பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் யமுனைக் கரையில் லீலைகள் புரிய, அவரது திருப்பாதம் தனது நீரில் பதியாதா என கங்காதேவி பெரிதும் ஏங்கினாள். கங்கையின் ஏக்கத்தை போக்க பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கலி யுகத்தில் சைதன்ய மஹாபிரபுவாக கங்கைக் கரையோரத்தில் அமைந்துள்ள நவத்வீபத்தில் தோன்றினார்.
சைதன்ய மஹாபிரபு தமது 48 வருட பூலோக லீலையில் முதல் 24 வருடத்தை நவத்வீபத்திலும், இறுதி 24 வருடத்தை புரியிலும் அரங்கேற்றினார். புரியில் வசித்த முதல் ஆறு வருடத்தில், அவர் பல்வேறு பயணங்களை மேற்கொண்டார். சுருக்கமாகக் கூறினால் சைதன்ய மஹாபிரபு தமது முதற்பாதி திவ்ய லீலையை கங்கைக் கரையிலும் பிற்பாதி திவ்ய லீலையை வங்கக் கடற்கரையிலும் அரங்கேற்றினார்.
வங்காள பூமியானது கௌட மண்டல பூமி எனப்படுகிறது. இது மேற்கு வங்காளம் (இந்தியாவின் ஒரு மாநிலம்), கிழக்கு வங்காளம் (வங்காளதேச நாடு) என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இன்றைய ஒடிசாவின் சில பகுதிகளும் கௌட மண்டல பூமியில் அடங்கும். இப்பகுதிகள் பசுமை வளத்திற்கும் நீர் வளத்திற்கும் பெயர்பெற்றவை.
சைதன்ய மஹாபிரபுவும் அவரது நித்திய சகாக்களும் தோன்றி திவ்யமான லீலைகளைப் புரிந்த பூமியையே “கௌட மண்டல பூமி” என கௌடீய வைஷ்ணவ ஆச்சாரியர்கள் கூறுகின்றனர்.
கிருஷ்ண உணர்வு பிரச்சாரத்தின் அச்சாணியாக திகழ்ந்த கெளடீய வைஷ்ணவ ஆச்சாரியர்களில் ஒருவரான ஸ்ரீல பக்திவினோத தாகூர் இவ்வுலகில் தோன்றுவதற்கும் இறுதியாக கிருஷ்ணரின் நித்திய லீலையில் மீண்டும் நுழைவதற்கும் கோல்கத்தா நகரையே தேர்ந்தெடுத்தார். ஸ்ரீல பிரபுபாதரின் குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் இவ்வுலகை விட்டுப் பிரிவதற்கு கோல்கத்தாவையே தேர்ந்தெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சைதன்ய மஹாபிரபு கிருஷ்ண உணர்வைப் பிரச்சாரம் செய்யும்படி நித்யானந்த பிரபுவிடம் கட்டளையிட்டபோது, நித்யானந்த பிரபு கோல்கத்தாவை மையமாக வைத்தே செயல்பட்டார். நித்யானந்த பிரபு கோல்கத்தாவிற்கு அருகிலிருக்கும் கர்தஹா என்னுமிடத்தில் இல்லத்தை ஏற்படுத்தி முழு வீச்சில் தீவிரமாக கிருஷ்ண உணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சைதன்ய மஹாபிரபு இன்றைய கோல்கத்தா நகருக்கு அருகில் வசித்த பாகவத ஆச்சாரியரிடமிருந்து தொடர்ச்சியாக ஏழு நாள் ஸ்ரீமத் பாகவதத்தைப் பாட்டு வடிவில் கேட்டதால், கெளடீய வைஷ்ணவர்கள் இவ்விடத்தை குப்த விருந்தாவனம் என்றும் போற்றுகின்றனர்.
வைஷ்ணவ திருத்தலங்களின் திருவிக்ரஹ அவதாரங்களில் பல்வேறு தன்னிகரற்ற சிறப்புகளைக் கொண்டவர் காஞ்சி வரதராஜப் பெருமாள். விரும்பிய வரத்தை பக்தர்களுக்கு அருள்புரிவதால் இப்பெருமாளை வரதர் என்று அன்போடு அழைப்பர். வரதரை தரிசிப்பவர்கள் மண்ணுலகின் பாக்கியவான்களாக போற்றப்படுகின்றனர்.
வரதரின் திவ்யமான லீலைகளைக் கேட்பதன் மூலம் அவர் மீதான அன்பை பெருமளவில் அதிகரித்துகொள்ள இயலும். வரதருக்கும் அவரது பக்தர்களுக்கும் இடையிலான லீலைகள் மிகவும் புகழ் பெற்றவை. வரதரின் தலைசிறந்த பக்தர்களான காஞ்சிபூர்ணர், இராமானுஜர், மற்றும் கூரத்தாழ்வாரிடம் வரதர் மேற்கொண்ட லீலைகளில் சிலவற்றை இங்கு காண்போம்.