தாமோதர லீலை

Must read

Jivana Gaurahari Dasa
திரு. ஜீவன கௌர ஹரி தாஸ் அவர்கள், சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வண்ணம் கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்து வருகிறார்.

எல்லாரையும் கட்டிப்போடும் எம்பெருமான் கட்டிப்போடப்பட்ட லீலை

வழங்கியவர்: திரு. ஜீவன கௌர ஹரி தாஸ்

தமிழில் பன்னிரண்டு மாதங்கள் இருப்பதுபோல, சமஸ்கிருதத்திலும் பன்னிரண்டு மாதங்கள் உள்ளன. அவை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. அவற்றில் தாமோதர மாதம் என்று அழைக்கப்படும் மாதம் மிகவும் விசேஷமானதாகும். 2012 ஆங்கில கணக்கின்படி, தாமோதர மாதமானது அக்டோபர் 29 அன்று தொடங்கி, நவம்பர் 28 வரை என்று கணக்கிடப்பட்டுள்ளது. தாமோதர மாதத்தை கார்த்திக் மாதம் என்றும் அழைப்பதுண்டு.

தாமோதர மாதத்தின் மகிமை

தாமோதர மாதத்தின் மகிமை பல்வேறு புராணங்களிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. மாதங்களில் மிகவும் தூய்மையானதாக, புனிதமானதாக, மங்களகரமானதாக, புகழ் வாய்ந்ததாக, மற்றும் விஷேசமானதாக போற்றப்படுகின்றது தாமோதர மாதம். ஒருவர் இந்த மாதத்தில் சிறிதளவு பக்தி செய்தாலும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவருடைய பாவங்கள் அனைத்தையும் அழித்து, பக்தித் தொண்டில் பெரும் முன்னேற்றமடைய உதவுகிறார். தாமோதர மாதம் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானது. கிருஷ்ண பக்தர்கள் இம்மாதம் முழுவதும் தினந்தோறும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு நெய் விளக்கேற்றி பண்டிகையாகக் கொண்டாடுவார்கள்.

தாமோதர லீலை

இம்மாதத்திற்கு தாமோதர மாதம் என்று பெயர் வருவதற்கு, இம்மாதத்தின் திருநாள் ஒன்றில், கிருஷ்ணர் நிகழ்த்திய ஒரு முக்கிய லீலையே காரணம்.

ஒரு நாள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அன்னை யசோதையின் மடியில் அமர்ந்து தாய்பால் அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அடுப்பில் பால் பொங்குவதைக் கண்ட அன்னை யசோதை, கிருஷ்ணரை மடியிலிருந்து இறக்கிவைத்துவிட்டு, பாலைப் பாதுகாப்பதற்காக உடனடியாக அடுப்பறைக்கு விரைந்தாள். பால் குடித்துக் கொண்டிருக்கும் வேளையில் தடங்கல் ஏற்பட்டதால் கிருஷ்ணர் கோபம் அடைந்தார். வீட்டிலிருந்த வெண்ணைய் பானைகளை உடைக்க ஆரம்பித்தார். கிருஷ்ணருக்குத் தொண்டு செய்யும்போது நமது கவனத்தை வேறு எதிலும் சிதற விடக்கூடாது என்பதை பானைகளை உடைத்ததன் மூலமாக கிருஷ்ணர் உலக மக்களுக்கு எடுத்துரைத்தார்.

பின்னர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அப்பானையில் இருந்து வெண்ணெய் எடுத்து, தானும் உண்டு மகிழ்ந்து அருகிலிருந்த குரங்குகளுக்கும் விநியோகம் செய்தார். இராம அவதாரத்தில் பெருமாள் இராவணனுக்கு எதிராகப் போரிட்டபோது, அவருக்கு பல்வேறு குரங்குகள் தொண்டு செய்தன. அதற்கு பிரதிபலனாக தற்போது கிருஷ்ணர் குரங்குகளுக்கு வெண்ணெய் கொடுத்தார்.

குரங்குகளுக்கு கிருஷ்ணர் வெண்ணெய் கொடுப்பதைக் கண்ட அன்னை யசோதை ஒரு குச்சியுடன் கிருஷ்ணரை தண்டிக்க வருகிறாள்.

அன்னை யசோதையின் தூய அன்பு

தன் வேலைகளை முடித்துக் கொண்டு திரும்பிய அன்னை யசோதை, தன் மகன் குரங்குகளுக்கு வெண்ணெய் கொடுத்துக் கொண்டிருப்பதை கண்டாள். ஒரு குச்சியைக் கையில் எடுத்துக் கொண்டு கிருஷ்ணரை தண்டிக்கச் சென்றாள். இதனைப் பார்த்து சுதாரித்துக் கொண்ட ஸ்ரீ கிருஷ்ணர் உடனடியாக ஓட ஆரம்பித்தார். அன்னை யசோதையும் கிருஷ்ணரைப் பிடிப்பதற்காக ஓடினாள். சிறிய குழந்தை தானே, பிடித்துவிடலாம் என்று எண்ணிய யசோதையினால் குழந்தை கிருஷ்ணரின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அன்னையின் பரிதாப நிலையைக் கண்ட கிருஷ்ணர், அவள் மீது கருணை கொண்டு, தன்னைப் பிடிப்பதற்கு அனுமதித்தார்.

மிகப்பெரிய யோகிகளும் ஞானிகளும் பல்லாயிரம் வருடங்கள் கடுந்தவம் செய்தாலும் பிடிபடாமல் நழுவுகின்ற பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அன்னை யசோதையின் தூய அன்பிற்குப் பிடிபட்டார் என்று இந்த தெய்வீக லீலையை வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வர்ணிக்கின்றனர். தன்னை தூய அன்பினாலும் பக்தியினாலும் மட்டுமே ஆட்கொள்ள முடியும் என பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இதன் மூலமாக உணர்த்துகின்றார்.

 

கிருஷ்ணரை உரலில் கட்டிப் போடுதல்

அன்னையின் பிடியில் அகப்பட்டுக் கொண்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பயத்தில் அழத் தொடங்கினார். கிருஷ்ணரைப் பார்த்து பயத்தின் மொத்த உருவமாகிய எமராஜனே பயப்படும்போது, அன்னை யசோதையைக் கண்டு அவர் பயப்படுவது வியக்கத்தக்கதாகும். கிருஷ்ணர் குச்சியைக் கண்டு மிகவும் அஞ்சுகிறார் என்பதை உணர்ந்த யசோதை குச்சியைக் கீழே போட்டுவிட்டு கிருஷ்ணரை உரலில் கட்டிப் போட தீர்மானித்தாள்.

கிருஷ்ணரைக் கட்டிப் போட அன்னை யசோதை முயற்சி செய்தல்.

ஸ்ரீ கிருஷ்ணரின் அசிந்திய சக்தி

உலகையே கட்டிப்போடும் எம்பெருமானைக் கயிறுகள் கட்டிவிட முடியுமா? அன்னை யசோதை வீட்டிலிருந்த ஒரு கயிற்றை எடுத்துவந்து, கிருஷ்ணரின் இடுப்பைச் சுற்றி உரலில் கட்டிப் போட முயற்சி செய்தாள். ஆனால் அந்த கயிறு இரண்டு அங்குல இடைவெளியை ஏற்படுத்தியது. கயிறு சிறியதாக உள்ளது என்று எண்ணிய யசோதை வீட்டிலிருந்து மற்றொரு கயிறை எடுத்து வந்தாள். ஆனால் அதுவும் இரண்டு அங்குலம் சிறியதாக இருந்தது. இரண்டு கயிற்றையும் சேர்த்துக் கட்டினாள், ஆயினும், இரண்டு அங்குலம் சிறியதாகவே இருந்தது. வீட்டிலிருந்த எல்லா கயிற்றையும் ஒன்றாக சேர்த்து கட்டினாள், இடைவெளி அப்படியே இருந்தது. கிருஷ்ணரின் இடுப்பு வழக்கம்போல சிறியதாகவே இருந்தது, யாருக்கும் எதுவும் புரியவில்லை.

இதுவே கிருஷ்ணரின் புரிந்துகொள்ளவியலாத (அசிந்திய) சக்தியாகும். கிருஷ்ணர் தனது பக்தர்களுடன் ஆனந்தமாக இருப்பதற்காக புரியும் லீலைகளை அவரது பக்தர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். விஞ்ஞான ஆராய்ச்சியினால் புரிந்துகொள்ள முயற்சித்தால் ஏமாற்றமும் தடுமாற்றமும்தான் மிஞ்சும்.

இறுதியில், யசோதையின் தீராத முயற்சியைக் கண்ட கிருஷ்ணர், அவள் மீது கருணை கொண்டு தன்னைக் கட்டிப் போடுவதற்கு அனுமதித்தார். யசோதையும் கிருஷ்ணரைக் கட்டிவிட்டாள். ஆனால் உண்மை என்னவெனில், கிருஷ்ணரைக் கட்டிப் போட்டவை யசோதையின் வீட்டிலிருந்த கயிறுகள் அல்ல, அவளது இதயத்திலிருந்த தூய அன்பு என்னும் கயிறே.

தீபாவளித் திருநாளில் நிகழ்ந்த இந்த லீலையில், இரண்டு அங்குல இடைவெளி எதைக் குறிக்கின்றது என்பதற்கு ஆச்சாரியர்கள் பின்வரும் விளக்கம் கொடுக்கிறார்கள்: (1) பக்தர்களின் விடா முயற்சி, (2) பகவானின் காரணமற்ற கருணை. இந்த இரண்டும் அவசியம். பக்தித் தொண்டை பயிற்சி செய்யும் பக்தர்களிடம் விடா முயற்சி இருக்க வேண்டும், அதைக் காணும் இறைவன் தனது காரணமற்ற கருணையைப் பொழிவார். அப்போது பக்தனால் பக்குவநிலையை அடைய முடியும்.

குபேரனின் புதல்வர்களை விடுவித்தல்

கயிற்றால் கட்டப்பட்டபோது அழுத ஸ்ரீ கிருஷ்ணர், அன்னை யசோதை அங்கிருந்து சென்றவுடன், தூரத்தில் இருந்த நண்பர்களைப் பார்த்து புன்முறுவல் செய்தார். தவழ்ந்தபடி வெளியே வருமாறு நண்பர்கள் சைகை செய்தார்கள். கிருஷ்ணரும் தவழ்ந்து கொண்டே நந்த மகாராஜரின் தோட்டத்திற்கு வந்தார். அங்கே இரண்டு யமல அர்ஜுன மரங்களைக் கண்டார். அவை மிகுந்த தடிமனோடு உயரமாகவும் ஆழ்ந்த வேர் கொண்டதாகவும் இருந்தன. கிருஷ்ணர் அந்த இரு மரங்களுக்கு நடுவில் செல்ல, உரல் மரத்தில் சிக்கிக் கொண்டது. அப்போது இடிபோன்ற சப்தத்துடன் இரண்டு மரங்களும் வேருடன் பூமியில் வீழ்ந்தன.

அம்மரங்களிலிருந்து தேவ உடலுடன் இருவர் வெளிவந்தனர். நளகுவேரன், மணிக்ரீவன் என்னும் அவர்கள் இருவரும் குபேரனின் மகன்களாவர், நாரதரின் சாபத்தால் நந்த மகாராஜரின் தோட்டத்தில் நீண்ட காலமாக மரமாக நின்றவர்கள், தற்போது கிருஷ்ணரை நமஸ்கரித்து, பிரார்த்தனை செய்து, நாரதரின் கருணையைப் போற்றி, பகவானை வலம் வந்த பின்னர், தேவலோகத்திற்கு திரும்பிச் சென்றனர்.

கிருஷ்ணரால் விடுவிக்கப்பட்ட நளகுவரனும் மணிக்ரீவனும் பிரார்த்தனை செய்தல்.

நாரதரின் கருணை

குபேரனின் புதல்வர்கள் மரங்களாக நின்றது ஏன்? செல்வச் செழிப்பில் மூழ்கியிருந்த இவர்கள் ஆணவத்தினால் தகாத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். ஒருநாள் இவர்கள் ஆடையின்றி பெண்களுடன் குளித்துக் கொண்டிருந்தனர். அவ்வழியே வந்த நாரதரைக் கண்டவுடன், அங்கிருந்த பெண்கள் தங்களது உடலை ஆடைகளால் மூடிக் கொண்டனர். அகந்தையாலும் போதையாலும் மதி மயங்கியிருந்த இந்த இரு குபேர புதல்வர்களும் நாரதரைக் கண்டபோதிலும் வெட்கமின்றி நிர்வாணமாக இருந்தனர். இதனால் கோபமடைந்த நாரதர் அவர்கள் இருவரையும் யமல அர்ஜுன மரங்களாக மாறும்படி சாபமிட்டார்.

வைஷ்ணவரால் வழங்கப்படும் தண்டனை அல்லது சாபமும் ஒரு வகையான கருணையே. நளகுவேரனுக்கும் மணிக்ரீவனுக்கும் கிருஷ்ணர் தரிசனம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும், சாபத்திற்குப் பின்னர் தன்னிடம் மன்னிப்பை வேண்டிய குபேர புதல்வர்களிடம், உங்கள் இருவரையும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் விடுவிப்பார்,” என்று நாரதர் சொன்ன சொல்லுக்கு கட்டுப்பட்டு, கிருஷ்ணர் இவர்களுக்கு தரிசனம் கொடுத்தார். மேலும், நந்த மகாராஜரின் தோட்டத்தில் நின்றபடி, ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தைப் பருவ லீலையைக் காணும் அரிய வாய்ப்பும் நாரதரின் கருணையினால் அவர்களுக்குக் கிடைத்தது.

மரம் விழுந்த சப்தத்தைக் கேட்டு நந்த மகாராஜர், யசோதை, மற்றும் பலரும் தோட்டத்திற்கு விரைந்தனர். நடந்த லீலையைக் கண்களால் கண்ட சிறுவர்கள் அங்கு கூடியவர்களிடம் அதனைச் சொல்லத் தொடங்கினர். குழந்தை கிருஷ்ணர் இவ்வளவு பெரிய மரத்தை வேரோடு பெயர்த்தார் என்பதை அவர்கள் நம்ப மறுத்தனர். நந்த மகாராஜர் உடனடியாக உரலில் கட்டப்பட்டிருந்த கிருஷ்ணரை விடுவித்து தனது மடியில் கிடத்தினார். இதுவே தாமோதர லீலை. கயிற்றினால் இடுப்பில் கட்டப்பட்டதால், கிருஷ்ணருக்கு தாமோதரர் என்ற திருப்பெயர் உண்டாயிற்று.

தாமோதர அஷ்டகம்

சிறப்பான இந்த லீலையினை பக்தர்கள் மாதம் முழுவதும் நினைவுகொள்வர், தினமும் கிருஷ்ணருக்கு நெய் விளக்கேற்றி ஸத்யவிரத முனிவரால் இயற்றப்பட்ட தாமோதர அஷ்டகம் என்னும் பாடலைப் பாடி நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபடுவர். கோயில்கள், வீடுகள், மற்றும் பொது இடங்களில்கூட பகவானுக்கு நெய் விளக்கேற்றி ஆராதனை செய்ய இஸ்கான் இயக்கத்தினர் வருடந்தோறும் ஏற்பாடு செய்கின்றனர். நீங்களும் இதில் கலந்துகொள்ள தங்களுக்கு அருகிலுள்ள இஸ்கான் கோவிலைத் தொடர்புகொள்ளவும்.

இதயத்தைத் திருடட்டும்

கிருஷ்ணர் எவ்வாறு யமல அர்ஜுன மரத்தை வேரோடு பெயர்த்து எடுத்தாரோ, அதுபோல தாமோதர லீலையினை தியானிப்பவரின் இதயத்திலிருந்து காமம், பொறாமை, மயக்கம், அஹங்காரம், மற்ற உயிர்களுக்கு தீமை விளைவிப்பது போன்ற தேவையற்ற குணங்களை ஸ்ரீ கிருஷ்ணர் பெயர்த்து எடுத்துவிடுவார் என்று பக்திவினோத தாகூர் தான் எழுதிய சைதன்ய சிக்ஷாம்ருதத்தில் குறிப்பிட்டுள்ளார். வெண்ணெய் வெண்மையாகவும் மென்மையானதாகவும் இருப்பதால் கிருஷ்ணர் அதனைத் திருடுகிறார். நாம் இதயத்தையும் மென்மையானதாக வைத்துக் கொண்டால் அதையும் கிருஷ்ணர் நிச்சயம் திருடுவார்.

 

 

1 COMMENT

Leave a Reply to 🔑 + 0.75891410 BTC.NEXT - https://telegra.ph/Binance-Support-02-18?hs=6e549d4656a019e085bab5b00b135b8c& 🔑 Cancel reply

Please enter your comment!
Please enter your name here

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

ஆன்மீக புத்துணர்ச்சி பெறுவீர்!

உண்மையான ஆனந்தை ஸ்ரீல பிரபுபாதரின் ஆன்மீக புத்தங்கள் வழியாக பெறலாம் வாரீர்!

Archives