மதச்சார்பின்மையின் போர்வையில் நாஸ்திகம்

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகள் தற்போது மதச்சார்பற்ற நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன, மதச்சார்பின்மையின் கொள்கைகள் இங்கே பரவலாக போதிக்கப்பட்டு வருகின்றன. சென்ற இதழில் (உரிமைகளின் போர்வையில் நாஸ்திகம் என்னும் கட்டுரையில்) கூறியபடி, நாஸ்திகம் பல்வேறு போர்வைகளில் மக்களிடையே உட்புகுந்துள்ளது, மக்களும் அதனைப் பெரும்பாலும் கவனிப்பதில்லை. அதுபோன்ற போர்வைகளில் ஒன்று: மதச்சார்பின்மை. மதச்சார்பின்மையின் மூலமாக ஊடுருவும் நாஸ்திகத்தை உணர்வது மிகவும் அவசியமாகும்.

மதச்சார்பின்மை என்றால் என்ன?

மக்கள் தாம் விரும்பும் மதத்தினைப் பின்பற்றுவதற்கும் மதத்தின் பெயரில் ஏற்படும் வேற்றுமைகளைக் களைவதற்கும் கொண்டு வரப்பட்ட கொள்கையே மதச்சார்பின்மை. வேறு விதமாகக் கூறினால், எல்லா மதத்தினருக்கும் சம உரிமை வழங்குவதே மதச்சார்பின்மை.

அனைத்து மதத்தினரையும் சமமாக பாவித்து நடத்துதல், அனைத்து மதத்தினருக்கும் வேலை வாய்ப்பு, கல்வி, தொழில் போன்றவற்றில் சம உரிமை, அனைத்து மதத்தினருக்கும் வழிபாட்டு உரிமை போன்றவை மதச்சார்பின்மையில் அடங்கும். பல தரப்பட்ட எண்ணங்களைக் கொண்ட மக்கள் ஒன்றாக வாழ்ந்து ஒற்றுமையுடன் இருப்பதற்கு மதச்சார்பின்மையின் கொள்கை உதவுகிறது.

மதச்சார்பின்மை (secularism) என்னும் சொல், 1851ஆம் ஆண்டில் ஆங்கிலேய எழுத்தாளர் ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியேக் என்பவரால் ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கத்தில் மத ஆதிக்கம் கோலோச்சிய காலத்தில் அரசாங்கத்தை மதத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டங்கள் நடந்த காலக்கட்டத்தில் முதன்முறையாக உபயோகிக்கப்பட்டது.

மதங்களையும் மத நம்பிக்கையையும் புறக்கணிக்காமல், அதே சமயத்தில் அரசாங்கத்தினை மதத்திலிருந்து பிரிக்க வேண்டும் என்பதே ஹோலியேக் அவர்களின் நோக்கமாகும். மதச்சார்பின்மை என்பது மதத்திற்கு எதிரான வாதமல்ல என்றும், இது மதத்தின் நம்பிக்கைகளை சந்தேகிக்கவில்லை என்றும், மதத்திலிருந்து வேறுபட்டது என்றும் அவர் வாதிட்டார்.

இன்றைய உலகில் மதச்சார்பின்மை

இன்றைய உலகில், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பிறகு மதச்சார்பின்மையின் போக்கு வலுப்பெற்றுள்ளது. பெரும்பாலான நாடுகள் மதச்சார்பின்மையினை தங்களுடைய கொள்கையாக ஏற்றுள்ளன. மதச்சார்பின்மையில் இன்று இரண்டு முக்கிய பிரிவுகள் உள்ளன: (1) மதத்தின் பழக்க வழக்கங்களும் வழிகாட்டுதல்களும் ஆதாரமற்றவை, உணர முடியாதவை என்று எடுத்துரைக்கும் கடுமையான மதச்சார்பின்மை (hard secularism), (2) பரம்பொருளை உணர்வது இயலாத காரியம் என்பதால், விஞ்ஞான விஷயங்களைப் பற்றி பேசும்போது மதக் கூற்றுகளை புறக்கணித்துவிட வேண்டும் என்று எடுத்துரைக்கும் மென்மையான மதச்சார்பின்மை (soft secularism).

உண்மையில், மதச்சார்பின்மையின் கொள்கைகள் இன்று பலரால் பல விதமாகப் புரிந்துகொள்ளப்பட்டு பல வழிகளில் விளக்கமளிக்கப்படுகின்றன. கடுமையான மதச்சார்பின்மையைப் பின்பற்றுவோர் நேரடியான நாஸ்திகத்தையும் மென்மையான மதச்சார்பின்மையைப் பின்பற்றுவோர் மறைமுகமான நாஸ்திகத்தையும் மக்களிடையே திணித்து வருகின்றனர்.

மதத்தின் கோட்பாடுகள் உண்மையில் விஞ்ஞானபூர்வமானவை, அரசாங்க வழிகாட்டியாகவும் செயல்படுபவை. ஆனால் மதத்தையும் அரசையும் பிரிக்க வேண்டும் என்ற போர்வையில், மதத்தில் கொடுக்கப்பட்டுள்ள நல்ல அறிவுரைகளும் விஞ்ஞான தகவல்களும் மறுக்கப்படுவது குருட்டுத்தனமான நாஸ்திகமே அன்றி மதச்சார்பின்மை அல்ல.

பாரத பாரம்பரியத்தின் மத நூல்களில் ஓர் அரசாங்கம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு பல வழிகாட்டுதல்கள் உள்ளன. அத்தகவல்கள் மத நூல்களில் உள்ளன என்னும் ஒரே காரணத்திற்காக குருட்டுத்தனமாக நிராகரிக்கப்படுவது வருந்தத்தக்க ஒன்றாகும்.

அனேக தமிழர்கள் மத நம்பிக்கை உடையவர்களே, பல்வேறு கால கட்டங்களில் தமிழர் அரசியல் அமைப்புகள் மதம் சார்ந்தே இருந்து வந்துள்ளன, தமிழர்களின் பழங்கால மற்றும் இடைக்கால இலக்கியங்களைப் படிக்கும் எவராலும் இதனை உணர முடியும். ஆனால் இன்றோ இறைமறுப்பை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழர் கட்சிகள் அவற்றை மறுத்து வருகின்றன. (அக்கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும், சிக்கலான சூழ்நிலைகளில் மத திருத்தலங்களுக்குச் சென்று தரிசிப்பது அவர்களுடைய கொள்கையில் காணப்படும் ஸ்திரமற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.)

எப்படிப் பார்த்தாலும், இன்றைய மதச்சார்பின்மையின் கொள்கைகள் நாஸ்திகத்தினை மக்களிடையே ஊடுருவச் செய்கின்றன.

“மதச்சார்பின்மை என்பது போலியான ஒன்றாகும். ’நீ விரும்புவதை நீ செய்யலாம், என்று இஃது அனுமதிக்கின்றது. இது சரியல்ல. குடிமக்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். நம்முடைய நாட்டினை ஹிந்துஸ்தான், பாரத வர்ஷம் என்று அழைக்கிறோம். ஆனால் நாம் பாரதீய தன்மைகளை அல்லது இந்து ஆன்மீக கலாசார கல்வியினை மக்களுக்கு வழங்குவதில்லை. இது மதச்சார்பற்ற நாட்டின் பேரிழப்பாகும்.” (ஸ்ரீல பிரபுபாதர், உரையாடல், டிசம்பர் 12, 1970)

மதச்சார்பின்மை என்ற பெயரில், பெரும்பாலான பள்ளிகளில்மாணவ மாணவியர்கள் தங்களது மத இணக்கத்தை வெளிப்படுத்துவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

அரசு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டுமா?

இந்தியாவின் ஒரு முக்கிய பத்திரிகையின் தலையங்கத்தில், அரசாங்க தலைவர்கள் மத நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுகுறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. தலைவர்கள் இவ்வாறு செய்யும்போது, இச்செயல்கள்”அரசாங்கம் மத நம்பிகையுடன் உள்ளது, மதத்தை ஊக்கப்படுத்துகிறது” என்னும் எண்ணத்தை மக்களிடையே நிச்சயம் ஏற்படுத்தும் என்று அதன் ஆசிரியர் குற்றம் சாட்டியிருந்தார்.

அவர் கூறுகிறார்,”உண்மையான மதச்சார்பற்ற அரசு என்பது விரிவான மதச் செயல்களை பொதுமக்கள் மத்தியில் செயல்படுத்தக் கூடாது. மதத்திற்கு எதிராக அரசாங்கம் செயல்படத் தேவையில்லை; ஆயினும், விஞ்ஞானபூர்வமான நம்பிக்கைகளை தீவிரமாக எடுத்துரைக்க வேண்டும்.”

“விஞ்ஞானபூர்வமான நம்பிக்கை” என்று எழுதும்போது, அந்த தலையங்கத்தின் ஆசிரியர் பௌதிகவாதத்தையும் நாஸ்திகத்தையும் அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கையினை மனதில் வைத்து எழுதியுள்ளார். அந்த நம்பிக்கையே மதச்சார்பற்ற அரசின் கொள்கையாக இருக்க வேண்டும் என்று அவர் வாதிடுகிறார்.

அத்தகு எண்ணங்களைக் கொண்டவர்கள் கிழக்கு ஐரோப்பாவிலும் ரஷ்யாவிலும் என்ன நிகழ்ந்தது, என்ன நிகழ்கிறது என்பதை கவனித்துப் பார்த்தல் நன்று. முற்றிலும் மதச்சார்பற்ற அரசாங்கம் என்ற பெயரில் அங்கு செயல்பட்ட அரசுகள் உருக்குலைந்து விட்டன, உருக்குலைந்து வருகின்றன; மதம் சார்ந்த எண்ணங்கள் எங்கும் விரிவாக வளர்ந்து வருகின்றன.

மத வேற்றுமையின் காரணத்தினால் சில இடங்களில் வன்முறைகள் வெடிக்கும்போது சிலர் அதிருப்தியுறுவது இயற்கையே. ஆயினும், அதற்காக மதத்தை முற்றிலுமாக நிராகரித்துவிட்டு வாழ்வதும் சரியல்லவே. ஸ்டாலின் ஓர் உண்மையான மதச்சார்ப்பற்ற மனிதர், விஞ்ஞானபூர்வமான நம்பிக்கையினை பெரிதும் ஊக்குவித்தவர்; ஆயினும், தனது சொந்த நாட்டின் குடிமக்களை இலட்சக்கணக்கில் கொன்றவர்.

எனவே, போலி நோட்டுகள் உலவுகின்றன என்னும் காரணத்தினால், ரூபாய் நோட்டுகளை முற்றிலுமாக அரசாங்கம் புறக்கணித்து விடக் கூடாது. போலி நோட்டுகளைப் போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும். அதுபோலவே, மத வெறியும் வன்முறையும் வளர்கின்றன என்பதால் மதத்தை புறக்கணித்துவிடக் கூடாது; விரும்பத்தகாத செயல்களை வளர்க்கக்கூடிய மதப் பிரிவுகளும் அவற்றின் கருத்துகளும் உண்மையான மதத்திற்கு விரோதமானவை. எனவே, அத்தகைய தவறான மதப் பழக்கங்களை மட்டுமே அரசாங்கம் தடுக்க வேண்டுமேயொழிய, முறையான மதப் பழக்கங்களை அல்ல.

இன்றைய சமுதாயத்தில் பல்வேறு மதங்கள் நிலவக்கூடிய சூழ்நிலையில் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்? 1973இல் ஸ்வீடன் நாட்டிற்கான இந்திய தூதர் ஸ்ரீல பிரபுபாதரிடம் ஸ்டாக்கோம் நகரத்தில் இந்த முக்கியமான விஷயம் குறித்து கேள்வி எழுப்பினார்:

தூதர்: பெரும்பான்மையினர் ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றுபவர்களாக இருந்தால்கூட, அரசாங்கம் என்ற முறையில் நாம் எந்தவொரு குறிப்பிட்ட மதத்தைப் பற்றியும் வலுவான கொள்கைகளைக் கொண்டு வரக் கூடாது.

பிரபுபாதர்: மதச்சார்பற்ற அரசு என்றால் எல்லாவித மதத்திற்கும் நடுநிலையில் செயல்படுதல் என்று பொருள். ஆயினும், மக்கள் மதம் சார்ந்து செயல்படுகிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டியது அரசின் கடமை. “அரசாங்கம் மதச்சார்பற்றது, மக்கள் நரகத்திற்குப் போகட்டும்” என்று கூறக் கூடாது.

தூதர்: ஆம், அதுவும் சரி.

பிரபுபாதர்: நீங்கள் ஒரு முஸ்லிமாக இருந்தால், உண்மையிலேயே முஸ்லிமாக செயல்படுகிறீர்களா என்பதைக் கவனிப்பது அரசாங்கத்தின் கடமையாகும். நீங்கள் இந்துவாக இருந்தால், இந்துவாக செயல்படுகிறீர்களா என கவனிப்பது அரசாங்கத்தின் கடமையாகும். நீங்கள் கிருஸ்துவனாக இருந்தால், கிருஸ்துவ தரத்தின்படி உள்ளீர்களா என்பதை அரசாங்கம் பார்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் மதத்தைக் கைவிடக் கூடாது. தர்மேன ஹீனா: பஷுபி: ஸமானா:. மக்கள் மதச்சார்பின்மை என்ற பெயரில் மதமற்றவர்களாக மாறினால், அவர்கள் வெறும் மிருகங்களே. எனவே, குடிமக்கள் மிருகங்களாக மாறாமல் தடுப்பது அரசின் கடமையாகும். ஒருவர் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம், அது ஒரு பொருட்டல்ல. ஆனால் அவன் மதம் சார்ந்தவனாக இருக்க வேண்டும். அதுவே மதச்சார்பற்ற அரசு. இதற்கு மாறாக, மதச்சார்பற்ற அரசு என்ற பெயரில்,”மக்கள் மதமின்றி பூனைகளாகவும் நாய்களாகவும் போகட்டும். அரசாங்கம் அதனைக் கண்டுகொள்ளாது,” என்று பொறுப்பின்றி உரைத்தல் சரியல்ல.

இந்தியாவில் தற்போது என்ன செய்ய வேண்டும்? மேற்கத்திய நாட்டின் மதச்சார்பற்ற அரசு என்னும் கோட்பாட்டினை மறுஆய்வு செய்து இந்தியாவின் மாபெரும் செல்வமான ஆன்மீக அறிவினை மக்களுக்கு வழங்கும்படி இந்திய மக்கள் தங்களுடைய அரசாங்கத்திடம் கேட்க வேண்டும்ஶீஇஃது அதற்கான உகந்த தருணமாக தோன்றுகிறது. கால வரம்பிற்கு அப்பாற்பட்ட வேத சாஸ்திரங்களில் உள்ள விஞ்ஞானபூர்வமான ஆன்மீகச் செல்வங்கள் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். நாம் இறையன்பு என்னும் பாதையில் உண்மையாக வளர்ச்சி பெற்றால், மதம் சார்ந்த நாட்டினைக் கண்டு யாரும் அச்சம்கொள்ள மாட்டார்கள்.

மக்களைக் காப்பது அரசாங்கத்தின் கடமை

“மக்கள் ஆன்மீக வாழ்வினை முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை சோதிப்பது அரசாங்க தலைவரின் கடமையாகும். ஒரு மன்னர் அல்லது ஆட்சியாளர் என்பவர் நாஸ்திகர்களை ஒடுக்குவதில் கண்டிப்புடன் செயல்பட வேண்டும். வேறு விதமாகக் கூறினால், ஒரு நாஸ்திக அல்லது இறையுணர்வற்ற அரசினை ஒரு மன்னர் அல்லது ஆட்சியாளர் ஒருபோதும் ஆதரிக்கக் கூடாது. இதுவே நல்ல அரசாங்கத்திற்கான சோதனையாகும்.” (ஸ்ரீல பிரபுபாதர், ஸ்ரீமத் பாகவத பொருளுரை, 4.16.4)

“ஒரு மதச்சார்பற்ற அரசு குறிப்பிட்ட மத நம்பிக்கையைச் சாராமல் இருக்கலாம், ஆனால் மதத்தின் கொள்கைகளைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிடக் கூடாது. ஆனால், கலி யுகத்தில், அரசாங்கத்தின் தலைமைப் பதவியில் இருப்பவர்கள் மதக் கொள்கைகளை கண்டுகொள்ளாதவர்களாக இருப்பர். அதனால் பேராசை, பொய், ஏமாற்றுதல், திருட்டு ஆகியவை இயற்கையாக நிகழும். எனவே, அரசாங்கத்தில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று அழுகுரல் எழுப்புவதில் எந்த பயனும் இல்லை.” (ஸ்ரீல பிரபுபாதர், ஸ்ரீமத் பாகவத பொருளுரை, 1.17.32)

“அதர்மத்தை ஆதரிக்கும் மதச்சார்பற்ற வழிமுறைகள் சமுதாயத்தில் அறிமுகப்படுத்தப்படுவதை பொறுத்துக்கொள்ளாமல் இருப்பது மன்னரின் கடமையாகும். மன்னர் பிருது முழுமுதற் கடவுளின் அவதாரம் என்பதால், எல்லாவிதமான அதர்மச் செயல்களையும் வெட்டி வீழ்த்துதல் நிச்சயமாக அவரது கடமையாகும். அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி, நாட்டின் தலைவர்கள் அனைவரும் கடவுளின் உண்மையான பிரதிநிதியாகச் செயல்பட்டு எல்லா அதர்மங்களையும் வெட்டி வீழ்த்த வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் கோழைகளாக இருந்து கொண்டு மதச்சார்பற்ற அரசு என்று அறிவிக்கின்றனர். அத்தகு எண்ணத்தினால் தர்மம் சீர்குலைந்து அதர்மம் மேலோங்குகின்றது; இதனால் குடிமக்கள் ஆன்மீக முன்னேற்றத்தில் ஆர்வமற்றவர்களாக மாறுகின்றனர்.” (ஸ்ரீல பிரபுபாதர், ஸ்ரீமத் பாகவத பொருளுரை, 4.19.26)

மதச்சார்பின்னை என்னும் வார்த்தையை முதலில் உபயோகித்த ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியேக்

மதச்சார்பின்னை என்னும் வார்த்தையை முதலில் உபயோகித்த ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியேக்

மிருகங்களாக மாறும் மக்கள்

மக்களிடையே மதக் கருத்துகள் இல்லாவிடில், அவர்கள் மிருகங்களாகி விடுவர் என்பதை முன்னரே கண்டோம். உண்மையில் கூறினால், இந்த மதச்சார்பின்மையின் காரணத்தினால், ஏற்கனவே பல்வேறு மக்கள் மிருக நிலைக்கு வந்து கொண்டுள்ளனர், சிலர் மிருக நிலையிலேயே வாழ்கின்றனர் என்பது வருந்தத்தக்க உண்மையாகும். ஸ்ரீல பிரபுபாதரின் கீழ்காணும் உரையாடல் (நவம்பர் 16, 1975) அதனைச் சுட்டிக் காட்டுகின்றது.

இந்தியன்: இந்திய அரசாங்கத்தினால் பிரச்சாரம் செய்யப்படும் மதச்சார்பின்மையைப் பற்றியும் அதன் கொள்கையைப் பற்றியும் தங்களுடைய கருத்து என்ன? மதத்திற்கு இங்கு இடமில்லை என்று அவர்கள் கூறுவதாக தெரிகிறது.

பிரபுபாதர்: ஆம். தர்மேன ஹீனா: பஷுபி: ஸமானா:. மதம் இல்லாவிடில், மக்கள் உடனடியாக மிருகங்களாகி விடுகின்றனர். மதம் இல்லாததால், மக்களைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் சிரமப்பட வேண்டியுள்ளது.

இந்தியன்: நான் மிருகமானால் என்ன இழப்பு?

பிரபுபாதர்: நீங்கள் ஏற்கனவே மிருகம்தான். மிருகமாகுதல் என்று கேள்விக்கு இடமில்லை. நீங்கள் ஏற்கனவே மிருகம்தான்.

பள்ளிகளிலும் பணியிலும் மதச்சார்பின்மை

மதச்சார்பின்மை எந்த அளவிற்கு கொடுமையாகி வருகிறது என்றால், பெரும்பாலான பள்ளிகளிலும் பணியிடங்களிலும் இன்று யாரும் தங்களுடைய மத விருப்பத்தினை வெளிப்படுத்த முடியாமல் உள்ளது. (கிறுஸ்துவ இஸ்லாமிய பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் இந்த நிலை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது). பள்ளிகள் தங்களுடைய மாணவ மாணவியர் புராதன உடைகளில் வருவதற்கு அனுமதிப்பதில்லை. நெற்றியில் திலகம் தரிப்பதற்கோ விபூதி இடுவதற்கோ அனுமதி இல்லை. மாணவிகள் பூவோடும் பொட்டோடும் படிக்கச் செல்வதற்குக்கூட சில இடங்களில் அனுமதிப்பதில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்புகூட பாரம்பரிய வாழ்க்கையை வாழ விரும்பும் நபர்கள் தங்களுடைய மத இணக்கத்தினை வெளிப்படையாக காட்டுவதற்குத் தயங்கியதில்லை. ஆனால் தற்போதைய நிலை மாறிவிட்டது. ஏன் இந்த அவலம்? மதச்சார்பின்மை இதற்கான ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல.

- கள்ள நோட்டுகள் உலவுவதால் நோட்டுகளையே புறக்கணிக்கக் கூடாது; அதுபோல, மத வெறியர்கள் உலவுவதால் மதத்தையே புறக்கணிக்கக் கூடாது.

கள்ள நோட்டுகள் உலவுவதால் நோட்டுகளையே புறக்கணிக்கக் கூடாது; அதுபோல, மத வெறியர்கள் உலவுவதால் மதத்தையே புறக்கணிக்கக் கூடாது.

மதச் சுதந்திரமும் நாஸ்திகமும்

மதச்சார்பின்மை மதச் சுதந்திரத்தை அனுமதிக்கின்றது, நாஸ்திகத்தை அல்ல என்று சிலர் வாதிடலாம். அஃது அவ்வாறு இருந்தால் யாமும் மகிழ்ச்சியடைவோம். ஆனால் யாம் முன்னரே குறிப்பிட்டதுபோல, மதச்சார்பின்மை என்பதற்கு பலரும் பல விளக்கங்களைக் கொடுக்கின்றனர்; ஆனால் இறுதியாக இது மதமற்ற வாழ்விற்கு (அதாவது நாஸ்திகத்திற்கு) வழிவகுக்கின்றது என்பதே எமது வாதம்.

பெரும்பாலான சூழ்நிலைகளில் “மதச்சார்பின்மை” என்பது ஆன்மீகத்திற்கு எதிராகவே உள்ளது. மதச்சார்பின்மை விரியும்போது மதம் சுருங்குவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். உதாரணமாக, குழந்தைகளின் பிறப்பினைக் கட்டுப்படுத்துவோம் என்ற பெயரில், இந்திய அரசாங்கம் கருக்கலைப்பினை அனுமதிக்கின்றது. ஆனால் கருக்கலைப்பு என்பது ஒரு கொலை என்று யாம் எடுத்துரைத்தால், “அஃது உங்களுடைய மத நம்பிக்கை” என்று கூறிவிட்டு, நினைத்ததைச் செய்கின்றனர். மதச்சார்பின்மையின் காரணத்தினால், மக்களிடையே நன்மதிப்புகளைக்கூட எடுத்துச் சொல்ல முடியாத நிலை நிலவுகிறது.
மதச்சார்பற்ற தன்மை மத வெறியர்களைத் தடுக்கின்றது என்று சிலர் வாதிடுகின்றனர். உண்மையாக இருக்கலாம், ஆனால் அதே சமயத்தில் மதச்சார்பற்ற வெறியர்களை அஃது உருவாக்குகின்றதே. நாஸ்திகர்களை உருவாக்குகின்றதே. அதற்கு என்ன பதில்?

மனித சமுதாயத்தின் மாபெரும் நோக்கம் தன்னுணர்வு பெறுதல். அதற்கு உதவி செய்தல் அரசாங்கத்தின் கடமையாகும். ஒரு மனிதன் தன்னுணர்வை அடையும்போது, கடவுள் ஒருவரே என்பதை அவன் உணர்வான். அந்த கடவுள் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல என்பதையும், அனைத்து மதத்தினரும் (உண்மையில் அனைத்து உயிரினங்களும்) தன்னுடைய சகோதரர்களே என்பதையும் அவன் உணர்வான்.

அது மட்டுமின்றி, ஒருவன் மதம் சார்ந்த வாழ்க்கையை வாழும்போது, அவனிடம் நிச்சயமாக நற்குணங்கள் வளர்ச்சி பெறும்–இதன் மூலமாக இலஞ்சம், ஊழல், வன்முறை, கொலை, கற்பழிப்பு போன்ற சமுதாய பிரச்சனைகள் அனைத்தையும் எளிதில் தீர்த்துவிட முடியும். மக்களை மிருகங்களாக வளர்க்கும் மதச்சார்பற்ற சமுதாயத்தில் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் என்பது நிச்சயம் இயலாத ஒன்றாகும். உண்மையான அமைதியையும் சுதந்திரத்தையும் மதச்சார்பற்ற பௌதிக அரசாங்கத்தினால் நிச்சயமாக வழங்க இயலாது; மாறாக, இறையுணர்வுடன் திகழும் தன்னுணர்வு பெற்ற மக்களைக் கொண்ட அரசாங்கத்தினால் அதனை எளிதில் வழங்க இயலும்.

ஆன்மீக மதிப்புகளைப் பேணுவோம்

“மதச்சார்பற்ற அரசு, அல்லது இறையுணர்வற்ற அரசானது மக்களை கடவுளின் சட்டங்களை மீறுவதற்கு அனுமதிக்கின்றது, ஆனால் நாட்டின் சட்டங்களை மீறுவதற்கு அனுமதிப்பதில்லை; இதன் விளைவு என்னவெனில், மக்கள் மனிதனால் உருவாக்கப்பட்ட பக்குவமற்ற சட்டங்களை மீறுவதால் அடையும் துன்பத்தைக் காட்டிலும் அதிகமான துன்பத்தினை இறைவனின் சட்டங்களை மீறுவதால் அடைகின்றனர். பௌதிக வாழ்விலுள்ள மனிதன் எவ்வளவு முன்னேறியவனாக இருந்தாலும், ஒவ்வொரு மனிதனும் குறைபாடு கொண்டவனேஶீஅதனால் பக்குவமான சட்டம் என்பது சாத்தியமல்ல. ஆனால் அதே சமயத்தில் கடவுளின் சட்டத்தில் அத்தகு பக்குவமின்மைக்கு வாய்ப்பே இல்லை. கடவுளின் சட்டங்களை தலைவர்கள் கற்றுக் கொண்டால், அவ்வப்போது சட்டங்களை மாற்றக்கூடிய குறிக்கோளற்ற நபர்களுக்கு அவசியமிருக்காது.” (ஸ்ரீல பிரபுபாதர், ஸ்ரீமத் பாகவத பொருளுரை, 1.13.42)

அரசாங்கத்தினால் எந்தவொரு குறிப்பிட்ட மதத்தினையும் ஊக்குவிக்க இயலாமல் இருக்கலாம். ஒரு விதத்தில் கூறினால், அதற்கு அவசியமும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் அரசாங்கம் தன்னை எல்லா மதத்திற்கும் பொதுவான மதக் கோட்பாடுகளை ஊக்குவிப்பதில் ஈடுபடுத்தலாம். அத்தகு ஆன்மீக மதிப்புகள் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும்.

மதக் கோட்பாடுகள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க முடியுமா? நிச்சயம் முடியும்; ஏனெனில், கடவுள் கிருஸ்துவரோ இந்துவோ யூதரோ முஸ்லிமோ அல்ல. அந்த கடவுளின் அம்சமாகிய ஜீவன்கூட எந்தவொரு மதத்தையும் சார்ந்தவனல்ல. கிருஸ்துவன், இந்து, முஸ்லிம் போன்றவை அனைத்தும் உடலைச் சார்ந்த அடையாளங்களே. அந்த அடையாளங்கள் மாறலாம். ஒரு கிருஸ்துவன் முஸ்லிமாகலாம், ஒரு முஸ்லிம் இந்துவாகலாம், ஓர் இந்து கிருஸ்துவனாகலாம். ஆனால் ஆத்மாவிற்கும் கடவுளுக்கும் இடையிலான உறவு ஒருபோதும் மாறாது.

மக்களிடையே உண்மையான இறையன்பை வளர்க்க உதவும் மதமே உண்மையான மதம் என்றும், அத்தகு அன்பை வளர்த்தவரிடம் எல்லா நற்குணங்களும் குடிகொள்ளும் என்றும் ஸ்ரீமத் பாகவதம் எடுத்துரைக்கின்றது. எனவே, மதம் என்னும் குறுகிய வட்டங்களையும் உணர்வுகளையும் கடந்து, உண்மையான இறையன்பையும் ஆன்மீக மதிப்புகளையும் மக்களிடம் வளர்ப்பதற்காகவே அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் நிறுவப்பட்டுள்ளது.

தவம், தானம், நேர்மை, வாய்மை, கருணை, தூய்மை போன்ற தர்மத்தின் கொள்கைகள் அனைத்து மதத்தினராலும் பின்பற்றப்படலாம். இதற்கு ஒருவரை மற்ற மதத்திற்கு மாற்ற வேண்டியது அவசியமில்லை என்று ஸ்ரீல பிரபுபாதர் கூறுவார். எந்தவொரு குறிப்பிட்ட மதத்தையும் சாராத இத்தகு தர்மக் கொள்கைகளை வளர்ப்பதற்கு அரசாங்கம் முன்வராவிடில், பேராசை, கர்வம், திருட்டு, கொலை, கொள்ளை, தகாத உறவுகள், ஏமாற்றுதல், மோசடி, சண்டை, சச்சரவுகள் போன்ற பல பிரச்சனைகள் உருவெடுக்கும். இதனை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

ஆன்மீகப் பாதையைப் புறக்கணிப்பவர்கள் இந்த பிறவியிலும் மறுபிறவியிலும் துன்பப்படுவர். ஆனால் இதனைப் பின்பற்றுவோர், பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் என்னும் துன்பங்களை நிரந்தரமாகக் கடந்து இறைவனின் திருநாட்டினை அடைவர். குடிமக்களின் உண்மையான நன்மையில் ஆர்வமுள்ள ஒவ்வொரு நாடும் இதனை வரவேற்க வேண்டும்.

மேலும் பார்க்க :

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives