வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
ஏகலைவன்–மஹாபாரதத்தின் மாபெரும் கதாபாத்திரங் களுக்கு இடையில் மிகச் சிறியவன்; ஆயினும் பிரபலமானவன். தனது மானசீக குருவான துரோணரின் விருப்பத்திற்கு இணங்கி தனது வலதுகை கட்டை விரலை தட்சணையாகக் கொடுத்தவன். குருவிற்காக கட்டை விரலையே வழங்கிய ஏகலைவனைப் பலரும் பாராட்டி குரு பக்தியின் உதாரணமாகக் காட்டுகின்றனர். ஏகலைவனின் குரு பக்தியை இங்கு சற்று விரிவாகக் காணலாம்.
அர்ஜுனனை மிகச்சிறந்த சீடனாக துரோணர் அறிவித்தல்
ஏகலைவனின் வரலாற்றை மஹாபாரதம் அறிந்தோர் அனைவரும் அறிவர். இருப்பினும், ஏகலைவனின் குரு பக்தியை ஆராய்வதற்கு முன்பாக அவனது வரலாற்றின் சுருக்கத்தை (மஹாபாரதத்தில் உள்ளபடி) அறிதல் நன்று.
பாண்டவர்கள், கௌரவர்கள் என பலரும் துரோணரிடம் போர்க்கலை கற்று வந்தபோதிலும், அர்ஜுனன் தனது குருவின் மீது கொண்டிருந்த பெரும் மதிப்பினாலும் மரியாதையினாலும் மிகச்சிறந்த சீடனாகத் திகழ்ந்தான். அனைத்து கலைகளையும் நுண்ணியமாகக் கற்றுக் கொண்ட அர்ஜுனன், துரோணருக்கு மிகவும் பிரியமானவனாக மாறினான்.
அர்ஜுனனுக்கு இருளில் உணவளிக்கக் கூடாது என்று துரோணர் சமையல்காரனுக்கு கட்டளையிட்டிருந்தார். ஒருமுறை, அர்ஜுனன் உணவருந்திக் கொண்டிருந்தபோது, காற்றினால் விளக்கு அணைந்துவிட்டது. அப்போது, விளக்கு இல்லாதபோதிலும் தனது கை வாயை நோக்கி சரியாகச் செல்வதைக் கவனித்த அர்ஜுனன், பயிற்சி இருந்தால் போதும், ஒளி அவசியமில்லை என்பதை உணர்ந்தான்.
அதனைத் தொடர்ந்து இரவில் அம்பெய்த பழகினான். அதன் அதிர்வொலியைக் கேட்ட துரோணர், உறக்கத்திலிருந்து எழுந்து அர்ஜுனனைக் கண்டபோது பூரித்துப் போனார். “இவ்வுலகில் உனக்கு சமமான வில்லாளிகள் யாரும் இல்லாத அளவிற்கு உனக்கு வித்தைகளை கற்றுத் தரப் போகிறேன். இது சத்தியம்,” என்று அர்ஜுனனை அரவணைத்து துரோணர் உறுதி பூண்டார்.
துரோணரை ஏகலைவன் அணுகுதல்
போர்க்கலைகளைக் கற்றுக் கொடுப்பதில் துரோணரின் திறனைப் பற்றிக் கேள்விப்பட்ட பல்வேறு இளவரசர்கள் அவர்கீழ் கலை கற்கக் கூடினர். அச்சமயத்தில், நிஷாத எனப்படும் கலப்பின பிரிவைச் சார்ந்தவர்களின் மன்னன் ஹிரண்யதனு என்பவரின் மகனான ஏகலைவனும் துரோணரை அணுகினான். மக்களைக் காப்பதற்குரிய போர்க்கலையினை பண்பாடற்ற மக்களின் வருங்கால தலைவன் கற்றுக் கொண்டால், அதன் விளைவு எப்படியிருக்கும் என்ற எண்ணத்தில், துரோணர் ஏகலைவனை சீடனாக ஏற்க மறுத்தார்.
துரோணரின் பாதங்களில் விழுந்து வணங்கிய ஏகலைவன், அங்கிருந்து விலகி, காட்டிற்குள் சென்று துரோணருக்குத் தெரியாமல் துரோணரைப் போன்ற சிலை ஒன்றை களிமண்ணால் வடித்தான். துரோணரின் குருகுலத்திலிருந்து எட்டு மைல் தொலைவில் தனது பயிற்சியைத் தொடங்கினான். அங்கிருந்த மரங்களை வெட்டிவிட்டு, தனது கூரிய பார்வையினால் துரோணர் கற்றுக் கொடுக்கும் பாடங்களை அங்கிருந்தே கற்கத் தொடங்கினான். இடையறாத முயற்சியினாலும் தனது குருவின் (சிலையின்) மீதான அதீத நம்பிக்கையினாலும் அம்புகளை எய்வதில் ஏகலைவன் இணையற்ற வேகத்தை அடைந்தான்.
ஏகலைவனின் திறமையை பாண்டவர்கள் கவனித்தல்
ஒருநாள், துரோணரின் கட்டளைப்படி பாண்டவர்கள் அனைவரும் காட்டிற்கு வேட்டையாடச் சென்றனர். அவர்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்து வந்த வேலையாள் ஒருவன் தன்னுடன் நாய் ஒன்றையும் அழைத்து வந்திருந்தான். வேட்டையின் வேகத்தில் ஒவ்வொருவரும் திசைமாறிச் சென்றனர். திசைமாறிச் சென்ற நாய் ஏகலைவன் வில்வித்தையைப் பயிற்சி செய்துவந்த இடத்தை அடைந்தது. புழுதியினால் நிரம்பிய அவனது கருமை நிற மேனி, தோலினால் ஆன கருமை நிற ஆடை ஆகியவற்றைக் கண்ட நாய் இடைவிடாது குரைக்க ஆரம்பித்தது. தன்னைப் பார்த்து நாய் குரைப்பதைக் கேட்ட ஏகலைவன் ஏழு அம்புகளை அதன் வாயை நோக்கி விரைவாகச் செலுத்தினான், ஏழு அம்புகளும் ஒரே நேரத்தில் கிளம்பியதைப் போல காணப்பட்டது.
வாயில் அம்புகள் துளைக்கப்பட்ட நிலையில் நாய் பாண்டவர்களை அடைந்தது. நாய் தனது வாயை மூடுவதற்குள் அடுத்தடுத்து அம்புகள் ஏவப்பட்டுள்ளன என்பதைக் கண்ட பாண்டவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். அம்பு எய்தவன் நாயை கண்ணால் பார்த்து ஏவவில்லை; அது குரைத்ததைக் கேட்டு, ஒலி வந்த திசையில் ஏவியுள்ளான் என்பதை சில அறிகுறிகளால் தெரிந்து கொண்டனர். அம்புகளின் வேகத்தையும் கண்ணால் பார்க்காமல் ஏவியதையும் கூர்ந்து கவனித்த பாண்டவர்கள் வீரனின் திறனை வெகுவாகப் பாராட்டினர்.
எய்தவனைத் தேடிப் புறப்பட்ட பாண்டவர்கள் இடைவிடாது அம்பெய்து கொண்டிருந்த ஏகலைவனைக் கண்டனர். அவனது விசித்திரமான தோற்றத்தைக் கண்ட பாண்டவர்களிடம், தான் நிஷத மன்னரின் மகன் என்றும் துரோணரின் சீடன் என்றும் ஏகலைவன் எடுத்துரைத்தான். குருகுலத்திற்குத் திரும்பிய பாண்டவர்கள் நடந்தவற்றை முழுவதுமாக துரோணரிடம் எடுத்துரைத்தனர்.
ஏகலைவனின் கட்டை விரலை துரோணர் பெறுதல்
ஏகலைவனின் அற்புத செயலை அர்ஜுனன் நினைத்தவண்ணம் இருந்தான். தனது ஆச்சாரியரின் மீதான பற்றுதலால் உந்தப்பட்டு, அவரை தனிமையில் சந்தித்து பின்வருமாறு கூறினான்: “என்னை பாசத்துடன் அரவணைத்து, எனது சீடர்களில் யாருமே உன்னை விடச் சிறந்தவனாக ஆக மாட்டான் என்று கூறினீர்கள். அப்படியிருக்கையில், தங்களின் மற்றொரு சீடனான நிஷத மன்னனின் மகன் என்னை விடச் சிறந்த வில்லாளியாக இருப்பது எங்ஙனம்? உண்மையில், அவன் உலகிலேயே மிகச்சிறந்த வீரனாக உள்ளான்.”
சற்று யோசித்த துரோணர் அர்ஜுனனை தன்னுடன் அழைத்துக் கொண்டு ஏகலைவனைக் காணச் சென்றார். உடல் முழுக்க புழுதி படர்ந்து, ஜடா முடியுடன், அணிகலன்கள் அங்குமிங்கும் சிதறிய நிலையில் ஏகலைவன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தான். துரோணரைக் கண்ட மாத்திரத்தில், ஏகலைவன் அவரது பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தான். “நான் தங்களது சீடன்” என்று கூறி, துரோணரின் முன்பு கூப்பிய கரங்களுடன் பணிவாக நின்றான். “நீ என்னுடைய சீடன் என்றால், எனக்கு உடனடியாக குரு தட்சணை வழங்க வேண்டும்,” என்று துரோணர் உரைக்க, மகிழ்ச்சியுற்ற ஏகலைவன் உடனடியாக, “எனது ஸ்வாமிக்கு நான் என்ன வேண்டுமானாலும் கொடுப்பேன். குருவே கட்டளையிடுங்கள்! எதையும் மறுக்க மாட்டேன்,” என்று உறுதியுடன் கூறினான்.
“உன்னுடைய வலதுகை கட்டை விரலை எனக்குக் கொடு,” என்று துரோணர் பதிலளித்தார். துரோணரின் கட்டளை அதிர்ச்சி தருவதாக இருந்தபோதிலும், ஏகலைவன் தன்னுடைய வாக்கைக் காப்பாற்றுவதில் கவனமாக இருந்தான். மலர்ந்த முகத்துடன் வருத்தம் ஏதுமின்றி, தனது வலதுகை கட்டை விரலை தயக்கமின்றி வெட்டி துரோணருக்கு அர்ப்பணித்தான்.
காலப்போக்கில் ஏகலைவன் தனது எஞ்சிய விரல்களைக் கொண்டு அம்பு எய்துவதற்கு கற்றுக் கொண்டான்; இருப்பினும், முந்தைய வேகத்தை அவனால் பெற முடியவில்லை. அர்ஜுனன் வெல்லவியலாத வீரனானான்.
மக்களின் பொதுவான எண்ணங்கள்
ஏகலைவனின் இக்கதையை அறிந்த பல்வேறு மக்கள் இதற்கு அநேக விளக்கங்களைக் கொடுப்பதுண்டு. ஒவ்வொருவரும் தமது மனதில் தோன்றிய கருத்துகளை, தங்களுக்கு எது சரி என்று தென்படுகிறதோ அதைக் கூறி வருகின்றனர். அர்ஜுனன் பொறாமை கொண்டவன், துரோணர் கட்டை விரலை குரு தட்சணையாகக் கேட்டது குற்றம், ஏகலைவன் மிகச்சிறந்த குரு பக்தன் போன்றவற்றை நாம் கேட்கிறோம்.
ஆனால், பக்தர்களில் சிறந்தவரான அர்ஜுனனை பொறாமை கொண்டவன் என்று கூறுவது சரியா? ஆச்சாரியரான துரோணரின் செயலை குற்றமாகக் கருதுவது தகுமா? அர்ஜுனனின் மீதும் துரோணரின் மீதும் குற்றமில்லை என்றால், ஏகலைவனின் தவறுதான் என்ன? துரோணர் எதற்காக அவனது கட்டை விரலைப் பெற வேண்டும்? அர்ஜுனன் எதற்காக துரோணரிடம் சென்று ஏகலைவனைப் பற்றிக் கூற வேண்டும்?
ஏகலைவனின் குற்றம்
பெரும்பாலான மக்கள், ஏகலைவனின் குரு பக்தியை மெச்சுகின்றனர். ஆனால், குரு பக்தி என்னும் போர்வையில் குருவிற்கு எதிராகச் செயல்பட்டவன் ஏகலைவன் என்பதே உண்மை. அவன் உண்மையிலேயே துரோணரை தனது குருவாக ஏற்றிருந்தால், “உனக்கு வில்வித்தை கற்றுக் கொடுக்க முடியாது” என்ற குருவின் முதல் கட்டளையை அவன் பின்பற்றியிருப்பான். ஆனால் அவன் அவ்வாறு செய்யவில்லை. துரோணர் ஏகலைவனை தாழ்ந்த குலம் என்று ஒதுக்கியிருக்கலாம், அல்லது அவனது நேர்மையை சோதிப்பதற்காக ஒதுக்கியிருக்கலாம், அல்லது வேறு காரணத்திற்காகவும் ஒதுக்கியிருக்கலாம்–எப்படியிருந்தாலும் ஏகலைவனின் கடமை குருவின் கட்டளைப்படி நடப்பதே. ஆனால் அவனுக்கோ தனது குருவின் கட்டளை பிடிக்கவில்லை. குருவின் முதல் கட்டளையைக்கூட மதிக்காத சீடனை சிறந்த குரு பக்தனாக ஏற்றுக்கொள்ள முடியுமா?
குரு இல்லாமல் வித்தையைக் கற்றுக்கொள்ள முடியாது என்பதாலும் குரு இல்லாதவனை மக்கள் மதிக்கமாட்டார்கள் என்பதாலும், ஏகலைவன் தனது சொந்த கற்பனையின் அடிப்படையில் துரோணருக்கு சிலை செய்து கலை கற்றுக் கொண்டான். கற்பனையில் மனம்போனபடி செயல்படுபவர்களை சாஸ்திரமும் பெரியோர்களும் மதிப்பதில்லை. அவனது முக்கிய குறிக்கோள் வில்வித்தையைக் கற்று மிகச்சிறந்த வீரனாக வருவதே; அதாவது, தனது சொந்த புலன்களை திருப்தி செய்வதே–குருவை திருப்தி செய்வது அல்ல. இத்தகைய ஆசை நேர்மையானதல்ல.
கட்டை விரலைக் கொடுத்தவன்
துரோணரின் முதல் கட்டளையை ஏகலைவன் ஏற்கவில்லை என்றாலும், இறுதியில் அவரது கட்டளையை ஏற்று கட்டை விரலைக் கொடுத்தான் என்று கூறி அவனைப் பாராட்டுபவர்கள் உள்ளனர். ஆனால் நாம் இதனை சற்று கவனமாகவும் ஆழமாகவும் சிந்தித்துப் பார்த்தால், குரு பக்தியைக் காட்டிலும் ஏகலைவன் உலக தர்மத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளான் என்பதைப் புரிந்துகொள்ளலாம். குருவானவர் தட்சணைக் கேட்கும்போது அதைக் கொடுப்பது உலக தர்மம்; குருவின் கட்டளையை உளமாற ஏற்று அதனை நிறைவேற்றுவது குரு பக்தி. இதன்படி ஏகலைவன் தனது விரலை அர்ப்பணித்தது உலக தர்மம்; குரு பக்தி அல்ல. அவனிடம் உண்மையான குரு பக்தி இருந்திருந்தால், துரோணரின் முதல் உபதேசத்தைப் பின்பற்றியிருப்பான்.
“அர்ஜுனனே தனது மிகச்சிறந்த சீடனாக இருக்க வேண்டும்,” என்ற துரோணரின் விருப்பத்தை கட்டை விரலை இழந்த பின்னரும் ஏகலைவனால் ஏற்க முடியவில்லை. மீதமிருந்த விரல்களைக் கொண்டு அம்பெய்த பழகினான். குருவின் விருப்பத்தை ஏற்க மனமின்றி, வெளித் தோற்றத்தில் கட்டை விரலைக் கொடுத்ததில் குரு பக்தி என்று ஏதுமில்லை.
அர்ஜுனனின் மீதான பொறாமை
துரோணரால் முதலில் மறுக்கப்பட்ட பின்னர், ஏகலைவன் தனது குருவின் கருணைக்காக காத்திருந்திருக்க வேண்டும். அதுவே குரு பக்தி. அல்லது குரு முக்கியமல்ல, கலை மட்டுமே முக்கியம் என்று நினைத்திருந்தால், வேறொரு குருவிடம் சென்று கலை கற்றிருக்க வேண்டும். ஆனால் ஏகலைவனோ அர்ஜுனனைக் காட்டிலும் சிறந்தவனாக வர வேண்டும் என்ற மனப்பான்மையில் இருந்தான். அர்ஜுனன் என்னும் தூய பக்தனுக்கு எதிரான விருப்பங்கள் நிச்சயம் நன்மை பயப்பவை அல்ல. ஒரு வைஷ்ணவனைக் காட்டிலும் தான் பெரியவனாக வளர வேண்டும் என்னும் ஆசை நிச்சயம் குரு பக்தி அல்ல. மேலும், இது துரோணரின் விருப்பத்திற்கு முற்றிலும் விரோதமானதாக இருந்தது.
குருவிற்கு சேவை செய்வதன் அடிப்படை சரணாகதி; நீதிநெறிகள் அல்ல. ஆனால் ஏகலைவன் சரணடைவதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை, குருவின் கவனம் தன்மீது வர வேண்டும் என்று மட்டுமே விரும்பினான். இத்தகைய வெளிவேஷங்கள் செயற்கையானவை. வேறு விதமாகக் கூறினால், ஏகலைவன் வெளித்தோற்றத்தில் சீடனைப் போல தென்பட்டாலும், உண்மையில் அவனது இதயம் அகங்காரத்தினாலும் பொறாமையினாலும் கொழுந்துவிட்டு எரிந்தது. அவனிடம் பொறாமை இல்லாதிருந்தால், முன்னரே கூறியபடி, கட்டை விரலை இழந்த பிறகாவது குருவின் விருப்பத்தை பூர்த்தி செய்ய முயன்றிருப்பான்; அர்ஜுனனுக்கு எதிராக செயல்பட்டிருக்க மாட்டான்.
அர்ஜுனனின் செயல் நியாயமா?
அர்ஜுனன் ஏன் துரோணரிடம் சென்று ஏகலைவனைப் பற்றிக் கூற வேண்டும்? அர்ஜுனனின் தூண்டுதலின் பேரிலேயே துரோணர் கட்டை விரலைப் பெற்றார் என்று கூறி, அர்ஜுனன் பொறாமை கொண்டவன் என்று கூறுவோரும் உண்டு. உண்மையில், அர்ஜுனன்மீது எந்த தவறும் இல்லை. “நீயே எனது சீடர்களில் முதன்மையானவன்,” என்று துரோணர் அர்ஜுனனுக்கு அளித்த வாக்கினை அவர் காப்பாற்றியாக வேண்டும்; மேலும், அதனைக் காப்பாற்ற வேண்டிய கடமை சீடனுக்கும் உண்டு. ஏகலைவனைப் பற்றி துரோணரிடம் கூறியதன் மூலமாக அர்ஜுனன் தனது கடமையைச் செய்தான், அதில் பொறாமை என்ற கேள்விக்கே இடமில்லை. அர்ஜுனன் கிருஷ்ணரின் மிகச்சிறந்த தூய பக்தன்; இல்லாவிடில் கிருஷ்ணர் கீதையை உரைப்பதற்கு அர்ஜுனனைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டார். தனது பக்தர்கள் பொறாமையற்றவர்கள் என்று கிருஷ்ணர் கீதையில் (12.13) கூறுவதை அறிதல் நன்று.
ஞானத்தை குருவிடமிருந்து நேரடியாகக் கேட்டுப் பெறுவதே பக்குவமான முறை. ஆனால் ஏகலைவன் தனது சொந்த பலத்தினால் மாவீரனாக வளர முயன்றான். இதைத்தான் அர்ஜுனன் தடுக்க விரும்பி, தனது குருவிடம் தெரிவித்தான். அர்ஜுனன் கருணையுடன் அவ்வாறு செய்யாவிடில், போலியான குரு பக்தி பரவியிருக்கும். குருவிடம் சென்று பணிவுடன் பாடம் கற்பதற்கு பதிலாக, ஒரு சிலையை வைத்து அதனை குருவாக நினைத்து பயிற்சி செய்யும் போலித் தன்மைகள் பல மடங்கு அதிகரித்திருக்கும். அத்தகு நாத்திகக் கொள்கைகள் நிலைநாட்டப்பட்டிருப்பின், மக்களுக்கு உண்மையான பக்குவத்தை வழங்கும் முறைகள் அழிந்திருக்கும். குருவின் கட்டளைகளை மறுத்துவிட்டு, வெளி வேஷத்தில் குரு பக்தியை வெளிப்படுத்துவோர் அதிகரித்திருப்பர்.
“அர்ஜுனனே எனது மிகச்சிறந்த சீடன்,” என்பது துரோணரின் முடிவு. அம்முடிவினைக் காக்க வேண்டிய கடமை நிச்சயம் அர்ஜுனனுக்கும் உண்டு. அர்ஜுனன் தானாகச் சென்று, “என்னை உங்களின் சிறந்த சீடனாக மாற்றுங்கள்,” என்று ஒருபோதும் கேட்கவில்லை; அர்ஜுனனின் நடத்தையிலும் திறமையிலும் அகமகிழ்ந்த துரோணர், தானாக முன்வந்து, அர்ஜுனனிடம் உறுதியளித்தார். குருவின் வாக்கினைக் காப்பாற்றிய அர்ஜுனனின் செயலில் தவறு இருப்பதாக நினைப்பவர்கள், குரு-சீட உறவினை அறியாதோர் என்பதில் சந்தேகமில்லை. அர்ஜுனன் ஏகலைவனின் மீது சற்றும் பொறாமை கொண்டவன் அல்ல என்பதும், அர்ஜுனனின் செயல் ஏகலைவன் மட்டுமின்றி மொத்த உலகத்தின் மீதும் அவன் கொண்டிருந்த கருணையைக் காட்டுகிறது என்பதும் தெளிவான உண்மைகளாகும்.
குருவால் நிராகரிக்கப்பட்டவன்
உண்மையான குரு பக்தி எளிமையானதும் இயற்கையானதுமாகும். ஏகலைவன் தனது குருவினால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆரம்பத்திலும் சரி, கட்டை விரலை தட்சணையாகக் கொடுத்தபிறகும் சரி, துரோணர் ஏகலைவனை தன்னுடைய சீடனாக ஏற்கவில்லை என்பதே உண்மை. கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானது, கல்வியின் கதவை யாருக்கும் மூடக் கூடாது; ஆயினும், ஏகலைவன் தனது கல்வியை முறைப்படி கற்கவில்லை என்பதாலும் மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததைப் பார்த்து திருடிக் கற்றுக் கொண்டான் என்பதாலும், அவனது கட்டை விரலை தட்சணையாகப் பெற்றதாக துரோணர் தனது மகனிடம் கூறியுள்ளார்.
குருவிற்குத் தெரியாமல் கல்வியைத் திருடிக் கற்றுக்கொள்ளுதல் மன்னிக்க முடியாத குற்றம் என்பதால், வேத கால தர்மத்தின்படி, உண்மையில் துரோணர் ஏகலைவனுக்கு அதிகமான தண்டனையைக் கொடுத்திருக்கலாம். ஆனால் ஏகலைவனின் அகங்காரத்தை குறைக்கும் வகையில், அவர் மிகுந்த கனிவுடன் கட்டை விரலை மட்டும் பெற்றுக் கொண்டார். துரோணர் ஏகலைவனை சீடனாக ஏற்றுக்கொள்ளவே இல்லை என்னும்பட்சத்தில், ஏகலைவனை குரு பக்திக்கு உதாரணமாகக் கூறுவது தவறு. குருவே இல்லை; குரு பக்தி எங்கிருந்து வந்தது?
மருத்துவக் கல்லூரிக்குச் செல்லாமல் திருட்டுத்தனமாக மருத்துவம் கற்றுக் கொண்டால், அவர்களை அரசு அங்கீகரிக்குமா, தண்டனை வழங்குமா? யோசித்துப் பாருங்கள்!
கிருஷ்ணரால் கொல்லப்பட்டவன்
கட்டை விரலின்றி அம்பெய்தப் பழகிக் கொண்ட ஏகலைவன் பிற்காலத்தில் கிருஷ்ணரின் விரோதியான ஜராசந்தனின் கீழ் பணிபுரிந்து வந்தான். பிற்காலத்தில் ஏற்பட்ட போர் ஒன்றில், ஏகவைவன் கிருஷ்ணரால் கொல்லப்பட்டான்.
குருவினால் புறக்கணிக்கப்பட்டவன் கிருஷ்ணராலும் புறக்கணிக்கப்படுகிறான். கிருஷ்ணர் பக்தர்களைக் காப்பவர், துஷ்டர்களை அழிப்பவர். ஏகலைவன் குரு பக்தனாக இருந்திருந்தால், கிருஷ்ணர் ஏகலைவனைக் கொன்றிருக்க மாட்டார். அவன் துஷ்டனாக இருந்த காரணத்தினால்தான், கிருஷ்ணர் தனது கரங்களாலேயே அவனைக் கொன்றார். கிருஷ்ணர் அசுரர்களை மட்டுமே கொல்வார், பக்தர்களை என்றும் பாதுகாப்பார். ஏகலைவன் அசுரத் தன்மை கொண்டவன் என்பதை இதிலிருந்து தெளிவாக உணரலாம்.
துரோணர் ஏகலைவனை நிராகரித்ததில் தவறில்லை என்பதை அவனது பிற்கால செயல்கள் துல்லியமாகக் காட்டுகின்றன. வெளி வேஷத்திற்கு குரு பக்தனாக இருந்து கொண்டு, உள்ளே பொறாமையை வளர்ப்பவன் சீடனல்ல. துரோணாசாரியரின் கட்டளையை மீறிய ஏகலைவனின் நடத்தை குரு துரோகம் என்றும், அர்ஜுனனின் மீதான ஏகலைவனின் பொறாமை வைஷ்ணவ அபராதம் என்றும் அறியப்பட வேண்டும். இந்த குரு துரோகமும் வைஷ்ணவ அபராதமுமே ஏகலைவன் கிருஷ்ணரால் கொல்லப்பட்டதற்கான காரணமாகும்.
வெளியில் பார்ப்பதற்கு கடுந்தவங்களைச் செய்தாலும் அது பக்தி ஆகாது. அசுரர்கள்கூட ஆழமான தவங்களைச் செய்வதை நாம் புராணங்களில் பல இடங்களில் காண்கிறோம். அத்தகைய கடுமையான தவங்களால் குருவையோ கிருஷ்ணரையோ யாராலும் திருப்தி செய்ய இயலாது, குருவின் சொற்படி நடத்தல் என்னும் உண்மையான சரணாகதி அவசியம்.
ஏகலைவன் தண்டிக்கப்பட்டதன் மூலமாக போலியான குரு பக்தி தடுக்கப்பட்டது. பௌதிகத் தளத்தில் இருப்பவர்கள் வேண்டுமானால் ஏகலைவனைப் புகழலாம், ஆனால் ஆன்மீகத் தளத்திலிருந்து பார்த்தால், ஏகலைவனின் உண்மை நிலை புலப்படும்.
நம்மிடம் உள்ள ஏகலைவனை விரட்டுவோம்
ஏகலைவனின் வரலாற்றிலிருந்து நாமும் சிலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். நமது குரு நமக்கு ஏதேனும் அறிவுறுத்தினால், அதை அப்படியே நிறைவேற்ற வேண்டும். (குருவை ஏற்பதற்கு முன்பாக அவர் உண்மையான குருவா என்பதையும் தெரிந்துகொள்ளுதல் அவசியம். அதனை மறந்துவிடக் கூடாது) “குருதேவர் இதைச் செய்யும்படிச் சொல்கிறார். ஆனால் நான் வேறு செயல்களைச் செய்யப் போகிறேன்,” என்று நினைத்தல் முற்றிலும் தவறு. குருவின் கூற்றுகளை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதில் எதையும் சேர்க்கக் கூடாது, எதையும் கழிக்கக் கூடாது. சேர்த்தாலோ கழித்தாலோ, குருவின் கருணையை நம்மால் பெற இயலாது. நாம் உண்மையான சீடர்களா என்பதை அறிய, குரு சில நேரங்களில் சோதனை செய்யலாம். அச்சமயத்தில் நாம் குருவை விட்டு விலகக் கூடாது; ஏகலைவனைப் போன்ற போலி சீடர்களோ குருவின் உபதேசங்கள் கடுமையாக இருக்கும்போது, அவரை விட்டு விலகிச் சென்று அவரைப் பின்பற்றுவது போன்று வேஷம் போடுவர்.
உண்மையான குரு, போலியான குரு என்று இரு தரப்பினர் இருப்பதுபோன்று, உண்மையான சீடன், போலியான சீடன் என்று இரு தரப்பினரும் உண்டு. உண்மையான சீடன் குருவின் கட்டளைகளை நிறைவேற்ற அயராது உழைப்பான். போலியான சீடனோ வெறுமனே குருவை வழிபட்டால் போதும், எல்லாவற்றையும் அறிந்துகொள்ளலாம் என்று நினைப்பான். உண்மையான சீடன் தனது ஆன்மீக சகோதரர்களின் முன்னேற்றத்தைக் கண்டு பூரிப்படைவான், போலி சீடனோ மற்றவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமை கொள்வான்.
“குரு என்று ஒருவர் இருந்தால் போதும்; அவர் சொல்வதைச் செய்ய வேண்டிய அவசியமில்லை, அவரிடமிருந்து உபன்யாஸங்களைக் கேட்கத் தேவையில்லை, பணிவுடன் தொண்டாற்ற தேவையில்லை, குரு வரும்போது மட்டும் அவர் முன் சென்று அவருக்கு பாத பூஜை செய்யலாம், அடக்கத்துடன் அவரிடம் கேள்விகள் கேட்கத் தேவையில்லை, வீட்டில் படம் அல்லது மூர்த்தியை வைத்து வழிபட்டால் போதும்”–இத்தகு எண்ணங்கள் ஏகலைவனின் எண்ணங்கள். நம்மிடையே இவை இருப்பின், இவற்றைக் களைந்து உண்மையான சீடனாக உருப்பெறுவோமாக. குருவிற்கு உண்மையாக தொண்டு செய்தால் மட்டுமே மாயையை வெற்றி கொண்டு கிருஷ்ணரை அணுக முடியும்; இல்லாவிடில் இயலாது.
(இக்கட்டுரையின் பெரும் பகுதி ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரின் உபதேசங்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.)
உங்கள் கட்டுரை ஏகலைவனை தீயவனாக சித்தரிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு எழுதப்பட்டதாக தெரிகிறது.