ஸ்ரீமதி ராதாராணியின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் இக்கட்டுரையை அனைத்து பக்தர்களும் படித்து அவரது அருளைப் பெறுவோமாக.
வழங்கியவர்: மதனகோபால தாஸ்
பக்தர்களில் சிறந்தவள் ஸ்ரீமதி ராதாராணி பலன்நோக்கிச் செயல்படும் கர்மிகளைக் காட்டிலும் வாழ்வின் உயர் மதிப்பை அறிந்த ஞானிகள் சிறந்தவர் களாகக் கருதப்படுகின்றனர். அத்தகு ஞானிகளில் யாரெல்லாம் முக்தி பெற்ற நிலைக்கு உயர்வு பெறுகின்றனரோ, அவர்கள் பக்தித் தொண்டை ஏற்றுக் கொள்கின்றனர். அத்தகு பக்தர்கள் ஞானிகளைக்காட்டிலும் உயர்ந்தவர்கள். இருப்பினும், கிருஷ்ணரின் மீதான தூய அன்பினை (பிரேமையை) வளர்த்துக் கொண்டவர்கள் இதர பக்தர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள். முன்னேறிய பக்தர்கள் அனைவரைக் காட்டிலும் விருந்தாவனத்தின் கோபியர்கள் உயர்ந்தவர்கள். ஏனெனில், அவர்கள் இடையர் குலச் சிறுவனான கிருஷ்ணரை முற்றிலும் சார்ந்துள்ளனர். அந்த கோபியர்களில், ஸ்ரீமதி ராதாராணியே உயர்ந்தவள். கிருஷ்ணருக்கு அவளை விடப் பிரியமானவள் வேறு எவரும் கிடையாது.
ராதாராணியின் வசீகரம்
மன்மதனின் அழகு அளவிட முடியாததாகக் கூறப்படுகிறது. அனைவரை யும் வசீகரிக்கும் தன்மை மன்மதனுக்கு உண்டு. அவனை வென்றவர்கள் மிகவும் அரிது. இப்படிப்பட்ட கோடி மன்மதர்களை வசீகரிக்கும் தன்மை பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு உண்டு. ஆகையால் தான் பகவான் கிருஷ்ணர், ’மதனமோஹனர் (மன்மதனையும் மயக்கக் கூடியவர்) என்று அழைக்கப்படுகிறார். ஆனால் அந்த மதனமோஹனரையே வசீகரிப்பவள்தான் ராதாராணி. ஆகவே, ராதாராணி ‘மதன மோஹன மோஹினி’ என்று அழைக்கப்படுகிறாள்.
ஸ்ரீமதி ராதாராணியின் கருணை
ஸ்ரீமதி ராதாராணி கருணையே வடிவானவள். உலக உயிர்வாழிகளிடம் மிகவும் கருணையும், பேரன்பும் உடையவள். கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவளாக இருப்பினும், துளியும் கர்வம் இல்லாதவள். விருந்தாவனத்தில் கோபியர்கள் கிருஷ்ணருடன் லீலைகளைப் புரிவதற்கான சந்தர்பத்தை ராதாராணியே ஏற்படுத்திக் கொடுப்பாள். இதர கோபியர்கள், கிருஷ்ணருடன் மாதுர்ய பாவத்தைப் (தெய்வீக காதல் உணர்வுகளைப்) பகிர்ந்துகொள்ளும்போது, தான் கிருஷ்ணருடன் இருக்கும் போது அடையும் மகிழ்ச்சியைவிட பல்லாயிரம் மடங்கு மகிழ்ச்சியடைவாள் ஸ்ரீமதி ராதாராணி. அவ்வளவு கருணை உடையவள் ராதாராணி, நாம் ராதாராணியின் அருளைப் பெற்றோமானால், கிருஷ்ணரின் அருள் தானாகவே கிடைக்கும். இதனால் கிருஷ்ணரை விட்டுவிடலாம் என்று நாம் நினைத்துவிடக் கூடாது. கிருஷ்ணரை விட்டுவிட்டால் ராதை தனது கருணையை நமக்கு வழங்க மாட்டாள்.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
என்னும் மஹா மந்திரத்தில் ‘ஹரே’ என்னும் சொல் 8 முறை வருகிறது. ‘ஹரா’ என்றால் ‘ராதா’ என்று பொருள். ‘ராதா’ என்னும் சொல், விளிச்சொல்லாக வரும்போது ‘ராதே’ என்று மாறுவதைப் போலவே, ‘ஹரா’ என்னும் சொல் ‘ஹரே’ என்று மாறி வருவதாக ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார்.
நாம் இந்த மஹா மந்திரத்தை பகவத் சிந்தனையுடன் வாயினால் உச்சரித்து காதால் நன்கு கேட்க வேண்டும். ‘ஹரே’ என்று சொல்லும்போது அச்சொல்லின் அலைகள் பரவ, ஸ்ரீமதி ராதாராணியின் பெயர் உச்சரிக்கப்படுவதை எண்ணி பகவான் கிருஷ்ணர் மகிழ்கிறார். அதே சமயம் ‘கிருஷ்ண’ என்று சொல்லும்போது, பகவான் கிருஷ்ணரின் பெயர் உச்சரிக்கப்படுவதைக் கேட்டு ராதாராணி மகிழ்ச்சியடைகிறாள். இந்த உணர்வை மனத்தில் நிறுத்தி நாம் ஜெபம் செய்ய வேண்டும். ராதாராணியானவள் நம்மீது கருணை வைத்து கோலோக விருந்தாவனத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்வாளேயானால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அதனைக் நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்.
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு
ஸ்ரீமதி ராதாராணி கிருஷ்ணரின் மீது வைத்துள்ள உயர்ந்த அன்பினை கிருஷ்ணரால்கூட உணர முடியவில்லை. அந்த அன்பினை உணர விரும்பிய அவர், ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபுவாக, சுமார் 500 வருடங்களுக்கு முன்பு மேற்கு வங்காளத்திலுள்ள மாயாப்பூரில் தோன்றினார். ஸ்ரீமதி ராதாராணியின் மனோபாவத்தையும் திருமேனி நிறத்தையும் தாங்கி, ஜடவுலகின் கட்டுண்ட ஆத்மாக்களாகிய நம்மையெல்லாம் விடுவிப்பதற்காக பரம கருணா மூர்த்தியாக சைதன்ய மஹாபிரபு தோன்றினார். ஸ்ரீமதி ராதாராணி கருணையே உருவானவள் என்பதால், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் கருணையின் பெருங்கடலாக காட்சியளித்தார். பகவானின் எல்லா அவதாரங்களிலும் அவரே மிகவும் கருணை வாய்ந்தவராகக் கருதப்படுகிறார்.
விருந்தாவனமும், ராதாராணியும்
வ்ருஷபானு ஸுதேதேவி ப்ரணமாமி ஹரி-ப்ரியே
“பொன்னிற மேனியுடையவரும், விருஷபானு மஹாராஜாவின் புதல்வி யுமான ராதாராணியே, விருந்தா வனத்தின் ஈஸ்வரியே, உம்மை நான் வணங்கு கின்றேன்.” ராதாராணி, விருந்தாவனத்தின் ஈஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். விருந்தாவனத்தில் ராதாராணிக்கு சிறப்பான மதிப்பு உண்டு. நாட்டையே கட்டுப்படுத்தும் பிரதமரின் இல்லத்தை அவரது துணைவி கட்டுப்படுத்துவதுபோல, எல்லா உலகையும் கட்டுப்படுத்தும் கிருஷ்ணரின் இல்லத்தை (விருந்தாவனத்தை) ஸ்ரீமதி ராதாராணி கட்டுப்படுத்துகிறாள். விருந்தாவனத்தில் கிருஷ்ணரைக்காட்டிலும் ராதைக்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. விருந்தாவனத்தின் சுவர்களிலெல்லாம் ‘ராதே’ என்ற பெயர் எழுதப்பட்டிருக்கும். விருந்தாவனத்தில் ரிக்ஷா ஓட்டுபவர்கள் ‘நகருங்கள்’ என்று சொல்வதற்கு பதில் ‘ராதே, ராதே’ என்றுதான் சொல்வார்கள்.
விருந்தாவனத்திலுள்ள ராதாகுண்டத்திற்கும் தனிமதிப்பு உண்டு. ராதாகுண்டத்தின் மீதுள்ள பெரும் மதிப்பினால், பொதுவாக இஸ்கான் பக்தர்கள் அதில் நீராடுவதில்லை. ராதாகுண்டத்தின் தீர்த்தத்தை தெளித்துக் கொண்டாலே ராதாதேவியின் கருணை நமக்குக் கிடைக்கும்.
ஸ்ரீமத் பாகவதமும் ஸ்ரீமதி ராதாராணியும்
இவ்வளவு சிறப்புமிக்க ஸ்ரீமதி ராதாராணியின் பெயர் ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்படவில்லையே என்று சிலர் வினவுவது வழக்கம். ஸ்ரீமத் பாகவதம் சுகதேவ கோஸ்வாமியால் மன்னர் பரீக்ஷித்திற்கு உபதேசிக்கப்பட்டதாகும், இது பகவான் கிருஷ்ணரைப் பற்றிய மிகவுயர்ந்த புராணம். கிருஷ்ணரைப் பற்றிப் பேசும்போது அங்கு ராதையும் இடம் பெறுதல் மிகவும் அவசியம். ஆனால், பாகவதத்தில் ஓர் இடத்தில்கூட ராதாராணி பிரத்யேகமாகக் கூறப்படவில்லை. ஒரே ஓர் இடத்தில் மட்டும் அவளது பெயர் மறைமுகமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்னவெனில், ‘ஸ்ரீராதே’ என்று ஒருமுறை சுகதேவர் கூறினாலும், அவர் தன்னை மறந்த பக்திப் பரவசத்தில் ஆழ்ந்து விடுவார். பின்னர், ஏழு நாட்களுக்குள் ஸ்ரீமத் பாகவதத்தை பரீக்ஷித்து மஹாராஜாவுக்கு உபதேசம் செய்ய முடியாது. ஆகவேதான், சுகதேவர் ஒருமுறைகூட ராதிகா தேவியைப் பற்றி நேரடியாக பேசவில்லை,
ஸ்ரீல பிரபுபாதரும் ராதாகுண்டமும்
இஸ்கானின் ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதரின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நிகழ்ச்சி ராதா குண்டத்தின் கரையில் நிகழ்ந்தது. ஸ்ரீல பிரபுபாதரின் குருவாகிய ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர், “உனக்குப் பணம் கிடைத்தால் புத்தகங்கள் அச்சடித்து விநியோகம் செய்வாயாக,” என்று ஸ்ரீல பிரபுபாதரிடம் கூறினார். ராதா குண்டத்தின் கரையில் அமைந்திருந்த கௌடீய மடத்தில் வழங்கப்பட்ட இந்த முக்கிய உபதேசம், இஸ்கான் அமைவதற்கும் வளர்ச்சி பெறுவதற்கும் மிக முக்கிய பங்காற்றி யுள்ளதை எவராலும் மறுக்க முடியாது.
ராதாஷ்டமி
ஸ்ரீமதி ராதாராணி தோன்றிய நன்னாள், ராதாஷ்டமி என்று அழைக்கப் படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி முடிந்தபின்னர், அதற்கு அடுத்த அஷ்டமியன்று (இவ்வருடம் செப்டம்பர் 15அன்று) இந்நன்னாள் வருகிறது, இவ்விழாவானது கிருஷ்ண பக்தர்களால் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
நம் கடமை
விருந்தாவனம் மனிதகுலத்திற்கு மிகவும் முக்கியமான இடமாகும். ஒவ்வொருவரும், வாழ்க்கையில் ஒருமுறையாவது விருந்தாவனத்திற்குச் சென்று வர வேண்டும். அதுவே மனிதப் பிறப்பின் பயனாகும். விருந்தாவனத்திற்குச் செல்பவர்கள் விருந்தாவனத்தின் ஈஸ்வரியான ராதிகாதேவியின் அருளைப் பெறுவது உறுதி, “விருந்தாவனத்தின் ஈஸ்வரியே, ஸ்ரீமதி ராதாராணியே, உங்களை வணங்குகின்றேன்; ஆன்மீக குருவிற்கும், உங்களுக்கும், பகவான் கிருஷ்ணருக்கும் சேவை செய்யும் பாக்கியத்தை எப்பொழுதும் எங்களுக்கு அருள்வீர்களாக,” என்னும் பிரார்த்தனையுடன் நம் மனோநிலையை அமைத்து, பகவத் சேவையிலும் குருவின் சேவையிலும் நாம் ஈடுபட்டால், ஜடவுலகின் தீராத துயரங்களான பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகிய துன்பங்களிலிருந்து விடுபட்டு, ஆன்மீக உலகமான கோலோக விருந்தாவனத்திற்கு பகவான் நம்மை அழைத்துச் செல்வார் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை,