விஸ்வ ரூபத்தின் படைப்பு

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரபூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த இதழில்: மூன்றாம் காண்டம், ஆறாம் அத்தியாயம்

சென்ற இதழில் மைத்ரேயர், விதுரரின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தேவர்களின் பிரார்த்தனைகளைப் பற்றி அறிந்தோம். இந்த இதழில், அப்பிரார்த்தனைகளை ஏற்றுக் கொண்ட பகவானின் செயல்களைக் காணலாம்.

தேவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுதல்

சக்தியை வேண்டிய தேவர்களின் பிரார்த்தனைகளை செவியுற்ற பகவான் படைப்புத் தொழிலுக்கு புத்துயிர் ஊட்ட முடிவு செய்தார். அதற்காக, இருபத்துமூன்று மூலப் பொருட்களுக்குள் தமது புற சக்தியான காளிதேவியுடன் புகுந்தார். அதனால், உறங்கி எழுபவன் மீண்டும் தன் செயல்களில் ஈடுபடுவதைப் போலவே, அனைத்து ஜீவராசிகளும் வெவ்வேறு செயல்களை செய்யும்படி உற்சாகப்படுத்தப்பட்டனர்.

பகவானின் விருப்பத்தால், இருபத்துமூன்று முக்கிய மூலப் பொருட்களும் செயற்பட தூண்டப்பட்டபொழுது, பகவானின் பிரமாண்டமான பிரபஞ்ச ரூபம் அல்லது விஸ்வரூபம், தோற்றத்திற்கு வந்தது. இந்த விஸ்வரூபத்திற்குள்தான் எல்லா கிரக அமைப்புகளும் அசையும் அசையாத படைப்புகளும் ஓய்வெடுக்கின்றன. ஆயிரம் தேவ ஆண்டுகளுக்கு எல்லா ஜீவராசிகளும் (பிரம்மா பிறக்கும் வரை) கர்போதகஷாயி விஷ்ணுவிற்குள் ஒடுங்கிக் கிடக்கின்றன.

பிரமாண்டமான பிரபஞ்ச ரூபமானவர், மூன்று, பத்து மற்றும் ஒன்று என வர்ணிக்கப்படுகிறார். அவர் உடல், மனம், புலன்கள் என மூன்றாகவும், எல்லா அசைவுகளையும் இயக்கும் பத்துவகையான சக்திவாய்ந்த உயிர் சக்திகள் என பத்தாகவும், உயிர்ச்சக்தி உற்பத்தி செய்யப்படும் ஓர் இதயம் என ஒன்றாகவும் இருக்கிறார்.

எல்லா தேவர்களுக்குள்ளும் பரமாத்மாவாக உள்ள பரம புருஷ பகவான் தேவர்களின் மனோநிலையை புரிந்து கொண்டு இந்த பிரமாண்டமான விஸ்வரூபத்தை தோற்றுவித்தார்.

விஸ்வரூபத்தில் தேவர்கள்

பகவானின் விஸ்வரூபத்தினை மைத்ரேயர் தொடர்ந்து விவரித்தார். தகுதி வாய்ந்த ஜீவராசிகளை தேவர்களாக நியமித்து, பிரபஞ்ச விவகாரங்களை நிர்வகிக்கும் பொறுப்பை பகவான் அவர்களிடம் ஒப்படைக்கிறார். அவர்கள் தத்தமக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகளுக்கேற்ப விஸ்வரூபத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் நுழைகின்றனர். பகவானுடைய பிரபஞ்ச ரூபத்தின் பல்வேறு பகுதிகள் பல்வேறு சக்திகளைத் தோற்றுவிக்கின்றன; மேலும், வெவ்வேறு தேவர்கள் அச்சக்திகளை நிர்வகிக்கின்றனர். (விஸ்வரூபத்தின் எந்த பகுதியிலிருந்து எந்த சக்தி தோற்றுவிக்கப்படுகின்றது என்பதையும் அதனை நிர்வகிக்கும் தேவர்களையும் குறிக்கும் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.)

பகவானின் பிரபஞ்ச ரூபத்திலிருந்து தோற்றுவிக்கப்பட்ட எல்லா சக்திகளையும் பயன்படுத்தி, பந்தப்படாத வாழ்வையும் தன்னுணர்வையும் பெறுவதற்கு ஒருவர் ஆன்மீக குருவின் வழிகாட்டலின் கீழ் பரம புருஷரை வழிபட வேண்டும்.

பகவானை வணங்குதல்

பரம புருஷரை வழிபடுவதை வலியுறுத்திய மைத்ரேயர், அதனைத் தொடர்ந்து, பரம புருஷரின் அந்தரங்க சக்தியால் தோற்றுவிக்கப்பட்டுள்ள பிரமாண்ட ரூபத்தின் உன்னதமான காலத்தையும் செயலையும் ஆற்றலையும் முழுமையாக விவரிப்பது கடினம் என்றும், அவ்வாறு இருப்பினும் தனது ஆன்மீக குருவின் கருணையால் அவரிடமிருந்து கேட்டு கிரகித்த பகவானின் பெருமைகளை விவரிக்க முயற்சிக்கிறேன் என்றும், அஃது தனது பேசும் சக்தியை தூய்மையாக்கும் என்றும் விதுரரிடம் தெரிவித்தார்.

பரம புருஷ பகவானின் உன்னத செயல்களையும் பெருமைகளையும் கேட்பதாலேயே பூரணமான தன்னுணர்வைப் பெறக்கூடிய வகையில், மாமுனிவர்கள் அவற்றை எழுத்து வடிவில் நன்கு தொகுத்துள்ளனர். அவற்றைக் கேட்பதாலும் பேசுவதாலும் படிப்பதாலும் நமது புலன்கள் முழுமையாக பயனுடையவையாகின்றன.

பகவானின் பெருமைகள் நினைத்தற்கரியவை என்பதை பிரம்மதேவர், ஆயிரம் தேவ ஆண்டுகள் தியானம் செய்த பின்னரே உணர்ந்து கொண்டார்.

வார்த்தைகள், மனம், அஹங்காரம், அவற்றை ஆளும் தேவர்கள் என அனைவரும் பரம புருஷரை அறிவதில் வெற்றியடையத் தவறிவிட்டனர். பௌதிக அறிஞர்களாலும் விஞ்ஞானிகளாலும் பகவானின் அற்புத செயல்களை புரிந்துகொள்ளவே முடியாது, தூய பக்தித் தொண்டால் மட்டுமே அவரைப் புரிந்துகொள்ள முடியும். இவ்வாறு கூறிய மைத்ரேயர் தனது பணிவான வணக்கங்களை பகவானுக்கு மீண்டும்மீண்டும் சமர்ப்பித்தார்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives