அஜாமிளனின் வாழ்க்கை வரலாறு

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: ஆறாம் ஸ்கந்தம், அத்தியாயம் 1

சென்ற இதழில் நரக லோகங்களின் பல்வேறு வகைகள் மற்றும் பல்வேறு தண்டனைகளைப் பற்றி பார்த்தோம். இந்த இதழில் பாவ வாழ்விலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளைக் காணலாம்.

நரக வாழ்விலிருந்து விடுதலை

ஐந்தாம் ஸ்கந்தத்தின் இறுதியில், பல்வேறு நரக லோகங்களின் வர்ணனைகளைப் பற்றி சுகதேவரிடமிருந்து கேட்டறிந்த பரீக்ஷித் மஹாராஜர் மக்கள் நரக வாழ்விலிருந்து விடுபட்டு முக்தி அடைவதற்கான வழிகளை அவரிடம் வினவினார்.

அதற்கு சுகதேவர் பின்வருமாறு பதிலளித்தார், “அரசே ஒருவன் இவ்வாழ்வில் உடலாலும் மனதாலும் செய்துள்ள பாவ விளைவுகளிலிருந்து விடுபடுவதற்கு சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ள பிராயச்சித்தங்களைச்  செய்ய வேண்டும். மருத்துவர்கள் நோயின் கடுமைக்கு ஏற்ப சிகிக்சை அளிப்பதுபோல, பாவங்களின் கடுமைக்கு ஏற்ப அவரவர் செய்ய வேண்டிய பிராயச்சித்தங்களை விரைவில் அவசியம் மேற்கொள்ள வேண்டும்; ஏனெனில், மரணம் வரும் நேரம் எதுவென்று யாரால் அறிய இயலும்?”

பரீக்ஷித் மஹாராஜர் மேலும் வினவினார்: “தவறு செய்பவர்கள் பொதுமக்களால் நிந்திக்கப்படுகின்றனர், அரசாங்கத்தால் தண்டிக்கப்படுகின்றனர்; மேலும், மரணத்திற்குப் பின்னர் நரக லோகங்களிலும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இவற்றை எல்லாம் அறிந்தவன் பிராயச்சித்தம் செய்வது என்பது யானை குளித்த பின் மீண்டும் தலையில் மண்ணை வாரி இறைத்துக்கொள்வதைப் போன்றதாகும். மக்கள் ஏன் மீண்டும்மீண்டும் பாவச் செயல்களில் ஈடுபடுகின்றனர்?”

சுகதேவ கோஸ்வாமி அதற்கு பதிலளிக்கத் தொடங்கினார். பாவச் செயல்களுக்கு பிராயச்சித்த செயல்களைச் செய்வதால், அவை பாவ ஆசைகளை வேருடன் களைவதில்லை. அச்செயல்களினால், ஒருவன் வெளித்தோற்றத்தில் புண்ணியவானைப் போல காணப்பட்டாலும் பாவம் செய்யும் சுபாவம் அவனிடமிருந்து செல்லவில்லை என்பதில் ஐயமில்லை.

மேலும், ஒரு மூங்கில் புதரின் உலர்ந்த இலைகளை எரித்தாலும் அவற்றின் வேர்கள் அப்படியே இருந்து பின்னர் மழை பெய்யும்போது மீண்டும் முளைப்பதைப் போலவே, ஒருவனால் செய்யப்பட்ட பாவங்கள் (மனம், வாக்கு, உடல் என எல்லாவற்றினால் செய்யப்பட்ட பாவங்கள்) அனைத்தும் ஞானத்தின் மூலமாக தற்காலிக தூய்மையை அடையும்போதிலும், அவை மீண்டும் முளைக்க வாய்ப்பு உள்ளது.

தூய பக்தித் தொண்டு

ஆயினும், கிருஷ்ணருக்கு தூய பக்தித் தொண்டு செய்வதன் மூலமாக, பாவங்கள், பாவ விளைவுகள், பாவ விதைகள் அல்லது பாவ எண்ணங்கள் என பாவத்தின் அனைத்து வடிவங்களும் வேருடன் பிடுங்கி எறியப்படுகின்றன.

எனவே, பாவம் செய்தவர் உண்மையான கிருஷ்ண பக்தரின் தொண்டில் ஈடுபட்டு தன் வாழ்வை கிருஷ்ண சேவைக்காக அர்ப்பணிப்பதன் மூலமாக, முழுமையாக தூய்மையடைய முடியும். தூய பக்தர்களால் பின்பற்றப்படும் வழிமுறை உலகிலேயே மிகச்சிறந்த மங்கலகரமான வழிமுறையாகும்.

பக்தரல்லாதவர்கள் பிராயச்சித்த முறைகளை நன்கு நிறைவேற்றினாலும் அவர்களால் அதன் மூலம் தூய்மையடைய முடியாது. பகவான் கிருஷ்ணரிடம் முழுமையாக சரணடைந்தவர்கள் எமராஜரையோ பாசக் கயிறை கையில் வைத்துள்ள எம தூதர்களையோ கனவிலும் காண்பதில்லை.

மது மயக்கத்திலிருந்த ஆணும் பெண்ணும் உறவுகொள்வதை அஜாமிளன் காணுதல்.

அஜாமிளன்

இது தொடர்பாக, விஷ்ணு தூதர்களுக்கும் எம தூதர்களுக்கும் இடையே நடந்த ஒரு வரலாற்று சம்பவத்தை சுகதேவ கோஸ்வாமி எடுத்துரைத்தார்.

கான்யாகுப்ஜ என்னும் ஊரில் அஜாமிளன் என்றொரு பிராமணன் இருந்தான். அவன் ஒரு வேசியை மணம் புரிந்து பிராமண குணங்கள் அனைத்தையும் இழந்தான்; மனைவி மக்களைப் பராமரிப்பதற்காக கொலை செய்தல், கொள்ளை

யடித்தல், சூதாடுதல், ஏமாற்றுதல் என அனைத்து வகையான பாவச் செயல்களிலும் ஈடுபட்டவாறு தனது வாழ்வில் 88 ஆண்டுகளைக் கழித்தான்.

அவனுக்கு பத்து மகன்கள் இருந்தனர், கடைசி மகனது பெயர் நாராயணன். அக்குழந்தையின் மழலைப் பேச்சாலும் நடையாலும் அவன்மீது அஜாமிளன் அதிகப் பற்று கொண்டான். அன்பின் மிகுதியால் அக்குழந்தையை எப்போதும் கொஞ்சிக் குலாவி, “நாராயணா, இங்கே வா? நாராயணா இதைச் சாப்பிடு,” என்று பலமுறை அவன் பெயரைச் சொல்லி அழைத்து, அவனது நினைவாகவே வாழ்ந்தான். தனக்கு மரணம் நெருங்குவதைக்கூட அவன் உணரவில்லை.

விஷ்ணு தூதர்கள்

ஒருநாள், அஜாமிளன் விகார முகத்துடன் மிக பயங்கரமான தோற்றத்துடன் கூடிய எமதூதர்கள் கையில் பாசக் கயிற்றுடன் வருவதைக் கண்டான். அதனால் கலக்கமடைந்து கண்ணீர் மல்க, மிகவும் தட்டுத்தடுமாறி தன் மகனை “நாராயணா!” என்று பலமாக அழைத்தான்.

அஜாமிளன் பகவானுடைய தெய்வீக நாமத்தை பயத்தின் காரணமாக உச்சரித்தபோதிலும், அது குற்றமின்றி இருந்ததால், உடனடியாக விஷ்ணு தூதர்கள் அங்கே வந்து, அஜாமிளனின் உயிரை பிரிப்பதிலிருந்து எம தூதர்களைத் தடுத்தனர்.

விஷ்ணு தூதர்கள் அவ்வளவு கம்பீரமாகவும் உறுதியாகவும் தங்களைத் தடுப்பதைக் கண்ட எம தூதர்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் பின்வருமாறு வினவினர்:

அஜாமிளன் நாராயண நாமத்தை உச்சரித்தபோது, உடனடியாக விஷ்ணு தூதர்கள் அங்கே வந்து எம தூதர்களைத் தடுத்தல்.

எம தூதர்களின் வினாக்கள்

“எமராஜரின் கட்டளையைத் தடுக்கும் அளவிற்கு துணிந்துள்ள தாங்கள் யார்? யாருடைய சேவகர்கள் நீங்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்? அஜாமிளனின் உயிரை எடுப்பதற்கு வந்த எங்களை ஏன் தடுக்கிறீர்கள்?

“மஞ்சள் பட்டாடை, தாமரைக் கண்கள், தாமரை மாலைகள், கைகளில் சங்கு, சக்கரம், கதை, தாமரை என நீங்கள் அனைவரும் புத்திசாலிகளாக காட்சி அளிக்கிறீர்கள். உங்களது தெய்வீக உடல்களின் பிரகாசத்தால் இவ்விடத்தின் இருள் அகன்றுவிட்டது. நீங்கள் ஏன் எங்களைத் தடுக்கிறீர்கள்?”

விஷ்ணு தூதர்களின் வினாக்கள்

எம தூதர்களின் வினாக்களுக்கு மிகவும் கம்பீரமான குரலில் விஷ்ணு தூதர்கள் மறு வினாக்களை எழுப்பினர்:

“நீங்கள் உண்மையிலேயே எமராஜரின் சேவகர்கள் எனில், தர்மத்தின் பொருள் என்ன என்பதையும் அதர்மத்தின் அடையாளங்கள் என்ன என்பதையும் எங்களிடம் கூறுங்கள். எதன் அடிப்படையில் மக்களின் தண்டனைகள் தீர்மானிக்கப்படுகின்றன? உண்மையில் தண்டனைக்

குரியவர் யார்? பலன்நோக்குச் செயல்களில் ஈடுபட்டுள்ள அனைவருமா அல்லது சிலர் மட்டுமா?”

இறைவனின் சட்டங்கள்

எம தூதர்கள் பதிலளித்தனர்: “வேதங்கள் கடவுளின் சட்டங்களாகும். வர்ணாஷ்ரம நிலைகளுக்கு ஏற்ப வேதங்கள் பல்வேறு கடமைகளைப் பரிந்துரைக்கின்றன. அவற்றைப் பின்பற்றி வாழ்வது தர்மம். அவற்றிற்கு முரணாக வாழ்வது அதர்மம்.

“உயிர்வாழிகளின் அனைத்து செயல்களுக்கும் சூரியன், சந்திரன், பகல், இரவு, சந்தியா காலம், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், தேவர்கள், திசைகள், பரமாத்மா ஆகியோர் சாட்சியாக உள்ளனர். மனிதன் வேதக் கட்டளைகளின்படி நடக்காமல் தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டு பாவங்கள் புரிந்தால், அவன் தண்டிக்கப்பட வேண்டியவன்.”

“ஒருவன் முக்குணங்களின் கலவையில் செயல்படுவதால் அவனிடம் மேலோங்கி இருக்கும் குணத்திற்கேற்ப அவனது எதிர்கால வாழ்வை யூகிக்க இயலும்.”

கர்மா பற்றிய விளக்கம்

எம தூதர்கள் தொடர்ந்தனர்: “உறங்கும் மனிதன் கனவில் தோன்றும் உடலை தான் என்று எண்ணுவதுபோலவே, மனிதர்கள் கர்மத்தால் கிடைத்துள்ள இந்த உடலைத் தான் என்று எண்ணி செயல்படுகின்றனர். அவரவர் செய்த கர்மங்களுக்கு ஏற்பவே ஐந்து கர்ம இந்திரியங்கள் (செயற்புலன்கள்), ஐந்து ஞான இந்திரியங்கள் (அறிவு புலன்கள்) அளிக்கப்பட்டுள்ளன.

“அவ்வாறு அளிக்கப்பட்டுள்ள உடல் மனித உடலாகவோ மிருக உடலாகவோ தேவ உடலாகவோ இருக்கலாம். தேவ உடல் கிடைக்கும்போது மகிழ்ச்சிக்கும் மனித, மிருக உடல்கள் கிடைக்கும்போது துன்பத்திற்கும் நாம் ஆளாகிறோம்.

“பட்டுப் புழு தன் உமிழ்நீரால் தன்னைச் சுற்றி கூடு கட்டிக் கொண்டு அதனுள் சிறைப்படுவதைப் போலவே, நாமும் நமது செயல்களினால் கர்ம பந்தத்தில் சிறைப்பட்டிருக்கிறோம். நமது நல்ல செயல்கள், தீய செயல்கள் என இரண்டுமே நம்மை கர்ம பந்தத்திற்கு உள்ளாக்குபவையே.

“தீவிர ஆசையின் காரணத்தால் உயிர்வாழி, பற்பல ஸ்தூல மற்றும் சூட்சும உடல்களைப் பெறுகிறான். ஆனால் மனித வாழ்வில் பகவானுடனும் அவரது பக்தர்களுடனும் தொடர்புகொள்ளும் முறையைக் கற்றுக் கொண்டால், அதன் பயனாக கர்ம பந்தமாகிய பிறப்பு, இறப்பு சுழற்சியிலிருந்து எளிதில் வெளிவர இயலும்.”

அஜாமிளனின் வீழ்ச்சி

எம தூதர்கள் அஜாமிளனைப் பற்றி கூறத் தொடங்கினர்: “இந்த அஜாமிளன் சிறு வயதில் பிராமணனுக்குரிய அனைத்து கடமைகளையும் சிறப்பாக நிறைவேற்றி நற்குணவானாகத் திகழ்ந்தான். ஆயினும், ஒருநாள் தனது தந்தைக்கு உதவும்பொருட்டு பூக்கள், பழங்கள் மற்றும் சமித்துகளைச் சேகரிப்பதற்காக காட்டிற்குச் சென்றபோது, இவன் அங்கே மது மயக்கத்திலிருந்த ஆணும் பெண்ணும் உறவுகொள்வதைக் கண்டான். அக்காட்சி அவனது இதயத்தில் ஆழமாகப் பதிந்தது. அப்பெண்ணை நினைத்துக் கொண்டே இருந்ததால் அவனது புத்தி நிலை தடுமாறி காம இச்சையினால் ஆட்கொள்ளப்பட்டது.”

அஜாமிளனின் பாவ வாழ்வு

“குறுகிய காலத்திலேயே அப்பெண்ணை வீட்டில் வேலைக்கு சேர்த்துக் கொண்டான். அந்த தாசியின் சகவாசத்தினால் அனைத்து பிராமணக் கடமைகளையும் துறந்தான். தனது தந்தையிடமிருந்து பெற்ற அனைத்து செல்வங்களையும் அவளைத் திருப்திப்படுத்துவதற்காகவே செலவழித்தான். அப்பெண்ணின் காம பார்வைக்கு பலியான அஜாமிளன் தனது மனைவியையும் கைவிட்டான்.

வேசியையும் அவளுக்குப் பிறந்த தனது பிள்ளைகளையும் பராமரிப்பதற்காக, கொலை, கொள்ளை, ஏமாற்றுதல், கடத்தல் போன்ற அனைத்துவிதமான பாவச் செயல்களிலும் ஈடுபட்டான். அந்த பாவச் செயல்களுக்கு அவன் எவ்வித பிராயச்சித்தமும் செய்யவில்லை. ஆகவே, நாங்கள் தற்போது இவனை எமராஜரிடம் அழைத்துச் செல்ல வந்துள்ளோம். அங்கு இவன் தகுந்த தண்டனைகளைப் பெற்று பாவங்கள் நீங்கப் பெறுவான்.”

எம தூதர்களுக்கும் விஷ்ணு தூதர்களுக்கும் இடையிலான வாத பிரதிவாதங்களின் தொடர்ச்சியை அடுத்த இதழில் காணலாம்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives