எம்பெருமானே, மனிதன், மிருகம், சாது, தேவர், மீன், ஆமை என பல்வேறு ரூபங்களில் அவதரித்து, அதன் மூலமாக முழு படைப்பையும் பராமரித்து ஒவ்வொரு யுகத்திலும் அசுரக் கொள்கைகளை நீங்கள் வதம் செய்கிறீர்கள். இதனால், எம்பெருமானே, நீங்கள் தர்மத்தின் பாதுகாவலராகத் திகழ்கிறீர்கள். கலி யுகத்திலோ நீங்கள் உங்களை பரம புருஷ பகவானாக வெளிக்காட்டிக்கொள்வதில்லை. எனவே, நீங்கள் த்ரி-யுக, அல்லது மூன்று யுகங்களில் மட்டும் தோன்றக்கூடிய இறைவன் என்று அறியப்படுகிறீர்கள்.
சைதன்ய மஹாபிரபு கிருஷ்ணரிடமிருந்து வேறுபட்டவர் அல்ல; இருப்பினும், திருமேனியின் நிறத்திலும் செயல்களிலும் இவர் சற்று வேறுபடுகின்றார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கறுநீல திருமேனியைக் கொண்டவர், சைதன்ய மஹாபிரபுவோ பொன்னிற மேனியைக் கொண்டவர்; இடையர் குலச் சிறுவனாக தோன்றிய கிருஷ்ணர் தலையில் மயில் இறகையும் கையில் புல்லாங்குழலையும் கொண்டிருந்தார், பிராமண குலத்தில் தோன்றிய சைதன்ய மஹாபிரபுவோ மிருதங்கம் மற்றும் கரதாளத்துடன் காணப்பட்டார்.
சைதன்ய மஹாபிரபுவின் முக்கியமான உபதேசம், அனைவரும் கிருஷ்ண உணர்வை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்பதும், ஹரியின் நாமத்தில் அனைத்து மங்களங்களும் அடங்கி உள்ளது என்பதுமாகும். சைதன்ய மஹா பிரபுவின் போதனைகளை உலக மக்களுக்கு பாகுபாடின்றி எடுத்துரைத்தவர் தெய்வத்திரு. அ.ச. பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதர். தனது திருநாமம் உலகின் ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் பரவும் என்று சைதன்ய மஹாபிரபு முன்னரே கூறியிருந்தார்; அக்கூற்றினை ஸ்ரீல பிரபுபாதர் நிறைவேற்றினார்.
அவ்வளவு எளிமையான, உயர்ந்த இந்த ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினை உச்சரிக்கும் கலையை நாமும் பயின்று மற்றவர்களுக்கும் எடுத்துரைப்பது மிகவும் அவசியம். பிரகலாத மஹாராஜர் இதற்கு சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தார். பகவானின் திருநாமத்தை அவர் எச்சூழ்நிலையிலும் தவறாது உரைத்ததோடு மட்டுமல்லாது தனது சக நண்பர்களுக்கும் இதனைப் பழக்கிக் கொடுத்து இன்புறச் செய்தார்.