வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.
தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த இதழில்: நான்காம் ஸ்கந்தம், அத்தியாயம் 20
சென்ற இதழில், பூமி எவ்வாறு பிருது மன்னரை சமாதானப்படுத்தி எல்லா வளங்களையும் வழங்கினாள் என்பதையும் பிருது மன்னர் எவ்வாறு யாகம் செய்தார் என்பதையும் கண்டோம். இந்த இதழில், பிருதுவின் யாக சாலையில் பகவான் விஷ்ணுவின் தோற்றத்தையும் அவருக்கும் பிருதுவிற்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலையும் காணலாம்.
அமைதிக்கான மார்க்கம்
பிருது மஹாராஜர் நிறைவேற்றிய யாகங்களால் முழுதும் திருப்தியடைந்த பகவான் விஷ்ணு தேவேந்திரனுடன் வேள்விச் சாலையில் தோன்றி, பின்வருமாறு கூறினார்.
அன்பிற்குரிய பிருது மன்னரே, உங்களது நூறாவது வேள்வியைத் தடுப்பதற்காக இந்திரன் செய்த தவறுகளை மன்னியுங்கள், அறிவில் சிறந்தோர் ஆத்மா வேறு, உடல் வேறு என்பதை உணர்ந்தவர்கள். முந்தைய ஆச்சாரியர்களின் கட்டளைகளின்படி நடப்பதினால் அவர்களுக்கு வெற்றியே கிட்டுகிறது. இது முக்குணங்களின் கீழ் உள்ளவர்களுக்கு சாத்தியமில்லை. உடல்ரீதியிலான கருத்துகளிலிருந்து விடுபட்டு பரமாத்மா, ஆத்மா பற்றிய முழு அறிவுடையவன் முக்குணங்களால் பாதிக்கப்படுவதில்லை. அவன் எப்பொழுதும் எனது அன்புத் தொண்டில் ஈடுபடுகிறான். அவன் பலவிதமான தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் சுயநல நோக்கமின்றி அனைத்தையும் எனது பக்தித் தொண்டில் ஈடுபடுத்துவதால் முழுமையாக திருப்தியடைகிறான். அவனது மனம் பூரணமாக அமைதியடைகிறது.”
அரசர்களின் கடமை
பகவான் தொடர்ந்து கூறலானார்: இன்ப துன்பங்களில் பாதிக்கப்படாமல் மனதையும் புலன்களையும் முழு கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு உன்னத நிலையில் இருந்து மக்களைப் பாதுகாப்பது ஒன்றையே உங்களது கடமையாக ஏற்றுக்கொள்ளுங்கள். அவ்வாறு செய்வதால் ஒரு மன்னன் குடிமக்களின் புண்ணிய செயல்களது பலன்களில் ஆறில் ஒரு பங்கை, அடுத்த பிறவியில் பெறுகிறான். அவ்வாறு பாதுகாப்பு தராமல் வரிகளை மட்டும் வசூல் செய்யும் நிர்வாகி, மக்களின் பாவச் செயல்களின் பலனை அனுபவிக்க வேண்டும். சாஸ்திரங்களின்படி நடக்கும் அந்தணர்களின் வழிகாட்டுதலின் கீழ் மக்களை கிருஷ்ண உணர்வில் ஈடுபடச் செய்து பாவங்கள் செய்யாதபடி பாதுகாக்க வேண்டும்.
எல்லா வகையான இருமைகளிலும் சமநிலையில் மனதை வைத்து பக்தித் தொண்டாற்றுவதால் நீங்கள் எனக்கு பிரியமானவராக ஆவீர். உமக்கு வேண்டிய வரத்தை எம்மிடருந்து பெறுவீராக.”
இவ்வாறு பகவான் மன்னரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கே நின்று கொண்டிருந்த இந்திரன் தமது செயல்களால் வெட்கமுற்று பிருது மன்னரின் திருவடித் தாமரைகளைத் தொடுவதற்காக அவர் முன் வீழ்ந்தார். ஆனால், பிருதுவோ பெரும் மகிழ்ச்சியினால் அவரை அப்படியே தாங்கி மார்புறத் தழுவி, வேள்விக்குரிய குதிரையைத் திருடியதால் அவர்மீது ஏற்பட்ட கோபத்தைக் கைவிட்டார். இதனால் அவர் பகவானுக்கு மேலும் பிரியமானவரானார்.
பகவானின் பாசம்
பிருது மஹாராஜர் கண்களில் நீர் மல்க, குரல் தழுதழுக்க பகவானைக் கூர்ந்து பார்க்கவோ பேசவோ முடியாத பரவச நிலையில், உள்ளத்தினுள்ளோ பகவானைத் தழுவிக் கொண்டு, கூப்பிய கரங்களுடன் அமைதியே வடிவாக நின்று கொண்டிருந்தார்.
பகவான் புறப்பட தயாராக இருந்தாலும் பிருது மஹாராஜரின் மீதுள்ள பாசத்தால் கருடனின் தோள்மீது ஒரு கையை வைத்தபடி சற்றுநேரம் நின்றார். பிருது மஹாராஜர் தம் கண்களில் இருந்த நீரைத் துடைத்தபடி மீண்டும்மீண்டும் அவரை தரிசித்தபடி இருந்தார். அதன் பின்னர் கீழ்க்கண்டவாறு பிரார்த்தனைகளைச் செலுத்த துவங்கினார்.
மன்னரின் பிரார்த்தனை
எண்ணற்ற வரங்களை அள்ளித் தரும் வரதராஜரே, உமது திருவடித் தாமரையிலிருந்து கிடைக்கும் பக்தி எனும் அமிர்தத்தையே யாம் வேண்டுகிறேன். அஃது இல்லாமல் உமது திருவுடலில் இணையக்கூடிய கைவல்ய முக்தியை நான் ஒருபோதும் விரும்ப மாட்டேன். நான் உம்மிடம் வேண்டுவது, உமது தூய பக்தர்களின் திருவாயிலிருந்து வெளிப்படும் உமது பெருமைகளைக் கேட்பதற்கு பத்து இலட்சம் காதுகள் வேண்டும் என்னும் வரமே.
உமது மிகச்சிறந்த பக்தர்களின் நாவினால் நீர் புகழப்படும் அந்த தெய்வீக ஓசை, தன்னை மற்ந்த கட்டுண்ட ஆத்மாக்களை உமது நித்தியத் தொண்டன் என்னும் உண்மையான நிலைக்கு படிப்படியாக அழைத்துச் செல்கிறது. எனவே, அப்புகழை எப்போதும் கேட்பதற்குரிய பாக்கியத்தைத் தவிர வேறெந்த வரமும் வேண்டேன். ஒருமுறையேனும் உமது புகழைக் கேட்ட புத்திமான், உமது புகழைப் பாடும் அந்த உண்மையான பக்தர்களின் சகவாசத்தை ஒருபோதும் கைவிட மாட்டான். செல்வத் திருமகளும்கூட உமது புகழையும் பெருமைகளையும் கேட்கவே விரும்புகிறாள். அந்த அன்னையைப் போலவே நானும் உமது தாமரைத் திருவடி சேவையையே விரும்புகிறேன்.
முக்திபெற்ற மாமுனிவர்கள்கூட எப்போதும் தங்கள் தாமரைத் திருவடிகளில் சரண்புகுந்து அவற்றையே தியானித்து பக்தித் தொண்டிலேயே ஈடுபடுகின்றனர். அத்தகைய பக்தித் தொண்டின் மூலவே ஒருவர் மிக எளிதாக பௌதிக வாழ்வின் மாயையிலிருந்து வெளிவர முடியும். ஆனாலும், உமது மாயா சக்தியாலும் வேதங்களின் இனிய வார்த்தைகளினாலும் மயங்கிய மக்கள் பலன்தரும் செயல்களில் ஈடுபட்டு, சமுதாயம், நட்பு, காதல் என்பன போன்ற பௌதிக இன்பங்களை நாடுகின்றனர். இத்தகைய வரங்களைப் பெறுமாறு என்னை தயவுசெய்து கேட்காதீர்கள்.
ஒரு தந்தை எவ்வாறு மகன் எதையும் கேட்காமலேயே அவனுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்கிறாரோ, அதுபோல எனக்கு எது நன்மை என தாங்கள் கருதுகின்றீர்களோ அதையே அருள்வீராக.”
பகவானின் ஆசி
இவ்வாறு மிக அற்புதமாக பிரார்த்தனை செலுத்திய பிருது மகாராஜரிடம் பகவான் கூறினார்: அன்பார்ந்த மன்னரே, நீங்கள் எப்போதும் எனது பக்தித் தொண்டிலேயே ஈடுபட்டிருக்க வேண்டும் என்று ஆசிர்வதிக்கிறேன், உங்களது ஆழமான பொருள் நிறைந்த பிரார்த்தனைகளும் தூய்மையான நோக்கமும் மாயா சக்தியை கடக்க உதவும். எனது கட்டளைகளை நம்பிக்கையுடன் நிறைவேற்றுபவன் எப்போதும் நல்லதிர்ஷ்டத்தையே காண்பான்.”
இவ்வாறு ஆசி வழங்கிய பின், அங்கிருந்த அனைவரின் வணக்கத்தையும் ஏற்றுக் கொண்ட பகவான், அவர்களின் மனதை கவர்ந்து இருப்பிடம் திரும்பினார், அனைவரும் மிக்க மகிழ்ச்சியுடன் தத்தமது இருப்பிடத்திற்குத் திரும்பினர்.