மஹாபிரபுவிடம் ரகுநாத தாஸர் எவ்வாறு சரணடைந்தார் என்பதையும் நாய் ஒன்றிற்கு எவ்வாறு கருணை வழங்கினார் என்பதையும் முன்னர் கண்டோம். இந்த இதழில் புரியிலுள்ள சில பக்தர்களுடன் அவர் புரிந்த லீலைகளைக் காணலாம்.

பகவானாசாரியரும் மாயாவாதிகளின் தொடர்பும்

புரியில் வாழ்ந்த மஹாபிரபுவின் பக்தர்களில் ஒருவரான பகவானாசாரியர் மிகவும் பரந்த மனப்பான்மையுடன் இருந்தார். ஆனால் கண்டிப்புடன் திகழ்ந்த ஸ்வரூப தாமோதரர் தூய பக்தித் தொண்டின் கொள்கைகளுக்கு எதிரான எதையும் சகித்துக்கொள்ள மாட்டார், சில நேரங்களில் பகவானாசாரியரின் முடிவுகளை சந்தேகிப்பார்.

ஒருமுறை பகவானாசாரியரின் இளைய சகோதரனான கோபாலன் அவரைக் காண வந்தான். வாரணாசியில் படித்ததால் சங்கராசாரியரின் வியாக்கியானத்தின் அடிப்படையில் வேதாந்த சூத்திரத்திற்கு விளக்கமளிப்பதில் கோபாலன் நிபுணனாக இருந்தான். சங்கரரின் வியாக்கியானம் மிகச்சிறிய ஜீவாத்மாவை புருஷோத்தமரான முழுமுதற் கடவுளுடன் அர்த்தமற்ற முறையில் சமப்படுத்த முயல்கின்றது. தனது சகோதரனின் மேலோட்டமான ஆன்மீக நிபுணத்துவத்தினால் கவரப்பட்ட பகவானாசாரியர் கோபாலனின் விளக்கங்களைக் கேட்பதற்கு ஸ்வரூப தாமோதரரை அழைத்தார். ஆனால் பகவானாசாரியர் தமது அறிவை இழந்துவிட்டார் என்று கோபத்துடன் உரைத்த ஸ்வரூப தாமோதரர், மாயாவாத வியாக்கியானங்களைக் கேட்பதால் புகழுக்குரிய பக்தர்களும் ஆன்மீகப் பாதையிலிருந்து வீழ்ச்சியடையலாம் என்றும், நெருங்கிய உறவினராக இருந்தாலும் மாயாவாதிகளிடம் சங்கம்கொள்ளக் கூடாது என்றும் அவரை எச்சரித்தார். இதனால் கோபாலனை வெளியேற்றிய பகவானாசாரியர் அவனுடனான தொடர்பை முற்றிலும் கைவிட்டார்.

சோட்டா ஹரிதாஸரின் குற்றம்

மற்றொரு முறை பகவானாசாரியர் மஹாபிரபுவை தமது இல்லத்தில் உணவருந்த அழைத்தார். முதல் தரமான சிறந்த அரிசியை பகவானுக்கு வழங்க விரும்பியதால், துறவு வாழ்க்கை வாழ்ந்த முதிர்ந்த பக்தையான மாதவி தேவியின் இல்லத்திற்கு சோட்டா ஹரிதாஸரை அவர் யாசகத்திற்கு அனுப்பினார். உணவருந்தியபோது அரிசியின் தரத்தைப் பாராட்டிய கெளராங்கர், அஃது எங்கிருந்து வந்தது என்று வினவினார். மாதவி தேவி அளித்ததாக பகவானாசாரியர் பதிலுரைத்தார். மாதவி தேவியிடமிருந்து யாசித்தது யார் என்று மஹாபிரபு வினவ, பகவானாசாரியர் சோட்டா ஹரிதாஸரின் பெயரைக் குறிப்பிட்டார்.

பிரசாதத்தை ஏற்ற பின்னர், தமது சேவகரான கோவிந்தரிடம் இனிமேல் சோட்டா ஹரிதாஸரை தம்மைக் காண அனுமதிக்கக் கூடாது என்று பகவான் தெரிவித்தார். சோட்டா ஹரிதாஸர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் நெருங்கிய பிரம்மச்சரிய பக்தர் என்பதாலும், அவரது பாடலை மஹாபிரபு மிகவும் பாராட்டுவார் என்பதாலும், அங்கிருந்த பக்தர்கள் வியப்புற்றனர். சோட்டா ஹரிதாஸர் செய்த குற்றம் என்ன என்பதை விளக்கும்படி அவர்கள் கெளராங்கரை வினவினர். ஒரு துறவியினுள் இருக்கும் காம விருப்பத்தினை தம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று பகவான் பதிலுரைத்தார். மாதவி தேவியின் இல்லத்தில் சோட்டா ஹரிதாஸர் ஓர் இளம் பெண்ணைப் பார்த்தார் என்பதையும், அதனால் அவரது இதயத்தில் காமம் எழுப்பப்பட்டது என்பதையும் கெளராங்கரால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

மஹாபிரபுவிற்காக சோட்டா ஹரிதாஸர் தெய்வீக உருவில் பாடுதல்

சோட்டா ஹரிதாஸரின் தற்கொலை

ஹரிதாஸர் மூன்று நாள்களுக்கு விரதம் இருந்தார். அவரது அச்சிறிய குற்றத்தை மன்னித்து அவரை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்படி சைதன்ய மஹாபிரபுவிடம் பக்தர்கள் முறையிட்டனர். ஆனால், இவ்விஷயத்தை மீண்டும் எழுப்பினால், ஹரிதாஸரைத் தொடர்ந்து புறக்கணிப்பது மட்டுமின்றி, புரியை விட்டு நிரந்தரமாக விலகிவிடுவேன் என்று கெளராங்கர் எதிர்பாராத எச்சரிக்கையை விடுத்தார். இதனால் அச்சங்கொண்ட பக்தர்கள், அதன் பின்னர் ஹரிதாஸரைப் பற்றி மஹாபிரபுவிடம் முறையிடவில்லை.

பக்தர்களின் அறிவுரைக்கேற்ப தமது விரதத்தை முறித்த ஹரிதாஸர், மஹாபிரபு தன்னை மீண்டும் அழைப்பார் என்று காத்திருந்தார். ஜகந்நாதரின் கோயிலுக்கு மஹாபிரபு நடந்து செல்லும் பாதையில் ஹரிதாஸர் ஒரு வருடம் காத்திருந்தார். வெகு தொலைவில் இருந்தபடி மஹாபிரபுவை தரிசித்து நமஸ்கரிப்பார். ஆனால் மஹாபிரபு அவரை அழைக்கவே இல்லை. இறுதியில் பிரயாகைக்குச் சென்ற ஹரிதாஸர் அங்கே மூன்று நதிகளின் சங்கமத்தில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டார்.

தெய்வீக உருவில் சோட்டா ஹரிதாஸர்

அச்சம்பவம் நிகழ்ந்த குறுகிய காலத்தில், ஸ்வரூப தாமோதரரும் அவருடன் இருந்த இதர பக்தர்களும் விண்ணிலிருந்து ஓர் அழகிய பாடலை புரியின் கடற்கரையில் கேட்டனர். அக்குரல் சோட்டா ஹரிதாஸருடையதைப் போன்றே ஒலித்தது. விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட ஹரிதாஸர் ஒருவேளை பேயாகி விட்டாரோ என்று பக்தர்கள் யூகித்தனர். ஆனால் அவர்களது கருத்தை ஸ்வரூப தாமோதரர் எதிர்த்தார். ஸ்ரீ சைதன்யரின் நெருங்கிய சேவகர் பேயாக மாறுவது சாத்தியமல்ல என்றும், ஹரிதாஸர் தெய்வீக சரீரத்தைப் பெற்றிருக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.

உண்மையில் அவர் கூறியதே சரி. சோட்டா ஹரிதாஸரையும் அவரது பாடலையும் மஹாபிரபு மீண்டும் ஏற்றுக் கொண்டிருந்தார். மஹாபிரபுவிற்காக சோட்டா ஹரிதாஸர் மற்றவர்களின் கண்களுக்குப் புலப்படாத வகையில் பாடி வந்தார். ஹரிதாஸரின் மீதான பகவானின் கடும் நடவடிக்கை, சாதுவின் நிலையை ஏற்றுள்ள ஒருவன் ஜட விருப்பங்களுடன் கபடதாரியாக இருக்கக் கூடாது என்பதில் அவரது உறுதியை வெளிப்படுத்தியது.

ஸநாதனரின் தற்கொலை எண்ணம்

கெளரஹரியின் வேண்டுகோளுக்கு ஏற்ப, ஸநாதன கோஸ்வாமி அவரைச் சந்திப்பதற்காக விருந்தாவனத்திலிருந்து புரிக்கு வந்தார். ஜாரிகண்ட காட்டின் வழியாக வந்தபோது, ஸநாதனர் களங்கமான நீரில் நீராடினார், அவரது உடலில் வியாதி தொற்றிக் கொண்டது; சீழ் வடியும் புண்கள் உடல் முழுவதும் அரிப்பினை உண்டாக்கின. புரியில் சைதன்ய மஹாபிரபு தினமும் சந்திக்கும் ஹரிதாஸ தாகூருடன் ஸநாதனர் தங்கினார். ஒவ்வொரு நாளும் ஸநாதனரின் விருப்பத்தை மீறி பகவான் அவரை அரவணைப்பார்.

தம்மை கீழ்த்தரமானவனாகவும் வீழ்ச்சியுற்றவனாகவும் கருதிய ஸநாதனர், தமது உடலிலுள்ள சீழ் மஹாபிரபுவைத் தீண்டுவதை நிச்சயம் விரும்பவில்லை. “நான் புனிதமான இந்த பாரத பூமியில் பிறவியெடுத்தும், நோயுற்ற இந்த உபயோகமற்ற உடலினால் எந்த சேவையையும் செய்ய இயலவில்லை. எனவே, வரவிருக்கும் ரத யாத்திரையில் இவ்வுடலினை ஜகந்நாதருடைய சக்கரத்தின் அடியில் விட்டுவிடப் போகிறேன்,” என்று வருத்தத்துடன் ஆழமாக யோசித்தார் ஸநாதனர்.

ஸநாதனரை குணப்படுத்துதல்

அனைவரின் இதயத்திலும் வீற்றுள்ளதால், ஸநாதனரின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட பகவான் சைதன்யர், “நீங்கள் எத்தகைய மனிதர்? நீங்கள் உங்களது வாழ்க்கையை ஏற்கனவே என்னிடம் அர்ப்பணித்து விட்டதால், இந்த உடல் எனது சொத்து. இதனை அழிப்பதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை,” என்று உரைத்தார். பகவான் தன்னை அரவணைப்பதால் தான் அபராதம் இழைக்க நேரிடுவதாகவும், அதில் தனக்கு மகிழ்ச்சியில்லை என்றும் ஸநாதனர் பதிலுரைத்தார். மிகச்சிறந்த பக்தரான ஸநாதனரைத் தழுவுவது தமது சொந்த தூய்மைக்காகவே என்று மஹாபிரபு உறுதியுடன் உரைத்தார். பின்னர் அவர் மீண்டும் ஸநாதனரைக் கட்டியணைக்க, இம்முறை அனைத்து ரணங்களும் அவரது உடலைவிட்டு விலகிச் சென்றன.

ஸநாதனருக்கான கட்டளை

“விருந்தாவனத்திலும் மதுராவிலும் நான் செய்ய வேண்டிய செயல்கள் நிறைய உள்ளன. ஆனால் புரியில் தங்குவேன் என்று எனது தாய்க்கு வாக்குறுதி அளித்துள்ளதால், அச்செயல்களை உமது சரீரத்தின் மூலமாகச் செய்ய வேண்டும். இதனை அழித்துவிடாதே,” என்று ஸநாதனரிடம் பகவான் கூறினார். கெளராங்கர் சென்ற பின்னர், ஸநாதன கோஸ்வாமியைக் கட்டித் தழுவிய ஹரிதாஸ தாகூர், “தாங்கள் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த நபர்!” என்று மகிழ்வுடன் உரைத்தார். “சைதன்ய மஹாபிரபு தங்களது சரீரத்தை தமது சொந்த உடைமையாக ஏற்றுக் கொண்டுள்ளார். அவரது சார்பில் புனித ஸ்தலமான மதுராவில் முக்கியமான திருப்பணிகளை ஆற்றுவதற்கு தங்களை நியமித்துள்ளார்.”

ஸநாதனரின் விருப்பத்தை மீறி மஹாபிரபு அவரை அரவணைத்தல்

வங்காள கவிஞரும் ஸ்வரூப தாமோதரரும்

ஒருமுறை ஒரு வங்காள கவிஞர் பகவான் ஜகந்நாதரையும் பகவான் சைதன்யரையும் ஒப்பிட்டு நாடகம் ஒன்றை இயற்றியிருந்தார். அனைத்து பக்தர்களும் அதனைப் பாராட்டினர், மஹாபிரபுவும் அதனைக் கேட்க வேண்டுமென்று விரும்பினர். ஆனால் ஸ்வரூப தாமோதரரால் சோதிக்கப்படாமல் எதையும் கெளராங்கரிடம் காட்டக் கூடாது என்ற சட்டம் அங்கே வழக்கத்தில் இருந்தது; ஏனெனில், தூய பக்தித் தொண்டின் கொள்கையிலிருந்து துளியளவு விலகினாலும் கெளராங்கர் அதனை விரும்ப மாட்டார்.

வங்காள கவிஞருடைய நாடகத்தின் அறிமுக வரிகளைக் கேட்ட மாத்திரத்தில், அதிலிருந்த தவறான தத்துவக் கருத்துக்களை ஸ்வரூப தாமோதரர் கண்டுபிடித்தார். தூய கிருஷ்ண பக்தரிடமிருந்து ஸ்ரீமத் பாகவதத்தைக் கேட்கும்படியும் சைதன்ய மஹாபிரபுவிடம் முழுமையாக சரணடையும்படியும் ஸ்வரூப தாமோதரர் அவருக்கு அறிவுறுத்தினார்; அதன் மூலமாக அவர் மஹாபிரபுவின் கருணையைப் பெற்று கிருஷ்ண உணர்வின் தத்துவத்தை உண்மையாகப் புரிந்துகொள்ள இயலும். அப்போது மட்டுமே கிருஷ்ண உணர்வின் இலக்கியங்களை எழுதுவதற்கான தகுதியைப் பெற முடியும்.

மஹாபிரபுவின் அற்புதமான கீர்த்தனங்கள்

கெளர ஹரியின் அடியார்கள் அனைவரும் ஜகந்நாதரின் பிரசாதத்தை விரும்பும் அளவிற்குப் பெற்றுக்கொள்ள மன்னர் பிரதாபருத்ரர் ஏற்பாடு செய்திருந்தார். ஒவ்வோர் இரவும் ஆயிரக்கணக்கானோர் இணைந்து குறைந்தபட்சம் நான்கு மணி நேரம் ஹரே கிருஷ்ண கீர்த்தனம் செய்வது வழக்கம். அனைவரும் களைப்புற்ற பின்னர், பக்தர்கள் மிகவும் தாராளமாக பிரசாதத்தை விநியோகிப்பர். இவ்வாறாக, அவர்கள் அனைவரும் பாடி, ஆடி, பிரசாதம் ஏற்று, மஹாபிரபுவின் ஸங்கீர்த்தன இயக்கத்தில் ஆனந்தமாக இருந்தனர்.

ஓர் அதிகாலையில் ஜகந்நாதரை தரிசித்த பின்னர், பகவான் சைதன்யரும் அவருடன் இருந்த பக்தர்களும் கீர்த்தனத்தைத் தொடங்கினர். மஹாபிரபு உயரமாக குதிக்க ஆரம்பித்தார். அவரது பற்கள் தளர்ந்தன, உடல் நடுங்கியது; உடல் முழுவதும் மயிர்க்கூச்செறிந்தது. கீர்த்தனம் மிகவும் தீவிரமாக வளர்ந்தது, கிருஷ்ணரின் திருநாமங்களை உச்சரிப்பதில் அவர்கள் முற்றிலுமாக மூழ்கினர். மனம், உடல், இல்லம் என எல்லாவற்றையும் மறந்து, கிருஷ்ணரின் நாமங்களை மட்டுமே அவர்கள் அனுபவித்தனர்.

கீர்த்தனத்தின் பரவசத்தில் மூழ்கியபடி தமது சகாக்களுடன் மஹாபிரபு நடனமாடுதல்

கோவிந்தரின் உயரிய சேவை

ஒவ்வொரு நாளும் மஹாபிரபு பிரசாதம் ஏற்ற பின்னர், கோவிந்தர் அவரது உடலை சில நிமிடங்களுக்குப் பிடித்துவிடுவதும், கெளராங்கர் உறங்கிய பின்னர் மீதமிருக்கும் அவரது மஹா பிரசாதத்தை ஏற்பதும் வழக்கமாக இருந்தது. ஆனால் நீண்ட நேர கீர்த்தனம் நடைபெற்ற அந்நாளில், கெளர ஹரி தமது அறைக்குத் திரும்பி வந்தபோது, முழுமையாகக் களைப்படைந்திருந்ததால், வாயிலிலேயே படுத்துவிட்டார். சற்று நகர்ந்தால் உள்ளே சென்று உடம்பைப் பிடித்துவிட இயலும் என்று கோவிந்தர் கூறியபோது, “நகரக்கூட இயலாத நிலையில் நான் களைப்பாக உள்ளேன். நீ விரும்புவதைச் செய்வாயாக,” என்று மஹாபிரபு பதிலளித்தார்.

எனவே, தனது மேல்துணியை எம்பெருமானின்  உடலில் சார்த்திய கோவிந்தர், அவரை நமஸ்கரித்து, தாண்டிச் சென்று, உடம்பை பிடித்துவிடத் தொடங்கினார். ஓய்விலிருந்து எழுந்த கெளராங்கர், கோவிந்தர் தமது அருகிலேயே அப்போதும் அமர்ந்திருந்ததைக் கண்டபோது, சற்று கோபத்துடன், “ஏன் இன்னும் பிரசாதம் ஏற்கவில்லை?” என்று வினவினார். எம்பெருமானின் உடலைத் தாண்டிச் செல்ல தான் விரும்பவில்லை என்று கோவிந்தர் பதிலளித்தார். “அப்படியெனில், உள்ளே எவ்வாறு வந்தீர்கள்?” என மஹாபிரபு விசாரிக்க கோவிந்தர் பதிலளிக்கவில்லை. “எனது எஜமானரின் சேவைக்காக, குற்றமிழைத்து நரகத்திற்குச் செல்லலாம். ஆனால் எனது சொந்த புலனுகர்ச்சிக்காக குற்றத்தின் சிறிய சாயலைக்கூட என்னால் கற்பனை செய்ய முடியாது,” என்று கோவிந்தர் தமது மனதில் எண்ணினார்.

(இக்கட்டுரை ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் அடிப்படையில், தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமியினால் எழுதப்பட்ட பிரேம அவதாரம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு என்னும் நூலைத் தழுவி வழங்கப்பட்டுள்ளது)

கோவிந்தர் மஹாபிரபுவின் சேவைக்காக அவரைத் தாண்டிச் செல்லுதல்