ஒரு பார்வை
வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
பொதிகை தொலைக்காட்சியில் தினமும் 15 நிமிடம் சமஸ்கிருதத்தில் செய்திகள் வாசிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவிற்கு தமிழ்நாட்டில் எத்தனையோ எதிர்ப்புகள். இதுகுறித்த வழக்கை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள இத்தருணத்தில், சமஸ்கிருதத்தின் மீது தமிழகத்தில் காண்பிக்கப்படும் வெறுப்பைப் பற்றி, சமஸ்கிருத புலமையற்ற அடியேன் சற்று அலசிப் பார்க்க விரும்புகிறேன்.
வழக்கழிந்த மொழியா?
சமஸ்கிருதம் வழக்கழிந்த மொழி, பேசுபவர்கள் மிகமிகக் குறைவு என்னும் வாதங்கள் பொதுவாக முன்வைக்கப்படுகின்றன. சமஸ்கிருதம் பேசுபவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது என்பது உண்மையே; அதற்காக அம்மொழியினை முற்றிலும் வழக்கழிந்த மொழியாக, மடிந்து விட்ட மொழியாகக் கூறி விட முடியுமா?
உலகெங்கிலும் உள்ள இலட்சக்கணக்கான மக்கள், சமஸ்கிருதம் எழுதப் படிக்க தெரியாதபோதிலும்கூட, சமஸ்கிருத நூல்களின் மொழிபெயர்ப்புகளைப் படித்து, அதில் பொதிந்துள்ள அர்த்தங்களை கிரகித்து வருகின்றனர். இதில் ஆழமாகச் செல்ல விரும்புவோர், சமஸ்கிருத மொழியையும் கற்று வருவதைக் காண்கிறோம். உலகின் பல்வேறு முக்கிய பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது, கற்கப்படுகிறது. பேசத் தெரியாதபோதிலும், பலர் சமஸ்கிருத நூல்களைப் படித்து அர்த்தங்களைப் புரிந்துகொள்ளும் திறன் பெற்றவர்களாக உள்ளனர்.
எத்தனையோ குருகுலங்களில் இன்றும் கற்பிக்கப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவம் படிப்பவர்களுக்கு நிச்சயம் சமஸ்கிருதம் தெரிந்தாக வேண்டும். மருந்துகள், மூலிகைகளைப் பற்றிய குறிப்புகள் அனைத்தும் சமஸ்கிருதத்தில்தான் எழுதப்பட்டுள்ளன.
இதனை எவ்வாறு வழக்கழிந்த மொழி என்று கூற முடியும்?
உயர்வை அறிவோம்
ஒரு வாதத்திற்காக, சமஸ்கிருதம் வழக்கழிந்த மொழி என்று கருதினால்கூட, அதற்காக அம்மொழியினை அப்படியே விட்டு விட வேண்டுமா? அதனை உயிர்ப்பித்தல் கூடாதா? “எத்தனையோ மொழிகள் வழக்கிழந்து நிற்கின்றன, எல்லா மொழிகளையும் உயிர்ப்பிக்கலாமா? ஏன் குறிப்பாக சமஸ்கிருதம்?” சிறப்பான கேள்வி.
ஓர் உதாரணம் காண்போம்: அழிவுற்று வரும் நாட்டு மாடுகளின் இனத்தைப் பாதுகாக்க முற்படும்போது, எத்தனையோ இனங்கள் அழிகின்றன, அனைத்தையும் காப்பாற்ற முடியுமா என்று பார்க்கும்போது, அழிவுறும் இனங்களில் செழிப்பானதாக சிறப்பானதாக எந்த இனம் இருக்கின்றதோ, அதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். தலைசிறந்த இனம் தக்கவைக்கப்பட்டால், மற்றவற்றின் தேவை தானாகவே பூர்த்தியடையும் என்பதே தாத்பரியம்.
அதுபோலவே, சமஸ்கிருதம் என்னும் தொன்மையான, சிறப்பான, இனிமையான மொழியினை பராமரித்து வளர்க்க வேண்டியது மற்றவற்றைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் மிகமிக செம்மையான மொழி சமஸ்கிருதமே என்பதை எந்தவொரு நடுநிலை மொழி ஆர்வலர்களும் ஒப்புக்கொள்வர். இந்த மொழி பாரத தேசத்தின் அடையாளமாகக் காணப்படுகிறது. இம்மொழியினுடைய பெயரின் சரியான உச்சரிப்பு “ஸம்ஸ்க்ருதம்” என்பதாகும். ஸம் என்றால், “முழுமையான, பக்குவமான, சிறப்பான,” என்று பொருள்; க்ருத என்றால், “வடிக்கப்பட்ட, உருவாக்கப்பட்ட,” என்று பொருள். அதாவது, ஸம்ஸ்க்ருதம் என்றால், “பக்குவமாக வடிவமைக்கப்பட்ட மொழி” என்று பொருள்.
சமஸ்கிருத பாதுகாப்பின் அவசியம்
சமஸ்கிருத மொழியில் காணப்படும் இலக்கண அமைப்பு, இலக்கிய வளமை, கலை நுணுக்கம் ஆகியவற்றிற்கு ஈடுஇணை இல்லை. இது தேவ-பாஷா, ஸ்வர்கத்திலுள்ள தேவர்களால் பேசப்படும் புனிதமான மொழி என்று அறியப்படுகிறது. வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், பஞ்சராத்ரங்கள் என எல்லா வேத இலக்கியங்களும் சமஸ்கிருத மொழியில்தான் ஆதியில் இயற்றப்பட்டன. தத்துவ விஷயங்களை ஆழமாக அலசி ஆராய்வதற்கும் நுட்பமான வேற்றுமைகளை அறிவதற்கும் பக்குவமான மொழி அவசியமாகிறது. சமஸ்கிருதம் இத்தேவையை பூர்த்தி செய்கிறது. எனவே, இந்துக்களின் புனிதமான மொழி என்றும் சமஸ்கிருதம் அறியப்படுகிறது.
எல்லாக் கோயில்களிலும் மந்திரங்கள் பெரும்பாலும் சமஸ்கிருதத்தில் உச்சரிக்கப்படுகின்றன. பகவத் கீதை உலக மக்கள் அனைவருக்கும் ஆன்மீக அறிவின் மணிமகுடமாகத் திகழ்கிறது, குறைந்தபட்சம் இந்துக்களின் புனித நூலாகக் கருதப்படுகிறது. அப்படிப்பட்ட பகவத் கீதை சமஸ்கிருத மொழியில்தானே உள்ளது. திருக்குறளை எந்த மொழியில் எவ்வளவு சிறப்பாக மொழிபெயர்த்தாலும், தமிழ் அறிந்தோரால் மட்டுமே அதன் சுவையை முழுமையாகச் சுவைக்க முடியும். அதுபோல, பகவத் கீதை என்னும் அறிவுப் பெட்டகத்தை முழுமையாகச் சுவைப்பதற்கு சமஸ்கிருத கல்வி உதவியாக இருக்கும்.
முன்னரே கூறியதுபோல, இராமாயணம், மஹாபாரதம், புராணங்கள் என ஸநாதன தர்மத்தை எடுத்துரைக்கும் எல்லா நூல்களும் சமஸ்கிருதத்தில்தான் எழுதப்பட்டுள்ளன. இன்றும் பல்வேறு இஸ்லாமியர்கள் குரான் படிப்பதற்காகவே அரேபிய மொழியினைக் கற்கின்றனர். அம்மொழியினை எங்காவது ஏளனம் செய்கிறார்களா, வெறுப்பை வெளிப்படுத்துகிறார்களா? இல்லை, கூடாது. ஆயினும், இந்துக்கள் என்று கூறிக்கொள்வோர் சமஸ்கிருதம் அறியாவிட்டால்கூட பரவாயில்லை, அதனை ஏன் எதிர்க்க வேண்டும்? இதனைப் பாதுகாத்து வளர்த்தல் நம் கடமையன்றோ?
பாரதம் முழுவதற்கும் பொதுமொழி
இன்றைய காலக்கட்டத்தில் ஆங்கிலம் எவ்வாறு உலகெங்கிலும் உள்ள மக்களால் ஏறக்குறைய ஒரு பொதுமொழியைப் போன்று பயன்படுத்தப்படுகிறதோ, அவ்வாறே முந்தைய காலக்கட்டத்தில் சமஸ்கிருதம் அகண்ட பாரதம் முழுமைக்கும் ஒரு பொது
மொழியாகத் திகழ்ந்து வந்தது. சமஸ்கிருதம் தெரிந்தால் பாரதம் முழுவதும் பயணம் செய்ய முடியும். பல்வேறு வட்டார மொழிகள் இராமாயண காலத்திலிருந்தே புழக்கத்தில் இருந்துள்ளன என்றபோதிலும், அனைவருக்கும் ஒரு பொதுமொழியாக சமஸ்கிருதம் இருந்தது. பாரதம் முழுவதும் இருமொழி, மும்மொழி, நான்மொழி என்று பன்மொழிப் புலவர்கள் பலர் இருந்தனர். அன்றாட நடைமுறை பழக்கங்களில் வட்டார மொழிகளும் சமஸ்கிருதமும் கலந்து காணப்பட்டபோதிலும், ஆன்மீக விஷயங்களில் சமஸ்கிருதமே மேலோங்கியிருந்தது.
தென்னகத்தில் வளர்ந்த தமிழ் மொழியும் செழிப்புடைய மொழியாக இருந்தமையால், ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் இதர மக்கள் தமிழையும் ஆன்மீகப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தனர். தமிழ் மற்ற வட்டார மொழிகளைப் போன்றல்லாமல், இலக்கண, இலக்கிய செழிப்புடன் இருந்த காரணத்தினால், தென் பகுதியில் சமஸ்கிருதத்தின் பயன்பாடு வட பகுதியைக் காட்டிலும் சற்று குறைவாக இருந்திருக்கலாம்; அதனால், இம்மொழியினை தமிழகத்தில் வடமொழி என்று கூறத் தொடங்கியதாக சிலர் கூறுகின்றனர். வேறு சிலர் இதனை வடம் + மொழி என்று பிரித்து, ஆல மரம் (வடம்) போன்று தழைத்த மொழி என்றும், முத்துவடம், மணிவடம் போன்று பயனுடைய சொற்கோர்வையுடைய மொழி என்றும் விளக்கமளிக்கின்றனர். மற்றொரு தரப்பினரோ, தமிழ் பேசும் நாட்டினுடைய வட பகுதியில் அதிகமாகப் பேசப்பட்ட மொழி என்றும் கூறுகின்றனர்.
எப்படிப் பார்த்தாலும், சமஸ்கிருதம் ஒரு பொதுமொழி என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. தமிழகத்தின் பல்வேறு இடங்கள் சமஸ்கிருத பண்டிதர்களின் சபைகளாக இருந்துள்ளன.
வழக்கில் குன்றியதற்கான காரணங்கள்
சமஸ்கிருத பயன்பாடு மக்களிடையே குறைந்ததற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுவது முகலாயர்களின் ஆக்கிரமிப்பாகும். அதிலும் குறிப்பாக, சமஸ்கிருத பாண்டித்துவத்திற்கு பெயர் பெற்றிருந்த காஷ்மீர் மாகாணம் இஸ்லாமியர்களால் ஏறக்குறைய முற்றிலும் கைப்பற்றப்பட்டது. தென்னிந்தியாவின் மாபெரும் இந்து சாம்ராஜ்ஜியமாகத் திகழ்ந்த விஜயநகர பேரரசு வீழ்ந்தபோது, சமஸ்கிருதம் தெற்கே வீழத் தொடங்கியது. முகலாயர்களின் ஆட்சியில் மக்கள் பெரும்பாலும் பாரசீக, அரேபிய மொழிகளைக் கற்கத் தொடங்கினர்.
மராட்டிய மன்னர் சிவாஜியின் ஆட்சியில் சமஸ்கிருதம் சற்று புத்துயிர் பெறத் தொடங்கியது, ஆயினும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்ட முடியவில்லை. முகலாயர்கள் வீழ்ந்த பின்னர், மீண்டும் ஓரளவு வளரத் தொடங்கியது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் மக்கள் ஆங்கிலம் கற்கத் தொடங்கினர். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், பல்வேறு அரசியல் மற்றும் சமுதாய காரணங்களால், மக்களிடையே சமஸ்கிருத ஆர்வம் மேலும் குன்றியது. உண்மையைச் சொன்னால், முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சியைக் காட்டிலும், சமஸ்கிருத வழக்கிழப்பு சுதந்திர இந்தியாவில் அதிகம் என்று கூறலாம்.
பண்பாடுடைய மொழி
சமஸ்கிருதம் எந்தவொரு குறிப்பிட்ட இன மக்களைச் சாராமல், ஒரு பொது மொழியாக இருந்ததும் இம்மொழி இன்று வழக்கில் குறைந்துவிட்டதற்கான மற்றொரு முக்கிய காரணமாகும். சமஸ்கிருதம் ஒரு புண்ணிய மொழியாக மட்டுமே இருந்துள்ளது, வட்டார மொழிகளோ எல்லாத் தரப்பட்ட காரியங்களுக்கும் பயன்படுத்தப்பட்டன. புனிதமான செயல்கள் குறையக்குறைய சமஸ்கிருத பயன்பாடும் குறைந்து விட்டது என்று கூறலாம்.
செம்மையான தமிழ் மொழி இன்றும் வழக்கத்தில் உள்ளது; இருப்பினும், தமிழுடன் தொடர்புடைய பழம்பெரும் பண்பாடு இன்று வழக்கழிந்து விட்டது என்பது வருந்தத்தக்க உண்மை. ஒரு மொழி எவ்வாறு பேசப்படுகிறதோ, அஃது அம்மனிதர்களின் பண்பாட்டினை வெளிப்படுத்தும். மக்கள் கொச்சையான முறையில் பேசும்போது, படிப்படியாக மொழி அதன் சிறப்பை இழக்கின்றது. கொச்சையான பயன்பாட்டிற்கு சமஸ்கிருதம் அனுமதி கொடுக்காததும் அம்மொழி மங்குவதற்கு ஒரு காரணம் எனலாம். சமஸ்கிருதத்திலிருந்து பிறந்த இந்தி மொழி பல்வேறு கொச்சைப் பயன்பாடுகளுடன் இந்தியாவின் பெரும்பான்மையை ஆக்கிரமித்துள்ளது.
இருப்பினும், படிப்பவர்களும் பேசுபவர்களும் குறைவானவர்களாக உள்ளபோதிலும், சமஸ்கிருதம் இன்றும் பண்பாடுடைய மொழியாகத் திகழ்கிறது.
வெறுப்பின் பின்பக்கம்
உலகெங்கிலும் மதிப்புடன் திகழும் சமஸ்கிருத மொழி ஏன் தமிழ்நாட்டில் மட்டும் சிலரால் வெறுக்கப்படுகிறது? தமிழகத்தில் தமிழுடன் பல நூற்றாண்டுகள் இணைந்து பயணித்த ஒரு செம்மையான மொழிக்கு தினம் ஒரு 15 நிமிடம்கூட ஒதுக்கக் கூடாது என்று சிலர் போர்க்கொடி தூக்குகின்றனர். என்னே விந்தை! சமஸ்கிருதம் உண்மையிலேயே வழக்கிழந்த மொழி என்றால், 15 நிமிட ஒதுக்கீட்டைக் கண்டு அஞ்சுவது ஏன்? அதுவும், மக்களால் அதிகம் பார்க்கப்படாத பொதிகை தொலைக்காட்சியில்.
இதற்கான அடிப்படை காரணம், சமஸ்கிருதம் என்னும் மொழியல்ல, அந்த மொழிக்குப் பின்னால் இருக்கும் வேதப் பண்பாடு, ஸநாதன தர்மம், இந்து மதம் என்பனவற்றின் மீதான வெறுப்பே என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோன்று தெளிவான ஒன்றாகும். “விரும்பினால் பாருங்கள், இல்லாவிட்டால் வேறு சேனலைப் பாருங்கள்,” என்னும் உயர்நீதிமன்ற தீர்ப்பு மிகவும் எதார்த்தமானதாகும்.
இந்து சமய நூல்கள் அனைத்தும் சமஸ்கிருத மொழியில் இருப்பதால், ஒருவேளை 1 % மக்கள் அரைகுறை சமஸ்கிருதம் கற்றுக் கொண்டால்கூட, அது மக்களை ஏமாற்றி சோறு தின்பவர்களுக்கு பிரச்சினையாகி விடும். இதுவே கவலை. ஆரிய-திராவிட பாகுபாடு, தமிழனை பாரதத்திலிருந்து தனியே பிரிக்கும் சூழ்ச்சி, தமிழனை நாத்திகனாக்கும் முயற்சி—இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இதை வைத்து மக்களது உணர்ச்சிகளைத் தூண்டி ஓட்டுக்களைப் பெறுதல் என எல்லாம் சிதைந்து விடுமோ என்ற அச்சம் சிலரிடம் தெளிவாகக் காணப்படுகிறது.
பிராமணர்களின் மொழியா?
சமஸ்கிருதம் பிராமணர்களுக்கு மட்டுமே உரிய மொழி என்று கூறி, ஜாதியின் அடிப்படையில் பிரித்தாளும் சூழ்ச்சியும் நிகழ்த்தப்படுகிறது. ஆனால் எல்லா தரப்பட்ட மக்களாலும் பின்பற்றப்பட்டு வந்த மொழியே சமஸ்கிருதம் என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் உள்ளன. வேதக் கல்வியில் சமஸ்கிருதத்தின் பங்கு அதிகமாக இருந்ததால், இதனை ஒரு சாராருக்கு மட்டுமே உரியதாகக் கூறி விட முடியாது.
வேத வியாஸர் மீனவ குலத்தைச் சார்ந்த தாய்க்குப் பிறந்தவர், வால்மீகி வேடர் குலத்தைச் சார்ந்தவர், காளிதாஸர் இடையர் குலத்தைச் சார்ந்தவர். சமஸ்கிருதம் அனைவருக்கும் பொதுவான மொழி, எந்த ஜாதிக்கும் சொந்தமானது அல்ல, எந்த ஜாதிக்கும் அன்னியமானதும் அல்ல.
அதே சமயத்தில், நம்மால் சமஸ்கிருத அறிஞர்களாக இருக்க முடியாவிடினும், அதனால் எந்த இழப்பும் கிடையாது, ஹரி நாமத்தைச் சொல்லி கிருஷ்ணரை அடைய முடியும்; பக்திக்கு மொழி என்றும் தடையாக இருக்க முடியாது. நம்மால் முடிந்தால் கற்போம், முடியாவிட்டால் ஒதுங்கிக்கொள்வோம்.
தமிழுக்கு எதிரியா?
சூழ்ச்சி மற்றும் அச்சத்தின் ஒரு பகுதியாக, சமஸ்கிருதத்தை தமிழுக்கு எதிரி என்ற தோற்றத்தை உருவாக்க சிலர் முயல்கின்றனர். இது முற்றிலும் அபத்தமானது என்பதை வரலாற்றை அறிந்தவர்கள் நன்கு அறிவர். தமிழுக்கு இன்று முக்கிய எதிரியாக இருப்பது சமஸ்கிருதமோ இந்தியோ அல்ல, ஆங்கிலமே. ஓரளவு வசதியுடையவர்கள்கூட இன்று தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழிக் கல்வியில்தான் சேர்க்க விரும்புகின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழுடன் உறவாடிக் கொண்டிருக்கும் சமஸ்கிருத சொற்களை நீக்க வேண்டும் என்று வெளியே போராடுவார்கள், ஆனால் புதிதாக நுழையும் ஆங்கிலச் சொற்களை அகற்ற வேண்டும் என்று ஒருபோதும் கூற மாட்டார்கள். ஆங்கிலக் கலப்பின்றி பேசும் தமிழர்கள் நம்மில் எத்தனை பேர்? “இந்தி தெரியாது போடா” என்று வாசகம் எழுதுவதுகூட, தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதும் அவலம் வேறு எங்கும் நிகழாது.
சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆழ்வார்கள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருவள்ளுவர், சமீப காலத்தில் வாழ்ந்த பாரதியார் என அனைவருடைய மொழியிலும் சமஸ்கிருதம் கலந்துள்ளது. இதனால் தமிழ் குறைந்து விட்டதா? நிச்சயம் இல்லை, இவர்களால் தமிழ் வளர்ந்ததே தவிர குறையவில்லை. அன்றாட வாழ்வில் தொன்றுதொட்டு நாம் தமிழில் சரளமாகப் பயன்படுத்திவரும் பல்வேறு சொற்கள் சமஸ்கிருத சொற்களே. ஆதிபகவன், மீன், கர்வம், காரணம், ஆகாயம், சாதாரண, சப்தம், சீக்கிரம், நீதி, பயம், வசித்தல், வாகனம், பயம் என நூற்றுக்கணக்கான சமஸ்கிருத சொற்களை தமிழ் சொற்களாகவே பயன்படுத்தி வருகிறோம்.
சமஸ்கிருதம் தமிழுக்கு எதிரியாக இருந்திருந்தால், சமஸ்கிருத சொற்களை தமிழில் எவ்வாறு கையாள்வது என்பதுகுறித்து தொல்காப்பியர் விரிவான விதிகளை வழங்கியிருப்பாரா? தொல்காப்பியரைக் காட்டிலும் நாம் பெரிய தமிழ் அறிஞர்களா? தமிழகத்தின் பல்வேறு மன்னர்களுடைய பெயர்கள் சமஸ்கிருதத்தில் இருந்தன, அம்மன்னர்கள் சமஸ்கிருதம், தமிழ் என இரண்டையும் போற்றி வளர்த்தனரே, அவர்கள் தமிழ் விரோதிகளா?
மொழிகளை வளர்ப்போம்
தமிழ் நம் தாய்மொழி; ஆயினும், தாய்மொழி என்பதால் மட்டுமே தமிழை மதிப்போமானால், அது தமிழுக்கு நாம் செய்யும் அவமரியாதை. தமிழ் நம் தாய்மொழியாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, தமிழ் பெருமைக்குரிய மொழி, இதில் துளியும் ஐயமில்லை. அதேபோல, சமஸ்கிருதமும் பெருமைக்குரிய மொழியாகும். இம்மொழி வடக்கத்தியர்களின் மொழியாக, பொதுமொழியாக, மேற்கத்தியர்களின் மொழியாக, தேவர்களின் மொழியாக என யாருடைய மொழியாக இருந்தாலும், சிறப்பான மொழியை சிறப்பான முறையில் வரவேற்பது நமது கடமையன்றோ.
உலக மொழிகளில் செம்மையான மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆறு மொழிகளில், இரண்டு மொழிகள் நம்முடைய தமிழ் மண்ணில் செழித்து திகழ்ந்தவை என்பதில் நாம் பெருமைகொள்ள வேண்டுமே தவிர, அதில் ஒன்றை ஒழிக்க விரும்பக் கூடாது.
தமிழ் மீது நாம் கொண்டுள்ள பற்றுதலும் மோகமும் இன்னொரு மொழியின் மீதான வெறுப்பாக இருக்க வேண்டுமா? முன்னரே கூறியபடி, தமிழுடன் பல்லாயிரம் ஆண்டுகளாக உடன் பயணித்து வரும் சமஸ்கிருதம் நமக்கு மிகவும் முக்கியமான மொழியாகும். தமிழும் சமஸ்கிருதமும் திராவிடர்களின் இரு கண்களாக இருந்து வந்துள்ளன. ஒரு கண்ணில் வெண்ணெயும் மறு கண்ணில் சுண்ணாம்பும் தடவுதல் நியாயமா? சிந்திப்பீர்!!!