வழங்கியவர்: ஸத்யராஜ தாஸ்
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவதரித்த மாயாபுர் அல்லது நவத்வீபம் எனப்படும் ஊரானது கிபி 1800ம் ஆண்டுவாக்கில் கிட்டத்தட்ட மறைந்து போய்விட்டது. மேலும், பகவான் சைதன்யரின் தத்துவங்களை முறையாக அறிந்தவர்கள் வெகு சிலரே இருந்தனர். அம்மாதிரியான நபர்களில் ஒருவர்தான் பிரபுபாதரின் ஆன்மீக குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரின் தந்தையான ஸ்ரீல பக்திவினோத தாகூர் ஆவார். ஸ்ரீல பக்திவினோத தாகூர் முறையான சீட பரம்பரையில் பகவான் சைதன்யரின் உபதேசங்களை ஸ்ரீல ஜகந்நாத தாஸ பாபாஜி மஹாராஜரிடமிருந்து பெற்றிருந்தார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை உண்மையாகப் பின்பற்றுபவர் என்ற வகையில், ஸ்ரீல பக்திவினோத தாகூர் பகவான் ஸ்ரீ சைதன்யர் அவதரித்த இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
நவத்வீபம் என்ற பெயரில் அப்போது அறியப்பட்ட ஊர் சுமார் நூறு ஆண்டுகள் மட்டுமே பழமையானது என்பதை அறிந்து, ஸ்ரீல பக்திவினோத தாகூர் ஆச்சரியம் அடைந்தார். ஏனெனில், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவதரித்த நவத்வீபம் நிச்சயம் மிகவும் பழமையானதாக இருந்திருக்க வேண்டும். எனவே, மஹாபிரபு அவதரித்த அன்றைய நவத்வீபமும் மக்கள் கூறும் நவத்வீபமும் ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை என்பதை ஸ்ரீல பக்திவினோத தாகூர் உறுதிசெய்து கொண்டார். இது சம்பந்தமாக அங்கு பல கருத்துகள் நிலவின; சிலர் பதினைந்தாவது நூற்றாண்டிற்குப் பின்னர் கங்கை தனது பாதையை மாற்றிக் கொண்டது என்றும், வேறு சிலர் பழைய நவத்வீபம் கங்கைக்கு அடியில் மூழ்கியிருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறினர்.
ஆயினும், பக்திவினோத தாகூர் தம்முடைய தேடலில் தொய்வின்றியே இருந்தார். அவர் விரைவிலேயே அன்றைய நவத்வீப நகருக்கு வடகிழக்கில் அமைந்திருந்த ஒரு சிறு கிராமத்தைப் பற்றிக் கேள்விப்பட்டார். ஆச்சரியப்படத்தக்க அந்த பண்டைய கிராமம் அப்போது முஸ்லீம்களால் ஆளப்பட்டு வந்தது. இருப்பினும், அந்த கிராமம் முழுவதும் கிருஷ்ணருக்கு பிரியமான துளசிச் செடிகள் நிறைந்த மணல் திட்டுகளால் சூழப்பட்டிருந்தது. அந்த இடம்தான் உண்மையான மாயாபுர் என்று பக்திவினோத தாகூர் உணர்ந்தார். அதே சமயத்தில், எல்லா சான்றுகளையும் ஒன்றுதிரட்டி அதனை உறுதி செய்ய விரும்பினார். அவருடைய தேடுதலில் இது சம்பந்தமான இரண்டு வரைபடங்கள் அவருக்குக் கிடைத்தன. அவர் உறுதி செய்த அந்த இடமே உண்மையான மாயாபுர் என்று அவை கோடிட்டுக் காட்டின. பக்திவினோத தாகூரின் ஆராய்ச்சிக்குச் சற்று முன்பாக, கங்கையில் படகு ஓட்டிக் கொண்டிருந்த சில ஆங்கிலேயர்களால் அந்த வரைபடங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன.
இது சம்பந்தமாக உள்ளூரில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சில இலக்கியங்களில் இருந்தும் பக்திவினோத தாகூருக்கு மேலும் சில தகவல்கள் கிடைத்தன. உதாரணமாக, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு முதன் முதலில் ஹரி நாம ஸங்கீர்த்தனத்தைத் துவக்கிய ஸ்ரீவாஸ பண்டிதரின் வீடு, பகவான் சைதன்யர் வசித்துவந்த இல்லத்திற்கு வடக்கே நூறு தனுஸ் (இருநூறு கெஜம்) தூரத்தில் இருந்ததாக, நரஹரி சக்ரவர்த்தி அவர்களின் பக்தி-ரத்னாகர என்னும் நூலிலிருந்து படித்தறிந்தார். சைதன்ய மஹாபிரபுவின் அவதார ஸ்தலத்தைக் கண்டுபிடிப்பது இதன் மூலமாக ஓரளவு சுலபமாகியது.
இதோடு மஹாபிரபு அவதரித்த நவத்வீபத்தின் முஸ்லீம் ஆளுநர் தன் மாளிகையில் அமர்ந்திருந்தபோது, ஸ்ரீவாஸரின் இல்லத்திலிருந்து எழுந்த ஹரி நாம ஸங்கீர்த்தன ஓசையினால் பாதிக்கப்பட்டு, தன் ஆட்களை அனுப்பி இந்துக்களின் மிருதங்கங்களையும் மற்ற இசைக்கருவிகளையும் உடைத்தெறியும்படி கட்டளையிட்டான் என்பதை சைதன்ய பாகவதத்திலிருந்து அறிய முடிந்தது. இந்த செய்தியும், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் அவதார ஸ்தலத்தைக் கண்டுபிடிப்பதில் பக்திவினோத தாகூருக்கு உதவியது எனலாம். இம்மாதிரியான அடையாளங்கள் ஒத்துப்போயிருந்தும்கூட, பக்திவினோத தாகூர் தம்முடைய பூகோள மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சிகளின் மூலமான தடயங்களையும் இத்துடன் சேர்த்துக் கொண்டார்.
இவையெல்லாம் இருந்தும்கூட, அந்த இடத்தினை ஆன்மீக ரீதியில் உறுதிப்படுத்தும் பொருட்டு, பக்திவினோத தாகூர் தம் ஆன்மீக குருவான ஜகந்நாத தாஸ பாபாஜி மஹாராஜரை அந்த இடத்திற்கு அழைத்து வந்தார். வயோதிகத்தின் காரணத்தினால் நடக்க இயலாத நிலையிலிருந்த அவர் ஒரு கூடையில் அமர்த்தப்பட்டு தலையில் சுமக்கப்பட்டு அங்கு அழைத்துவரப்பட்டார். பாபாஜி மஹாராஜரோ அந்த இடத்தை அடைந்தபோது, உடனடியாகக் கூடையிலிருந்து கீழே குதித்து கிருஷ்ண பிரேமையின் பரவசத்தில் நடனமாடினார். வெளிப்படையான ஆதாரங்கள் பலவும் வலுவாக இருந்தபோதிலும், தெய்வீக பிரேமையின் மூலமாகவே ஸ்ரீல பக்திவினோத தாகூர் அவ்விடத்தை பகவான் சைதன்யரின் அவதார ஸ்தலம் என்று உறுதிப்படுத்தினார். இவ்வாறாக, பகவான் சைதன்யரின் அவதார ஸ்தலம் ஆராய்ச்சிகளின் மூலமாகவும் ஆன்மீக முறையினாலும் ஸ்ரீல பக்திவினோத தாகூரால் உறுதி செய்யப்பட்டது.