—நிஷ்சிந்திய தாஸரின் பேட்டியிலிருந்து
நான் ஹவாயில் வசித்த இரண்டு முறையுமே ஸ்ரீல பிரபுபாதர் ஸர்ஃபெர்களைப் பற்றி பேசினார். [ஸர்ஃபெர் (surfer) என்றால் மிதவைப் பலகையின் மேலே நின்று கொண்டு கடல் அலைகளின் மீது பயணம் செய்பவர் என்று பொருள்.] ஹவாய் பகுதியில் ஸர்ஃபெர்கள் அதிகம். எங்களது கோயிலிலும் ஸர்ஃபெர் பக்தர்கள் அதிகமாக இருந்தனர். பிரபுபாதர் ஒருமுறை கூறினார், “நீங்கள் ஸர்ஃபெர் என்கிறீர், நான் ஸஃபரர் (sufferer—துன்பப்படுபவர்) என்கிறேன்.”
பிரபுபாதர் அக்கூற்றினைக் கூறியபோது, ஸர்ஃபெர்களாக இருந்த எல்லா பக்தர்களும் பிரபுபாதர் நேரடியாக தன் முகத்தைப் பார்த்து கூறியதாக என்னிடம் கூறினர். அதைக் கேட்டு நான் சிரித்தேன், எவ்வாறு ஒருவர் ஒரே சமயத்தில் எல்லாரையும் பார்த்து பேச முடியும். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் தீர்மானமாகக் கூறினர், “பிரபுபாதர் என்னைப் பார்த்துதான் கூறினார்.” ஆச்சரியம், ஆனால் உண்மை.
மற்றொரு முறை பிரபுபாதர் கூறினார்: “பகவானுக்கு உடையுடுத்தி அலங்காரம் செய்யும் பூஜாரியும் பகவானது கோயிலைத் தூய்மைப்படுத்தும் துப்புரவாளரும் பகவானது பார்வையில் சமமானவர்களே.” விக்ரஹத்திற்கு நேரடியாக அலங்காரம் செய்வதாலோ, கோயில் மேலாளராக இருப்பதாலோ, ஒருவன் தன்னை பாத்திரம் துலக்கக்கூடிய அல்லது கோயிலைத் தூய்மை செய்யக்கூடிய பக்தரைக் காட்டிலும் மிகவும் முக்கியமானவனாக நினைத்து விடக் கூடாது. ஸ்ரீல பிரபுபாதர் கூறினார்: “பூஜாரி, துப்புரவாளர்—இருவரும் சமமே. நாம் அனைவரும் கிருஷ்ணருக்குத் தொண்டாற்றுகிறோம், கிருஷ்ணர் ஒவ்வொரு பக்தரின் தொண்டையும் சமமாகக் காண்கிறார்.”
ஜய ஸ்ரீல பிரபுபாத!!!