விஸ்வரூபமா, கிருஷ்ண ரூபமா?

Must read

குருக்ஷேத்திரத்திலிருந்து ஒரு பாடம்

வழங்கியவர்: திரவிட தாஸ்

காட்சி: சுமார் ஐயாயிரம் வருடத்திற்கு முந்தைய குருக்ஷேத்திர பூமி. இன்றைய புதுதில்லிக்கு வடமேற்கில் சுமார் நூறு மைல் தொலைவில் அமைந்துள்ள இந்தத் திருத்தலத்தில், அரச பரம்பரையினர் அனைவரும் ஒரு கொடிய போருக்காக அணிவகுத்து காத்திருந்த தருணம். திடீரென்று ஒரேயொரு ரதம் மட்டும் இரண்டு சேனைகளுக்கும் இடையில் தனியாக வந்து நின்றது. அதில் அப்போரின் முக்கிய நாயகனான அர்ஜுனனும் அவனது சாரதியாக பகவான் கிருஷ்ணரும் இருந்தனர். தனது நண்பர்கள், உறவினர்கள், குருமார்கள் என எதிர்த்தரப்பில் நின்று கொண்டிருந்தவர்களைக் கண்டு, பாசத்தினால் மயங்கி, அவர்களை எவ்வாறு கொல்வது என்பதில் குழப்பமுற்ற அர்ஜுனன் தனது நண்பரான கிருஷ்ணரை குருவாக ஏற்று அவரிடமிருந்து வழிகாட்டுதலைப் பெற விரும்பினான். அத்தருணத்தில் பகவத் கீதை எனப்படும் காலத்திற்கு அப்பாற்பட்ட உன்னத உபதேசங்களை பகவான் அருளினார்.

பிரமிக்க வைக்கும் விஸ்வரூபம்

பகவத் கீதை பல்வேறு உண்மைகளைக் கற்றுத் தருகிறது. இந்த ஜடவுலக துயரங்களைக் கடந்து நித்தியமான ஆனந்த வாழ்வை பக்தித் தொண்டின் மூலமாக எவ்வாறு அடைவது என்பதை கிருஷ்ணர் கற்பிக்கின்றார்; அது மட்டுமின்றி, அந்தத் தொண்டின் இலக்கு, எல்லா வழிபாட்டிற்கும் உகந்த பொருள், இருப்பவை அனைத்திற்கும் ஆதிமூலம், மற்றும் பரம பூரண உண்மையாக இருப்பது தாமே என்பதையும் கிருஷ்ணர் வெளிப்படுத்துகிறார். இருப்பினும், கிருஷ்ணர் வெளிப்படுத்திய எல்லா ஞானத்தைக் காட்டிலும், அதற்கு முன்பு யாரும் பார்த்திராத விஸ்வரூபமே பெரும்பாலான மக்களுக்கு பகவத் கீதையின் மிக முக்கிய பகுதியாகவும் பிரமிக்கத்தக்க காட்சியாகவும் இருக்கிறது.

விஸ்வரூபம் குறித்து பகவத் கீதை கூறுகிறது: ஆகாயத்தில் பல்லாயிரக்கணக்கான சூரியன்கள் ஒரே சமயத்தில் உதயமானால், அஃது அந்த பரம புருஷருடைய விஸ்வரூப ஜோதிக்கு ஒருவேளை சமமாகலாம். அந்த அதிசய உருவில், எண்ணற்ற வாய்கள், எண்ணற்ற கண்கள், எண்ணற்ற முகங்கள், கால்கள், மற்றும் கைகளும் இருந்தன. அவர் எண்ணற்ற பிரகாசமான ஆடை அணிகலன்களை அணிந்திருந்தார். பல்லாயிரக்கணக்கான வடிவில் பிரிக்கப்பட்டிருந்தாலும், பிரபஞ்சத்தின் எண்ணற்ற விரிவுகள் அனைத்தும் அங்கே ஒன்றுகூடியிருந்தன.

அனைவரையும் அழிக்கும் காலம்

அர்ஜுனன் பிரார்த்தனை செய்தான்: “வலிமையான புயங்களை உடையவரே, உமது விஸ்வரூபத்தைக் கண்டு அனைவரும் அச்சமடைந்துள்ளனர், நானும் அவர்களைப் போலவே அஞ்சுகிறேன். வானத்தைத் தொடும் உமது பிரகாசமான நிறங்களையும் கொடிய பற்களுடன்கூடிய உமது பற்பல வாய்களையும் கண்டு நான் அஞ்சுகிறேன். எங்கும் வீற்றிருக்கும் இறைவனே, கொழுந்து விட்டெரியும் உமது வாய்களின் மூலம் எல்லா திசைகளிலும் உள்ள மக்கள் அனைவரையும் தாங்கள் விழுங்கிக் கொண்டுள்ளதைக் காண்கிறேன். தேவர்களின் தேவரே, என்மீது கருணை கொண்டு, தாங்கள் யார் என்பதைக் கூறுங்கள்.”

பகவான் கூறினார்: “காலம் நான், உலகங்களை அழிப்பவற்றில் மிகப் பெரியவன், எல்லா மக்களையும் அழிப்பதற்காக இங்கு வந்துள்ளேன். உன்னையும் உனது சகோதரர்களையும் தவிர, இப்போர்க்களத்திலுள்ள எல்லா வீரர்களும் போரில் மடிந்து விடுவர். எனவே, எழுந்து போரிட தயாராகு. எனது ஏற்பாட்டினால் உனது எதிரிகள் அனைவரும் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டனர். போரில் எனது கருவியாகச் செயல்பட்டு, இவர்களை வென்று புகழுடன் வளமான அரசினை அனுபவிப்பாயாக.”

பகவான் கிருஷ்ணர் தமது விஸ்வரூபத்தை அர்ஜுனனுக்குக் காண்பித்தல்

கிருஷ்ண ரூபத்தைக் காண விரும்புதல்

அப்போது, வியப்பில் உறைந்திருந்த அர்ஜுனன் நடுக்கத்துடன் பகவானிடம் கூறினான்: “கிருஷ்ணரே, அகிலத்தின் அடைக்கலமே, இருப்பவை அனைத்திற்கும் வற்றாத ஆதிமூலம் நீரே, எல்லா காரணங்களுக்கும் காரணம் நீரே. எல்லையற்ற உருவே, நீங்கள் இந்த பிரபஞ்சம் முழுக்க பரவியுள்ளீர். நான் உம்மை ஆயிரமாயிரம் முறை மீண்டும்மீண்டும் வணங்குகிறேன். முன்னிருந்தும் பின்னிருந்தும் எல்லா திக்குகளி

லிருந்தும் உமக்கு வணக்கங்கள். எல்லையற்ற இறைவனே, அகிலத்தின் உருவே, இதுவரை யாரும் என்றுமே கண்டிராத விஸ்வரூபத்தைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆயினும், அதே சமயத்தில் நான் அச்சத்தினால் நிறைந்துள்ளேன். எனவே, எனக்கு மீண்டும் உமது ஆதி ரூபமான கிருஷ்ண ரூபத்தைக் காண்பிக்கவும். உம்மை அந்த வடிவில் காண நான் விரும்புகிறேன்.”

தமது பக்தனின் மீதான பூரண கருணையுடன் கிருஷ்ணர் பதிலளித்தார், “அன்புள்ள அர்ஜுனா, நான் எனது விஸ்வரூபத்தை மகிழ்ச்சியுடன் உனக்குக் காண்பித்தேன். ஆனால் எனது இந்த உக்கிரமான தோற்றம் உனக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நண்பனே, அஞ்ச வேண்டாம், உனது மனம் அமைதியடையட்டும். நீ விரும்பிய உருவத்தை இப்போது பார்.”

கிருஷ்ண ரூபத்தின் மகிமை

அதனைத் தொடர்ந்து, பகவான் தமது நான்கு கர உருவத்தையும், இறுதியில் இரண்டு கர உருவத்தையும் வெளிப்படுத்தி அர்ஜுனனை ஊக்குவித்தார்.

கிருஷ்ணர் கூறினார், “அன்புள்ள அர்ஜுனா, இப்போது நீ பார்க்கும் எனது இந்த உருவம் காண்பதற்கு மிகவும் அரிதானது. பிரியமான இந்த உருவத்தை தரிசிப்பதற்கான வாய்ப்பை தேவர்களும் எப்போதும் நாடுகின்றனர். நீ காண்கின்ற இந்த உருவம், வேதங்களைக் கற்பதாலோ, கடுந்தவங்களைச் செய்வதாலோ, தானங்களைக் கொடுப்பதாலோ, வழிபாடு செய்வதாலோ புரிந்து கொள்ளப்படக் கூடியது அல்ல. கலப்படமற்ற பக்தித் தொண்டினால் மட்டுமே இதுபோன்று என்னை நேரடியாகக் காணவும் புரிந்து கொள்ளவும் முடியும். இவ்வழியில் மட்டுமே என்னைப் பற்றிய உண்மையின் இரகசியங்களிலே உன்னால் நுழைய முடியும்.”

அர்ஜுனனுடைய வேண்டுகோளின்படி விஸ்வரூபத்தில் இருந்து கிருஷ்ணர் மீண்டும் தமது சுய உருவத்தை ஏற்றல்

விஸ்வரூபம் ஏன்?

கிருஷ்ணருடைய விஸ்வரூபத்தின் முக்கியத்துவத்தை பகவத் கீதை உண்மையுருவில் நூலில் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரின் விளக்கவுரையில் காண்கிறோம்: “ஆயிரமாயிரம் தலைகளும் கைகளும் உடைய அந்த விஸ்வரூபம், இறைவனிடம் அன்பில்லாத நபர்களின் கவனத்தைக் கவருவதற்காகவே தோற்று

விக்கப்பட்டது. அஃது இறைவனுடைய உண்மை உருவம் அல்ல.” கிருஷ்ணரே கடவுள் என்பதில் நம்பிக்கையின்றி, கிருஷ்ணருக்கான பக்தித் தொண்டினை மாயையின் ஒரு தோற்றம் என்று இகழக்கூடிய மனிதர்களுக்கு கிருஷ்ணரின் இந்த விஸ்வரூபம் அதிர்ச்சியூட்டுகிறது, இதன் வியக்கத்தக்க தோற்றத்தில் அவர்களின் ஐயங்கள் அழிகின்றன. அப்போது, அச்சத்தின் காரணத்தினால் அவர்கள் இறைவனின் சட்டங்களுக்கு மதிப்பளிக்கத் தொடங்கினால், முறையான வழிகாட்டுதலின் மூலம் அன்பு நிறைந்த பக்தித் தொண்டின் பாதைக்கு படிப்படியாக அழைத்து வரப்படுவர்.

கிருஷ்ணரின் தூய பக்தனாக இருந்த அர்ஜுனனுக்கு விஸ்வரூபத்தைக் காண்பதற்கான உண்மையான தேவையோ விருப்பமோ இருக்கவில்லை. ஆயினும், கிருஷ்ணருடைய தெய்வீகத் தன்மையில் நமக்கு நம்பிக்கையூட்டுவதற்காகவும், இறைவனின் அவதாரமாக யாரேனும் தன்னை பிரகடனம் செய்தால் அவர்களை அறிவதற்கான தெளிவான பரீட்சையை வழங்குவதற்காகவும், அர்ஜுனன் விஸ்வரூபத்தைக் காட்டும்படி கிருஷ்ணரிடம் கோரிக்கை விடுத்தான். யாரேனும் ஓர் அவதாரத்தினால் விஸ்வரூபத்தைக் காண்பிக்க இயலாவிடில், அவன் கடவுள் அல்லன், அயோக்கியன் என்று அடையாளம் கண்டு கொண்டு உடனடியாக நாம் அவனை அகற்ற வேண்டும்.

பக்தித் தொண்டினால் அறிவோம்

கிருஷ்ணர் உண்மையான முழுமுதற் கடவுள் என்பதை அறிவதில் ஒளிவுமறைவின்றி இருப்பவர்கள் அர்ஜுனனின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற முயல வேண்டும். நாம் அந்த அற்புதமான விஸ்வரூபத்தைக் கண்டு—“பிரம்மாண்டமானது, எங்கும் விரிவடையக்கூடியது, எல்லையற்றது”—என்று பகவத் கீதையில் இருப்பதைப் போல வியப்படையலாம். ஆயினும், நமது விருப்பம் விஸ்வரூபத்தைக் காண்பதாக இருக்கக் கூடாது. மாறாக, அனைவரையும் வசீகரித்தபடி இரண்டு கைகளுடன் மனிதர்களைப் போலத் தோன்றும் கிருஷ்ண ரூபத்தைக் காண்பதற்கே நாம் விரும்ப வேண்டும். இந்த கிருஷ்ண ரூபத்தின் தரிசனத்தினால் ஆசியளிக்கப்படுவதே எல்லா யோகம் மற்றும் மதத்தின் உண்மையான நோக்கமாகும். தூய பக்தித் தொண்டினைப் பயின்று கிருஷ்ணரிடம் அன்பு செலுத்த கற்றுக்கொள்ளும்போது மட்டுமே, அந்த ஆசியினை நம்மால் பெற முடியும்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives