார திருப்பணிக்கு அர்ப்பணிக்கும்படி செய்தார். அவர்கள் இரவு, பகல் பாராமல் பல்வேறு தொண்டுகளில் ஈடுபட்டனர். பல மணி நேர ஹரி நாம ஸங்கீர்த்தனம், புத்தக விநியோகம், சேவைகள் போன்றவற்றை மிகவும் சகஜமானவையாக மாற்றினார். கலி யுகத்தின் வீழ்ச்சியுற்ற ஆத்மாக்களை விடுவிக்க வேண்டும் என்ற அவரது பேரார்வம் அனைவரையும் மிகுந்த உற்சாகத்துடன் சேவை செய்ய வைத்தது. இலட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்தாலும் யாரும் அவ்வளவு உழைக்க மாட்டார்கள்; அந்த அளவிற்கு பிரபுபாதரின் சீடர்கள் எந்த சம்பளமுமின்றி, எந்த எதிர்பார்ப்புமின்றி இடையறாது உழைத்தனர். வெறும் 5 அல்லது 6 மணி நேர உறக்கம் தவிர மற்ற நேரம் முழுவதும் பிரபுபாதரின் தொண்டில் அவருக்கு உதவி புரிந்தனர்.
அவரைச் சுற்றிய கூட்டம் வாழத் தெரியாத கூட்டமல்ல. பல்வேறு துறையைச் சார்ந்த திறமை வாய்ந்த வல்லுநர்கள் பலரை கிருஷ்ணர் பிரபுபாதரிடம் அனுப்பி வைத்தார். உலகளாவிய நிறுவனத்தை நிர்வகிக்கத்தக்க தலைவர்கள், புத்தகங்களை வெளியிடுவதற்கு உகந்த திறமையான பண்டிதர்கள், விஞ்ஞானிகள், செல்வந்தர்கள், பொறியியல் வல்லுநர்கள், கட்டிடக்கலை நிபுணர்கள், திறமையான ஓவியக் கலைஞர்கள் என பிரபுபாதரிடம் அனைவரும் வந்தனர். பிரபுபாதரும் அனைத்து தரப்பட்ட மக்களையும் கிருஷ்ண சேவையில் பக்குவமாக ஈடுபடுத்தினார்.
பிரபுபாதரைச் சுற்றியிருந்த கூட்டம் அனைத்தும் உண்மையான தத்துவத்திலும் உண்மையான பக்தியிலும் ஆர்வம் கொண்டு தானாகச் சேர்ந்த கூட்டம்.
CIA ஏஜென்டுகளா?
பிரபுபாதர் ஏற்படுத்திய ஆன்மீக மறுமலர்ச்சி உலகையே வியக்கச் செய்தது. அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் தூய பக்தர்களாக உலாவியதை இந்தியர்கள் பலரால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இந்தியர்கள் இந்திய பாரம்பரிய பண்பாட்டை புறக்கணித்து மேற்கத்திய பண்பாட்டில் ஆர்வம் செலுத்திய அந்த காலக் கட்டத்தில், மேற்கத்தியர்கள் இந்தியாவிற்கு வந்து பக்தித் தொண்டில் ஈடுபடுவதை பலரால் புரிந்துகொள்ள முடியவில்லை. நிறைய இந்தியர்கள் இஸ்கான் பக்தர்களை சந்தேகக் கண்களுடன் பார்த்தனர். “இந்த வெள்ளைக்காரர்கள் உண்மையான பக்தர்களா?” “இவர்கள் ஏதோ ஆசைக்காக ஆடுகின்றனர், நீண்ட நாள் நிலைக்க மாட்டார்கள்.”—இது போன்ற கருத்துகள் ஏராளமாக உலவின.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, பக்தர்களை அமெரிக்க உளவுத்துறையான CIAயின் ஏஜெண்டுகள் என்றுகூட பேசத் தொடங்கினர்.  இவ்வளவு தியாகமும் அர்ப்பணிப்பும் அமெரிக்கர்களிடம் சாத்தியமில்லை என்றே பலர் நினைத்தனர். பிரபுபாதரின் சக்தியை அவர்கள் அறியாததே அதற்கான காரணம். கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த, பிரபுபாதரின் பக்தி நெருப்பிற்கு அருகில் யாரெல்லாம் சென்றார்களோ, அவர்கள் அனைவரையும் அந்த நெருப்பு பிடித்துக் கொண்டது. அவர்களும் பிரகாசமாக எரியத் தொடங்கினர், மற்றவர்களையும் எரியச் செய்தனர்.
சாத்தியமற்றது உண்டோ?
கிருஷ்ண சேவையில் அனைத்தையும் சாத்தியமாக்கிய பெருமை ஸ்ரீல பிரபுபாதரையே சேரும். அவருக்கு சாத்தியமற்றது என்று எதுவும் இருக்கவில்லை. 12 வருடத்தில் அவர் சாத்தியமாக்கிய விஷயங்களை யாராலும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. “முடியாது என்னும் சொல் முட்டாளின் அகராதியில் மட்டுமே இருக்கும்” என்னும் பழமொழியை பிரபுபாதர் அடிக்கடி பயன்படுத்துவது உண்டு. பல தருணங்களில் அவரது சீடர்கள் அனைவரும் “முடியாது” என்று நினைத்தவற்றை பிரபுபாதர் சாத்தியமாக்கிக் காட்டினார்.
உலகெங்கிலும் கிருஷ்ண பக்தியைப் பரப்புதல் அசாத்தியம் என்று பிரபுபாதரின் பெரும்பாலான ஆன்மீக சகோதரர்கள் நினைத்தனர். தங்களின் குருவான ஸ்ரீமத் பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரின் கட்டளையை அனைவரும் அறிந்திருந்தனர். ஆனால் அது சாத்தியம் என்பதில் யாருக்கும் நம்பிக்கை இல்லை. பிரபுபாதரோ குருவின் கட்டளையில் பூரண நம்பிக்கை கொண்டு, பல்வேறு சிரமங்களை ஏற்று அசாத்தியத்தை சாத்தியமாக்கினார்.
பிரபுபாதர் அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்த திருமதி சுமதி மொரார்ஜி அவர்களும்கூட, பிரபுபாதரிடம் அவர் வயதானவர் (Old) என்றும், அமெரிக்கா குளிரானது (Cold) என்றும் கூறி, அவரை விருந்தாவனத்திலேயே வாழும்படி அறிவுறுத்தினார். பிரபுபாதரோ தான் தீர்மானத்தில் திடமானவன் (Bold) என்று கூறி, முன்வைத்த காலை பின்வைக்காமல் உலகெங்கிலும் பிரச்சாரம் செய்தார்,
உலகின் பல்வேறு காலநிலைகள், பண்பாடுகள், பலதரப்பட்ட மக்கள், பிரச்சனைகள் என எதுவுமே பிரபுபாதரின் வேகத்தைக் குறைக்க முடியவில்லை.
பல்வேறு துறையைச் சார்ந்த திறமை வாய்ந்த வல்லுநர்கள் பலரை கிருஷ்ணர் பிரபுபாதரிடம் அனுப்பி வைத்தார்.
எதற்காகவும் விட்டுக் கொடுக்காதவர்
ஸ்ரீல பிரபுபாதரின் மற்றொரு முக்கியமான தன்மை, அவர் எதற்காகவும் உண்மையை விட்டுக் கொடுக்க மாட்டார். குரு, சாது, சாஸ்திரத்தின் மூலமாக பெறப்பட்ட அறிவில் அவர் பூரண நம்பிக்கை கொண்டிருந்தார். அவரது பிரச்சாரம் ஜனங்களை திருப்தி செய்வதற்காக இருக்கவில்லை, ஜனார்தனரை திருப்தி செய்வதற்காக இருந்தது. “உண்மையைச் சொன்னால் மக்களுக்கு கசக்கும்” என்று அவர் ஒருபோதும் நினைக்கவில்லை. உண்மையை உரக்கச் சொல்வோம் உலக மக்களின் நன்மைக்காக என்ற முடிவில் எப்போதும் வலுவாக இருந்தார். அதனாலேயே உண்மையை விரும்பிய உண்மையான மக்கள் மட்டும் பிரபுபாதரை அணுகினர்; அவராலும் அவர்களை உண்மையான பக்தர்களாக கிருஷ்ணரிடம் அர்ப்பணிக்க முடிந்தது.
தவறை தவறு என்று கூறுவதற்கு பிரபுபாதர் ஒருபோதும் தயங்கியதில்லை. பெரியபெரிய விஞ்ஞானிகளாக இருக்கட்டும், தலைவர்களாக இருக்கட்டும், அலுவலர்களாக இருக்கட்டும், பெயரளவு ஆன்மீக குருமார்களாக இருக்கட்டும்—பிரபுபாதர் யாருக்காகவும் எதையும் விட்டுக் கொடுக்கவில்லை. அவரது ஆணித்தரமான கருத்துகள் சில சமயங்களில் அவரது சில மேலோட்டமான சீடர்களுக்கும் சிரமமாக இருந்தன; போலி சீடர்கள் வெளியே செல்வதற்கு அவை வழிவகுத்தன.
கீதையில் கிருஷ்ணர் “முட்டாள்கள்” என்று கூறுபவர்களை தாமும் “முட்டாள்கள்” என்றே கூற வேண்டும் என்பதில் தொடங்கி, கடுமையான சொற்களைப் பயன்படுத்துவதில்கூட, அவர் தம்மை எப்போதும் கிருஷ்ணரின் சேவகனாகவே வைத்துக் கொண்டார். “பன்முகத் தன்மையை ஏற்காதவர்,” “பிடிவாதம் கொண்டவர்” என்று ஒரு சிலர் அவரை நிந்தித்தபோதிலும், உண்மையை எப்போதும் உள்ளது உள்ளபடி உண்மையுருவில் வழங்க வேண்டும் என்பதில் என்றென்றும் தெளிவாக இருந்தார் பிரபுபாதர்.
கொடுத்தார், எடுக்கவில்லை
அவரது திடமான மன உறுதிக்கான மிக முக்கிய காரணம், அவர் எந்தச் சூழ்நிலையிலும் யாரையும் நம்பி வாழவில்லை; கிருஷ்ணர் தம்மை எப்படி வைத்திருந்தாலும் அதில் பூரண மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார். எளிய குடிசையாக இருந்தாலும் மாட மாளிகையாக இருந்தாலும், பிரபுபாதர் இரண்டிலும் சமநிலை கொண்டிருந்தார். கிருஷ்ணர் வழங்கிய எல்லா வசதிகளையும் அவரது தொண்டில் அர்ப்பணித்து, அவரது தொண்டிற்காக ஏற்றுக் கொண்டார். நாள் முழுவதையும் பிரச்சாரத்திற்காக அர்ப்பணித்தார், உடல் அவரை ஓய்வெடுக்கத் தூண்டியபோதிலும் சளைக்காமல் கிருஷ்ணரை மற்றவர்களுக்குக் கொடுப்பதில் ஈடுபட்டார்.
எப்போதும் கொடுத்துக் கொண்டே இருந்தார், மற்றவர்களிடமிருந்து எடுப்பதற்கு அவருக்கு ஏதுமில்லை. அமெரிக்கா செல்பவர்கள் அங்கிருந்து ஏதேனும் எடுப்பதற்கு (செல்வம் சேர்ப்பதற்கு) முயல்வது பொதுவான வழக்கம்; ஆனால் பிரபுபாதர் எதையும் எடுப்பதற்காக அங்குச் செல்லவில்லை, கொடுப்பதற்காகவே சென்றார்.
ஒருமுறை, பிரபுபாதர் அமெரிக்கா செல்வதற்கு முன்பாக, அவரது ஆன்மீக சகோதரர் ஒருவர், அமெரிக்க மக்கள் எவ்வாறு ஸ்பூன் வைத்து உண்கிறார்களோ அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். பிரபுபாதரோ, “நான் பாரதப் பண்பாட்டை அவர்களுக்கு வழங்கச் செல்கிறேன், அவர்களுடைய பண்பாட்டைக் கற்றுக்கொள்வதற்கு அல்ல,” என்று பதிலுரைத்தார். வெறும் 40 ரூபாயுடன் அமெரிக்கா சென்றவர், 12 வருடத்தில் பல கோடி மதிப்புள்ள கோயில்களையும் பண்ணைகளையும் குருகுலங்களையும் புத்தகங்களையும் கிருஷ்ணருக்காக உருவாக்கி நமக்கு வழங்கியுள்ளார்.
பிரபுபாதருடைய பிரச்சாரம் ஜனங்களை திருப்தி செய்வதற்காக இருக்கவில்லை, ஜனார்தனரை திருப்தி செய்வதற்காக இருந்தது.
ஈடுஇணையில்லா பொக்கிஷம்
பிரபுபாதர் வழங்கிய எல்லா பொக்கிஷத்திலும் மிகமிக முக்கியமான பொக்கிஷம், அவருடைய புத்தகங்கள். பகல் நேரம் முழுவதும் தமது சொற்பொழிவுகளாலும் உரையாடல்களாலும் கடிதங்களாலும் பிரச்சாரம் செய்த பிரபுபாதர், இரவுப்பொழுதில் நூல்களை எழுதினார், எழுதிக் கொண்டே இருந்தார். பன்னிரண்டு வருடங்களில் அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையை யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாது; அதுவும் பல்வேறு பிரச்சாரப் பணிகளுக்கு மத்தியில்.
அவரது புத்தகங்கள் அவருடைய கிருஷ்ண பிரேமையின் (தூய அன்பின்) வெளிப்பாடாகத் திகழ்கின்றன. தமது இறுதி நாள்களில் படுக்கையாகக் கிடந்தபோதிலும், அவர் இடையறாது புத்தகப் பணியில் ஈடுபட்டார்; ஏனெனில், இந்த புத்தகங்கள் கலி யுகத்தின் இருளில் பார்வையை இழந்து தவிக்கும் மக்களுக்கு அறிவுரை வழங்கும் சூரியன்களாகும். பிரபுபாதர் இன்று நமது பார்வையிலிருந்து மறைந்துவிட்டபோதிலும், அவரது புத்தகங்கள் அவரது சங்கத்தை நமக்கு வழங்கி வருகின்றன, கிருஷ்ணரை அப்படியே நேராக நம்மிடம் வழங்குகின்றன.
ஆன்மீக உலகின் இணையற்ற பிரதிநிதியாக நம்மிடையே உலாவிய பிரபுபாதர் இப்புத்தகங்களின் மூலமாக இன்றும் நம்முடன் வாழ்கின்றார். இவற்றை தினமும் படிப்பவர்கள் என்றும் அவருடன் வாழ்கின்றனர். உலகை வென்ற மாவீரர்கள் யாரும் மறைவிற்குப் பின்னர் உலகை ஆளவில்லை; பிரபுபாதரோ இப்புத்தகங்களின் வாயிலாக இன்றும் உலகை ஆண்டு வருகிறார். பிரபுபாதரின் புத்தகங்களைப் படிப்பவர்கள் உடல், மனம், புத்தி, ஆத்மா என அனைத்தையும் கிருஷ்ணரிடம் அர்ப்பணித்து வருகின்றனர்; இதற்கு சமமான ஆளுமை வேறெதுவும் இருக்க முடியாது.
1896இல் இவ்வுலகில் தோன்றிய பிரபுபாதரின் 125ஆவது பிறந்த வருடத்தைக் கொண்டாடும் இத்தருணத்தில், என்றென்றும் அவரால் ஆட்கொள்ளப்பட வேண்டும் என்று பிரார்த்திப்போம்.
ஜய ஸ்ரீல பிரபுபாத!
பிரபுபாதர் கிருஷ்ணருக்காக ஏற்படுத்திய பல பண்ணை நிலங்களில் ஒன்று, கீத-நகரி (அமெரிக்கா)
 
[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives