புரியில் ஸ்ரீ சைதன்யரின் ரத யாத்திரை லீலைகள்

Must read

பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தென்னிந்தியா முழுவதும் பயணம் செய்து மக்களை எவ்வாறு விடுவித்தார் என்பதை சென்ற இதழில் கண்டோம். இந்த இதழில் மஹாபிரபு புரிக்குத் திரும்பிய லீலைகளையும் ரத யாத்திரையில் நிகழ்த்திய லீலைகளையும் காணலாம்.

புரிக்குத் திரும்புதல்

இரண்டு வருடம் கழித்து, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு எப்போது புரிக்குத் திரும்பினாரோ, அப்போதுதான் அவரது பக்தர்களுக்கு உயிரே வந்ததுபோல இருந்தது. நித்யானந்தர், ஜகதானந்தர், முகுந்தர், ஸார்வபௌம பட்டாசாரியர் முதலியோரை ஸ்ரீ சைதன்யர் முதலில் சந்தித்தார், இராமானந்த ராயரின் பெருமைகளை ஸார்வபௌமரிடம் தெரிவித்தார். மன்னரின் குருவான காசி மிஸ்ரரின் வீட்டில் பகவான் சைதன்யருக்காக ஓர் அறையை ஸார்வபௌமர் அமைத்துக் கொடுத்தார். அந்த அறை, வசதியான முறையில் ஜகந்நாதர் கோயிலுக்கு அருகிலும், அதே சமயத்தில் தனிமையாகவும் அமைதியுடனும் திகழ்ந்தது.

அதன் பின்னர், மஹாபிரபுவின் ஆன்மீக சகோதரரான கோவிந்தர் தமது குருவான ஈஸ்வர புரியின் அறிவுரைப்படி மஹாபிரபுவின் நேரடி கைங்கரியத்தில் ஈடுபடுவதற்காக புரிக்கு வந்து சேர்ந்தார். குருவின் கட்டளை என்பதால், மஹாபிரபுவும் அவரை தமது அந்தரங்க சேவகராக ஏற்றார்.

நவத்வீபத்தைச் சார்ந்த புருஷோத்தம ஆச்சாரியரும் அங்கே ஸ்வரூபர் என்ற பெயருடன் வர, மஹாபிரபு அவரை ஸ்வரூப தாமோதரர்” என்று அழைத்து தம்முடைய அந்தரங்க தோழராக இணைத்துக் கொண்டார். ஸ்வரூப தாமோதரர் மிகவும் கற்றறிந்த பண்டிதரும் மஹாபிரபுவின் பக்தர்களில் தலைசிறந்த அதிகாரமுடையவரும் ஆவார். மற்ற பக்தர்கள் சில சமயங்களில் தவறான தத்துவக் கருத்துகளை எடுத்துரைத்தால்கூட, ஸ்வரூப தாமோதரர் ஒருபோதும் குழப்பமடையாமல் தவறுகளை சரி செய்வார். மேலும், அவர் கௌராங்கரின் உணர்ச்சிகளை உள்ளூர உணர்ந்து, அவரது பக்தி பாவத்தை தூண்டும்படியான இரகசியமான பக்திப் பாடல்களை இனிமையாகப் பாடுவார்; அந்த அளவிற்கு அவர் பகவானிடம் நெருக்கமாக இருந்தார்.

பிரதாபருத்ரரின் ஏக்கம்

ஒரிசா மன்னரான பிரதாபருத்ரர், பகவான் சைதன்யரின் வியக்கத்தக்க செயல்களையும் ஆழ்ந்த பக்தியையும் பற்றிக் கேள்விப்பட்டு, அவரைக் காண பேராவல் கொண்டார். ஆனால் மன்னருடன் உறவுகொள்வது சந்நியாசிக்கு உகந்ததல்ல என்று கருதிய சைதன்ய மஹாபிரபு, அவரைக் காண மறுத்து, பௌதிக வாழ்வைக் கடந்து, பகவானின் திவ்யமான அன்புத் தொண்டில் ஈடுபடுவதில் தீவிர விருப்பம் கொண்டுள்ள ஒருவனுக்கு, புலனுகர்ச்சியில் ஈடுபட்டிருக்கும் பௌதிகவாதியைக் காண்பதும் அதே போன்ற விருப்பம் கொண்ட பெண்ணைக் காண்பதும் விஷத்தை விரும்பி அருந்துவதைக் காட்டிலும் இழிவானதாகும்,” என்று பிரகடனம் செய்தார்.

பெருத்த ஏமாற்றமடைந்த மன்னர், ஸார்வபௌம பட்டாசாரியரையும் இராமானந்த ராயரையும் தமக்காக மஹாபிரபுவிடம் பரிந்துரைக்கும்படி மீண்டும்மீண்டும் வேண்டினார். ஆனால், முடியாது” என்பதில் பகவான் பிடிவாதமாக இருந்தார், புரியை விட்டே சென்று விடுவேன் என்று அச்சுறுத்தவும் செய்தார். ஸார்வபௌமர் இதனை பிரதாபருத்ரரிடம் தெரிவித்தபோது அவரது இதயம் நொறுங்கியது, பெரிதும் வருந்தினார், புலம்பினார். இருப்பினும், என்றாவது ஒருநாள் மஹாபிரபுவின் கருணையைப் பெறுவதில் மன்னர் நம்பிக்கையுடன் இருந்தார்.

நவத்வீபவாசிகளின் வருகை

பகவான் ஜகந்நாதரை அவரது கோயிலிலிருந்து குண்டிசா எனப்படும் மற்றொரு கோயிலுக்கு பெரிய ரதத்தினால் இழுத்துச் செல்லப்படக்கூடிய பிரபலமான திருவிழா, ரத யாத்திரை என்று அறியப்படுகின்றது. இத்திருவிழாவில் கலந்துகொள்வதற்காக தொன்றுதொட்டு பல்வேறு யாத்திரிகர்கள் வங்காளத்திலிருந்து புரிக்கு வருவர். அப்பழக்கத்தைப் பின்பற்றி, நவத்வீபத்தில் வாழ்ந்த கௌராங்கரின் கிருஹஸ்த பக்தர்களில் பெரும்பாலானோர் அவரைக் காண்பதற்காக வருடந்தோறும் ரத யாத்திரையின்போது புரிக்கு வரத் தொடங்கினர், மழைக் காலத்தின் நான்கு மாதங்கள் முழுவதும் அங்கேயே இருப்பர்.

முதல் வருடம் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட பக்தர்களைக் கொண்ட குழு புரியை வந்தடைந்தது. பெரிய அருவவாதியாக இருந்த ஸார்வபௌம பட்டாசாரியர் தங்களின் மத்தியில் ஆடிப் பாடுவதைக் கண்டு அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுற்றனர்.

குறுகிய காலத்தில், ஹரிதாஸ தாகூர் வங்காளத்திலிருந்து வந்தார். புகழ்பெற்ற பக்தராக இருந்தபோதிலும் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த காரணத்தினால், ஜகந்நாதரின் கோயிலுக்குள் நுழைவதற்கு அவர் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், மஹாபிரபு அவருக்காக ஒரு பிரத்யேகமான இடத்தை ஏற்பாடு செய்தார், தினமும் அவருக்கு மஹா பிரசாதம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தார், தாமே நேரடியாக அவரது இடத்திற்கே சென்று தினமும் அவருக்கு தரிசனமளித்தார். இதன்மூலம், ஒரு பக்தர் பகவானிடம் முழுமையாக சரணடைந்தால், பகவானைக் காண அவருக்குத் தடை விதிக்கப்பட்டாலும், அவரைக் காண பகவானே வருவார் என்பது மெய்ப்பிக்கப்பட்டது.

மஹாபிரபு தமது சகாக்களுடன் குண்டிசா கோயிலை சுத்தம் செய்தல்

குண்டிசா கோயிலைத் தூய்மை செய்தல்

வருடந்தோறும் ரத யாத்திரைக்கு முந்தைய நாளன்று, பகவான் ஜகந்நாதரின் வருகையை முன்னிட்டு, சைதன்ய மஹாபிரபுவும் அவரது சகாக்களும் இணைந்து குண்டிசா கோயிலை சுத்தம் செய்வர். அவர்கள் நூற்றுக்கணக்கான துடைப்பங்களையும் நீர்ப்பானைகளையும் எடுத்து, கோயிலையும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் முழுமையாக இரண்டு முறை கூட்டி, நீர் ஊற்றி சுத்தம் செய்தனர். இதயத்தினுள் தோன்றுவதற்கான அழைப்பை கிருஷ்ணர் ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, இதயத்திலுள்ள அனைத்து அசுத்தங்களையும் ஒரு பக்தன் கண்டிப்பாகக் களைய வேண்டும் என்பதை இந்த லீலையின் மூலமாக ஸ்ரீ சைதன்யர் செய்து காட்டினார்.

ரத யாத்திரையில் நடனம்

ரத யாத்திரை நாளன்று, கோயிலிலிருந்து வெளியே அழைத்து வரப்பட்ட பகவான் ஜகந்நாதர், தமது ரதத்தில் அமர்த்தப்பட்டார். நாட்டின் மாமன்னராக இருந்தபோதிலும், பிரதாபருத்ரர் தம்மை பகவான் ஜகந்நாதரின் சாதாரண சேவகனாகக் கருதினார். அதனால், அவர் ரத யாத்திரை தொடங்குவதற்கு முன்பாக, தங்கத் துடைப்பத்தைக் கொண்டு வீதியைப் பெருக்கினார். அவரது அந்த அடக்கமான செயல் பகவான் சைதன்யரைக் கவர்ந்தது.

ஊர்வலத்தில் ஏழு ஸங்கீர்த்தனக் குழுக்கள் கலந்து கொண்டன. பகவான் ஜகந்நாதரின் மலர்ந்த முகத்தை கௌராங்கர் உற்று நோக்கியபோது, ஏழு குழுக்களிலும் அவர் ஒரே நேரத்தில் குதித்து ஆட ஆரம்பித்தார். பெரும்பாலான பக்தர்கள் மஹாபிரபு தங்களது குழுவில் மட்டுமே இருந்ததாக எண்ணினர். ஆனால் மிகவும் நம்பகமான அடியார்களால், மஹாபிரபு தம்மை ஏழு ரூபங்களில் வியாபித்துக் கொண்டுள்ளார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. பொன்னிற மலையைப் போன்ற கௌராங்கர் காற்றில் தாவிக் குதித்தபோது, பூமியே கவிழ்ந்துவிடும் போலத் தோன்றியது.

அதனைத் தொடர்ந்து, பகவான் சைதன்யர் பல்வேறு சாஸ்திர பிரார்த்தனைகளை ஜகந்நாதருக்கு அர்ப்பணம் செய்தார். பௌதிக காதல் கவிதையைப் போன்று தோன்றிய பாடல் ஒன்றையும் பாடினார், அதன் பொருளை ஸ்வரூப தாமோதரரால் மட்டுமே புரிந்துகொள்ள முடிந்தது. இருப்பினும், பிற்காலத்தில் ஸ்ரீல ரூப கோஸ்வாமியாலும் அதன் பொருளைப் புரிந்துகொள்ள முடிந்தது. விருந்தாவனத்தை விட்டுச் சென்ற கிருஷ்ணரை பல வருடத்திற்குப் பின்னர், ஸ்ரீமதி ராதாராணியும் விருந்தாவனவாசிகளும் குருக்ஷேத்திரத்தில் சந்தித்தபொழுது, ஸ்ரீமதி ராதாராணியிடம் என்ன மனோபாவம் இருந்ததோ அந்த மனோபாவத்தை மஹாபிரபு ஏற்றிருந்தார். கிருஷ்ணரை பகவான் ஜகந்நாதரின் வடிவில் துவாரகையிலிருந்து (ஜகந்நாதர் கோயிலிலிருந்து) மீண்டும் விருந்தாவனத்திற்கு (குண்டிசா கோயிலுக்குக்) கொண்டு செல்லும் உணர்ச்சிகளுடன் மஹாபிரபு ரத யாத்திரையை அனுபவித்துக் கொண்டிருந்தார்.

ஜகந்நாதரின் ரதத்திற்கு முன்பு நடனமாடிய பகவான் சில சமயங்களில் விரைவாக நகர்ந்தார், அப்போது ஜகந்நாதரும் விரைவாக அவரைப் பின்தொடர்ந்து செல்வார். மஹாபிரபு மெதுவாக நகர்ந்தபொழுது ஜகந்நாதரும் மெதுவாக நகர்ந்தார்.

பிரதாபருத்ரர் பகவான் ஜகந்நாதருடைய ரதத்தின் முன்பு வீதியைத் தூய்மைப்படுத்துதல்

மன்னருக்கு கருணை வழங்குதல்

பாதையின் பாதி வழியில் ஜகந்நாதரின் தேரை சிறிது நேரம் நிறுத்துவது வழக்கம். அப்போது, நடனத்தினால் களைப்புற்றிருந்த மஹாபிரபு ஓய்வெடுப்பதற்காக ஒரு தோட்டத்தினுள் நுழைந்தார். ஸார்வபௌம பட்டாசாரியரால் முன்னதாகவே அறிவுறுத்தப்பட்டபடி, மன்னர் பிரதாபருத்ரர் எளிமையான உடையுடன் எந்த ஆபரணமும் இன்றி அடக்கமான வைஷ்ணவரைப் போன்ற தோற்றத்துடன் அத்தோட்டத்தினுள் நுழைந்தார். அங்கிருந்த எல்லா பக்தர்களின் அனுமதியைப் பெற்று, பகவான் சைதன்யரின் கால்களையும் பாதங்களையும் பிடித்துவிட ஆரம்பித்தார். ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து நேர்த்தியான கோபி கீதத்தை அவர் பாடத் தொடங்கினார்.

தவகதாம்ரும் என்று தொடங்கும் கோபி கீதத்தின் ஒன்பதாவது பாடலைக் கேட்ட மாத்திரத்தில், கௌராங்கர் பேரானந்தத்தினால் எழுந்து, தாங்கள் எனக்கு விலைமதிப்பற்ற இரத்தினங்களை வழங்கியுள்ளீர். ஆனால் தங்களுக்குத் திருப்பித் தர என்னிடம் எதுவும் இல்லாததால், நான் தங்களை அரவணைத்துக்கொள்கிறேன்,” என்று கூறி அவரைக் கட்டித் தழுவினார். பின்னர் பக்திப் பரவசத்துடன் மீண்டும்மீண்டும் அவர் அதே ஸ்லோகத்தை உச்சரிக்க ஆரம்பித்தார். மீண்டும் மன்னரை அரவணைத்து தனது கருணையை அவர்மீது முழுமையாகப் பொழிந்தார். அனைத்தையும் அறிந்தவராக இருந்தபோதிலும், தம்முடன் உரையாடியவர் மாறுவேடத்திலுள்ள மாமன்னர் என்பதை அறியாததுபோல் பகவான் நடந்து கொண்டார்.

பகவான் ஜகந்நாதரின் ரதத்திற்கு முன்பு மஹாபிரபு நடனமாடுதல்

ரதம் குண்டிசா செல்லுதல்

ஜகந்நாதர் மீண்டும் தமது பயணத்தைத் தொடர்ந்தார். சிறிது தூரம் சென்ற பின்னர், திடீரென்று ரதம் நின்றுவிட்டது. நூற்றுக்கணக்கான மனிதர்கள் தங்களது முழு வலிமையைக் கொண்டு வடத்தை பலமாக இழுத்தனர், ஆனால் தேரோ சிறிதும் நகரவில்லை; மாபெரும் பலசாலிகள் அழைத்து வரப்பட்டனர், யானைகள் கதறுமளவிற்குத் தூண்டப்பட்டன, ஆனால் பயனில்லை. என்ன செய்வதென்று யாருக்கும் புரியவில்லை. தமக்குத் தொண்டு செய்வதற்கான வாய்ப்பை பக்தர்களுக்கு நல்குவதற்காகவே ஜகந்நாதர் தேரில் வருவதற்கு சம்மதிக்கின்றார், ஆனால் அவர் தமது சொந்த விருப்பத்தில் நகர்கின்றார்ஶீஇதுவே உண்மை. சிறிது நேரம் கழித்து, தேரின் பின்னே சென்ற கௌராங்கர் தமது தலையினால் அதனைத் தள்ளினார். தேர் மெதுவாக மீண்டும் முன்னோக்கி உருள ஆரம்பித்தது, ஜகந்நாதரும் தமது உலாவைத் தொடர்ந்தார். பலமடங்கு பேரொலி பெற்ற கீர்த்தனம், குண்டிசா கோயில் வரை தொடர்ந்தது, ஜகந்நாதர் கீழிறக்கப்பட்டார்.

பக்தர்களுக்கு பிரியா விடை கொடுத்தல்

வங்காளத்திலிருந்து வந்த பக்தர்கள் அனைவரும் மழைக்காலத்தின் நான்கு மாதங்கள் முழுவதும் புரியிலேயே தங்கினர். பகவான் சைதன்யரின் இனிய சங்கத்தினால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் திளைத்திருந்த அவர்கள், பகவான் ஜகந்நாதரின் திருப்திக்காக பல்வேறு விழாக்களை கொண்டாடினர். நான்கு மாதம் முடிந்த பின்னர், கௌராங்கர் அவர்களை வங்காளத்திற்குத் திரும்பும்படி வேண்டினார். ஜாதி, இனம் என்று பாராமல், வங்காளத்திலுள்ள அனைவருக்கும் கிருஷ்ண பிரேமையை வழங்குமாறு அவர் நித்யானந்தரையும் அத்வைதரையும் குறிப்பாகக் கேட்டுக் கொண்டார். மஹாபிரபுவின் சங்கத்தினை விட்டுவிலக பக்தர்களுக்குத் துளியும் விருப்பமில்லை. ஒவ்வொரு நாளும் அவர்கள் கிளம்புவதற்குத் தங்களை தயார்படுத்தியபோதிலும், அவர்களால் கிளம்ப இயலவில்லை. இறுதியில், தத்தமது கடமைகளைப் பேணுவதற்காகத் திரும்பிச் செல்லும்படி அவர்கள் அனைவரையும் பகவான் சைதன்யர் வலியுறுத்தினார்.

மேலும், நான் புரியில் தங்கியிருந்தாலும், ஒரே நேரத்தில் வங்காளத்திலும் இருக்கின்றேன். குறிப்பாக, ஸ்ரீவாஸ பண்டிதரின் இல்லத்தில் கீர்த்தனம் நடைபெறும்போதும், நித்யானந்தர் ஆனந்தமாக நடனமாடும்போதும், நான் உங்களுடனேயே இருக்கின்றேன். எனது தாயின் தாமரை பாதங்களைக் காண்பதற்காக தினமும் நான் நவத்வீபத்திற்குச் செல்கின்றேன்,” என்று அவர்களுக்கு உறுதியளித்தார்.

(இக்கட்டுரை ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் அடிப்படையில், தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமியினால் எழுதப்பட்ட பிரேம அவதாரம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு என்னும் நூலைத் தழுவி வழங்கப்பட்டுள்ளது)

அடுத்த இதழில்: மஹாபிரபுவின் வட இந்திய பயணங்கள்

மன்னர் பிரதாபருத்ரர் மஹாபிரபுவிற்கு பணிவிடை செய்தல்

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives