வாமன அவதாரம்

Must read

பரம புருஷ பகவானின் முக்கிய அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று அனைத்து மகான்களும் கூறியுள்ளனர். அசுரர்களிடமிருந்து தேவலோகத்தை மீட்டு மீண்டும் தேவர்களிடம் ஒப்படைப்பதற்காக ஒரு பிராமண சிறுவனின் வடிவில் பகவான் தோன்றினார். வாமனர் என்று அறியப்படும் அவரது அவதாரத்தின் சில முக்கிய சிறப்புகளை நாம் இங்கு காண்போம்.

வழங்கியவர்: ஸ்ரீ நாராயண தாஸ்

 

கதைச் சுருக்கம்

தேவ லோகத்தை மாமன்னர் பலி கைப்பற்றுதல் அமரத்துவம் அடைய விரும்பிய தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமுதத்தை வரவழைத்தனர். பகவான் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து, அமுதத்தை தேவர்களுக்குக் கிடைக்கச் செய்தார். அதன் பின்னர் ஏற்பட்ட போரில் இந்திரன் தலைமையிலான தேவர்கள் வெற்றி பெற, பலி மஹாராஜரின் தலைமையிலான அசுரர்கள் தோல்வியுற்று மரணத்தின் அருகில் சென்றனர். (ஸ்ரீமத் பாகவதத்தின் எட்டாவது காண்டத்தின் 5-12 அத்தியாயங்களை விரிவாகப் படித்தல் நன்று) பிருகு வம்சத்தில் வந்த சுக்ராசாரியர், பலி மஹாராஜரிடம் இரக்கம் கொண்டு, அவரை மீண்டும் உயிர்பெறச் செய்தார்.

தேவலோகத்தைக் கைப்பற்ற விரும்பிய மாமன்னர் பலியின் நோக்கத்தை அறிந்த பிருகு வம்ச பிராமணர்கள் அனைவரும் இணைந்து, மன்னருக்காக விஸ்வஜித் யாகத்தை நிறைவேற்றினர். யாகத்தின் பலனாக பலி பலமடங்கு வலிமை பெற்றார். மேலும், சக்தி வாய்ந்த வில், அம்பு, தெய்வீக கவசம், மஞ்சள் நிற குதிரைகள் பூட்டிய தங்க விமானம் முதலியவற்றையும் பெற்றார். அவருடைய பாட்டனாரான பிரஹலாதர் என்றுமே வாடாத மலர்களைக் கொண்ட மாலையையும், சுக்ராசாரியர் உயர்ரக சங்கினையும் பரிசளித்தனர். இவை அனைத்தும் கிடைக்கப்பெற்ற பலி மஹாராஜர் மிகுந்த பராக்கிரமத்துடனும் தேஜஸுடனும் மீண்டும் தேவலோகத்தைக் கைப்பற்ற தன் பரிவாரங்களுடன் படையெடுத்தார்.

அச்சம் கொண்ட இந்திரனும் இதர தேவர்களும் தங்களின் குருவான பிரஹஸ்பதியிடம் முறையிட, அவரோ, “பலி இம்முறை பிராமணர்களின் உதவியுடன் வந்திருப்பதால், உங்களால் அவரை வெல்ல இயலாது. சிலகாலம் தேவ லோகத்திலிருந்து மறைந்து வாழுங்கள்,” என்று அறிவுரை கூறினார். அதன்படி தேவர்களும் தேவலோகத்தை விட்டு மறைந்தனர். மாமன்னர் பலி தேவலோகத்தை சுலபமாக கைப்பற்றினார்.

வாமனரின் தோற்றம்

மகிழ்ச்சியுற்ற பிருகு வம்ச பிராமணர்கள் பலியை நூறு அசுவமேத யாகம் செய்யும்படி அறிவுறுத்தினர். இதற்கிடையில் தேவர்களின் தாயான அதிதி, தன்னுடைய புதல்வர்கள் மறைந்து வாழ்வதை நினைத்து மிக்க கவலையுற்று, தனது கணவர் கஷ்யப முனிவரிடம் தகுந்த உபாயத்தை வேண்டினாள். அவர், “நீ பரம புருஷ பகவானை தியானித்து, கடுமையான பயோ விரதத்தை மேற்கொள்,” என்று அறிவுறுத்தினார். அவளும் தொடர்ந்து பன்னிரண்டு நாள்கள் விரதத்தை மேற்கொள்ள, அவள் முன் தோன்றிய பகவான், “உன் விரதத்தின் பலனாக நான் உமக்கு மகனாகப் பிறந்து தேவலோகத்தை மீட்டு உன் புதல்வர்களைக் காப்பேன்,” என்று உறுதியளித்தார். (ஸ்ரீமத் பாகவதத்தின் எட்டாவது காண்டத்தின் பதினாறாவது அத்தியாயத்தில் பயோ விரதம் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம்) அதன்படி, ஸ்ரவண துவாதசி அன்று கஷ்யப முனிவரின் மூலமாக அதிதியின் வயிற்றில் பகவான் தோன்றினார். அவர் பிறந்தவுடன் தேவர்களும் கின்னரர்களும் பூமாரி பொழிந்து தங்களின் ஆத்மார்த்த வந்தனங்களைத் தெரிவித்துக் கொண்டனர். சங்கு சக்கர கதா பாணியாக பிறந்த பகவான் குள்ளமான பிராமணராக (வாமனராக) உருமாற அவருக்கு கஷ்யபரும் இதர பிராமணர்களும் உபநயனம் செய்வித்தனர்.

தனது இரண்டே அடிகளில் மூவுலகையும் அளந்த வாமனரின் தோற்றம்

பலியை வெற்றி கொள்ளுதல்

பலி மஹாராஜரின் யாகம் முடிவடையும் தருவாயில், வாமனர் அவரது யாகசாலைக்குச் சென்றார். அங்கு குழுமியிருந்த பிராமணர்கள், அரக்கர்கள் என அனைவருமே அவருடைய அதி அற்புதமான தோற்றத்தைக் கண்டு மிகவும் வியப்புற்றனர். பலி மஹாராஜரும் மிகவும் மகிழ்ச்சியுற்று, அவரை தகுந்த ஆசனத்தில் அமர வைத்து பாத கமலங்களுக்கு அபிஷேகம் செய்தார். “நான் தங்களுக்காக என்ன செய்ய வேண்டும்?” என்று பலி மஹாராஜர் வினவ, வாமனர் தனக்கு  வெறும் மூன்றடி நிலம் தானமாக வேண்டும் என்று யாசித்தார். பலி மஹாராஜர் அதைக் கொடுப்பதற்கு ஒப்புக் கொண்ட தருணத்தில், அவரது குருவான சுக்ராசாரியர் வந்திருப்பது சர்வ வல்லமை படைத்த பரம புருஷ பகவான் விஷ்ணுவே எனக் கூறி தானமளிக்கக் கூடாது என அறிவுறுத்தினார். ஆனால் தான் கொடுத்த வாக்கினை காப்பாற்றுவேன் என்று கூறி, வாமனருக்கு தானம் கொடுப்பதற்கான சடங்குகளை நிறைவேற்றினார். உடனே, வாமனர் தன் சிறிய ரூபத்தை பன்மடங்காகப் பெருக்கி, தனது ஒரு காலால் கீழுலகங்களையும் மற்றொரு காலால் மேலுலகங்களையும் அளந்தார். மூன்றாவது அடிக்கு என்ன செய்வதென்று வினவ பலி மஹாராஜர் தனது சிரசின் மீது கால் பதித்து தன்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று பிரார்த்தித்தார். வாமனரும் தனது திருப்பாதங்களை பலியின் சிரசில் பதித்து தனது அவதார நோக்கத்தை நிறைவேற்றினார்.

வாமன அவதாரத்திலிருந்து அறிய வேண்டிய சில துளிகள்

ஆன்மீக குருவின் பலம்

அசுர குருவான சுக்ராசாரியர், மாமன்னர் பலி இறந்துகிடந்த நிலையில், அவரை மீண்டும் உயிர்ப்பித்து தேவையான அனைத்து வலிமையையும் வரவழைத்தார். ஒருவனது சுய வலிமையைவிட ஆன்மீக குருவின் ஆசியும் கருணையும் மிகுந்த சக்தி வாய்ந்தது என்று இங்கு ஸ்ரீல பிரபுபாதர் விளக்கமளிக்கின்றார். நம்முடைய ஆன்மீக முன்னேற்றத்திற்கு நாம் நமது குருவின் கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும். இந்திரனும் இதர தேவர்களும் பிருஹஸ்பதியின் கட்டளைக்கு இணங்க தலைமறைவானதைப் போல, நாமும் முழுமனதோடு குருவின் கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும். (8.15.28)

ஆன்மீக குருவை நிராகரித்தல்

குருவினால் கூறப்படும் கருத்துக்கள் சாஸ்திரங்களின் கூற்றுகளுக்கு எதிராக இருக்கும்போது, அந்த குரு நிராகரிக்கப்பட வேண்டியவர். இதனை நாம் மாமன்னர் பலியின் செயல்களிலிருந்து காணலாம். ஒருவர் தன்னிடம் உள்ள அனைத்தையும் முழுமுதற் கடவுளான விஷ்ணுவிற்கு அர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த விஷ்ணுவே யாசிக்க வந்திருக்கும்போது, அவருக்கு தானம் வழங்குவதில் எந்தத் தயக்கமும் தேவையில்லை என்று பலி நினைத்தார். ஆனால் சுக்ராசாரியரோ விஷ்ணுவிடம் அனைத்தையும் கொடுத்துவிட்டால், நாம் எங்கு செல்வது? என்ற குறுகிய நோக்கத்துடன், அந்த தானத்தைத் தடுக்க முயன்றார். இந்தச் சூழ்நிலையில் தனது குருவின் அறிவுரையை மீறி, வாமனருக்கு தானமளித்த பலியின் செயல் மிகவும் பாராட்டத்தக்க ஒன்றாகும்.

வாமனரின் ரூபம்

பகவானின் ரூபத்தை மனதில் நிறுத்துவதால் பரம ஆனந்தத்தை அடைய முடியும் என்று நமது ஆச்சாரியர்கள் உரைத்துள்ளனர். அவருடைய ரூபத்தை தியானிப்பதற்குக் கீழ்க்காணும் வர்ணனை உதவியாக அமையும்.

குள்ளமான பிராமண சிறுவனின் வடிவில் தோன்றிய பகவான் வாமனருக்கு, பிரஹஸ்பதி பூணூல் அணிவித்தார், பூமாதேவி மான்தோல் வழங்கினாள், கஷ்யபர் தர்ப்பைப் புல்லை அணிவித்தார், சந்திரன் பிரம்ம தண்டத்தை வழங்கினார், அதிதிதேவி உள்ளாடைகளை வழங்கினாள், சூரியன் காயத்ரி மந்திரத்தைக் கொடுத்தார், இந்திரன் குடை கொடுத்தார், பிரம்மா கமண்டலம் கொடுத்தார், சரஸ்வதி ருத்திராக்ஷ மாலையைக் கொடுத்தாள், குபேரன் பிச்சை பாத்திரத்தைக் கொடுக்க, பார்வதி அதில் முதலாவதாக பிச்சைப் போட்டாள்.

 

தேவைக்கேற்ப வாழுதல்

இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு உயிர்வாழியும் தனது தேவைக்கு ஏற்ப வாழ வேண்டும் என்பதையும் பேராசை கொள்ளக் கூடாது என்பதையும் கீழ்காணும் உரையாடலில் இருந்து நாம் அறியலாம்.

மாமன்னர் பலி: என்னிடம் யாசித்தவர் அதன்பின் வேறு யாரிடமும் யாசிக்க வேண்டிய தேவை இருக்கக் கூடாது.

அதிகமாகக் கேளும்.

வாமனர்: கற்றறிந்தவன் தனக்கு தேவையானதை மட்டுமே கேட்க வேண்டும், அப்போது அவன் எவ்விதமான பாவச் செயல்களிலும் ஈடுபட மாட்டான். தேவைக்கு அதிகமாகக் கேட்பவன் பேராசையை வளர்த்து, பல்வேறு தீய செயல்களில் ஈடுபடுவான்.

புலனடக்கம் இல்லாதவனுக்கு மூவுலகங்களிலுள்ள மொத்த செல்வத்தைக் கொடுத்தாலும், அவன் திருப்தியடைய மாட்டான்.

முற்பிறவியின் பயனால் கிடைக்கப் பெற்ற செல்வத்தில் திருப்தியுற்று சுகமடைய வேண்டும். அதை விடுத்து சுயக்கட்டுப்பாடு இன்றி வாழ்பவன் என்றுமே மகிழ்ச்சியுடன் வாழ மாட்டான்.

இந்த ஜட உலகத்தின் பிறப்பு இறப்பு சுழற்சிக்கான முக்கிய காரணம் இந்த பேராசையே.

 

குள்ளமான பிராமணரின் வடிவில் தோன்றிய வாமனரின் தோற்றம் தியானிப்பதற்கு மிகவும் உகந்ததாகும்.

வாக்கு தவறாமை

நேர்மை தவறாத ஓர் இல்லறத் தான், தான் கொடுத்த வாக்கினைக் காப்பது மிகவும் அவசியம், அவன் தன் நிலையிலிருந்து பிறழக் கூடாது. அசுர குலத்தில் தோன்றி இருந்தாலும், மாமன்னர் பலி அதனை நிறைவேற்றினார்.

அவரது வாசகங்களில் சில,

நிலத்தை தானம் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்த பின்னர், பணத்திற்கான பேராசையால் அதனை எவ்வாறு என்னால் திரும்பப் பெற இயலும்? ஒரு சாதாரண ஏமாற்றுக்காரனைப் போன்று என்னால் எப்படி நடந்துகொள்ள முடியும்? கொடுத்த சத்தியத்தை மீறுவதைக் காட்டிலும் பாவகரமானது ஏதுமில்லை. பொய் சொல்பவனைத் தவிர வேறு எந்த கனமான பொருளையும் பூமியினால் தாங்க முடியும்.

பிராமணரை ஏமாற்றுவதைவிட, நரகத்திற்குச் செல்வதும் மரணத்தைச் சந்திப்பதும் மேல்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives