ஹரி நாமத்தின் மகிமை

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: ஆறாம் ஸ்கந்தம், அத்தியாயம் 2

சென்ற இதழில் அஜாமிளனின் வரலாற்றைப் பற்றி சிறிது அறிந்தோம். இந்த இதழில் ஹரி நாமத்தின் மகிமையையும் எமராஜரின் உபதேசத்தையும் காணலாம்.

தலைவர்களின் கடமை

அஜாமிளனின் குற்றத்தை விளக்கிக் கூறிய எம தூதர்களிடம் விஷ்ணு தூதர்கள் பின்வருமாறு கூறினர்: “பொதுவாக பாமர மக்கள் எது தர்மம், எது அதர்மம் என்பதை அறியாதவர்களாக உள்ளனர். பொதுமக்கள் சமூகத்திலுள்ள தலைவனின் உதாரணத்தைப் பின்பற்றி நடப்பர். எனவே, தலைவனின் நடத்தை மிகவும் பொறுப்புமிக்கதாகும்.

“ஒரு தலைவன் இரக்க மனம் உடையவனாக, மக்களின் நம்பிக்கைக்குத் தகுதியானவனாக இருக்க வேண்டும். வாழ்வின் இறுதிக் குறிக்கோள் தன்னுணர்வைப் பெற்று—முழுமுதற் கடவுளுடனான தனது நித்திய உறவை அறிந்து—அதனை மீண்டும் புதுப்பித்துக் கொண்டு, அவரது நித்திய உலகைச் சென்றடைவதாகும். எனவே, தலைவனானவன் இந்த உண்மையான இலட்சியத்தை அடைவதற்கு மக்களுக்கு வழிகாட்டுபவனாக இருக்க வேண்டும்.”

அபராதமற்ற திருநாம உச்சாடனம்

விஷ்ணு தூதர்கள் தொடர்ந்தனர்: “அஜாமிளன் கதியற்ற நிலையில் நாராயண நாமத்தை உச்சரித்தான். அவன் தூய்மையாக உச்சரிக்கவில்லை என்றாலும், அபராதமின்றி கூறியதால், அவன் இப்பிறவியில் மட்டுமின்றி கோடிக்கணக்கான பிறவிகளில் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்தவனாகிறான். அவன் தன் மகனிடம் “நாராயணா இங்கே வா,” “நாராயணா இதைச் சாப்பிடு,” “நாராயணா, அதைக் கொண்டு வா,” என்று உரையாடியபோது, ஒவ்வொரு முறையும் தன்னை அறியாமலேயே பகவான் நாராயணரின் திருநாமத்தை உச்சரித்துள்ளான்.

“திருடன், குடிகாரன், துரோகம் செய்தவன், தந்தையைக் கொன்றவன், பசுக்களைக் கொல்பவன், பெண்களைக் கொன்றவன், பிராமணரைக் கொன்றவன் என எல்லா பாவ ஆத்மாக்களுக்கும் மிகச்சிறந்த பிராயச்சித்தம் பகவான் விஷ்ணுவின் திருநாமத்தை உரைப்பதே.

“வேத சம்ஸ்காரங்களைப் பின்பற்றி பிராயச்சித்தம் செய்வது பக்தித் தொண்டின் நிலையை அடைய உதவுவதில்லை. ஆனால் பகவானின் திருநாமத்தை உரைப்பவர், பாவ விளைவுகளிலிருந்து விடுபடுவதோடு பகவானின் பக்தித் தொண்டையும் அடைய முடிகிறது.

“ஆகவே, எம தூதர்களே, இவனை நரகத்தில் தண்டிப்பதற்காக உங்களது எஜமானரிடம் எடுத்துச் செல்ல முயல வேண்டாம்.”

தூய்மையடைந்த அஜாமிளன் விஷ்ணு தூதர்களுடன் வைகுண்டம் செல்லுதல்

ஹரி நாமத்தின் புகழ்

விஷ்ணு தூதர்கள் தொடர்ந்து பேசினர்: “பகவானின் திருநாமத்தை ஒருவன் மறைமுகமாக, விளையாட்டாக, இசை விருந்தாக, அல்லது அலட்சியமாக உச்சரித்திருந்தால்கூட, அவன் பாவ விளைவுகளிலிருந்து உடனே விடுவிக்கப்படுகிறான்.

“ஹரியின் திருநாமத்தை உச்சரித்த நிலையில், ஒருவன் வீட்டின் மேலிருந்து விழுந்து, சாலை விபத்தில் சிக்கி, வழுக்கி விழுந்து, பாம்பு கடித்து, வலியினால் அல்லது கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அல்லது ஏதேனும் ஆயுதத்தால் தாக்கப்பட்டு மரணமடைய நேரிட்டால், அவன் பாவியாக இருப்பினும் நரக வாழ்வில் புகுவதிலிருந்து உடனே விடுவிக்கப்படுகிறான்.

“பெரிதும் சிறிதுமான எல்லா பாவங்களின் விளைவுகளையும் பகவானின் திருநாம உச்சாடனம் எரித்துச் சாம்பலாக்குகிறது. பரம புருஷரின் பாத கமலங்களுக்கு சேவை செய்பவன் பௌதிக ஆசைகள் என்னும் மாசுகளிலிருந்து உடனே விடுவிக்கப்படுகிறான்.

“மருந்தின் ஆற்றல், அதை உட்கொள்ளும் நோயாளிக்குத் தெரியுமா? தெரியாதா? என்பதைப் பொறுத்தது அல்ல. அதுபோலவே, ஒருவன் பகவானின் திருநாம உச்சாடனத்தின் மகிமையை அறியாமல் அதனை உச்சரித்தாலும், அஃது அவனுக்கு முழுமையான நற்பயனை அளிக்கும்.”

மறுபிறவி

விஷ்ணு தூதர்கள் இவ்வாறு மிகவும் அதிகாரபூர்வமாகவும் ஆணித்தரமாகவும் உறுதியாகப் பேசியதைக் கேட்ட எம தூதர்கள் அஜாமிளனை விடுவித்து விட்டு, எமலோகம் சென்று தங்கள் எஜமானரான எமராஜரிடம் மேற்கொண்டு பேசி முடிவு செய்யலாம் என்று புறப்பட்டனர்.

எம தூதர்களும் விஷ்ணு தூதர்களும் தன்னைப் பற்றி இவ்வாறு பேசிய அனைத்து உரையாடலையும் கேட்ட அஜாமிளன், சமயக் கோட்பாடுகள், பகவானுக்கும் ஜீவராசிக்கும் இடையிலான நித்திய உறவு, அவரது திருநாமம், புகழ், குணம், லீலைகள் முதலியவற்றைப் புரிந்து கொண்டான்.

பயத்திலிருந்து விடுபட்ட அவன் விஷ்ணு தூதர்களின் தாமரைத் திருவடிகளில் சிரம் தாழ்த்தி வணங்கினான். எம தூதர்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிய அவர்களுக்கு நன்றி கூற அவன் முயல்வதைக் கண்ட விஷ்ணு தூதர்கள் திடீரென்று அங்கிருந்து மறைந்து விட்டனர்.

அதன்பின், அஜாமிளன் தன் கடந்த கால தவறுகளை எண்ணி மிகவும் வெட்கி வருந்தினான். விஷ்ணு தூதர்களின் அற்புதக் கூற்றுகளை மீண்டும்மீண்டும் நினைத்துப் பார்த்த அவனது இதயத்தில் பகவானின் மீதான உண்மையான அன்பு ஊற்றெடுத்தது. பகவான் மற்றும் பக்தர்களின் அளவற்ற கருணையை எண்ணி வியந்தான்.

அஜாமிளனின் வருத்தம்

அஜாமிளன் தன் கடந்த கால பாவங்களைப் பற்றி பின்வருமாறு சிந்தித்து வருத்தப்பட்டான்: “உயர்ந்த தகுதியுடைய பிராமண நிலையிலிருந்து வீழ்ந்து, பதிவிரதையான அழகிய இளம் மனைவியைக் கைவிட்டு, வயதான ஆதரவற்ற பெற்றோரை கவனித்துக்கொள்ளாமல், இழிகுலத்து நீசனைப் போல் நன்றியில்லாமல் நடந்து கொண்டேனே! சமயக் கோட்பாடுகளை அலட்சியப்படுத்தி மீறினேனே! குடிகாரியான ஒரு வேசியுடன் உறவு கொண்டு அவளிடம் குழந்தைகளைப் பெற்று, அவளை திருப்தி செய்யும் பொருட்டு, சான்றோர் தூற்றும் அனைத்து கேவலமான செயல்களிலும் ஈடுபட்டு அற்ப வாழ்வு வாழ்ந்தேனே!

“ஆயினும், முந்தைய ஆன்மீகச் செயல்களின் பலனாக திருநாமத்தை உச்சரிக்கும் நல்வாய்ப்பையும் புனிதமான விஷ்ணு தூதர்களின் தரிசனத்தையும் பெறும் பாக்கியத்தை அடைந்தேன். இஃது எவ்வளவு ஆச்சரியமான அற்புதமான விஷயம்!”

அஜாமிளனின் பக்தி

தான் செய்த பாவங்களை எண்ணி வருந்திய அஜாமிளன், இப்போது தனக்கு இறைவனின் கருணையால் கிடைத்துள்ள அற்புத வாய்ப்பை எண்ணி மகிழ்வும் நன்றியுணர்வும் கொண்டான். அவன் தனது மனம், புலன்கள், புத்தி ஆகியவற்றை பகவானின் பக்தித் தொண்டில் முழுமையாக ஈடுபடுத்த உறுதி கொண்டான்.

உடல் ரீதியான கருத்துகளால் புலனுகர்வு ஆசைகளுக்கு உள்ளாகி, மாயா சக்திக்கு பலியாகி, ஒரு பெண்ணின் வளர்ப்புப் பிராணிபோல் தான் இருந்ததை எண்ணி கூனிக் குறுகினான். இப்பொழுது மாயையிலிருந்து விடுபட்டு காம விருப்பங்களைத் துறந்து, ஒவ்வொரு நொடிப்பொழுதும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவையில் ஈடுபட முடிவு செய்தான். தூய பக்தர்களான விஷ்ணு தூதர்களின் கணநேர சகவாசத்தினாலும் பகவானின் திருநாமத்தை ஜபித்ததாலும் அவனது இதயம் தூய்மையடைந்தது.

தூய பக்தியுடன் மீதமுள்ள வாழ்நாளை முழுமையான கிருஷ்ண உணர்வில் செயல்பட, இல்லம் துறந்து தீய சகவாசத்தை விட்டொழித்து புனித இடமான ஹரித்வார் நோக்கிச் சென்றான். அங்கே பகவான் விஷ்ணுவின் கோயிலில் புகலிடம் பெற்று, தன் செல்வம், மனம், வாக்கு, உடல் என அனைத்தையும் பகவானின் திருப்திக்காக, பக்தர்களின் வழிகாட்டுதலின்படி ஈடுபடுத்தினான்.

இவ்வாறு, புத்தியையும் மனதையும் பகவானின் திவ்ய அன்புத் தொண்டில் ஈடுபடுத்தி, பகவத் சிந்தனையில் முழுமையாக மூழ்கியிருந்தபோது, மீண்டும் விஷ்ணு தூதர்கள் அவனின் முன்பு தோன்றினர். அவர்களைக் கண்டவுடன் மிகுந்த மரியாதையுடன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிய அஜாமிளன் தன் உடலை ஹரித்வாரத்தின் கங்கைக் கரையில் கைவிட்டு, உண்மையான ஆன்மீக உடலுடன் ஆனந்தமாக வைகுண்ட விமானத்தில் ஏறி வைகுண்டம் சென்றான்.

முக்தி தரும் ஹரி நாமம்

அஜாமிளன் சமயக் கோட்பாடுகளைக் கைவிட்டு திருடுவதிலும் குடிப்பதிலும் ஈடுபட்டிருந்தான், பிறரைத் துன்புறுத்தினான், விலைமாதுவின் சகவாசத்தில் இன்பம் கண்டான்; இதனால், எம தூதர்கள் அவனை நரகத்திற்கு இழுத்துச் செல்ல முற்பட்டனர்.

அப்படிப்பட்ட பெரும்பாவியைக் காப்பாற்றி, வைகுண்டத்தின் நித்திய ஆனந்த வாழ்விற்கே அழைத்துச் சென்றது அவனது ஹரி நாம உச்சாடனம். ஞானம், அஷ்டாங்க யோகம், பிராயச்சித்தம் ஆகிய வழிமுறைகள் ஒருவனின் மனதை ரஜோ மற்றும் தமோ குணங்களிலிருந்து முற்றிலுமாக விடுவிக்க இயலாததால், அவன் மீண்டும் பௌதிகச் செயல்களில் ஈடுபட வேண்டியுள்ளது. ஆனால் பகவானின் நாமம், புகழ், ரூபம், லீலைகள் ஆகியவற்றைக் கேட்பதாலும் பாடுவதாலும் உள்ளம் முழுவதுமாகத் தூய்மை அடைகிறது.

இந்த இரகசியமான சரித்திர வர்ணனையினை பக்தி சிரத்தையுடன் கேட்டால், எல்லா பாவ விளைவுகளும் அழிந்து விடும். அஜாமிளனின் இந்த வரலாற்றைக் கேட்பதாலும் சொல்வதாலும் பெரும் பாவியும்கூட நரக வாழ்விலிருந்து தப்பித்து பகவானின் திருநாட்டை அடையும் வாய்ப்பைப் பெறுகிறான்.

மரண பயத்துடன் தற்செயலாக பகவானின் திருநாமத்தை உச்சரித்ததால், பாவ வாழ்வு வாழ்ந்த அஜாமிளன்கூட வைகுண்டம் அடையும் வாய்ப்பைப் பெற்றான் என்பதைப் பார்க்கும்போது, சிரத்தையுடன் குற்றமின்றி ஹரி நாமத்தை முறைப்படி ஜபிப்போர் பகவானின் திருநாட்டை அடைவது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாகிறது.

எம லோகம் சென்ற எம தூதர்கள் எமராஜருடன் மேற்கொண்ட உரையாடலை அடுத்த இதழில் காண்போம்.

ஹரி நாமத்தை முறைப்படி ஜபிப்போர் பகவானின் திருநாட்டை அடைவது உறுதி.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives