முத்தான பத்து குறள்

Must read

முத்தான பத்து குறள்
வழங்கியவர்: பிரபாமயி ரோஹிணி தேவி தாஸி
மனித வாழ்வை ஏற்றவர்கள் உடலின் வெளிப்புற தூய்மையில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர், ஆனால் அகத்தூய்மையை மறந்துள்ளனர். அகத்தூய்மையை அடைவதற்கு பகவான் ஸ்ரீ ஹரியின் திருநாமங்களை ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே / ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று உச்சரிக்க வேண்டும். அவ்வாறு ஹரி நாமத்தை உச்சரித்து அகத்தூய்மையைப் பெற்று விட்டால், நாம் இறப்பிற்குப் பின்னர் மீண்டும் இப்பௌதிக உலகில் பிறவி எடுக்க மாட்டோம். இவ்வாறு பகவானது திருநாமத்தை உச்சரித்து அவரை இடைவிடாது நினைப்பதே கிருஷ்ண உணர்வாகும்.
இந்த கிருஷ்ண உணர்வை நாம் முறையான குரு சீடப் பரம்பரையில் வரும் ஆச்சாரியரிடமிருந்து கற்க வேண்டும். அவர் நமக்கு பகவத் கீதை, பாகவதம் முதலிய சாஸ்திரங்களை அடிப்படையாக வைத்து கிருஷ்ண உணர்வை உபதேசிப்பார். கிருஷ்ண உணர்வு என்னும் அரிய பொக்கிஷத்தைத் தவிர்த்து ஒருபோதும் பக்தித் தொண்டில் ஈடுபடாமல் இருப்பது மாபெரும் அறியாமையாகும். பகவத் கீதையைக் கற்று உணர்வதே மிகச்சிறந்த கல்வியாகும். அதை விடுத்து மற்ற கல்வியைக் கற்பதில், இறுதிப் பலன் ஏதுமில்லை. பகவத் கீதையை உண்மையுருவில் கற்றுத் தரும் ஆன்மீக குருவிடம் நாம் சரணடைந்தால், நம்மிடையே இருக்கக்கூடிய தவறான கொள்கைகளான சூன்யவாதம் (இறுதியில் அனைத்தும் சூன்யம் என்னும் கொள்கை), மாயாவாதம் (நானும் கடவுள், நீயும் கடவுள், எல்லாரும் கடவுள் என்னும் கொள்கை) முதலியவை அனைத்தும் தொலைந்து போகும்.
உண்மையான தத்துவத்தைப் புரிந்து கொண்டு பகவானிடம் சரணடைந்தால், பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியை முற்றிலுமாக வேரறுத்து விட முடியும். இந்த புனிதமான வாழ்வை வாழ விரும்புவோர் நான்கு மாபெரும் பாவச் செயல்களைத் தவிர்க்க வேண்டும்: (1) மாமிச உணவு, (2) போதைப் பொருட்கள், (3) சூதாட்டம், (4) தகாத உடலுறவு. பாவச் செயல்களைத் தவிர்த்து பகவானுடைய தூய பக்தர்களுடன் உறவு கொண்டால் நமது வாழ்க்கை பக்குவமடையும். அவ்வாறு சத்சங்கத்தை அணுகாமல் மனம்போன போக்கில் வாழ்க்கை வாழ்பவன், பக்தனைப் போல காணப்பட்டால்கூட, காலப்போக்கில் பெறர்கரிய மானிடப் பிறவியைத் தொலைத்து விடுகிறான். சத்சங்கத்தை யாரும் ஒருபோதும் இழந்து விடக் கூடாது. 
ஆன்மீக வாழ்வின் இந்த முக்கிய கருத்துகளை எளிதில் புரியும் வண்ணம் குறள் வடிவில் வழங்கியுள்ளேன்.
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
அரிநாமத்தால் காணப் படும். (1)
அரிநாமத்தால் தூய்மை அடைந்தார் இப்பௌதிக
உலகில் வாரா தவர். (2)
கிருஷ்ணஉணர்வு எனப்படுவது யாதெனின் பகவானை
இடைவிடாது நினைவு கொளல். (3)
பகவத்கீதை பாகவதம் குருவழி கேட்டல்
சீடராகும் தகுதியுடை யவர். (4)
பேதைமை என்பது யாதெனின் ஒருக்காலும்
பக்தித்தொண்டு ஆற்றாது இருத்தல். (5)
தலைசிறந்த கல்வியாம் பகவத்கீதை அவற்றையும்
உண்மையுருவில் கற்று உணர். (6)
சூன்யவாதமும் மாயாவாதமும் தொலைந்தே போகும்
ஆன்மீக குருவை ஏற்றால். (7)
பிறப்பு இறப்பு சுழற்சி அற்றுப்போம்
பகவானை சரணடைந் தால். (8)
புலால்போதை சூதுமாது கைவிட்டு வாழ்ந்தால்
புனிதமாகும் பூலோக வாழ்வு. (9)
சத்சங்கம் இல்லாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும். (10)
“பகவத் கீதையைக் கற்று உணர்வதே மிகச்சிறந்த கல்வியாகும். அதை குரு சீடப் பரம்பரையில் வரும் ஆச்சாரியரிடமிருந்து கற்க வேண்டும்.”
[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives