ஹம்ஸ குஹ்ய பிரார்த்தனைகள்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: ஆறாம் ஸ்கந்தம், அத்தியாயம் 4

சென்ற இதழில் எமராஜர் கிருஷ்ண பக்தர்களின் உயர்வைப் பற்றி எம தூதர்களுக்கு விளக்கியதைப் பார்த்தோம். இந்த இதழில் பிரஜாபதி தக்ஷனின் ஹம்ஸ குஹ்ய பிரார்த்தனைகளைப் பார்க்கலாம்.

பிரசேதர்கள் காட்டை அழித்தல்

அஜாமிளனின் வரலாற்றை அறிந்த பின்னர், பரீக்ஷித் மஹாராஜர் சுகதேவ கோஸ்வாமியிடம் பின்வருமாறு வேண்டினார். “ஸ்வாயம்புவ மனுவின் ஆட்சிக் காலத்தில் பலவித ஜீவராசிகள் படைக்கப்பட்டதை (மூன்றாம் ஸ்கந்தத்தில்) விளக்கினீர்கள். இதைப் பற்றி மேலும் விவரமாக அறிய விரும்புகிறேன். தயைகூர்ந்து விளக்கியருளுங்கள்.”

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: “மன்னர் பிராசீனபர்ஹியின் பத்து மகன்களான பிரசேதர்கள் சமுத்திரத்தில் நீருக்கடியில் தவம் செய்யச் சென்றதை முன்பே (நான்காம் ஸ்கந்தத்தில்) அறிந்தீர்கள். நாட்டை பரிபாலிக்க அரசன் இல்லாத அந்த காலக் கட்டத்தில் உணவு உற்பத்திக்கான நிர்வாகமின்றி பூமியில் தேவையற்ற மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன.” இதனால் பிரசேதர்கள் தங்கள் தவ வலிமையால் தேவையற்ற மரங்களை எரிக்கத் துவங்கினர்.

சந்திரனின் சமாதானம்

மூலிகைகளுக்கும் மரங்களுக்கும் தாவர இனத்திற்கும் பாதுகாவலரான சந்திரதேவன் (சோமன்), பிரசேதர்களின் கோபத்தைத் தணிக்க பின்வருமாறு கூறினார்: “மகா பாக்கியசாலிகளே! மரங்களும் தங்களது பிரஜைகளே, இவற்றைக் காப்பதும் உங்கள் கடமை. இந்த மரங்கள் அனைத்தும் அனைத்து ஜீவராசிகளையும் பராமரிப்பவரான அழிவற்ற பகவான் ஹரியால் படைக்கப்பட்டுள்ளன.” உலகிலுள்ள எல்லா உயிர்வாழிகளும் தங்களது பராமரிப்பிற்கு தாவரங்களையே நம்பியுள்ளன. பரம புருஷ பகவானும் உங்கள் தந்தையான பிராசீனபர்ஹியும் ஜனத் தொகையைப் பெருக்கும்படி உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளனர். எனவே, பிரஜைகளைப் பாதுகாக்கும் பொருட்டு மரங்களின் மீதுள்ள உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு சாந்தமடையுங்கள்.”

அதன்பின், பிரம்மலோகா என்ற அப்ஸரஸின் மகளான மாரீஷாவை பிரசேதர்களுக்கு மணமுடித்து வைத்து சந்திரதேவன் அவர்களை சமாதானம் செய்தார்.

ரசேதர்களின் கோபத்தைக் கட்டுப்படுத்த சந்திரதேவன் தோன்றுதல்

தக்ஷனின் செயல்கள்

பிரசேதர்கள் வேத முறைப்படி மாரீஷாவை மணம் செய்தபின் அவள் தக்ஷன் என்ற மகனை ஈன்றெடுத்தாள் (தக்ஷன் முற்பிறவியில் ஸ்வாயம்புவ மனுவின் ஆட்சிக் காலத்தில் சிவனிடம் அபராதமிழைத்ததால் தலையை இழந்து ஆட்டின் தலையை பெற்றார் என்பதை நாம் அறிவோம். பின் அவர் சாக்ஷுஷ மன்வந்தரத்தில் பிரசேதர்களின் மகனாகப் பிறப்பெடுத்தார்).

பிரஜாபதி தக்ஷன் முதலில் தன் மனதினால் எல்லா வகையான உயிர்வாழிகளையும் படைத்தார். எனினும், ஜனத்தொகை சரியாகப் பெருகாததைக் கண்டு அவர் விந்திய மலையில் உள்ள அகமர்ஷனம் என்ற புனிதத் தலத்தில் பகவானை திருப்திப்படுத்தும் பொருட்டு கடும் தவங்களை மேற்கொண்டார்.

ஹம்ஸ குஹ்ய பிரார்த்தனை

பகவானின் திருப்திக்காக தக்ஷனால் பாடப்பட்ட ஹம்ஸ குஹ்ய பிரார்த்தனையை சுகதேவ கோஸ்வாமி பின்வருமாறு விளக்கினார். பிரஜாபதி தக்ஷனின் பிரார்த்தனைகள்: “பரம புருஷ பகவான் பௌதிக குணங்களுக்கும் மாயா சக்திக்கும் அப்பாற்பட்டவர். மாயா சக்தியின் ஆதிக்கத்திலுள்ள கட்டுண்ட ஆத்மாக்கள் பௌதிகத் தோற்றமே எல்லாம் என்று எண்ணுவதால், அதற்கப்பாலுள்ள பகவானை அவர்களால் காண முடிவதில்லை.

“முற்றிலும் தன்னிறைவு உடையவரான பகவானைவிட உயர் காரணம் ஏதுமில்லை. அவருக்கு என் பணிவான வணக்கங்கள். ஒவ்வோர் உடலிலும் பரமாத்மாவாக பகவான் வீற்றிருந்தபோதிலும் அவரது செயல்களைப் பற்றி யாரும் அறிவதில்லை. ஜட வெற்றுப் புலன்களால் (ஞான இந்திரியங்கள், கர்ம இந்திரியங்கள் மற்றும் பஞ்ச பூதங்களால்) முற்றிலும் ஆன்மீகமாக உள்ள பகவானை அறிய முடிவதில்லை. மேலும், (சூட்சுமமான) மனதாலும் புத்தியாலும்கூட அவரை அறிய முடிவதில்லை. ஜட களங்கமற்ற உன்னதமான நிலையில் தேகாபிமானத்திலிருந்தும் பௌதிகப் பார்வையிலிருந்தும் விடுபடும்போது பகவானை தரிசிக்க முடியும்.

“பகவானின் உன்னத அன்புத் தொண்டில் ஈடுபடுபவர் அச்சேவை மனப்பான்மையின் காரணத்தால் பகவானை உணர்கிறார். எல்லா காரணங்களுக்கும் காரணமாக பகவான் ஜட உலகப் படைப்பிற்கு முன்பும் பின்பும் எப்பொழுதும் இருக்கிறார். பரபிரம்மனாகிய ஸ்ரீ கிருஷ்ணரே எல்லாவற்றிற்கும் முடிவான புகலிடமும் மூலமும் ஆவார். அனைத்தும் அவருக்கே சொந்தம்.

“எண்ணற்ற உன்னத குணங்களை உடையவரும் எங்கும் நிறைந்தவரும் எல்லாருடைய இதயங்களிலும் இருப்பவருமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு எனது பணிவான வணக்கங்கள். உருவவாதிகளுக்கும் அருவவாதிகளுக்கும் குறிக்கோளாக உள்ள பரம உண்மையான பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு எனது கோடிக்கணக்கான வணக்கங்கள்.

“நினைத்தற்கரிய ஜஸ்வரியங்கள் கொண்டவரும் தமது பக்தர்களிடம் அளவற்ற கருணை கொண்டவரும் நித்யமான உருவம் உடையவருமான பகவான் என்னிடம் கருணை காட்டுவாராக. தமது பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான பல்வேறு அவதாரங்களை மேற்கொள்ளும் பரம புருஷ பகவான் என் விருப்பங்களை நிறைவேற்றுவாராக. பௌதிக விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகக்கூட ஒரு பக்தன் தேவர்களை அணுகத் தேவையில்லை.”

தக்ஷனின் பிரார்த்தனைகளால் மகிழ்ந்து பகவான் ஹரி எட்டு கரங்களுடன் அவருக்கு காட்சி தருதல்

பகவான் ஹரி

பிரஜாபதி தக்ஷனின் பிரார்த்தனைகளால் மகிழ்ந்து பகவான் அவருக்கு காட்சி தந்தார். அவரது எட்டு கரங்களில் சங்கு, சக்கரம், வாள், கேடயம், அம்பு, வில், கதை, பாசக்கயிறு ஆகியவற்றை வைத்திருந்தார். அவரது நீல நிற உடலை மஞ்சள் ஆடை அலங்கரித்திருந்தது. அவரது முகத்திலும் கண்களிலும் மகிழ்ச்சி பொங்கியது. நாரதர், நந்தர், இந்திராதி தேவர்கள், சித்தர்கள், கந்தர்வர்கள், சாரணர்கள் போன்ற சிறந்த பக்தர்கள் அவரது இருபுறமும் நின்றபடி அவர் புகழ்பாடிக் கொண்டிருந்தனர்.

பரம புருஷரின் அந்த அற்புத உருவத்தைக் கண்ட தக்ஷன் முதலில் ஆச்சர்யத்திற்குள்ளானாலும் உடனே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்தார். தக்ஷனின் புலன்கள் மகிழ்ச்சியால் நிரம்பின. அந்த உயர்ந்த மகிழ்வின் காரணத்தால் பேச்சற்றுக் கிடந்தார். அனைத்தையும் அறிபவரான பகவான் அவரின் உள்ளத்தை உணர்ந்து பின்வருமாறு பேசினார்.

பகவானின் போதனைகள்

“மகா பாக்கியசாலியான தக்ஷனே! உமது பெரும் சிரத்தையால் பக்திப் பரவசத்தை அடைந்து விட்டீர். உலக நன்மைக்காகவும் உலகின் வளர்ச்சிக்காகவும் கடுந்தவங்களைப் புரிந்திருக்கிறீர். அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தை நிறைவேற்ற பாடுபடுகிறீர்.

“பிரம்மா, சிவன், மனுக்கள், உயர் கிரக அமைப்புக்களில் உள்ள தேவர்கள் மற்றும் ஜனத் தொகையைப் பெருக்கும் பிரஜாபதிகளான நீங்கள் எனது நடுத்தர சக்தியின் விரிவங்கங்கள். நீங்கள் அனைவரும் அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காகவே செயல்படுகிறீர்கள். பிரபஞ்சத் தோற்றம் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன் எனது சக்திகளுடன் நான் மட்டுமே இருந்தேன்.

“நான் எல்லையற்ற சக்திகளின் களஞ்சியம் என்பதால் என்னை எல்லையற்றவர், எங்கும் நிறைந்தவர் என்று குறிப்பிடுகிறார்கள். என்னிடமிருந்தே படைப்புத் தொழில் செய்யும் பிரம்மதேவர் தோன்றினார். எனது அறிவுரையின் பேரில் அவர் கடுந்தவம் செய்து சிருஷ்டியை மேற்கொள்ளும் தகுதியை அடைந்தார். அவர் மனதினால் நீங்கள் உட்பட ஒன்பது பிரஜாபதிகளை உருவாக்கினார்.

“பிரஜாபதி பஞ்சஜனனின் மகளான அஸிக்னியை மணந்து நூற்றுக்கணக்கான குழந்தைகளைப் பெற்றெடுத்து ஜனத்தொகையைப் பெருக்குவீராக.”

இவ்வாறு ஆசீர்வதித்த பகவான் பின்னர் சட்டென மறைந்தருளினார்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives