புருஷ ஸுக்தம் நிலைநாட்டப்படுதல்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரப்பூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

 இந்த இதழில்: இரண்டாம் காண்டம், ஆறாம் அத்தியாயம்

சென்ற இதழில், சிருஷ்டிக்கு மூலம் பகவானே என்பதையும் விராட ரூப வர்ணனைகளையும் நாரதருக்கு பிரம்மா உபதேசித்ததை கண்டோம். அதன் தொடர்ச்சியை இந்த இதழில் காணலாம்.

விராட ரூபத்தின் சிறப்பு

பிரம்மா தொடர்ந்து பேசினார்: “நாரதனே, குரலின் உற்பத்தி ஸ்தானம், விராட புருஷரின் வாயாகும். அதன் ஆளுநர் அக்னியாகும். அவரின் தோலும் தேக அமைப்பின் மற்ற ஆறு அடுக்குகளும் ஏழு வகையான வேத மந்திரங்களின் உற்பத்தி ஸ்தானமாகும். எல்லா வகையான சுவையுடைய உணவு வகைகளின் பிறப்பிடம் அவரது நாக்காகும்.

“நமது சுவாசத்திற்கும் மற்றெல்லா வாயுக்களுக்கும் பிறப்பிடமாக இருப்பவை அவரது நாசித் துவாரங்கள், எல்லா வகையான வாசனைகளுக்கும் மூலமாக அவரது சுவாசம் உள்ளது. எல்லா மூலிகைகளும் மருந்துகளும் அவற்றின் தேவர்களான அஸ்வினி குமாரர்களும் அவரது முகரும் சக்தியால் தோற்றுவிக்கப்படுகின்றனர்.

“எல்லா வகையான உருவங்களுக்கும் (காட்சிகளுக்கும்) உற்பத்தி ஸ்தானமாக விளங்கும் அவரது கண்கள் மினுமினுப்பாகவும் பிரகாசமாகவும் உள்ளன. அவரது விழிகள் சூரியனைப் போன்று உள்ளன. எல்லா புறங்களிலிருந்தும் கேட்கும் அவரது செவிகள் எல்லா வேதங்களுக்கும் பாதுகாப்பு இடங்களாகும். அவரது கேட்கும் புலன், ஆகாயத்திற்கும் எல்லாவிதமான ஓசைகளுக்கும் பிறப்பிடமாகும்.

“அவரது தோல், எல்லா வகையான ஸ்பரிச உணர்வுகளுக்கு பிறப்பிடமாகவும் எல்லா வகையான யாகங்கள் இயற்றும் இடமாகவும் உள்ளது, அவரது உடலின் வெளிப்பரப்பானது எல்லா மங்களகரமான சந்தர்ப்பங்களுக்கும் எல்லா சாராம்சங்களுக்கும் மூலமாக விளங்குகிறது. அவரது ரோமங்கள் யாகங்களுக்கு தேவையான மரங்கள் உட்பட எல்லா வகையான தாவரங்களுக்கும் காரணமாக உள்ளன. அவரது கேசம், மேகங்களுக்கு பிறப்பிடமாக உள்ளன. அவரது நகங்கள் மின்சாரம், கற்கள் மற்றும் உலோகங்கள் ஆகியவற்றிற்குப் பிறப்பிடமாக உள்ளன. சிறந்த தேவர்களும் ஜீவராசிகளைக் காக்கும் பிற தலைவர்களும், பகவானின் கரங்களிலிருந்து தோன்றுகின்றனர்.”

எல்லாவற்றையும் உள்ளடக்கிய விராட ரூபம்

“பகவான் முன்வைக்கும் அடிகள் சுவர்க்க லோகங்கள் மற்றும் கீழ் உலகங்களுக்குப் புகலிடமாகும். அவரது தாமரைப் பாதங்கள் எல்லா வகையான பயங்களிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கின்றன. பகவானின் பாலுறுப்புகளிலிருந்து மழை, நீர், விந்து, பாலுறுப்புகள், மற்றும் பிரஜாபதிகள் தோன்றுகின்றனர். பகவானின் விராட ரூபத்தின் மலத் துவாரம், மரண தேவனான மித்திரனின் வசிப்பிடமாகும். அவரது மலத் துவாரமும் மலக்குடலும் பொறாமை, துரதிர்ஷ்டம், மரணம், நரகம் போன்றவற்றின் இடங்களாகும்.

“அவரது முதுகு எல்லாவகையான ஏமாற்றம், அறியாமை, மற்றும் அதர்மத்தின் இடமாகும். அவரது இரத்தக் குழாய் களிலிருந்து பெரும் நதிகளும் சிற்றாறுகளும் பாய்ந்தோடுகின்றன. அவரது எலும்புகளின் மீது பெரும் மலைகள் குவிந்துள்ளன. பகவானின் அருவ அம்சம் சமுத்திரங்களின் இருப்பிடமாகும். அவரது வயிறு பௌதிக அழிவுக்குட்பட்ட ஜீவராசிகளின் இளைப்பாறும் இடமாகும். அவரது இதயம் சூட்சுமமான உடல்களைக் கொண்ட ஜீவராசிகளின் வசிப்பிடமாகும்.

“பிரம்மாவாகிய நான், நாரதராகிய நீ, நான்கு பிரம்மச் சாரிகளான ஸனகர், ஸனாதனர், ஸனந்தனர், ஸனத் குமாரர் ஆகியோரின் சமயக் கொள்கைகளின் இருப்பிடமாக அந்த மஹாபுருஷரின் உணர்வு உள்ளது. அந்த உணர்வுதான் உண்மைக்கும் உன்னத அறிவிற்கும்கூட இருப்பிடமாகும். பிரம்மாவாகிய என்னிலிருந்து தொடங்கி, நீ (நாரதர்), சிவபெருமான், உனக்கு முன்பு பிறந்த பெரும் முனிவர்கள், தேவர்கள், அசுரர்கள், நாகங்கள், மனிதர்கள், பறவைகள், மிருகங்கள், ஊர்வன, பிரபஞ்சங்களிலுள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள், சிறிய கிரகங்கள், ஒளிரும் கிரகங்கள், மின்னல், இடி, வெவ்வேறு கிரக வாசிகளான கந்தர்வர்கள், அப்ஸராக்கள், யக்ஷர்கள், ராக்ஷசர்கள், பூத கணங்கள், உரகர்கள், வசுக்கள், பிசாசுக்கள், சித்தர்கள், வித்யாதரர்கள், சாரணர்கள் உட்பட எல்லா வகையான ஜீவ ராசிகளும் பொருட்களும், கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என எல்லா காலங்களிலும் பகவானின் பிரபஞ்ச ரூபத்தில் அடங்கியுள்ளன.”

எல்லாவற்றையும் பராமரிக்கும் விராட ரூபம்

சூரியன் தனது கதிர்களால் பிரபஞ்சம் முழுவதையும் ஒளிமயமாக்குகிறது; அதுபோல, பரம புருஷ பகவான் தம் பிரபஞ்ச ரூபத்தின் மூலமாக படைப்பிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அனைத்தையும் பராமரிக்கிறார். மரணம், அச்சமின்மை ஆகிய நிலைகளை ஆள்பவராகவும், ஜடவுலக செயல்விளைவுகள் மற்றும் மரணத்திற்கு அப்பாற்பட்டவராகவும் பரம புருஷர் உள்ளார்.

“நாம் இருக்கும் ஜடவுலகம் மொத்தப் படைப்பில் நான்கில் ஒரு பங்காகும். பகவானின் இராஜ்ஜியமானது மரணம், பயம், நோய், முதுமை ஆகியவற்றிலிருந்து விடுபட்டதாகும். அந்த ஆன்மீக உலகம் பிறப்பற்றவர்களுக்கு உரியதாகும். சூரியன், தன் கதிர்களின் ஒளி மற்றும் வெப்பத்திலிருந்து பிரிந்திருப்பதைப் போலவே, பகவான் தனது ஜடப் படைப்பிலிருந்து பிரிந்திருக்கிறார்.”

விஷ்ணுவிற்கான யாகம்

“இந்த மஹாபுருஷருடைய (மஹா விஷ்ணு) நாபிக் கமலத்திலிருந்து நான் பிறந்தபொழுது, இப்புருஷருடைய அங்கங்களைத் தவிர அவரை ஆராதிப்பதற்குரிய எந்த பொருளும் என்னிடம் இருக்கவில்லை. யாகச் சடங்குகளை நிறைவேற்றுவதற்கு மலர்கள், இலைகள், வைக்கோல், யாகபீடம், உகந்த காலம் (வசந்த காலம்) போன்ற யாகப் பொருட்கள் தேவைப்படுகின்றன. பாத்திரங்கள், தானியங்கள், நெய், தேன், தங்கம், மண், நீர், ரிக் வேதம், யஜுர் வேதம், ஸாம வேதம், மற்றும் நான்கு வேதியர்களும் தேவை. அத்துடன் பகவானின் அங்க உறுப்புகளான தேவர்களின் வெவ்வேறு நாமங்களை எழுந்தருளச் செய்ய வேண்டும். இதை குறிப்பிட்ட நோக்கத்திற்காக தேர்வு செய்யப்பட்ட முறைகளுடனும் குறிப்பிட்ட சாஸ்திரத்திற்கு இணங்கவும் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறாக யாகத்திற்கு தேவையான பொருட்களை முழுமுதற் கடவுளின் சொந்த உடலுறுப்பிலிருந்தே நான் ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. பிறகு பகவானைத் திருப்திப்படுத்துவதற்காக யாகங்களை நான் நிறைவேற்றினேன்.

“எனதருமை மகனே நாரதா, அதன்பின் ஜீவராசிகளின் தலைவர்களான உன்னுடைய ஒன்பது சகோதரர்கள், தோன்றியும் தோன்றாமலும் உள்ள புருஷர்களை திருப்திபடுத்துவதற்காக முறையான சடங்குகளுடன் யாகத்தை நிறைவேற்றினர். அதன்பின் மனித குலத் தந்தைகளான மனுக்கள், சிறந்த முனிவர்கள், முன்னோர்கள், கற்றறிந்த பண்டிதர்கள், தைத்யர்கள், மனித குலத்தினர் ஆகியோர் பரம புருஷ பகவானை மகிழ்விப்பதற்கான யாகங்களை நிறைவேற்றினர்.

“எனவே, ஜடப் பிரபஞ்சங்களின் எல்லா தோற்றங்களும் அவரது சக்தி வாய்ந்த பௌதிக சக்திகளில் அமைந்துள்ளன. அவர் பௌதிக குணங்களால் ஒருபோதும் கவரப்படாதவர்; இருப்பினும், பௌதிக சக்திகளை ஏற்றுக்கொண்டு அவற்றை அவர் கட்டுப்படுத்துகிறார். அவரது விருப்பத்தால் நான் சிருஷ்டிக்கிறேன், சிவபெருமான் அழிக்கிறார். அவரது நித்ய புருஷ ரூபத்தில் அவர் அனைத்தையும் காக்கிறார். அவரே இம்மூன்று சக்திகளையும் அடக்கியாளும் சக்தி பெற்றவராவார்.

பகவானின் தாமரை பாதங்களைப் பற்றுதல்

“எனதருமை மைந்தனே, எதையெல்லாம் நீ என்னிடமிருந்து விசாரணை செய்தாயோ அவற்றையெல்லாம் உனக்கு நான் விளக்கிக் கூறினேன். மேலும், எல்லா உலகங்களிலும் உள்ள அனைத்துமே பரம புருஷ பகவானின் தயவையே நம்பியுள்ளன என்பதை நீ உறுதியாக அறியவேண்டும்.

“நாரதனே, பரம புருஷ பகவானாகிய ஸ்ரீ ஹரியின் தாமரை பாதங்களை நான் பெரும் சிரத்தையுடன் பற்றிக் கொண்டிருப்பதால் நான் கூறுவதனைத்தும் இதுவரை பொய்யானது அல்ல. நிலையற்ற பற்றினால் எனது புலன்கள் ஒருபோதும் இழிவடைந்தது இல்லை.

“நான் சீடப் பரம்பரையின் வேத ஞானத்தில் பூரணத்துவம் பெற்ற சக்திவாய்ந்த பிரம்மா என்று அறியப்பட்டிருப்பினும், எல்லா தவங்களையும் செய்தவனாகவும், யோக சித்திகளிலும் தன்னுணர்விலும் நிபுணனாக இருப்பினும், ஜீவராசிகளின் முன்னோர்களால் நான் அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களின் மரியாதைக்குரிய வந்தனங்களைப் பெறுபவனாக இருந்தபோதிலும்,  உண்மையில் என் பிறப்பிற்கு மூலமாகிய பகவானை நான் இன்னமும் சரியாக அறிந்துகொள்ள முடியாமல் இருக்கிறேன்.

“அவரது பாதங்களில் சரணாகதியடைவது மட்டுமே எனக்கு மிகவும் நன்மை பயக்கக் கூடியதாகும். அது மட்டுமே ஒருவரை பிறவி சக்கரத்தின் துன்பங்களிலிருந்து விடுவிக்கக்கூடியதாகும். இத்தகைய சரணாகதி ஸர்வ மங்களம் பொருந்தியது. அத்துடன் ஒருவன் எல்லா இன்பங்களையும் உணர அஃது அவனுக்கு உதவுகிறது.

“சிவபெருமானோ, நீயோ, நானோ ஆன்மீக ஆனந்தத்தின் எல்லைகளை ஆராய்ந்தறிய முடியாதென்றால் மற்ற தேவர் களால் எப்படி முடியும்? மேலும், பரம புருஷரின் மாயையான புறச்சக்தியால் நாமனைவரும் குழப்பப்படுவதால் படைக்கப்பட்ட இப்பிரபஞ்சத்தினை மட்டுமே நமது தனிப்பட்ட ஆற்றலுக்கு ஏற்றவாறு நம்மால் காண முடியும்.

“பகவானை உள்ளபடி பூரணமாக அறிவது கடினம் என்றாலும் அவருடைய அவதாரங்களையும் லீலைகளையும் போற்றிப் புகழ்ந்து அந்த பரம புருஷ பகவானை நாம் மரியாதையுடன் வணங்குவோமாக.”

பிரம்மதேவரின் பிறப்பிற்கு விஷ்ணுவே மூலமாவார்.

அனைத்தும் அவரது சக்தியின் அம்சங்களே

“மூல முழுமுதற் கடவுளாகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் முதல் அவதாரமான மஹா விஷ்ணு (காரணோதகஷாயி விஷ்ணு) இப்பிரபஞ்சத்தை சிருஷ்டித்து சிலகாலம் பராமரித்து பின் மீண்டும் அதனை தம்முள் கிரகித்துக் கொள்கிறார். ஜட ஆசைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டு புலன்களின் தொல்லையற்ற நிலையை அடையும்பொழுது பகவானை ஒருவரால் அறிய முடியும். இல்லையெனில் அர்த்தமற்ற தர்க்கங்களால் அனைத்தும் நிலைகுலைந்து நம் பார்வையிலிருந்து பகவான் மறைந்துவிடுகிறார்.

“நித்ய காலம், விண்வெளி, காரணம் மற்றும் விளைவுகள், மனம், மூலப் பொருட்கள், ஜட அகங்காரம், இயற்கைக் குணங்கள், புலன்கள், பகவானின் விராட ரூபம், கர்போதகஷாயி விஷ்ணு, அசைவன அசையாதன போன்ற பிரிவுகளில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் காரணோதகஷாயி விஷ்ணுவே எஜமானராவார். தேவர்களும் நல்ல, தீய ஜீவன்களும் பார்ப்பதற்கு பகவானின் விசேஷமான தன்மையாகவும் ரூபமாகவும் தோன்றக்கூடும். ஆனால் உண்மையில் அவர்கள் பகவானின் உன்னத ஆற்றலில் ஒரு துணுக்கு மட்டுமே.

“நாரதனே, பகவானின் உன்னத லீலா அவதாரங்களைப் பற்றி இப்பொழுது ஒவ்வொன்றாக நான் கூறப் போவதை கவனமாக கேட்பாயாக. அவற்றைக் கேட்பதால் மனதில் உள்ள அழுக்காறுகள் மறையும். அவை கேட்பதற்கு இனிமையானவை, சுவைத்து அனுபவிக்கப்பட வேண்டியவை; இதனால் அவை என் இதயத்தில் நீங்காமல் நிறைந்துள்ளன.”

இவ்வாறு நாரதரின் கேள்விகளுக்கு சந்தேகமற விடையளித்த பிரம்மதேவர் பகவானின் லீலா அவதாரங்களை விளக்குவதை அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives