உண்மையில் சொல்லப்போனால், கீதாசாரம் போன்ற சுருக்கங்களுக்கான தேவை மக்களின் சோம்பேறித்தனத்தினால் மட்டுமே எழுகின்றது. தற்போதைய உலக மக்களில் பெரும்பாலானோர் எதிலும் எப்போதும் பெரும் சோம்பேறிகளாக உள்ளனர்; சோம்பேறிகளால் எதையும் அறிந்துகொள்ள இயலாது. அவர்களுக்கு எல்லா விஷயங்களும் சுருக்கமாகவும் உடனடியாகவும் தேவைப்படுகின்றன.
குருவினால் புறக்கணிக்கப்பட்டவன் கிருஷ்ணராலும் புறக்கணிக்கப்படுகிறான். கிருஷ்ணர் பக்தர்களைக் காப்பவர், துஷ்டர்களை அழிப்பவர். ஏகலைவன் குரு பக்தனாக இருந்திருந்தால், கிருஷ்ணர் ஏகலைவனைக் கொன்றிருக்க மாட்டார். அவன் துஷ்டனாக இருந்த காரணத்தினால்தான், கிருஷ்ணர் தனது கரங்களாலேயே அவனைக் கொன்றார். கிருஷ்ணர் அசுரர்களை மட்டுமே கொல்வார், பக்தர்களை என்றும் பாதுகாப்பார். ஏகலைவன் அசுரத் தன்மை கொண்டவன் என்பதை இதிலிருந்து தெளிவாக உணரலாம்.
ஹரி நாம ஸங்கீர்த்தனம் நிச்சயம் மழையை வரவழைக்கும், இதில் சந்தேகத்திற்கு இடமில்லை. இதனை நாங்கள் உறுதியாகக் கூற முடியும். தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையைத் தீர்ப்பதில் ஆர்வமுடையோர் சற்றும் தயங்காமல் இதனை முனைப்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இராமரை ஏற்று கிருஷ்ணரை மறுக்கும் மக்களிடம் இருக்கும் அடிப்படைப் பிரச்சனை, கடவுளை மனிதனின் தளத்தில் வைத்துப் பார்ப்பதே. முழுமுதற் கடவுள் நமது விதிகளுக்கு அப்பாற்பட்டவர் என்பதை உணரும்போது மட்டுமே உண்மையான இறையுணர்வு ஏற்படுகிறது.
“கடவுள் யார் என்று எங்களுக்குத் தெரியாது, கண்களில் தெரிந்தவர்களுக்கு தொண்டு செய்கிறோம்”–இதனை நாம் அடிக்கடி கேட்கிறோம். கடவுள் யார் என்பதையே அறியாத இவர்கள், கடவுளுக்கு எவ்வாறு தொண்டு செய்வது என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்கும் பட்சத்தில், மக்களுக்குத் தொண்டு செய்வதே மாதவனுக்கு செய்யும் தொண்டு என்று கூறுவதில் என்ன நியாயம்? மாதவன் யார் என்றே தெரியாது, ஆனால் மாதவனுடைய சேவை இதுதான் என்று எப்படி வரையறுக்க முடியும்?