ஸ்ரீல பிரபுபாதருடன் ஒரு உரையாடல் 1975, BTG செப்டம்பர் – ஆங்கிலப் பதிப்பில் பிரசுரிக்கப்பட்டது
(தமிழாக்கம்: ஜெய கிருஷ்ண தாஸ்)
சியாமசுந்தர்: மார்க்சின் கொள்கையினை சீராகப் பின்பற்றுபவர் எவரோ அவரே பூரணமான தலைவர் என யூகிக்கப்படுகிறது.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், மார்க்சின் கொள்கை குறைபாடுடையதே! வர்க்கமற்ற சமூகம் என்ற அவரது எண்ணம் சாத்தியமல்ல. அரசை நிர்வாகம் செய்ய ஒரு வர்க்கமும் வீதியை சுத்தம் செய்திட மற்றொரு வர்க்கமும் இருந்தாக வேண்டும். வர்க்கமற்ற சமூகம் எப்படி சாத்தியம்? நிர்வாகப் பொறுப்பில் யாரோ ஒருவர் அமர்ந்திருப்பதைப் பார்த்து ஒரு துப்புரவாளர் ஏன் மகிழ்ச்சியடைய வேண்டும்? “அவர்கள் வசதியாக இருக்கையில் அமர்ந்து கொண்டு, என்னை தெருவை சுத்தப்படுத்தும் வேலையைச் செய்யும்படி நிர்ப்பந்திக்கின்றார்கள்,” என்று அவர் நினைக்கின்றார். நமது கிருஷ்ண பக்தி இயக்கத்தில், நான் உயர்ந்த பதவியை ஏற்றுள்ளேன்: நான் இருக்கையில் அமர்ந்துள்ளேன், நீங்கள் எனக்கு மாலையையும் நல்ல உணவையும் அர்ப்பணிக்கின்றீர். ஏன்? ஏனெனில், பின்பற்றுவதற்கு உகந்த தகுதியுடைய மனிதரை நீங்கள் காண்கின்றீர்கள். அந்த மனநிலை தேவைப்படுகிறது. இந்த சமுதாயத்திலுள்ள ஒவ்வொருவரும் அவசியம் கூற முடியும், “ஆம், இதோ தகுதியான மனிதர். இவர் ஆசனத்தில் அமரட்டும், நாம் வணங்கி சேவகர்களாக சேவைகள் செய்வோம்.” அதுபோன்ற ஒரு தகுதியான நபர் பொதுவுடைமை நாட்டில் எங்கே உள்ளார்?
சியாமசுந்தர்: லெனின் அப்படிப்பட்ட தகுதியான நபர் என்று ரஷ்யர்கள் கூறுகிறார்கள்.
ஸ்ரீல பிரபுபாதர்: லெனினா? ஆனால் யாரும் லெனினைப் பின்பற்றுவதில்லையே. லெனினின் ஒரே தகுதி ஜார் மன்னரை வீழ்த்தியதுதான். வேறு எந்த தகுதியினை அவர் காண்பித்தார்? லெனினின் புத்தகங்களை வெறுமனே படிப்பதனால் மக்கள் மகிழ்ச்சியடைவதில்லை. நான் மாஸ்கோ நகர மக்களை கவனித்துள்ளேன். அவர்களிடம் மகிழ்ச்சி இல்லை. அவர்களை செயற்கையாக மகிழ்ச்சியாக இருக்குமாறு அரசாங்கம் நிர்பந்திக்க முடியாது. தகுதியான, பக்குவமான நபர் மையமாக இல்லாத வரை வர்க்கமற்ற சமுதாயத்திற்கு வாய்ப்பில்லை.
சியாமசுந்தர்: ஒருவேளை அவர்களும் நம்மைப் போன்று, முழுமையான உணர்வுடன் தொழிலாளர்களையும் மேலாளர்களையும் ஒரே மாதிரி பார்க்கலாம். அனைவரும் நாட்டிற்காக சேவை செய்வதால், துப்புரவாளரும் நிர்வாகியைப் போன்றவர் என்று நினைக்கலாம்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், அரசாங்கம் பூரணமான திருப்தியைக் கொடுக்காத வரை உயர்ந்த, தாழ்ந்த வர்க்கத்தினருக்குள் வேறுபாடு எப்பொழுதும் இருக்கும். மையப் பகுதி பக்குவமாக உள்ளது என்னும் நம்பிக்கை ரஷ்ய மக்களிடம் இல்லை.
சியாமசுந்தர்: மக்கள் நலனை உயர்த்துவதற்கு மேன்மேலும் அதிகமான பௌதிகப் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே அவர்களின் இலக்கு.
ஸ்ரீல பிரபுபாதர்: அஃது உபயோகமற்றது! அமெரிக்காவிலுள்ள பொருளாதார உற்பத்தியுடன் உலகிலுள்ள எந்த நாட்டையும் ஒப்பிட முடியாது; இருந்தும்கூட, இங்குள்ள மக்களிடம் திருப்தியில்லை. இளைஞர்கள் குழப்பமுற்றுள்ளனர். வெறுமனே உற்பத்தியை பெருக்குவதால் மட்டும் அனைவரும் திருப்தியடைந்து விடுவர் என்று எண்ணுவது அபத்தம். யாரும் திருப்தியடைய முடியாது. மனிதன் வெறுமனே உண்பதற்கு மட்டும் வாழ்வதில்லை. மனதின் தேவைகள், புத்தியின் தேவைகள், ஆன்மீகத் தேவைகள் என பல தேவைகள் அவனுக்கு உள்ளன. இந்தியாவில் சிலர் காடுகளில் தனிமையில் அமைதியாக அமர்ந்து தியானப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு எதுவும் தேவையில்லை. அவ்வாறு இருக்கையில், அதிகப்படியான பொருட்களை உற்பத்தி செய்வது அவர்களை எவ்வாறு திருப்திப்படுத்தும்? அவர்களிடம் சென்று, “நீங்கள் இந்த யோகத்தினைக் கைவிட்டால், உங்களுக்கு இருநூறு மூட்டை அரிசி கொடுக்கிறேன்” என்று யாரேனும் கூறினால், அந்த உடன்படிக்கையைக் கேட்டு அவர்கள் சிரிக்கக்கூடும். வெறுமனே உற்பத்தியைப் பெருக்கினால் அனைவரும் மகிழ்ச்சியடைவர் என்ற சிந்தனை மிருகத்தனமானது. உண்மையான சந்தோஷம் உற்பத்தியையோ வறுமையையோ சார்ந்ததல்ல, அது மனதின் அமைதியைப் பொறுத்தது. உதாரணமாக, குழந்தை ஏன் அழுகின்றது என்று தாய் அறியாவிட்டால், வெறுமனே பால் கொடுப்பதால் மட்டும் அக்குழந்தை அழுகையை நிறுத்தாது. சில நேரங்களில் அவ்வாறு நடப்பதைக் காண்கிறோம்; குழந்தை ஏன் அழுகின்றது என்பதை தாய் புரிந்துகொள்ள மாட்டாள், அப்போது அவள் பால் கொடுக்க முயன்றாலும், குழந்தை தொடர்ந்து அழுவான். அதுபோலவே, மனித இனத்தில் திருப்தியின்மை என்பது வெறுமனே மந்தமான பொருளாதார உற்பத்தியினால் ஏற்படுவதல்ல. அஃது அபத்தம். திருப்தியின்மைக்கு பல காரணங்கள் உள்ளன. யதார்த்தமான உதாரணம் அமெரிக்காவாகும், அங்கே எல்லாப் பொருட்களும் போதுமான அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன, இருப்பினும் இளைஞர்கள் ஹிப்பிகளாகின்றனர். அவர்கள் திருப்தியின்றி, குழப்பமாக உள்ளனர். வெறுமனே பொருளாதார உற்பத்தியினை அதிகப்படுத்துவதால் மட்டுமே மக்கள் திருப்தியடையப் போவதில்லை. மார்க்சின் அறிவு முழுமையானதல்ல. ஒருவேளை, மக்கள் பசியோடு வாழும் நாட்டிலிருந்து அவர் வந்திருந்ததால், அத்தகு எண்ணம் அவரிடம் இருந்திருக்கலாம்.
சியாமசுந்தர்: ஆம். ஜடப் பொருட்களை உற்பத்தி செய்வது மட்டுமே மக்களை மகிழ்ச்சிப்படுத்தாது என்பதை நாம் கண்டுள்ளோம்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஏனெனில், உண்மையான மகிழ்ச்சி ஆன்மீகப் புரிதலிலிருந்து வருகிறது என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். அந்தப் புரிதல் பகவத் கீதையில் கொடுக்கப்பட்டுள்ளது: கடவுளே பரம அனுபவிப்பாளர், அவரே அனைத்திற்கும் உரிமையாளர். நாம் உண்மையில் அனுபவிப்பவர்கள் கிடையாது; நாம் எல்லாரும் தொழிலாளர்கள். அனுபவிப்பவர், தொழிலாளர் என்ற இரு தரப்பினர் நிச்சயம் உண்டு. உதாரணமாக, நமது உடலில் வயிறே அனுபவிப்பாளர், உடலின் மற்ற எல்லாப் புலன்களும் தொழிலாளர்கள். எனவே, எப்பொழுதும் சிலர் தொழிலாளர்களாகவும் சிலர் அனுபவிப்பாளராகவும் இருக்கும் இந்த முறை இயற்கையானதாகும். இது முதலாளித்துவ முறையிலும் இருக்கின்றது. ரஷ்யாவில் மேலாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் எப்போதும் சச்சரவுகள் உள்ளன. தொழிலாளர்கள் கூறுவர், “இது வர்க்கமற்ற சமுதாயம் என்றால், அவர் ஏன் வசதியாக அமர்ந்து கொண்டு நமக்கு உத்தரவுகளை வழங்குகிறார்?” ரஷ்யர்களால் இந்த குழப்பத்தினைத் தவிர்க்க இயலவில்லை, உண்மையில் இது தவிர்க்க முடியாததாகும். ஒரு வர்க்கம் அனுபவிப்பாளர்களாக (அல்லது வழிகாட்டுபவர்களாக) இருப்பர், மற்றொரு வர்க்கம் தொழிலாளர்களாக இருப்பர். எனவே, உண்மையான வர்க்கமற்ற சமுதாயத்திற்கு ஒரு வழியினைக் கண்டுபிடிக்க வேண்டும், அதன் மூலம் மேலாளர்களும் தொழிலாளர்களும் சமமான ஆனந்தத்தினை உணர முடியும். உதாரணமாக, வயிறு பசியுடனிருக்கும்போது, கண்கள் சில உணவினைக் காணும், உடனடியாக மூளையும், “கால்களே, அங்கே செல்லுங்கள்!” என்றும், “கையே, அதனை எடுத்து வாயில் போடு” என்றும் கூறும். உடனடியாக, அந்த உணவு வயிற்றிற்குச் செல்லும்; வயிறு திருப்தியடைந்தவுடன் கண்கள் திருப்தியடைகின்றன, கால்கள் திருப்தியடைகின்றன, மேலும் கைகளும் திருப்தியடைகின்றன.
சியாமசுந்தர்: ஆனால், மார்க்ஸ் இதனை பொதுவுடைமைக் கொள்கைக்கான நல்ல உதாரணமாகப் பயன்படுத்துவார்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், அவர் உண்மையான வயிற்றைக் கண்டுபிடிக்காமல் புறக்கணித்து விட்டார்.
சியாமசுந்தர்: ஜடத்தையே அவர் தமது வயிறாக வைத்துள்ளார்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், ஜட வயிற்றிற்கு மீண்டும் பசியெடுக்கும்; அஃது ஒருபோதும் திருப்தியடையாது. நமது கிருஷ்ண பக்தி இயக்கத்திலோ நம்முடைய மூளை, மனம், உணர்வுகள் என அனைத்திற்கும் உணவளிக்கக்கூடிய வஸ்துக்கள் இருக்கின்றன. யஸ்ய ப்ரஸாதாத் பகவத்-ப்ரஸாத:. ஆன்மீக குரு திருப்தியடைந்தால் கிருஷ்ணர் திருப்தியடைகிறார், கிருஷ்ணர் திருப்தியடைந்தால் அனைவரும் திருப்தியடைகிறார்கள். எனவே, நீங்கள் அனைவரும் உங்களது ஆன்மீக குருவை திருப்திப்படுத்த முயல்கின்றீர்கள். அதுபோன்று, ஏதேனும் ஒரு சர்வாதிகாரியைச் சுட்டிக்காட்டி, “இவரை திருப்திப்படுத்தினால் மக்கள் அனைவரும் தானாகவே திருப்தியடைவர்,” என்று பொதுவுடைமை கருத்துடைய நாடுகளால் கூற முடிந்தால், அப்போது அத்தகு வர்க்கமற்ற சமுதாயத்தினை நாம் ஏற்றுக்கொள்வோம். ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை. கிருஷ்ணர் மையமாக இருக்கும்போது மட்டுமே வர்க்கமற்ற சமுதாயத்திற்கு வாய்ப்புள்ளது. கிருஷ்ணரின் திருப்திக்காக, புத்திசாலிகள் தமது வழியில் வேலை செய்யலாம், நிர்வாகிகள் தமது வழியில் வேலை செய்யலாம், வியாபாரிகள் தமது வழியில் வேலை செய்யலாம், மேலும் தொழிலாளர்
களும் தமது வழியில் வேலை செய்யலாம். இதுதான் உண்மையான வர்க்கமற்ற சமுதாயம்.
சியாமசுந்தர்: எல்லா தரப்பட்ட மக்களும் நாடு என்னும் மைய நோக்கத்துடன் செயல்படக்கூடிய பொதுவுடைமை நாடுகளின் கருத்திற்கும் நீங்கள் கூறுவதற்கும் என்ன வேறுபாடு?
ஸ்ரீல பிரபுபாதர்: வேறுபாடு என்னவெனில், நாடு பக்குவமானதாக இல்லையெனில், யாரும் நாட்டிற்காக விருப்பத்துடன் தங்களது பங்களிப்பை வழங்க மாட்டார்கள். அவர்களை நாட்டிற்காக உழைக்கும்படி நிர்பந்திக்க முடியும், ஆனால் நாடு என்னும் மையம் பக்குவமானதாக இல்லையெனில், அவர்கள் விருப்பத்துடன் பங்கேற்க மாட்டார்கள். உதாரணமாக, கை, கால், மூளை என எல்லா உறுப்புகளும் பூரண ஒற்றுமையுடன் வயிற்றின் திருப்திக்காக வேலை செய்கின்றன. ஏன்? ஏனெனில், வயிற்றினை திருப்திப்படுத்தும்போது, அதிலிருந்து பெறப்படும் சக்தியின் பங்கினை நிச்சயமாக அடைய முடியும் என்பதை அனைத்து உறுப்புகளும் ஐயமின்றி அறிந்துள்ளன. எனவே, இதே போன்ற பூரண நம்பிக்கையை மக்கள் தங்களது நாட்டின் தலைவரிடம் பெறாத வரை, வர்க்கமற்ற சமுதாயத்திற்கு வாய்ப்பே இல்லை.
சியாமசுந்தர்: பொதுவுடைமைவாதிகளின் கோட்பாடு யாதெனில், தொழிலாளர்கள் மைய நிதிக்கு தங்களது பங்கினை வழங்கினால், பதிலுக்கு அவர்கள் திருப்தியினைப் பெறுவார்கள்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். ஆனால் ஒருவேளை அவன் மையத்தில் குறைகளைக் காண நேரிட்டால், அவனால் உத்வேகத்துடன் வேலை செய்ய முடியாது; ஏனெனில், தன்னால் திருப்தியடைய முடியும் என்பதில் அவனுக்கு முழு நம்பிக்கை இருக்காது. நாட்டில் அதுபோன்ற பக்குவநிலை ஒருபோதும் இருக்காது என்பதால், தொழிலாளர்கள் எப்பொழுதும் அதிருப்தியுடனே இருப்பர்.
சியாமசுந்தர்: பிரச்சாரகர்கள் இந்த அதிருப்தியை வைத்து விளையாடுவது வழக்கம், வெளிநாட்டவர்கள் பிரச்சனைகளை உருவாக்குவதாக அவர்கள் மக்களிடம் கூறுவர்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், மக்கள் உண்மையிலேயே திருப்தியுடன் இருந்தால், அந்நியர்களால் அவர்களிடையே எந்த பிரச்சனையையும் உருவாக்க முடியாதே. உங்களது ஆன்மீக குரு உங்களை நல்ல முறையில் வழிகாட்டுகிறார் என்பதில் நீங்கள் திருப்தியுடன் இருந்தால், அந்நியர்கள் உங்களது எண்ணத்தில் மாற்றத்தைக் கொடுக்க முடியுமா?
சியாமசுந்தர்: இல்லை.
ஸ்ரீல பிரபுபாதர்: பொதுவுடைமைவாதிகளின் நாடு ஒருபோதும் பக்குவமானதாக இருக்கப் போவதில்லை என்பதால், வர்க்கமற்ற சமுதாயத்திற்கு வாய்ப்பே இல்லை.