உணர்வோம் நாமத்தின் மகிமைகளை

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் கருணையினால் கலி யுக யாகமான ஹரே கிருஷ்ண மஹா மந்திரம் பகவத் தரிசனம் மூலமாக அனைத்து இடங்களிலும் பரவி வரும் வேளையில் அவற்றின் அமுத சுவைகளை மேலும் சிறிது சுவைக்கலாம் வாருங்கள்.

வழங்கியவர்: திருமதி. கந்தர்விகா மோஹினி தேவி தாஸி

திருநாமமும் கிருஷ்ணரும்

ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரிப்பதற்கும் ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணரின் திவ்யமான வடிவழகை தியானிப்பதற்கும் இடையே எவ்வித வேறுபாடும் இல்லை. ஒவ்வொருவரும் ஆன்மீக வாழ்வின் உயர்நிலையை விரைவில் அடைவதற்கான எளிய வழிமுறை இந்த திருநாம உச்சாடனமே. திருநாமத்தை உரைத்த மாத்திரத்தில் நம்மைச் சூழ்ந்துள்ள வினைகளிலிருந்து நாம் உடனடியாக நிவாரணம் பெற்று மகிழ முடியும். இதை நாம் நடைமுறையில் காண்கிறோம். அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் கீர்த்தனைகளில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் ஆன்மீக ஆனந்தத்தை விரைவில் அடைகின்றனர். ஒரு குழந்தைகூட இதில் கலந்துகொள்ளலாம். உண்மையில், கீழ்நிலை விலங்கான நாய்கூட இதில் கலந்துகொள்ளலாம்.

அவ்வளவு எளிமையான, உயர்ந்த இந்த ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினை உச்சரிக்கும் கலையை நாமும் பயின்று மற்றவர்களுக்கும் எடுத்துரைப்பது மிகவும் அவசியம். பிரகலாத மஹாராஜர் இதற்கு சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தார். பகவானின் திருநாமத்தை அவர் எச்சூழ்நிலையிலும் தவறாது உரைத்ததோடு மட்டுமல்லாது தனது சக நண்பர்களுக்கும் இதனைப் பழக்கிக் கொடுத்து இன்புறச் செய்தார்.

“தண்ணீர், தண்ணீர்” என்றால் தாகம் தணியாது. நிஜமான தண்ணீரே தாகத்தை தணிக்கவல்லது. ஆனால் திருநாமம் அப்படிப்பட்டதல்ல.

திருநாமம் தெய்வீகமானது

இவ்வுலகில் ஒரு பொருளுக்கும் அதன் பெயருக்கும் வேறுபாடு உண்டு; தண்ணீர் என்னும் வார்த்தைக்கும் தண்ணீர் என்னும் பொருளுக்கும் இடையே நிச்சயம் வேறுபாடு உண்டு. தாகமாக இருக்கும்போது, வெறுமனே “தண்ணீர், தண்ணீர்,” என்று உச்சரிப்பதால் தாகத்தை தணித்து விட முடியாது. நிஜமான தண்ணீரே தாகத்தைத் தணிக்கவல்லது. இதுவே இவ்வுலகின் இயற்கை.

ஆனால் ஆன்மீக உலகமோ வேறுபட்ட தன்மையைக் கொண்டது, பகவானின் திருநாமத்திற்கும் அவருக்கும் எந்தவொரு வேறுபாடும் கிடையாது. பகவான் தெய்வீகமானவர், அவரது திருநாமமும் தெய்வீகமானது. ஆன்மீக உணர்வில் நிலைபெற்றோர் இருபத்தி நான்கு மணி நேரமும் திருநாமத்தை உச்சரித்தாலும், அங்கு சோர்வு என்பதற்கு இடமே இல்லை. இதுவே பூரண உண்மையின் ஆன்மீக இயற்கையாகும். யார் வேண்டுமானாலும் இதனைப் பரிசீலித்துப் பார்க்கலாம்.

திருநாமத்தின் இதர குணங்கள்

கிருஷ்ணருடைய திருநாமத்தின் தன்மைகள் பத்ம புராணத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

நாம சிந்தாமணி: க்ருஷ்ணஸ்  சைதன்ய-ரஸ-விக்ரஹ:

பூர்ண ஷுத்தோ நித்ய-முக்தோ  நாம-நாமினோ:

“கிருஷ்ணரின் திருநாமம் தெய்வீகப் பேரின்பமாகும். திருநாமம், எல்லா இன்பத்திற்கும் இருப்பிடமாகத் திகழும் சாக்ஷாத் கிருஷ்ணரே என்பதால், இது எல்லா ஆன்மீக நன்மைகளையும் வழங்கவல்லதாகும். கிருஷ்ணரின் நாமம் பூரணமானது, இஃது எல்லா தெய்வீக ரஸங்களின் வடிவமும் ஆகும். இது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட பௌதிக நாமம் அன்று, சாக்ஷாத் கிருஷ்ணரிலிருந்து சற்றும் சக்தி குறைந்தது அல்ல. கிருஷ்ணரின் திருநாமம் பௌதிக குணங்களால் களங்கமடையாதது என்பதால், மாயையுடனான தொடர்பு குறித்த கேள்விக்கே இடமில்லை. கிருஷ்ணரின் திருநாமம் எப்போதும் முக்தி பெற்ற ஆன்மீக தளத்தைச் சார்ந்ததாகும்; ஜட இயற்கையின் விதிகளுக்கு இது கட்டுப்படாததாகும்.  ஏனெனில், கிருஷ்ணருக்கும் கிருஷ்ணரின் நாமத்திற்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.”

கலி யுகத்தில் கிருஷ்ணரைச் சந்தித்தல்

கலி-காலே நாம-ரூபே க்ருஷ்ண-அவதார

நாம ஹைதே ஹய ஸர்வ-ஜகத்-நிஸ்தார

“கலி யுகத்தில் கிருஷ்ணரின் திருநாமமாகிய ஹரே கிருஷ்ண மஹா மந்திரம், பகவான் கிருஷ்ணரின் அவதாரமாகும். அத்திருநாமத்தை உச்சரித்தல் என்னும் எளிமையான வழிமுறையால் யார் வேண்டுமானாலும் பகவானுடனான நேரடித் தொடர்பை உடனடியாகப் பெற்றுவிட முடியும். இதை யாரொருவர் பின்பற்ற நேர்ந்தாலும் அவர் நிச்சயமாக விடுதலை பெற்று விடுவார்.” (சைதன்ய சரிதாம்ருதம், ஆதிலீலை 17.22)

ஹரே கிருஷ்ண மஹா மந்திரம் கிருஷ்ணரின் அவதாரம் என்பதால், கிருஷ்ணரை நேருக்கு நேராகக் காண்பதற்கும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரிப்பதற்கும் இடையில் எவ்வித வேறுபாடும் இல்லை.

பக்தித் தொண்டில் சிறந்தது நாம ஸங்கீர்த்தனமே

கிருஷ்ணரின் மீதான பக்தித் தொண்டு ஒன்பது வகைப்படும்: (1) ஷ்ரவணம் (கேட்டல்), (2) கீர்த்தனம் (புகழ்தல், பாடுதல்), (3) ஸ்மரணம் (நினைத்தல்), (4) பாத ஸேவனம் (பாதத்திற்கு சேவை செய்தல்), (5) அர்ச்சனம் (பூஜை செய்தல்), (6) வந்தனம் (பிரார்த்தனை செய்தல்), (7) தாஸ்யம் (சேவகனாக செயல்படுதல்), (8) ஸக்யம் (நண்பனாக இருத்தல்), மற்றும் (9) ஆத்ம நிவேதனம் (அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்தல்). இந்த ஒன்பது வழிமுறைகளும் மிகவும் உயர்ந்தவை, ஒருவரை பக்குவநிலைக்கு உயர்த்துவதற்கு சீரானவை.

அதே சமயத்தில், நாம ஸங்கீர்த்தனம் (கிருஷ்ணரின் திருநாமத்தை ஒன்றுகூடி உச்சரித்தல்) என்பது மற்றெல்லா வழிமுறைகளிலும் சிறந்ததாகக் கூறப்படுகிறது.

தார மத்யே ஸர்வ-ஷ்ரேஷ்ட நாம-ஸங்கீர்தன

நிரபராதே நாம லைலே பாய ப்ரேம தன

“பக்தித் தொண்டின் ஒன்பது வழிமுறைகளில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது, பகவானின் திருநாமத்தை எப்போதும் உச்சரிப்பதே. பத்து வகையான குற்றங்களைத் தவிர்த்து இதனை மேற்கொண்டால், ஒருவர் மிகவும் விலைமதிப்புடைய பொக்கிஷமான கிருஷ்ண பிரேமையை எளிதில் அடையலாம்.” (சைதன்ய சரிதாம்ருதம், அந்திய லீலை 4.71) எனவே, பத்து வகையான குற்றங்களை அறிந்து அதனை கைவிடுவதற்குப் பழக வேண்டும்.

சக்தி வாய்ந்த கிருஷ்ண நாமம்

பகவான் விஷ்ணுவின் திருநாமங்களை ஆயிரம் முறை உச்சரிப்பதால் அடையப்படும் பலனை ராம என்று ஒரு முறை உச்சரிப்பதால் எளிமையாக அடைந்து விட முடியும் என்னும் வாக்கியத்தை நாம் விஷ்ணு-ஸஹஸ்ர நாமத்தில் காண்கிறோம். மேலும், ஸஹஸ்ர நாமங்களை மூன்று முறை உச்சரிப்பதன் பலனை ஒரே ஒருமுறை கிருஷ்ண என்று உச்சரிப்பதால் அடையலாம் என்று பிரம்மாண்ட புராணம் கூறுகின்றது. பரம புருஷ பகவானின் அனைத்து நாமங்களும் சர்வ வல்லமை பொருந்தியவை; இருப்பினும், கிருஷ்ண நாமத்தையும் ராம நாமத்தையும் வேத சாஸ்திரங்கள் வலியுறுத்தும் காரணத்தினால், ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மந்திரம் மஹா மந்திரமாகக் கருதப்படுகிறது. இதுவே கலி யுகத்தின் தாரக மந்திரமாகும்.

 

ஒன்றுகூடி நாம ஸங்கீர்த்தனம் செய்வதே எல்லா வழிமுறைகளிலும் சிறந்ததாகக் கூறப்படுகிறது.

கிருஷ்ணர் நம்மை என்றும் மறவாதவர்

தன்னைச் சார்ந்து இருப்பவர்களை என்றும் மறவாது பாதுகாப்பவர்கள் மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்று விளங்குவர். இதைப் போலவே தனது நாமத்தை உச்சரித்து தன்னிடம் சரணடைந்துள்ள பக்தனை பகவான் எல்லா நேரங்களிலும் பாதுகாக்கின்றார். ஹஸ்தினாபுரத்திலிருந்து “கிருஷ்ணா! கோவிந்தா!” என்று தன்னைக் கூவி அழைத்த திரௌபதியைக் காக்க துவாரகையிலிருந்து கிருஷ்ணர் துணி கொடுத்த நிகழ்ச்சியை மஹாபாரதத்தில் காண்கிறோம். அந்த அழைப்பு கிருஷ்ணரின் பாதுகாப்பைப் பெற்றுத் தந்தது.

ஹரே கிருஷ்ண மஹா மந்திரம் என்பது பகவானையும் அவரது சக்தியையும் அன்புடன் அழைப்பதேயாகும். ஆகவே, அவ்வாறு அழைப்பதில் தொடர்ந்து ஈடுபடுபவனிடம் பகவான் எவ்வளவு ஈடுபாடு உடையவராக இருப்பார் என்பதை நம்மால் கற்பனைகூட செய்ய முடியாது. திருநாமத்தை தொடர்ந்து உச்சரிக்கும் பக்தன் பகவானின் கவனத்தை உடனடியாக கவர்கின்றான்.

 

பாவங்களைக் களைந்து முக்தியை நல்கும் திருநாமம்

ஒருவன் கிருஷ்ணரின் திருநாமத்தை ஒருமுறை உச்சரித்தால்கூட, அஃது அவனை பாவ விளைவுகளிலிருந்து விடுவிக்கின்றது என்பதை நாம் சாஸ்திரங்களில் பல இடங்களில் காண்கிறோம். தொடர்ந்து உச்சரிப்பதன் பலனை எண்ணிப் பார்க்கவும் முடியாது. பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற புத்தகங்களைப் படித்தல், பக்தர்களின் சங்கம், விக்ரஹ ஆராதனை போன்றவை நாமத்தை முறையாக உச்சரிப்பதற்கு உதவியாக அமைபவை. தினமும் (108 மணிகளைக் கொண்ட மாலையில்) குறைந்தது பதினாறு சுற்றுகள் ஜெபம் செய்து, கட்டுப்பாட்டு விதிகளை முறையாக கடைபிடித்தால், அது வாழ்வை வெற்றியடைய வைக்கும்.

இதனை ஒதுக்கி விடாமல் தீவிரமாகக் கடைபிடிக்க வேண்டும். முழுமுதற் கடவுளிடம் திரும்பிச் செல்வதற்கான எளிய வழிமுறை இதுவே. இவ்வுண்மையை கிருஷ்ணரே பகவத் கீதையில் (18.65) கூறுகின்றார்:

மன்-மனா பவ மத்-பக்தோ  மத்-யாஜீ மாம் நமஸ்குரு

மாம் ஏவைஷ்யஸி ஸத்யம் தே  ப்ரதிஜானே ப்ரியோ  மே

“எப்போதும் என்னைப் பற்றி நினைத்து, எனது பக்தனாக ஆகி, என்னை வழிபட்டு, உனது வணக்கங்களை எனக்கு சமர்ப்பிப்பாயாக. இவ்வாறு நீ என்னை வந்தடைவாய் என்பதில் ஐயமில்லை. நீ எனக்கு மிகவும் பிரியமான நண்பன் என்பதால், இந்த சத்தியத்தை நான் உனக்கு அளிக்கின்றேன்.”

திருநாம உச்சாடனத்தை ஏற்றுக்கொள்வோர் சந்தேகமின்றி கிருஷ்ணரைச் சென்றடைவர். எனவே, ஹரே கிருஷ்ண மஹா மந்திர ஜெபமே பலனை விரைவாக பெற்றுத்தர வல்லதும் பாதுகாப்பானதும் உத்திரவாதமிக்கதுமாகும். அனைவரும் ஜெபித்து பயனடைவோம், விரைந்து வாருங்கள்!

About the Author:

Admin of the Bhagavad Darisanam site!

Leave A Comment