ஏங்கவும் வேண்டாம்! வருந்தவும் வேண்டாம்!

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

ஏங்கவும் வேண்டாம்!  வருந்தவும் வேண்டாம்!

ஃபிஜி நாட்டின் வானொலி நிலையத்திற்காக பிரபுபாதர் அளித்த பேட்டி

நிருபர்: பகவான் கிருஷ்ணரின் போதனைகளை பிரச்சாரம் செய்ய நீங்கள் மேற்கத்திய நாடுகளை, அதிலும் குறிப்பாக, அமெரிக்காவை ஏன் தேர்வு செய்தீர்கள்?

ஸ்ரீல பிரபுபாதர்: இந்திய மக்கள் குறைந்தபட்சம் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக அடிமைகளாக அடக்கி ஆளப்பட்டதன் காரணத்தினால், அவர்கள் தங்களது கலாச்சாரத்தை இழந்து விட்டனர். ஏழ்மையினால் பாதிக்கப்பட்டிருப்பதால், எந்த வழியிலாவது பணம் கிடைக்குமா என்பதிலேயே அவர்கள் குறியாக உள்ளனர். பகவத் கீதையில், போகைஸ்வர்ய ப்ரஸக்தானாம் தயாபஹ்ருத-சேதஸாம் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, பௌதிகப் புலனின்பத்தில் அதிகமாகப் பற்றுதல் கொண்டிருக்கும் மக்களால் கிருஷ்ண உணர்வைப் புரிந்துகொள்ள முடியாது.

அமெரிக்கர்கள் இம்மாதிரி பௌதிக இன்பத்தை (செல்வம், பெண்கள் முதலியவற்றை) தேவையான அளவு அனுபவித்து விட்டதால், தற்போது அதில் விரக்தி அடைந்திருப்பர் என்று நான் கருதினேன். எனவே, அவர்கள் ஏறக்குறைய துறவு நிலையின் தளத்திற்கு வந்து விட்டனர். அவர்கள் தங்களது தகப்பனாரும் பாட்டனாரும் அனுபவித்த இன்பங்களை அனுபவிக்க விரும்பவில்லை.

அவர்களுக்கு உண்மையில் சரியான வழிகாட்டுதல் இல்லை. எனவே, அவர்களை வழி நடத்துவது சிறந்தது என்று கருதி நான் முதலில் அங்கு சென்றேன். என்னுடைய சீடர்களில் 50 சதவிகித பக்தர்கள் இம்மாதிரி விரக்தியடைந்திருந்த இளைஞர்களே. அவர்கள் தவறான வழிக்குச் சென்றிருந்தனர். நான் அவர்களைக் காப்பாற்றியுள்ளதால், அவர்கள் நன்றியுடன் என்னைப் பாராட்டுகின்றனர். அதனால், இந்த முழு இளைஞர் சமுதாயமும் என்னை நோக்கி வருகின்றது. இந்த கிருஷ்ண உணர்வு இயக்கத்தைப் பரப்ப அவர்கள் எனக்கு உதவி செய்கின்றனர். ஆகவே, என்னுடைய முயற்சி வெற்றி அடைந்து விட்டதாகவே கருதுகிறேன்.

நிருபர்: இந்த கிழக்கத்திய தத்துவங்கள், அதிலும் முக்கியமாக இந்த கிருஷ்ண உணர்வு இயக்கம், மேற்கத்திய கலாச்சாரத்தில் பல பக்தர்களைக் கவர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்ன?

ஸ்ரீல பிரபுபாதர்: இது கிழக்கத்திய கலாச்சாரம் என்று நினைக்கிறீர்கள்; ஆனால், அஃது உண்மை அல்ல. இதுவே உண்மையான மனித நாகரிகம். கிழக்கு, மேற்கு என்ற கேள்விக்கே இடமில்லை. இப்பௌதிகப் படைப்பில் மனிதர்கள் உட்பட மொத்தம் 84 இலட்சம் வகையான உயிரினங்கள் உள்ளன. கிருஷ்ணர் பகவத் கீதையில் (14.4) கூறுகிறார்: அஹம் பீஜ-ப்ரத: பிதா.

கிருஷ்ணரே அனைத்து உயிரினங்களுக்கும் தந்தை, கடவுள். நீர்வாழ் உயிரினங்களில் தோன்றி, தாவரங்கள், விலங்குகள் என பரிணாம வளர்ச்சி நடைபெறுகிறது. இவ்வெல்லா உயிர்வாழிகளும் கிருஷ்ணரின் அம்சமே. பல்வேறு உயிரினங்களைத் தாண்டி, தற்போது நாம் மனிதப் பிறவியைப் பெற்றுள்ளோம்.

ஆயினும், மீண்டும் நாம் கீழ்நிலை பிறவிகளுக்குச் செல்ல வேண்டுமா? மாறாக, உயர்நிலை பிறவிகளுக்குச் செல்ல வேண்டுமா? எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை இம்மனித சமுதாயம் தற்போது முடிவு செய்ய வேண்டும். உயர் கிரகங்களில் உயர் நிலையிலுள்ள ஜீவராசிகள் உள்ளனர். அவர்களின் ஆயுளும் வாழ்க்கைத் தரமும் இங்கிருப்பதைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும். எனவே, நீங்கள் உயர் கிரகங்களுக்குச் செல்ல விரும்பினால், அங்குச் செல்லலாம் என்று கிருஷ்ணர் கூறுகிறார்.

முதலில் நாம் நித்தியமானவர்கள், கிருஷ்ணரின் அம்சங்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் உடலை மட்டுமே மாற்றிக் கொண்டு வருகின்றோம். இது பௌதிகமான நிலை; கீழ்நிலை உடல்கள், உயர்நிலை உடல்கள்—என எல்லா நிலையிலும் நாம் உடலை மாற்றியாக வேண்டும். ஆயினும், நீங்கள் ஆன்மீக வாழ்க்கையைப் பயிற்சி செய்தால், இவ்வுடலை நீத்த பிறகு, ஆன்மீக உடலுக்கு மாற்றம் பெறுவீர். அதற்கான பயிற்சியை மேற்கொள்ள சிறிது அறிவு தேவைப்படுகிறது. எனவே, மனிதர்களில் ஒரு சிறு சதவிகிதமாவது ஆன்மீக வாழ்க்கையைப் பயிற்சி செய்தால்—இஃது அனைவருக்கும் சாத்தியப்படாமல் இருக்கலாம், குறைந்தது சமுதாயத்தின் உயர் மக்கள் ஆன்மீக வாழ்வைப் பயிற்சி செய்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழ்ந்தால், மற்றவர்களும் அதைப் பின்பற்றுவார்கள். இதுவே எங்களுடைய பிரச்சாரம்.

நிருபர்: மேற்கத்திய சமுதாயத்தில் உங்களுடைய இயக்கத்தின் வெற்றி, ஆன்மீகக் கோட்பாடுகளில் பரிச்சயம் இல்லாத மேற்கத்திய மனிதனின் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று கருதுகிறீர்களா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம். ஆயினும், விஷயம் என்னவெனில், அவர்கள் மிகவும் புத்திசாலிகள்; இதில் எந்த சந்தேகமும் இல்லை. பௌதிகமாகப் பார்த்தால் அவர்கள் மிகவும் முன்னேறியவர்கள். அவர்கள் ஆகாய விமானங்களை உற்பத்தி செய்கின்றனர், இந்தியாவிலோ தையல் இயந்திரங்களையும் மிதிவண்டிகளையும் உற்பத்தி செய்கிறோம். உலகப் பொருட்காட்சிகளில் இந்தியர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் மிதிவண்டிகளையும், தையல் இயந்திரங்களையும் காட்டி பெருமைப்படுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் ஜெட் விமானத்தின் என்ஜின்களை காட்சிக்கு வைக்கின்றனர். எனவே, பௌதிக ரீதியில் அவர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு நூற்றாண்டு காலத்திற்கு அவர்கள் மற்ற நாட்டினரைவிட முன்னேற்றம் கண்டுள்ளனர்.

ஆயினும், ஆன்மீகக் கண்ணோட்டத்தின்படி பார்த்தால், அங்கு எவ்வித முன்னேற்றமும் இல்லை எனலாம். நான் ஓர் ஏழை இந்தியன் என்றபோதிலும், இந்த இளைஞர்கள் என்னிடம் வருகின்றனர். ஏன்? ஆன்மீகத்தில் இந்தியா முன்னணியில் இருப்பதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளதால், என்னிடம் மட்டுமின்றி, அங்குச் செல்லும் அனைத்து ஸ்வாமிகளையும் அவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். ஏதாவது ஆன்மீக விஷயம் உள்ளதா என்று ஆராய்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக, மற்ற ஸ்வாமிகள் இந்த இளைஞர்களைச் சுரண்டுவதற்காகவும் ஏமாற்றுவதற்காகவுமே அங்குச் செல்கின்றனர். அந்த ஸ்வாமிகளுக்கு ஆன்மீகம் என்றால் என்ன என்பது தெரியாது, ஆன்மீகத்தை அவர்களால் வழங்க முடியாது. உதாரணமாக, கடந்த இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக பல ஸ்வாமிகள் அங்குச் சென்று வந்துள்ளனர்; ஆனால், மேற்கத்திய நாடுகளின் சரித்திரத்தில் இதுவரை ஒரு கிருஷ்ண பக்தன்கூட தோன்றியதாகத் தெரியவில்லை. ஆனால் தற்போது நாங்கள் பகவத் கீதையை அதன் உண்மையுருவில் அளிக்கிறோம்; அதனால், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்கள் எங்களிடம் வருகின்றனர்.

நிருபர்: சுவாமிஜி! இந்தியாவில் அதிகப்படியான தத்துவம் உள்ளது, மேற்கத்திய நாடுகளில் அதிகப்படியான பௌதிக செல்வம் உள்ளது என்று சில சமயங்களில் கூறப்படுவதுண்டு.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம்.

நிருபர்: இந்த நவீன உலகில் இவை இரண்டையும் எவ்வாறு சமன் செய்வது?

ஸ்ரீல பிரபுபாதர்: பரஸ்பரம் பரிமாறிக்கொள்வதன் மூலம் இதனை சமன் செய்யலாம். உங்களிடம் உள்ளதை எங்களுக்குத் தாருங்கள்; எங்களிடம் உள்ளதை உங்களுக்குத் தருகிறோம்; இதுவே பரஸ்பர பரிமாற்றமாக இருக்கும். நம்மிடமுள்ள சிறந்த விஷயங்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் இவ்வுலகம் ஒற்றுமையாக இருக்கும். இந்தியர்கள் இதுவரை மற்ற நாடுகளிலிருந்து, “ஆட்களைத் தாருங்கள், பண உதவி செய்யுங்கள், கோதுமை தாருங்கள், அரிசி தாருங்கள், இராணுவக் கருவிகளைத் தாருங்கள்,” என்று பிச்சையெடுத்துக் கொண்டே இருக்கின்றனர்.

இந்தியாவிலிருந்து ஏதேனும் ஒன்றை மற்றவர்களுக்குக் கொடுப்பது என்பது, தற்போது எங்களின் மூலம் முதல்முறையாக நடைபெறுகின்றது. இல்லையேல், மேற்கத்திய நாடுகளைப் பொறுத்தவரையில் இந்தியா பிச்சைக்கார நாடாகவே கருதப்படுகிறது. தொழில்நுட்பத்தையும் போர்க் கருவிகளையும் மேற்கத்தியர்களிடமிருந்து பெற்று பிச்சைக்காரனாகவே இருக்க வேண்டுமா? அவர்களுக்கு ஆன்மீகக் கல்வியை இந்தியா வழங்கினால், அப்போது அவை இரண்டும் சமன் செய்யப்படும்.

நிருபர்: சுவாமிஜி! நம்முடைய நவீன சமுதாயத்தில் இந்த கிருஷ்ண உணர்வு இயக்கம் எந்தவிதத்தில் சாதகமாக உள்ளது? கிருஷ்ணரின் போதனைகள் எவ்வாறு நவீன சமுதாயத்திற்குப் பொருத்தமாக இருக்க முடியும்?

ஸ்ரீல பிரபுபாதர்: பொருத்தம் என்னவெனில், நீங்கள் ஓர் ஆன்மீக ஆத்மா; நீங்கள் இந்த உடல் அல்ல; இதுவே மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய முதல் விஷயம். அஹம் ப்ரஹ்மாஸ்மி. “நான் ஆன்மீக ஆத்மா.” இதுவே இந்தியாவின் தத்துவம். ஆத்மா என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டால், ப்ரஹ்ம-பூத ப்ரஸன்னாத்மா ந ஷோசதி ந காங்க்ஷதி, நீங்கள் இந்த பௌதிக உடல் அல்ல, ஆன்மீக ஆத்மா என்பதைப் புரிந்துகொண்டால், உடனே நீங்கள் மகிழ்ச்சியடைவீர், ப்ரஸன்னாத்மா. ப்ரஸன்னாத்மா என்றால், ந ஷோசதி ந காங்க்ஷதி, ன்னிடம் இல்லாத பொருட்களுக்காக அவன் ஏங்குவதில்லை, இழந்த பொருட்களுக்காக வருத்தப்படுவதும் இல்லை.

மக்கள் இந்த கிருஷ்ண உணர்வு இயக்கத்தை மிகவும் தீவிரமாக ஏற்றால், இந்த முழு உலகமும் வருத்தமில்லாத, ஏக்கமில்லாத உலகமாக மாறும்.

நிருபர்: நன்றி!

ஸ்ரீல பிரபுபாதர்: ஹரே கிருஷ்ண!

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives