அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரபூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த இதழில்: மூன்றாம் காண்டம், ஏழாம் அத்தியாயம்
சென்ற இதழில் மைத்ரேயர் பகவானின் விஸ்வரூபத்தைப் பற்றி விதுரரிடம் பேசியதைக் கேட்டோம். இந்த இதழில் விதுரர் பகவானைப் பற்றி தொடர்ந்து விசாரிப்பதைக் கேட்கலாம்.
விதுரரின் கேள்விகள்
கிருஷ்ண துவைபாயன வியாஸரின் சிறந்த கற்றறிந்த புதல்வரான விதுரர், அறியாமையின் துயரினால் தனது புத்தி பேதலித்து உள்ளது என்றும் அதனைத் தெளிவுபடுத்துங்கள் என்றும் கூறி, மைத்ரேயரிடம் மூன்று கேள்விகளை எழுப்பினார்.
- பரம புருஷர் மாற்றமற்றவராகவும் பூரண ஆன்மீகமானவராகவும் இருப்பதால், ஜட இயற்கை குணங்களுடனும் அவற்றின் செயல்களுடனும் அவர் எப்படி தொடர்பு கொண்டுள்ளார்? அவரது லீலைகள் எப்படி ஜட இயற்கை குணங்களின் கலப்படமில்லாமல் வெளிப்படுகின்றன?
எப்பொழுதும் சுயதிருப்தியுடைய பகவான் செயல்படுவதற்கு எதனால் தூண்டப்படுகிறார்?
- தூய உணர்வுடைய ஆத்மா எவ்வாறு அறியாமையில் ஈடுபட்டது?
- ஒவ்வொரு ஜீவராசியின் இதயத்திலும் பரமாத்மா வீற்றிருக்கிறார். எனினும் ஜீவராசியின் செயல்கள் ஏன் துன்பத்திலும் துரதிர்ஷ்டத்திலும் முடிவடைகின்றன?
முக்தியளிக்கும் நாமம்
விதுரரின் கேள்விகளுக்கு பூரண இறையுணர்வு பெற்றவரான மைத்ரேயர் பதிலளித்தார்: பகவான் என்றுமே மாயையால் கவரப்படுவதில்லை. பகவான் பௌதிக ஆதிக்கத்திற்கு அப்பாற்பட்டவராக இருந்தாலும் தமது பிரதிநிதி களான தேவர்களின் மூலமாக முழு பிரபஞ்சத் தோற்றத்தையும் படைத்து, காத்து, அழிக்கிறார்.
“உண்மையில் ஜீவராசிக்கு பந்தமோ துன்பமோ இல்லை. அவன் தன் தூய அறிவை இழப்பதுமில்லை. அவன் தன் நிலையைப் பற்றி சிரத்தையுடன் யோசித்து பார்த்தால் தான் பகவானின் நித்ய தொண்டன் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஜட இயற்கையை அடக்கியாள முயல்வதாலும் ஜடவுலகின் எஜமானராக ஆக முயல்வதாலும் அவன் தன் உண்மையான அடையாளத்தை மறக்கிறான், மேலும் ஜடத்தன்மை கொண்டவனாகத் தன்னை நினைக்கிறான்.
“ஆனால் பரம புருஷரான வாஸுதேவரின் கருணையால், பற்றில்லாமல் அவருக்கு பக்தித் தொண்டு செய்வதன் மூலம் சுய ஸ்வரூபத்தை ஜீவனால் படிப்படியாக உணர முடியும்.
தனது புலன்களை பகவானை திருப்திப்படுத்தும் விதமாக ஈடுபடுத்தி அவரது நாமம், ரூபம், புகழ் முதலியவற்றைப் பற்றி கேட்பதாலும் பாடுவதாலுமே எல்லாவித துன்பங்களிலிருந்தும் முக்தியடைய முடியும்.”
வைஷ்ணவ சேவை
மைத்ரேயரிடமிருந்து விடைகளைப் பெற்ற விதுரர் கூறினார்: “தங்களின் சக்திவாய்ந்த பதில்களால் பரம புருஷரைப் பற்றியும் ஜீவராசிகளைப் பற்றியும் எனக்கு இருந்த சந்தேகங்கள் தீர்ந்தன. பரம புருஷரைப் போற்றிப் புகழ்வதில் தூய பக்தர்கள் நூறு சதவிகிதம் ஈடுபடுகின்றனர். அத்தகைய ஆன்மீக குருவின் பாதங்களுக்கு சேவை செய்வதால், பொய்யான கருத்துக்களை விட்டொழித்து பௌதிக துன்பங்களை அழித்து விட முடியும்.”
விஸர்கம் பற்றிய கேள்விகள்
வைஷ்ணவர்களுக்கு சேவை செய்வது குறித்து தெரிவித்த பின்னர், உலகப் படைப்பின் பல்வேறு விவரங்களை அறிந்துகொள்ள விரும்பிய விதுரர் தொடர்ந்து வினவினார்: “மஹத் தத்துவத்தைப் படைத்து, புலன்களையும் புலனுறுப்புகளையும் கொண்ட பிரம்மாண்டமான பிரபஞ்ச ரூபத்தையும் படைத்த பிறகு, பரம புருஷர் அதற்குள் பிரவேசித்தார். முதல் புருஷரான காரணோதகஷாயி விஷ்ணுவிடமிருந்து கர்போதகஷாயி விஷ்ணுவும், அவரிடமிருந்து க்ஷீரோதகஷாயி விஷ்ணுவும் வருகின்றனர். இந்த க்ஷீரோதகஷாயி விஷ்ணுவே பிரம்மாண்ட ரூபமான விராட புருஷராக தியானிக்கப்படுகிறார். இந்த ரூபத்திற்குள்தான் எல்லா கிரகங்களும் அவற்றின் வளர்ச்சிகளும் ஜீவராசிகளும் மிதந்து கொண்டிருக்கின்றன.
“சிறந்த பிராமணரே, பகவானின் விராட ரூபமும் புலன்களும் புலநுகர்ச்சி பொருட்களும் பத்து வகையான உயிர்காற்றுகளும் மூவகையான உயிர்சக்திகளுடன் இருக்கின்றன என்று தாங்கள் கூறினீர்கள். இப்பொழுது நீங்கள் விரும்பினால், குறிப்பிட்ட பிரிவுகளைச் சேர்ந்த வெவ்வேறு சக்திகளைப் பற்றி விளக்கியருளுங்கள்.
“தேவர்களின் தலைவரான பிரஜாபதி பிரம்மா எப்படி, யுகங்களின் தலைவர்களான பல்வேறு மனுக்களை ஏற்படுத்த முடிவு செய்தார்? இப்பொழுது மனுக்களையும் அவர்களுடைய வம்சத்தையும் தயவு செய்து விளக்குங்கள்.
“பூமிக்கு மேலும் கீழும் உள்ள கிரகங்கள் எப்படி அமைந்துள்ளன என்பதையும் அவற்றின் அளவையும் மண்ணுலகங்களின் அளவையும்கூட அன்புடன் விளக்கியருள வேண்டுகிறேன். மேலும், கீழ்நிலை மனித இனம், மனிதர்கள், கருவிலிருந்து பிறப்பவை, வியர்வையிலிருந்து பிறப்பவை, இருமுறை பிறப்பவை (பறவைகள்), தாவரங்கள் காய்கறிகள் போன்ற ஜீவராசிகளின் உற்பத்திகளையும் உபபிரிவுகளையும்கூட விவரிக்க வேண்டுகிறேன்.
“ஜட இயற்கை குணங்களின் அவதாரங்களான பிரம்மா, விஷ்ணு, மஹேஷ்வரன் ஆகியோரைப் பற்றியும் பரம புருஷ பகவானின் அவதாரங்களைப் பற்றியும் அவரது பெருந்தன்மையான லீலைகளைப் பற்றியும் தயவுசெய்து விளக்கியருளுங்கள். மனித சமூதாயத்தின் சமூக மற்றும் ஆன்மீகப் பிரிவுகளைப் பற்றியும், சிறந்த முனிவர்களின் பிறப்புகளையும் வேதங்களின் பிரிவுகளையும் தயவுகூர்ந்து விளக்குங்கள்.
“வெவ்வேறு யாகங்கள், யோக மார்க்கங்கள், பகுத்தறிவு, கல்வி, பக்தித் தொண்டு ஆகியவற்றை அவற்றின் கட்டுப்பாட்டு விதிகளுடன் விவரிக்க வேண்டுகிறேன். நாத்திகத்தின் குறைகள் மற்றும் முரண்பாடுகளையும் இனக்கலப்பு நிலைகளையும் விவரிக்க வேண்டுகிறேன். பற்பல ஜீவராசிகளின் இயற்கை குணங்கள் மற்றும் செயல்களை விளக்கியருளும்படி வேண்டுகிறேன்.
“அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகியவற்றைப் பற்றியும் வெவ்வேறு ஜீவனோபாய மார்க்கங்களையும் வேதங்கள் கூறும் வெவ்வேறு நீதி நெறிகளையும் விவரிக்க வேண்டுகிறேன். முன்னோர்களுக்கு மரியாதை செலுத்துவதற்குரிய விதிமுறைகள், பித்ருலோக சிருஷ்டி, கிரகங்கள், நட்சத்திரங்கள், ஒளிரும் பொருட்களில் நிலவும் சூழ்நிலைகள் மற்றும் கால அட்டவணைகளைப் பற்றி தயைகூர்ந்து விளக்குங்கள்.
“தானம், தவம், நீர்த்தேக்கங்கள் தோண்டுதல் ஆகியவற்றின் பலன்களை விளக்குங்கள். இல்லற வாழ்விலிருந்து ஓய்வு பெற்றவர்களின் நிலையையும் ஆபத்தான நிலையிலுள்ள ஒரு மனிதனின் கடமையைப் பற்றியும்கூட தயைகூர்ந்து விளக்குங்கள். அனைத்து ஜீவராசிகளையும் ஆள்பவரான பரம புருஷர், எல்லா மதங்களுக்கும் மதக் கடமைகளில் ஈடுபடும் எல்லா மனிதர்களுக்கும் தந்தை என்பதால் அவரை முழுமையாக திருப்தி செய்யும் வழியை அன்புடன் விளக்குங்கள்.
“எனது ஆன்மீக குருவாகிய தாங்கள் என்மீது மிகுந்த கருணை கொண்டுள்ளீர்கள். நான் கேட்காமல் விட்டுவிட்ட விஷயங்களையும்கூட தயவுசெய்து எனக்கு விளக்குங்கள். ஜட இயற்கையின் மூலப் பொருட்களுக்கு எத்தனை விதமானஅழிவுகள் உள்ளன என்பதையும், அழிவுக்குப்பிறகு, பகவானுக்கு தொண்டு செய்பவர் யார் என்பதையும் தயவுசெய்து விளக்குங்கள்.
“ஜீவராசிகள் மற்றும் பரம புருஷர் பற்றிய உண்மைகள் யாவை? அவர்களுக்குரிய அடையாளங்கள் என்னென்ன? வேத ஞானத்தின் விசேஷ மதிப்பென்ன? மேலும் குரு சீடப் பரம்பரையின் அவசியம் என்ன? தூய பக்தர்களின் (ஆன்மீக குருவின்) உதவியின்றி, பக்தித் தொண்டு, துறவு ஆகியவற்றின் அறிவை ஒருவரால் எப்படிப் பெற முடியும்?
“பரம புருஷ பகவான் ஹரியின் லீலைகளை அறியும் நோக்கத்துடன்தான் இக்கேள்விகளை எல்லாம் தங்களிடம் நான் கேட்டுள்ளேன். இவற்றுக்கான பதில்களை வழங்கும் அறிவு தானமானது வேதங்களில் கூறப்பட்டுள்ள தானங்கள், யாகங்கள், தவங்கள் முதலான அனைத்தையும்விட உயர்ந்ததாகும்.”
பல துறைகள் தொடர்பான விதுரரின் கேள்விகளுக்கான மைத்ரேயரின் பதில்கள் நான்காம் காண்டம் வரை தொடர உள்ளன.